Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, April 10, 2015

Scanning of inner - heart ( Scan Report Number - 144 )

                                           அடப் பாவி மனுஷா !!
"ஏண்டீ, ராகுகாலம் , நீ பெத்த எமகண்டம் 
இன்னும் தூங்குதே - எழுப்ப மனம் வரலியா ?"
இத்தனை அன்பாகக் கேட்டது எனக்குத் 
தாலி கட்டிய தர்மராஜா !
(ஹூம் எல்லாருக்கும் பிள்ளை பெத்துக்க 
ஒரு பொம்பளை வேணும் .. பிறக்கிறது 
பெண்ணானால் - பிறந்தது ஒரு எமகண்டம் )

அறிவு கெட்ட முண்டமே - காப்பி 
கொண்டு வரும்போதே கையோடு 
காலைப் பேப்பரை எடுத்து வருவதற்கென்ன கேடு ?
காப்பியை விட சூடாக இருக்கும் கணவரிடம் 
பதிலுக்கு 
"உங்கள் வேலையை மட்டுமாவது நீங்களே 
பார்த்துக் கொள்ளக் கூடாதா ?" - என்றொரு வார்த்தை 
கேட்டு விட முடியுமா ? கேட்ட பின்பு 
தலையில் தவறாது சூட்டப் படும் -
"திமிர் பிடித்த கழுதை " எனும் பட்டம்.
அய்யா, பாரதி - உன் வாக்கு என்னமாய்ப் பலிக்கிறது !!
இங்கு 
பெண்கள் பட்டங்கள் ஆளுகிறோமையா .
"என் பூட்ஸைப் பாலீஸ் பண்ணவே இல்லையா !
வீட்டில் என்னதான் செய்கிறாய் மம்மீ " என்று 
இளக்காரமாய் கேட்டு 
என்னை வறுத்தெடுக்கும் என் இளஞ்சிட்டு 
அப்பனுக்குப்  பிள்ளை தப்பாமே  பிறந்திருக்கு - எனும் 
பழமொழியை மெய்ப்பிக்கும் .
இதற்கிடையில் ஏக்கமாய் எனைப் பார்க்கும் 
எனக்காக நான் கலந்த காப்பி டம்ப்ளர் 
அரக்கப் பறக்க ஓடி ஆடி 
அனைத்து வேலையும் முடித்துவிட்டு 
நாலு பேர் மதிப்பதற்காக நன்றாய் 
உடை உடுத்தும் போது 
பண்ணி வைத்த காலை டிபனை 
சாப்பிட்டு விட்டுப் போகலாமா 
அல்லது 
ஒரேயடியா மதியான வேளையில் 
பார்த்துக்கலாமா 
என்று மனதுக்குள் பட்டிமன்றம் நடக்கும் .
அதில் மனத்தின் மானசீக தீர்ப்பு "மதியத்துக்கு !"
அப்புறமென்ன ...
வீட்டை விட்டு வேகமாய்ப் படியிறங்கும் போது 
"அடுத்த வீட்டு மாமிகிட்டே இருந்து 
மங்கையர் மலரை வாங்கிக் கொடுத்துட்டுப் போ "
என்று அன்புக் கட்டளையிடும்  மாமியாரிடம் 
"நீங்களே கேட்டு வாங்கிக்க கூடாதா " என்று 
சொல்லி விட்டாலோ - அன்பு வம்பாகிப் போகும்.
மறுத்து சொன்னால்  
நான் வீடு திரும்பி வருவதற்கு முன்பாகவே 
குடும்பக்  கோர்ட்டில் என் மணாளனிடம் 
என் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல்  செய்யப் பட்டிருக்கும்
அங்கு - மனமறிந்தே  தீர்ப்புகள் 
ஒருதலைப் பட்சமாய் வழங்கப் படும்.
பஸ் ஸ்டாப்பில் நிற்கும் கூட்டத்தை பார்த்தாலே 
வயிறு கலங்கும் ... இந்தக் கும்பலில் 
எப்படி பஸ் ஏறப் போகிறோமென்று !
ஏறி இடம்பிடித்தாலும் 
"இடி மன்னர்களின் இம்சை "
தள்ளி நிற்க சொன்னால் ..
"மகளிர்க்கென்று பஸ் விட்டாலும் 
அத்தனையையும் விட்டுவிட்டு - இதில் 
ஏறி என்னை ஏன் முறைக்கிறே ?" என்று 
இதயமற்றுக் கேட்கும் இளங் கன்றுகள் .
"உங்களோடு சேர்ந்து வரவேண்டுமென்ற 
நேர்த்திக் கடன் ... அதனால்தான் 
மகளிர் பஸ்ஸை விட்டு மகான்களின் 
பஸ்ஸில் ஏறினேன் " என்று சொல்ல நினைத்தாலும் 
ஓட்டுக்குள் தலையை உள் இழுத்துக் கொள்ளும் 
ஆமை போல நாக்கை உள்ளிழுத்து 
உதடுகள் மூடிக் கொள்ளும் .
அடிப் பெண்ணே .. சொல்லடி படுவதும் 
அடங்கிப் போவதும் உனக்குப் புதிதா என்ன ?
"எந்தப் பொம்பளை இந்தக் காலத்தில் 
அடங்கி ஒடுங்கி இருக்கிறா ? எல்லாம் தறி கெட்டு 
ஓடுதுக !" என்று 
சக பயணிகளுக்குள் ஏதோ ஒரு சம்பாஷணை 
காதில் விழும்போது சிரிப்பு வருகிறது ... அய்யா 
உன் வீட்டுப் பொம்பளைகளை வச்சு எல்லா வீட்டுப் 
பொம்பளைகளையும் எடை போடாதேன்னு 
சொல்லவா முடியும் ?
பஸ்ஸில் ஏறுவது ஒரு சாதனை !
இறங்குவதற்குள் எத்தனை எத்தனை வேதனை ?
"தங்க மங்கை " போல தாவி நான் ஓடி 
அலுவலக வாசலை அடையும்போது 
"என்னம்மா .. எழும்பினது லேட்டா ... இல்லே 
உங்க வீட்டுக்காரர் டிபன் பண்ணிக் குடுத்தது லேட்டா ?"
என்று கிண்டலாய் வரவேற்க்கும் அலுவலக அதிகாரி 
அலுவலக அல்லலுக்கு இது ஒரு 
பிள்ளையார் சுழி .. அவ்வளவுதான்..
வீடு ... பஸ் .. ஆபீஸ் .. இதைத் தவிர 
வேறு எதையுமே பார்க்கவில்லையே நான் என்று 
அவ்வப்போது நினைத்துப் பார்க்கும் மனசை 
"உனக்கும் கீழே உள்ளவர் கோடி 
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு " 
தட்டிக் கொடுத்தே தூங்க வைத்து விட்ட நான் ...
சில சமயம் நான் சிரிக்கிறேன் .. என்னை நினைத்தே !!
"மாதராய்ப் பிறப்பதற்கே நல்ல 
மாதவம் புரிந்திட வேண்டுமம்மா !" -
பக்கத்து டீக்கடை ரேடியோவில் 
பாரதியின் பாட்டு !
பிரச்சினைகள் வாழ்க்கையில் உண்டு !
பிரச்சினைகளையே வாழ்வாய்க் கொண்டோருமுண்டு ! 
ஏன் பிறந்தோம் என்று என்னை நானே 
நொந்து கொண்டிருக்க  
அய்யா .. பாரதி ... அடப் பாவி மனுஷா 
முண்டாசுக் கவியே ....
எந்தப் பெண்ணைப் பார்த்த பிறகு நீ பாடினாய் 
மாதராய்ப் பிறப்பதற்கே நல்ல 
மாதவம் புரிந்திட வேண்டுமம்மா என்று !

No comments:

Post a Comment