Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, April 04, 2020

கொல்லாதே இது போலே

               

நினைப்புக்கும் நடப்புக்கும் இடைப்பட்டதுதான் வாழ்க்கை என்பது எல்லோரும் அறிந்த ஒன்று.
ஆனால் எப்போ என்ன நடக்கும் என்பது எவருமே அறியாத ஒன்று.
கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமி  ஒட்டு மொத்த உலகையே ஆட்டிப் படைக்கிறதென்றால்  அது சாதாரண விஷயமில்லை.
ஆனால் இப்படி ஏதாவது ஒரு பேரிடர் வரும்போதுதான் மனிதர்கள் ஒன்று படுகிறார்கள்.
அது என்ன கிருமி ? எங்கிருந்து உருவானது ? அதை எப்படி அழிக்கலாம் என்ற முழு விவரம் அறிந்தவர்கள் இதுவரை யாரும் இல்லை என்பது எனது தனிப்பட்ட அபிப்ராயம். அவரவருக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறார்கள். எத்தை தின்னால் பித்தம் தெளியும் அதைத்    தின்போம்  என்கிற  நிலைக்கு ஒட்டு மொத்த உலகமும் தள்ளப்பட்டு விட்டது
எனக்குத் தெரிந்து வல்லரசு நாடுகளைக் கூட நடுங்க வைத்த ஒரே ஒரு விஷயம் இதுதான்.
ஆனால் நடக்கிற சில சம்பவங்களைப் பார்த்தால், ஒரு சிலர் சொல்வது போல் போகிற உயிர் எங்கிருந்தாலும் போகும்; எவ்வளவு பாதுகாப்பாக இருந்தாலும் போகும் என்பதை நம்பத்தான் வேண்டியதிருக்கிறது.
ஊரடங்கு உத்தரவு; ஒருசில வாகனங்கள் தவிர வேறு எவருக்கும் அனுமதி இல்லை. அப்படியொரு சூழ்நிலையில் கூட ஒரு வாகனம், தெருவில் நடந்து சென்ற மூதாட்டி மீது மோதி சாகடித்ததென்றால் இதை என்னவென்று சொல்வது?
ஊரடங்கு உத்தரவு; பையனை ஆம்புலன்ஸில் அழைத்து சென்ற தந்தை, வாகன விபத்தில் மரணம்!
ஊரடங்கு வேளையில் ஒரு வாகனம் ராங்க் ஸைடில் போய் விபத்தை ஏற்படுத்தி விட்டு, சரியான  பாதையில் வந்த வாகன ஓட்டி மீது வழக்கு பதிவு செய்கிறது. இதற்கு சேனல்கள் சாட்சி.
விதி எப்படியெல்லாம் விளையாடுகிறது ?
இவ்வளவு கூத்துக்கும் நடுவில் இணையத்தில் பதிவு செய்யப்படும் காமெடிக்கும் எல்லையே இல்லை. இவர்கள் எல்லோரும் துன்பம் வரும் வேளையிலும் சிரிக்கிற பிரிவினர்.
இன்று தெருவில் கேட்ட உரையாடல்  "ராத்திரி விளக்கை எல்லாம் அணைக்கணும்னு சொல்றாங்களே. விளக்கை அணைச்சிட்டா அதுக்கு கண்ணு தெரியாதா? வேறே எங்காச்சும் போயிடுமா?"
ஆண்டவன் நினைச்சா கோடீஸ்வரனைக் கூட கண் இமைக்கிற நேரத்தில் தெருவுக்கு கொண்டு வந்துடுவான் என்று எனது அலுவலக நண்பர் சொன்னதை அடிக்கடி நினைத்துப் பார்க்கிறேன்.
"மளிகை சாமானுக்காக நீ கடை கடையா சுத்துவே"னு யாராவது எனக்கு போன மாதம் ஜோஸ்யம் சொல்லி இருந்தால் அவர்களை பைத்தியக்கார ர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பேன்.
ஆனால் ஒரே ஒரு கிலோ உளுத்தம்பருப்பு வாங்க கொளுத்தும் வெயிலில் தெருத்தெருவாக அலைந்தேன். கிடைக்கவில்லை.
இன்று, சற்று முன்பு கூட ஒரு சில மளிகை சாமான் வாங்க வெயிலில் அரைமணி நேரத்துக்கும் மேலாக க்யூவில் நின்று, நான் தேடிப்போன பொருள் கிடைக்காமல் வெறுங்கையோடு திரும்பினேன். 
கடையில் ஏற்கனவே இருந்த பொருட்களின் மேல் புதிய விலையை / ஸ்டிக்கரை ஒட்டும்   பணி ஜோராக நடந்து கொண்டிருந்தது.
கைக்குள் அடங்கக்கூடிய ஒரே ஒரு சவ்சவ்வின் விலை 18 ரூபாய். நல்ல வேளை. எங்க அம்மா இரண்டு வருஷம் முன்னாடியே இறந்து போயிட்டாங்க. அவங்க உயிரோடு இருந்து இந்த விலைவாசி அவங்க  காதில் விழுந்தால் தினமும் செத்து செத்து பிழைப்பாங்க. அவங்க காலணா அரையணா காலத்து ஆளு.
அரசாங்கம் தரும் எந்தவொரு இலவச பொருளுக்காகவும் வரிசையில் நான் காத்துக்  கிடந்தது கிடையாது ("ஆமா.. அது என்ன நம்மளாலே காசு குடுத்து வாங்க முடியாத பொருளா என்ன ?" என்று யோசிப்பேன்)
ஆனால் கையில் காசு இருக்கிறது. வரிசையில் நின்றாலும் நாம் எதிர் பார்த்து போகும் பொருள் கிடைப்பதில்லை.
என் அப்பாவின் சம்பாத்தியத்தில் எங்கள் குடும்ப உறுப்பினர் மொத்தம் ஏழு பேர் சாப்பிட்டோம். அப்போதுகூட நாளைக்கு சாப்பாட்டிற்கு என்ன செய்வது என்று யோசிக்க அவசியம் வந்ததில்லை.
மாதக்கடைசியில் காய்கறி வாங்க பணம் தட்டுப்பாடாக இருக்கும் நிலையில் கூட "அம்மா.. ரெண்டு நாளைக்கு காய் இல்லாட்டா பரவாயில்லை. வெள்ளிக்கிழமை விகடன் புஸ்தகம் வாங்கணும். ஞாயிற்றுக்கிழமை குமுதம் வாங்கணும். அதுக்கு காசு எடுத்து வை " என்று கோரஸாக சொல்வோம். இவ்வளவுக்கும் அந்த பத்திரிக்கைகளின் விலை 25 நயாபைசாதான். 
ஆனால் இந்த கொரோனா ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் பயத்தை கவலையை உண்டு பண்ணிவிட்டது.
பழைய திரைப்படப் பாடல் ஒன்றில் " கொல்லாதே இது போல." என்றொரு வார்த்தை வரும். சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது மேல். 
அதனால் ...
கண்ணுக்குத் தெரியா கிருமியே ...  எங்களைக் 
கொல்லாதே இது போலே .
(ஆனால் என்னோட கவலை எல்லாம் வீட்டில் பருப்பு இல்லை ; மிளகு இல்லை. காய் வாங்க க்யூவில் காத்துக் கிடக்க வேண்டி இருக்கு. இன்னும் பத்து நாட்களை எப்படி சமாளிப்பது என்பதுதான்.)
ஹூம்.. இதுவும் கடந்து போகும்னு நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்க்கை !

No comments:

Post a Comment