Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, March 27, 2015

Scanning of inner - heart ( Scan Report Number - 143 )

                                                 எல்லாமே நமக்குள்ளே !
போன் பேசி முடித்துவிட்டு கோபமாக அதை மேஜை மீது விட்டெறிந்த லலிதா "போனைக் கண்டுபிடிச்சவன் மட்டும் என் கையில் மாட்டினால் ..." என்று எரிச்சலோடு சொல்லும்போதே "கண்டு பிடிச்சவனை ஏன் திட்டறே ? அதைக் ஹேண்டில் பண்ண உனக்குத் தெரியாட்டா அதைத் தொடாதே " என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் அருகிலிருந்த சந்திரிகா .
"நாமளே ஆயிரத்தெட்டு பிரச்சனைக்கு நடுவில் மாட்டிகிட்டு தலை மயிரைப் பிச்சுகிட்டு இருக்கிறோம் .. நேரங்காலம் சமயசந்தர்ப்பம் தெரியாமே போன் பண்ணி அம்மா வேறே உயிரை வாங்குறாங்க "
"என்னவாம் ?"
"வழக்கம் போல அண்ணி மேலே குற்றப் பத்திரிக்கை வாசிப்புதான் ?"
"அங்கே ஒத்து வராட்டா உன்னோடு கொண்டாந்து வச்சுக்கிறது தானே "
"ஏதாவது பேசினால் கையில் கிடைக்கிறதை எடுத்து உன் தலை மேலேயே போடுவேன் "
"என்னதான்டி உன் பிரச்சினை ? இன்னும் சித்திரை பிறக்கலே. கத்திரி ஆரம்பம் ஆகலே . அதுக்குள்ளேயா மேல்மாடி ஹீட் ஆயிடுச்சு ?"
"நக்கலா ?"
"இல்லேடி சும்மா தமாஷ் ... முதலில் ஸீட்டை விட்டு எழும்பு . காண்டீன் போய் சூடா என்ன இருக்குனு பார்த்துட்டு வரலாம் "
"என்னைத் தவிர எல்லாமே ஹூலாதான் இருக்கும் "
"சரி .. எழும்பு "
இருவரும் விசிட்டர்ஸ் ரூமில் வந்து உட்கார்ந்தார்கள் 
"ரிலாக்ஸ் .. எதுக்கு இத்தனை டென்ஷன் ?"
"நேரம் காலம் தெரியாமல் அம்மா அவங்க குறையை சொல்லி புலம்ப றாங்க. எங்க வீட்டுக்கு வாங்கனு சொல்லிப் பார்த்தாச்சு. கேட்கிற வழியா இல்லே. மூச்சு விட நேரமில்லாமல் இங்கே நான் பைலைக் கட்டிக்கிட்டு அழறேன். வீட்டுக்குப் போனால் குழந்தைகளோட எக்ஸாம் டென்ஷன். போதும்டா சாமீ "
"உங்க அண்ணிக்கும் அம்மாவுக்கும் ஒத்துப் போகாதா ?"
"எங்க அம்மாவுக்கு அவங்களோடேயே ஒத்துப் போகாது "
"வயதானாலே வீட்டிலுள்ள பெரியவங்க சின்னக் குழந்தைங்க மாதிரி ஆயிடறாங்க "
"ஏய் ..  எங்க பக்கத்து போர்சனுக்கு புதுசா ஒரு குடும்பம் குடித்தனம்  வந்தி ருக்கிறாங்க. அந்த வீட்டில் ஒரு வயதான அம்மா இருக்கிறாங்க. அந்த வீட்டில் நடக்கிறது எதேச்சையா என் கண்ணில் படும் . அந்த அம்மாவை அங்கே யாரும் சட்டை பண்றதே இல்லை . அவங்கவங்க வேலையைப் பார்த்துகிட்டு ஓடிகிட்டே இருக்கிறாங்க. எப்பவாவது யாராவது அவங்க கிட்டே ஏதாவது வேணுமான்னு கேட்டாக்கூட  'நான் பார்த்துக்கிறேன். நீ உன் காரியத்தைக் கவனி'ன்னு  சொல்றாங்க. அவங்களாலே மட்டும் எப்படி அப்படி இருக்க முடியுதுன்னு எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்குது. நம்ம வீட்டிலுந்தான் இருக்குதுங்களே ..."
"அந்த ரகசியத்தைக் கேட்டு தெரிஞ்சுக்கிறதுதானே!"
"குட் ஐடியா ... இன்னிக்கு வீட்டுக்கு போனதும் முதல் வேலை அதுதான் . வா நாம பைலைப் புரட்டலாம் " என்று லலிதா சொல்ல பதிலேதும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பினாள் சந்திரிகா.
ஆபீஸ் முடிந்து பஸ் பிடித்து வீட்டுக்கு  போய்க் கொண்டிருந்த லலிதா தெருமுனையிலிருந்த பிள்ளையார் கோவில் வாசலில் நின்று கும்பிடு போட்டாள். முழங்காலை கையால்  ஊன்றிப் பிடித்தபடி கோவிலை விட்டு வெளியில் வந்து கொண்டிருந்தாள் பக்கத்து போர்சனில் உள்ள வயதான பெண்மணி. ஆஹா இதை விட்டால் நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது என்று எண்ணிக் கொண்ட லலிதா, அவள் அருகில் சென்று  " அம்மா .. பார்த்து ... பார்த்து வாங்க .  முடியாத நிலையில் தனியா வந்துருக்கீங்க. துணைக்கு யாரையாவது அழைச்சிட்டு வந்திருக்கலாம் தானே ?" என்று கேட்டு விட்டு, அந்த அம்மாவிடமிருந்து என்ன பதில் வரப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் அவள் முகத்தை உற்றுப் பார்த்தாள் .
அந்த அம்மா பதிலேதும் சொல்லவில்லை 
"வயதான ஒருத்தரை இப்படி தனியா அனுப்பிட்டு அவங்களாலே எப்படி நிம்மதியா இருக்க முடியுது ? " என்று மீண்டும் கொக்கி போட்டாள் 
"அவங்க யாரும் என்னை கோவிலுக்குப் போக சொல்லலே . நான் தான் கிளம்பி வந்தேன்  "
"வீட்டில் கூட உங்க காரியத்தை நீங்கதான் பார்த்துக்கணும் போலிருக்கு . உங்களுக்கு ஒத்தாசையா யாரும் எதுவும் செய்றது கிடையாது போலிருக்கு " என்று அடுத்த அஸ்திரத்தைத் தொடுத்தாள் லலிதா 
"அவங்கவங்களுக்கு ஆயிரம் பிரச்சினை . வீட்டை விட்டுக் கிளம்பி பஸ் ஏறி வேலையை முடிச்சுட்டு நொந்து நூலாகி வருதுங்க .சம்பளம் குடுக்கிறவன் சும்மா உட்கார வைச்சா சம்பளம் குடுப்பான். கசக்கிப் பிழிஞ்சு வேலை வாங்கிட்டுதான் கொடுப்பான்.நாள் முழுக்க உழைச்சி ட்டு  வர்றவங்க கிட்டே நாம எதை எதிர் பார்க்க முடியும்?"
"இருக்கட்டும் ... அதுக்குன்னு வயசான ஒருத்தங்களை...."
"என் மேலே உள்ள கரிசனத்தில் நீ பேசறே ... சந்தோசமா இருக்கு. நானும் ஒரு காலத்தில் வேலை பார்த்தேன் ..முப்பத்தஞ்சு வருஷம் டீச்சரா வேலை பார்த்துட்டு ரிடைர் ஆனேன். வீட்டிலே  ஒன்றிரண்டு குழந்தைக ளை  சமாளிக்கவே வீட்டிலுள்ளவங்க திணறிப் போயிடுவாங்க. கிட்டத் தட்ட அம்பது குழந்தைகளை   ஒவ்வொரு வருஷமும் நான்  சமாளிச்சிரு க்கிறேன். எனக்கும் வீட்டில் வயசான அம்மா அப்பா இருந்தாங்க. குடும்பம் இருந்துச்சு. அவங்களுக்கு என்ன தேவைனு நான் ஒருநாளும் கேட்டதில்லே... கேட்கக் கூடாதுங்கிறது என்னோட ஆசையில்லே. நின்று நிதானிச்சு அதையெல்லாம் கேட்க முடியாதபடி என்னோட சூழ்நிலை இருந்துச்சு. பகல் முழுக்க அம்பது குழந்தைகளின் கேள்விக்கு பதில் சொல்லிட்டு மண்டை காய்ஞ்சு போய்   வீட்டுக்கு வர்றப்போ யாராவது கேஷுவலா பேசினாக் கூட கோபம் வரும். எரிச்சல் வரும் . என்னை எரிச்சல் படுத்தக்கூடாதுன்னு நினைச்சு வீட்டிலுள்ளவங்க என்னைத் தொந்தரவு பண்ணாமே அவங்கவங்க வேலையை அவங்களே பார்த்துக்குவாங்க . எனக்கு அவங்க மேலே பாசம் அக்கறை எல்லாமே இருந்துச்சு. ஆனால் அதை வெளிக்காட்ட முடியாத படியான நிலையில் என்னோட ஓட்டம் இருந்துச்சு.ஆடம்பரத் தேவைக்காக நான் வேலைக்கு போகலே. குடும்ப சூழ்நிலைக்காக வேலைக்குப் போனேன். அதைப் புரிஞ்சுகிட்டு என்னோட குடும்பம் என்னை எந்த விதத்திலும் தொந்தரவு பண்ணாமே இருந்துச்சு. இப்போ என்னோட மகன் மருமகள் வேலை பார்த்தால்தான் குடும்பம் நல்லா இருக்கும். கஷ்டப்பட்டாவது குழந்தை களுக்கு நல்ல படிப்பை தரணும் . அவங்களை நல்ல நிலைக்குக் கொண்டு வரணும்னு மகனும் மருமகளும் ஓடி ஓடி உழைக்கிறாங்க. அவங்க வேலைப் பளுவை என்னாலே ஷேர் பண்ண முடியாது. ஆனால் என்னால் எந்தத் தொந்தரவும் இல்லாதபடிக்கு என்னோட வேலையை நானே பார்த்துக்க முடியுமே. நான் யாரையும் எதிர் பார்க்கிறது கிடையாது" என்று அந்த அம்மா சொல்ல பிரமித்துப் போய் நின்றாள் லலிதா 
"நீ உள்ளே போய் சாமீ தரிசனம் பண்ணலியா ?" என்று அந்த அம்மா கேட்க  "உங்களைப் பார்த்ததே அந்தக் கடவுளைப் பார்த்த மாதிரி இருக்கு . வாங்க போகலாம் " என்று சொல்லியபடி நடக்க ஆரம்பித்தாள்.
இந்த அம்மா மாதிரி எல்லாருமே மனசு  பக்குவப்பட்ட நிலையில் தங்களை வைத்துக் கொண்டால்  முதியோர் நிலையம் என்ற ஒன்றுக்கு அவசியமே இருக்காது என்று நினைத்தாள். இவங்களாலே மட்டும் எப்படி இந்த அளவுக்கு யோசிக்க முடியுது. ஒருவேளை இவங்க டீச்சரா இருந்த அனுபவம் இவங்களை இந்த அளவுக்குப் பக்குவப்படுத்தியிருக்குதோ என்ற கேள்வி மனதுக்குள் எழுந்த அதே நேரம், இத்தனை வயசுக்குப் பிறகு நம்ம அம்மாவை எந்த டீச்சர் ட்ரைனிங் ஸ்கூலில் சேர்க்க முடியும் என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். அந்த நினைப்பு ரொம்பவும் விசித்திரமாக  இருந்ததால் தனக்குள் சிரித்துக் கொண்டாள் லலிதா.         











No comments:

Post a Comment