Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Tuesday, December 17, 2019

காணவில்லை ... கண்டுபிடித்துத் தரவும் ...!




நாடு எங்கே போகிறது? இது நாடா இல்லே வெறும் காடா என்கிற கேள்விக்குறி எல்லார் மனதிலும் எதிரொலிக்க ஆரம்பித்து விட்டது.
இந்தியா என்றாலே உலக நாடுகளின் மத்தியில்  நல்லதொரு மதிப்பு மரியாதை இருந்தது. காரணம்:- இந்தியா என்றாலே அன்பு! இந்தியா என்றாலே பொறுமை! இந்தியா என்றாலே சகிப்புத்தன்மை ! இந்தியா என்றாலே மதசார்பின்மை !
நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால் இதில் எதுவுமே இப்போது இல்லை
விவேகானந்தர் அவரது அயல்நாட்டுப் பயணம் ஒன்றில் உலக நாடுகளின் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியதாக நான் படித்த ஒரு செய்தி:
"இந்தியா மிகப்பெரிய ஆலமரம். அந்த ஆலமர நிழலில் யார் வேண்டுமானாலும் வந்து தங்கி இளைப்பாறலாம். தங்கி, தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம். இன்னார்தான் வந்து தங்க வேண்டும் என்று ஆலமரம் ஒரு போதும் சொன்னதில்லை. யுகங்கள் பலவானாலும் வேர்கள் விழுதுகள் தாங்கி நிற்க ஆலமரம் என்றென்றும் நிலைத்திருக்கும். தானும் வாழும்; மற்றவர்களையும் வாழவைக்கும்!"
இந்த டயலாக்கை இப்போது சொன்னால் இது இந்தியாவுக்கு மிகப்பெரிய காமெடியாக இருக்கும்.
சமீபகால நிகழ்வுகள் வன்முறைக்கு, அதன்  எதிரொலிப்புக்கு எண்ணெய் வார்க்கிறது. அதனால் எரிகிற வீட்டில் பிடுங்கினவரை லாபம் என்று குளிர்காயும் சுயநலக்கிருமிகள் காட்டில் மழைதான்.
15.12.2019 அன்று சன் நியூஸ் சேனலில் ஒளிபரப்பான விவாத மேடை சிலரை சிந்திக்க வைத்திருக்கிறது என்பதை காதில் விழுந்த சம்பாஷணைகள் மூலம் தெரிந்து கொண்டேன்.   அந்த சம்பாஷணைகளில் ஒரு சில அங்க லாய்ப்புகளுக்காவது உங்கள் வசம் பதில் இருந்தால் அதை எனக்குச் சொல்லுங்கள்.
(பட்டிமன்றம் / விவாத மேடைகளைப் பார்க்கும் பழக்கம் எனக்குக் கிடையாது. எல்லாருக்கும் மிக நன்றாகத் தெரிந்த விஷயங்களை நாட்டு நடப்பை மேடையில் இருக்கும் சிலர், பத்திரிக்கைகளில் எற்கனவே வந்த மொக்கை ஜோக்குடன் பிளந்து கட்டிக் கொண்டிருப்பார்கள். இதைக் கேட்டு ஒரு சிலர் கைகொட்டிச் சிரிக்க, பல சமயங்களில் ஒரு கூட்டம் கண்ணீர் விட அதையே திரும்பத் திரும்ப  ஒளிபரப்பிக் கொண்டிருப்பார்கள் சேனல் புண்ணியவான்கள். (உனக்கு   இதெல்லாம் பார்க்கும் பழக்கம் கிடையாது . பிறகு எப்படி இதெல்லாம் தெரியும் என்ற கேள்வி எழுகிறதுதானே ? பட்டிமன்றம் என்றால் என் சகோதரி தன்னை மறந்து டீவி முன் உட்கார்ந்திருப்பாள் . அவளைக் காண கீழே வரும்போது காதில் விழும் விஷயங்களை வைத்து, "எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு செய்தியை ரொம்பவும் அறிவுஜீவி மாதிரி பேசிட்டு இருக்கிறான். இதை எப்படி உன்னாலே பொறுமையா பார்க்க முடியுது" என்று கேட்பேன். உனக்கு தெரிஞ்சா எல்லாருக்கும் தெரியும்னு அர்த்தமா என்று எதிர்க்கேள்வி கேட்பாள். அத்தோடு அங்கிருந்து இடத்தைக் காலி செய்து விடுவேன்.)
சம்பாஷணை எண் - 01: எல்லா சினிமாவிலும் கேட்டுக்கேட்டு அலுத்துப் போன வசனம்தான் இது. அவரவர் இஷ்டத்துக்கு பொதுஜனம் சட்டத்தைக் கையில் எடுக்கக் கூடாதாம்.. அது தன்னோட கடமையை சரியா செஞ்சா ஏன் மத்தவங்க அதில் தலையிடறாங்க? இருக்கிற வேலைவெட்டியை விட்டுட்டு அதை ஏன் மத்தவங்க கையில் எடுக்கப் போறாங்க. ரோட்டை சரிபண்ண எங்களுக்கு துப்பு கிடையாது. அதனால் வாகனத்தில் போறவங்க பாதிக்கப்படாமல் இருக்க இதை எல்லாம் கண்டிப்பா கையோடு கொண்டு போகணும். தெருவில் ஓடும் சாக்கடையை சுத்தம் பண்ணத் துப்பு கிடையாது. அதே சாக்கடை உன் வீட்டுப் பக்கம் தேங்கி நின்னா அதுக்கு அபராதம் கட்டணும்னு சட்டம் போடற அறிவுஜீவிகள் இருக்கிற நாடு இது.. இப்படியொரு நாட்டாமைத் தீர்ப்பை சொல்லவா அத்தனை வருஷம் விழுந்து விழுந்து படிச்சிட்டு வாறீங்க ?
சம்பாஷணை எண் - 02: காவல் துறையினரே வாகனத்தை எரித்து விட்டு சட்டம் ஒழுங்கை காப்பாற்ற சுட்டதாக சொல்ற அவலம் இந்த நாட்டைத் தவிர வேறு எங்காவது நடக்குமா?
சம்பாஷணை எண் -03:   ஒரு சில பெரும்புள்ளிகளைக்  காப்பாற்ற தெலுங்கானாவில் அப்பாவிங்க நாலு பேரை சுட்டதா புலம்புறானுக. அப்படி யாராவது இருந்தால், அவர்களை யாராவது போட்டுத் தள்ளினால் அவனைப் பாராட்டி, ஒட்டுமொத்த நாடும் சேர்ந்துதான் அவங்களை போட்டுத் தள்ளினோம்னு சொன்னால், முன்னாடி போய் நின்னால் இவனுக எத்தனை பேருக்குத்தான் தண்டனை கொடுப்பாங்கிறதையும் பார்த்துடுவோமே. 
சம்பாஷணை எண் - 04 : வயித்துப் பொழைப்புக்காக ஒருத்தன் திருடினா, அதில் பங்கு கேட்கிற, திருட்டு நகையில் பங்கு கேட்கிற ஈனப்பிறவிகள் இருக்கிற நாடு முன்னேறுமா? அப்பாவி ஜனங்களை கொன்னு குவிக்கிற இந்த தீவிரவாதக் கும்பல் பொறுப்பான பதவியில் இருந்து கிட்டு அயோக்கியத்தனம் பண்ணும் அத்தனை பேரையும் தண்டிச்சா அப்புறம் ஊர் உலகம் இவங்களை தெய்வமா கை எடுத்துக் கும்பிடுவாங்களே. . ரமணா படத்தில் செஞ்ச மாதிரி செய்யணும். அவனுக நேர்மையா நடந்துக்கிட்டா ஜனங்க அவனுக பின்னாடி போவாங்களே.
நாலாவது விஷயம் ரொம்பவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.   நாட்டில் நடக்கும் எல்லா குற்றங்களுக்கும் வறுமைதான் தாயகம். அது ஒழிக்கப் படாமல் விஞ்ஞானம் டெவெலப் ஆகி எந்த பயனும் இல்லை.
முன்பொருமுறை படித்த ஒரு சிறுகதை. விகடனில் வெளியாகி இருந்ததாக ஞாபகம். ஒரு வாலிபன். வறுமையிலும் நேர்மை தவறாத தன்மை. ஆனால் படித்துமுடித்து விட்டு வேலை தேடிப்போன இடத்திலெல்லாம் அவனுக்குக் கிடைத்தது ஏமாற்றமும் அவமதிப்பும்தான். வாழ வழியில்லாமல் தீவிர வாதிகளின் கூடாரத்தை தஞ்சமடைந்து அவர்களுக்காக உழைக்க ஆரம்பித்து விடுவான்.
இப்போது அடிக்கடி செய்தி சேனல்களில், தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருக்கும் இளைஞர்கள் பற்றி பார்க்கிறோம். அவர்கள் பின்னணியை ஆராய்ந்தால் அதற்கும் ஒரு நியாயமான காரணம் இருக்கும். உழைக்கும் நோக்குடன் வேலை தேடிக் களைத்த எல்லா இளைஞர்களும் இப்படியொரு முடிவுக்கு வந்துவிட்டால்  வருங்காலம் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. 
நாட்டோரே, நல்லோரே, ப்ளீஸ் .. ஆங்காங்கே ஒருசில இடங்களில் எரியும் நெருப்பு அனைத்து இடங்களையும் அழிக்கும் முன்பாக உடனடித் தீர்வு ஒன்றை கொண்டு வாருங்களேன்.  
இந்தியா என்றாலே அன்பு! இந்தியா என்றாலே பொறுமை! இந்தியா என்றாலே சகிப்புத்தன்மை ! இந்தியா என்றாலே மதசார்பின்மை !  - என்கிற நிலை மாறி, மனிதன் என்ற போர்வையில் விலங்குகள் வாழும் நாடு அது  என்று வருங்காலம் சொல்லாமலிருந்தால் அது மிகப் பெரிய வரம். 

No comments:

Post a Comment