Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, February 13, 2015

Scanning of inner - heart ( Scan Report Number - 140 )

                                                மனுஷ சுபாவம் !!
" எதிர் வீட்டுத் தம்பிக்கு காபி கீபி ஏதாது வேணுமான்னு கேட்டியா சுபா? " என்று கரிசனத்துடன் விஸ்வநாதன் கேட்க, "எதிர் வீட்டு ராஸ்கல் எப்பத்திலிருந்து எதிர் வீட்டுத் தம்பியாக மாறினான் " என்ற கேள்விக் கணையை பார்வையாலேயே தாயின் மீது வீசினான் சுரேஷ் . 
"அதாண்டா எனக்கும் புரியலே " என்பது போல பதில் கணை சுபாவின் பார்வையில் வந்தது.
இந்த மாற்றத்துக்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளாவிட்டால் தலையே வெடித்து விடும் போலிருந்தது 
மடியிலிருந்த லாப் டாப்பை சோபாவில் வைத்துவிட்டு "என்னாலே நம்பவே முடியலே. அப்பாவுக்கு என்னம்மா ஆச்சு  " என்று  கிச்சனில் வேலையாக இருந்த சுபாவின் காதுகளில் கிசுகிசு குரலில் கேட்டான் சுரேஷ்.
"எனக்கும்தான் நம்ப முடியலே .. ரெண்டு மாசமா இந்த கரிசனம்தான். நீ ட்ரைனிங் பீரியட்னு நாலு மாசமா டூர் போயிட்டே. இன்னைக்குதான் வீட்டுக்கு வந்திருக்கே . அதனால்தான் உனக்கு இது புதுசா இருக்குது . எனக்கு இது பழகிப் போச்சு "
"அந்தப் பையனைக் கண்டாலே கரிச்சுக் கொட்டுவார். இவ்வளவுக்கும் அவன் நாம இருக்கிற திசைப் பக்கம் கூட வந்தது கிடையாது. அவனோட பேரெண்ட்ஸ் நார்த்தில் இருக்கிறாங்க. இவன் இங்கே வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருக்கிறான். தான் உண்டு தன்னோட வேலை உண்டுன்னு இருப்பான். மிட் நைட்டில் வந்து அவன் வீட்டுக் கதவை அவன் திறக்கிற சத்தத்தில் தன்னோட தூக்கம் கெட்டுப் போயிட்டதா புலம்பும் அப்பா அவனைத் திட்ட ஒரு காரணத்தை  தேடுவாரே. அப்பா அப்படி திட்டும்போதெல்லாம் நான் மனசுக்குள் என்ன நினைப்பேன் தெரியுமா ?" என்று தாயின் தோளில் முகம் சாய்த்துக் கொண்டு கேட்டான் சுரேஷ் .
"சொல்லு "
"நம்ம வீட்டில் நான் மட்டுந்தான். நல்லவேளை .. பெண் குழந்தைங்க யாரும் இல்லே.  வீட்டில் யங் ஏஜில் எனக்கொரு தங்கை இருந்திருந்தால் அதைக் காரணமா வச்சு அப்பா எப்படி எல்லாம் பயந்திருப்பார். எப்படி யெப்படி ரிஆக்ட் பண்ணி இருப்பார்னு கற்பனை பண்ணிப் பார்ப்பேன். மற்ற விஷயங்களில் தர்ம நியாயம் பேசற அப்பா இந்தப் பையன் விஷயத்தில் மட்டும் ஏன் இப்படி நடந்துக்கிறார்னு யோசிச்சுப் பார்ப்பேன்.  நல்ல பையன்மா .. ரொம்ப சாப்ட் நேச்சர். என்னை எதிரில் பார்த்தால் சிரிச்சுகிட்டே ஹலோ சொல்றதோடு சரி .. உங்க பேர் என்ன .. எங்கே வேலை பார்க்கிறீங்க ... இப்படி சாதாரணமாக் கூட பேசறது கிடையாது .. அவனைப் போய் அப்பா தேவையில்லாமே திட்டறாறேனு நினைச்சு வருத்தப் படுவேன் " என்றான் சுரேஷ். 
"அதெல்லாம் பழைய கதை .. இப்போ 'வாங்க தம்பி ..ஏதாது வேணும்னா கூச்சப்படாமே கேளுங்க தம்பி.. உங்க அப்பாவாட்டம் என்னை நினைச்சுக் கோங்க'னு சொல்லி குழையறது என்ன . வீட்டில் எது செய்தாலும் உடனே எடுத்துட்டுப் போய் குடுக்கிறதென்ன !"
"நல்ல மாற்றம் தான் .. இது எப்படின்னு சொல்லேன் "
"எனக்கு சத்தியமா தெரியாதுடா "
"அப்பாகிட்டே கேட்கிறதுதானே "
"உங்க அப்பா ரிடைர் ஆகி வந்ததிலிருந்து அவருக்கு மூட் சரியில்லேடா . என்னவோ நான்தான் அவரை ஆபீசிலிருந்து வெளியில் அனுப்பிட்ட மாதிரி என் மேலே எதற்க்கெடுத்தாலும் எரிஞ்சு விழறார். சாப்பிட வாங்க னு அவரைக் கூப்பிடுவதைக் கூட பயந்து பயந்து தான் செய்ய வேண்டி யிருக்குது. ஆனால் அந்த பையன் அவன் வீட்டுக் கதவைத் திறக்கிற சத்தம் கேட்டாலே இவர் நம்ம வீட்டு வாசலுக்கு ஓடறார் .. குசலம் விசாரிக்கிறார் . எனக்கு ஒண்ணுமே புரியலேடா "
"அப்பாகிட்டே கேட்போம் .. நீ என்ன சொல்றே ?"
"அவர் என்ன மூடில் இருக்கிறாரோ தெரியலியே .. இப்போ அமைதியா டீவீ பார்த்துட்டு இருக்கிறார்.  நீ எதையாது கேட்கப்போய் வேதாளம் முருங்கை மரத்திலே ஏறிடப் போகுது"
"அதெல்லாம் ஏதும் ஆகாதும்மா " என்று சொல்லியபடி ஹாலுக்கு வந்த சுரேஷ், விஸ்வநாதன் அருகில் சேரை இழுத்துப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தான். அவன் பின்னாலேயே சுபாவும் நின்றாள். என்ன என்பது போல இருவர் மீதும்  பார்வையை ஓட விட்டார் விஸ்வநாதன்.
"அப்பா .. இப்போ நீங்க ப்ரீ மூடில் இருக்கிறீங்க தானே ? உங்ககிட்டே கொஞ்சம் பேசணும்  "
"பேசணும்ங்கிற முடிவோட வந்துட்டீங்க .. என் மூட் எப்படியிருந்தால் என்ன ? நீ என்ன கேட்க வந்தியோ அதைக் கேளு "
"ஓகே .. உங்களுக்கும் அந்த எதிர் வீட்டு ராஸ்கலுக்கும் ... ஸாரி .. ஸாரி .. அந்த எதிர்வீட்டுப் பையனுக்கும் நல்ல அண்டர் ஸ்டாண்டிங் போலிருக்கு "
"அதுக்கென்ன ?"
"அவனைக் கண்டாலே உங்களுக்குக் கொலைவெறி வருமே .. அப்படி  யிருக்க எப்படியிப்படி சடனா மாறினீங்க .. நீங்க அவனைக் கரிச்சுக் கொட்டும் போதெல்லாம்  எதிர்வீட்டுக்கு குடித்தனக்காரங்க வந்துட்ட தாலே நம்ம ப்ரைவசி  போயிட்டதா நினைச்சு நீங்க அவனைக் கரிச்சுக் கொட்டறதா நினைச்சோம்.. இப்போ திடீர்னு அவன் மேலே பாசமழை பொழியறீங்க ?" என்று கேட்டுவிட்டு அவர் முகத்தைக் கூர்ந்து பார்த்தான் சுரேஷ். "கடவுளே ... இந்த மனுஷன் கோபத்தில் ருத்ர தாண்டவம் ஆடாமல் இருக்கணும்  .. சுரேஷ் மேலே இவர் பாயாமே இருக்கணுமே  " என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டிருந்தாள் சுபா.
"அந்தத் தம்பி பேரு ஈஸ்வர் .. ஐ டி கம்பெனியில் வேலை பார்த்துட்டு இருந்தானாம் . இப்போ வேலை போயிடுச்சாம் .. வேலை தேடித்தான் தினமும் அங்கே இங்கேன்னு அந்தத் தம்பி சுத்திட்டு வருது . அதை நினைச்சா மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது "
வியப்பின் உச்சிக்கே சென்ற சுரேஷ் அருகில் நின்று கொண்டிருந்த சுபாவை ஏறிட்டுப் பார்த்தான்.
"சில மாசத்துக்கு முன்னே டீவீ யில் நியூஸ் பார்த்தேன் . அமெரிக்காவில் நிறைய பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதுன்னு சொன்னாங்க. அங்கேயே அப்படின்னா அவங்களை நம்பி இங்கே வேலை செய்றவங்க பொழைப்பு என்னாகும்னு நினைச்சேன்.  ஆனால் அப்போ  அதைப் பெரிசா எடுத்துக்கலே. சுரேஷ் எனக்கொரு சந்தேகம் .. "
"சொல்லுங்கப்பா ...   "
"அங்கே ஏதோ பிரச்சினை வந்ததால்தான் இங்குள்ளவங்களுக்கு வர வேண்டிய ஆர்டர் கைமாறிப் போய் இருக்கிறவங்களை வேலையை விட்டுத் தூக்குறாங்களோ ?"
"கம்பெனி விஷயம் ... நமக்குத் தெரிய வாய்ப்பில்லையே .. கண்டிப்பா ஒரு காரணம் இருக்கும் .. என்ன காரணம்னு   அவங்க சொன்னாதானே தெரியும்  "
"எனக்கொரு யோசனை "
"சொல்லுங்கப்பா "
"இன்னன்ன சூழ்நிலையாலே நாங்க இதை இதை செய்யப் போறோம் . எங்களால் குறைஞ்ச சம்பளமே  தரமுடியும். இஷ்டப்பட்டவங்க இங்கே இருங்க.மத்தவங்க போங்கனு சொல்லி, புதுசா வரபோறவங்களுக்குக் குடுக்கப் போற வாய்ப்பை இவங்களுக்குக் குடுத்திருக்கலாம் தானே " என்று சொல்லிவிட்டு அமைதியில் ஆழ்ந்தார் விஸ்வநாதன் 
"செய்திருக்கலாம் " என்று சொல்லி அவரது மௌனத்தைக் கலைத்தான் சுரேஷ் . 
"இந்த வேலையை நம்பி   இவங்க என்னென்ன ப்ளான் எல்லாம் வச்சிருந் திருப்பாங்க. அதையெல்லாம் நினைச்சுப் பார்க்கிறப்ப  மனசுக்கு ரொம்ப   வேதனையா இருக்குது    "
"அதெல்லாம் முடிஞ்சு போன விஷயம் ... அதை நினைச்சு நீங்க ஏன் பீல் பண்றீங்க ?"
"நான் ரெண்டு மாசம் முன்னே ரிடைர் ஆகி வீட்டுக்கு வரும்போது சும்மா வரலே . கையில் பதினைஞ்சு லட்சம் ரூபாய்க்கான செக்கோட வந்தேன் .  மாசாமாசம் பதினாறாயிரம் ரூபா பென்சன் வரும் என்கிற கேரண்டி இருக்குது . அப்படியிருந்துமே வேலையிலிருந்து ரிடைர் ஆகி  வெளியில் வந்துட்டதை நினைச்சு இன்னைக்கும் மனசுக்குள் அழுதுட்டுதான் இருக்கிறேன். அந்த தம்பி மாசம் ஐம்பதாயிரம் ரூபா சம்பளம் வாங்குச்சாம் .. திடீர்னு அது நின்னு போச்சு .. அந்தப் பிள்ளை மனநிலை எப்படி இருக்கும்னு என்னால் கற்பனை பண்ணிக்கூடப் பார்க்க முடியலே. அந்த தம்பி  இடத்தில் நான் இருந்திருந்தால் எனக்குப் பைத்தியமே பிடிச்சிருக்கும்  " என்று சொல்லும்போதே அவரது கண்கள் கலங்கின.
"இவ்வளவு இரக்க சிந்தனை உள்ள நீங்க எதுக்காக அந்தப் பையனைத் தேவையில்லாமே கரிச்சுக் கொட்டினீங்க  ?"
"முப்பத்திரண்டு வருஷம் சர்விஸ் போட்ட பிறகுதான் என்னாலே முழுசா நாற்பதாயிரம்  ரூபாய் சம்பளத்தையே கண்ணால் பார்க்க முடிஞ்சுது. ஆனால் இப்போ வேலையில் சேருகிற இதுங்க எல்லாம் ஸ்டார்ட்டிங்கிலேயே நாப்பது அம்பதுன்னு சம்பளம் வாங்குதுகளே என்கிற வயிற்தெரிச்சல் எனக்கு எப்பவும் உண்டு . எதிர் வீட்டு தம்பி ஐ டி  கம்பெனியில் வேலைன்னு சொன்னதும் எனக்கு எரிச்சல் அதிகமாச்சு. என்ன இருந்தாலும் நானும் ஒரு மனுஷப் பிறவிதானே. அந்தப் பிறவிக்கான குணத்தை அப்பவும் காட்டினேன் . இப்பவும் காட்டறேன் " என்று அவர் சொல்லும்போது அவரது கண்கள் கலங்கி இருந்தது.
சுரேஷ் மனதுக்குள் ஊமைக் கண்ணீர் வடித்தான். சுபா புடவைத் தலைப்பில் முகத்தைத் துடைத்து கொண்டாள் .
"அப்பா உங்க மனமாற்றம் நல்ல விஷயந்தான் . இந்த உலகத்தில் எதுவும் சும்மா கிடைக்காது. ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு செய்கைக் கும் ஒரு விலை உண்டுன்னு சொல்வாங்க. ஈஸ்வர் மேலே உங்களுக்கு நல்ல அபிப்ராயம் வர அவன் குடுத்திருக்கிற விலை ரொம்பவும் அதிகம்னு தோணுது ."
சிறிது நேர அமைதிக்குப் பின் "வாஸ்தவம் தான்.  ஆயிரம் சொல்லு .. கவெர்ன்மெண்ட் வேலை  குடுக்கிற பாதுகாப்பே அலாதிதான். அங்கே கிடைக்கிற சம்பளம் இலந்தைப்பழ சைஸுக்கு இருக்கலாம்.  ஆனால் அது நிரந்தரம். மத்த இடங்களில் கிடைக்கிறது பலாப்பழம் மாதிரி நமக்குத் தோணுது . அது எப்போ கைமாறிப் போகுங்கிறது யாருக்கும் தெரியாதே. சேமிக்கிற சாமர்த்தியம்  சந்தர்ப்பமும் உள்ளவன் பேலன்ஸ் பண்ணிக்குவான்.அந்த சாமர்த்தியம் எத்தனை பேருக்கு இருந்திருக்கும் ?" என்று கேட்டு விட்டு வாசலை நோக்கி நடந்தார் விஸ்வநாதன்.
அங்கு நிலவிய இறுக்கமான சூழ்நிலையைத் தவிர்க்கவே அங்கிருந்து அவர் நகர்ந்தார் என்பது இருவருக்குமே புரிந்தது.

No comments:

Post a Comment