Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, February 06, 2015

Scanning of inner - heart ( Scan Report Number - 139 )

                                                            வீடு !
"வீடு எங்கே?"என்று இருந்த இடத்திலிருந்து வாசுதேவன் கேட்க "பேங்க்"  என்று ஒற்றை வார்த்தையில் பதில் வந்தது ரகுவிடமிருந்து.
"அப்படின்னா அந்த ஆனுவல் ரிபோர்ட் பைல்?"
"அதைப் பத்தி வீட்டுக்குத்தான் தெரியும் "
இதைக் கேட்டு தனக்குள் சிரித்துக் கொண்டாள் அர்ச்சனா. "எப்போ மேனேஜர் வந்து எப்போ எனக்கு சீட் அலாட் பண்றது ?" என்ற டென்சன் அவளுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.  எல்லாரும் பார்க்கும்படி இப்படி சென்டர் பிளேசில் ஒரே இடத்தில் மணிக்கணக்காக  உட்கார்ந்திருப்பது கஷ்டமாகத் தெரிந்தது அர்ச்சனாவிற்கு. ஆனால் அங்கிருந்தபடியே தன்னை சுற்றி நடக்கும் விஷயங்களைக் கவனிக்க முடிந்தது ஒரு வகையில் திருப்தி யாக இருந்தது அவளுக்கு.
நானும் வந்ததிலிருந்து பார்க்கிறேன். ஆளாளுக்கு "வீடு, வீடு" என்று வீட்டைப் பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறார்களே .. அது யாரோட வீடு என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள் 
சற்று முன்னால் வந்த ஒருவர், " வீட்டைக் காணலே .. வீட்டை நம்பித் தான் நான் டிபன் எடுத்துட்டு வரலே" என்று சொல்ல, " கவலையை விடு . லஞ்ச் டைமில் உன் டேபிளில் கொண்டு வந்து சேர்க்க வேண்டியது என்னோட பொறுப்பு .   நான் வீட்டை வெளியே அனுப்பி இருக்கிறேன்" என்று சொல்ல, " நீங்க கேரண்டி குடுத்தப்புறம் நான் ஏன் வொரி பண்ணப் போறேன்" என்றபடி அங்கிருந்து நகர்ந்தார் அவர்.  
கடிகார முள் அநியாயத்துக்கு ஸ்லோவாக நகர்வது போன்ற பிரம்மை. "மேடம்" என்ற குரல் கேட்டு திரும்பிய அர்ச்சனா "யெஸ்" என்றாள் பணிவாக.
"நான் இந்த ஆபீசில் அனலிஸ்ட் .  என்னோட பேர் அஹ்மத். மேனேஜர் ஆபீஸ் வேலையா வெளியே போனார். அது முடிய அதிக நேரம் ஆகுமாம். அதனாலே அதை முடிச்சுட்டு அப்படியே வீட்டுக்குப் போயிடுவேன். நாளைக்குதான் வருவேன்னு மெசேஜ் அனுப்பிட்டார். இன்னிக்கு மட்டும் உங்களை  அக்கௌன்ட்ஸ் செக்சனில் உட்கார வைக்க சொன்னார். அவர் வந்ததும் உங்களுக்கு சீட்டும் வொர்க்கும் அலாட் பண்ணுவார். என்னோட வாங்க .. உங்களை அக்கௌன்ட்ஸ் செக்சனில் கொண்டு போய் விடறேன்  " 
பதிலேதும் பேசாமல் அவர் பின்னால் நடந்தாள் அர்ச்சனா 
"நீங்க இந்த ஆபீசுக்கு மட்டும்தான் புதுசா இல்லே வேலைக்கே புதுசா ?"
"வேலைக்கே புதுசு "
"அதான் உங்க கிட்டே இப்படியொரு டென்ஷன் .. முகத்தில் பயக் களை! பயப்படாதீங்க.. இங்கே பெர்சனலா எல்லோரும் நல்லவங்க .  அபீசியலா ஒவ்வொருத்தரும் யமனுங்க. பார்த்து நடந்துக்க வேண்டியது உங்க சாமர்த்தியம். உங்களுக்குள் என்னதான் பயம் இருந்தாலும் அப்படி ஒண்ணு இருப்பதை வெளியில் காட்டிக்காதீங்க.. கையில் சாப்பாடு கொண்டு வந்துருக்கீங்க தானே? இங்கே கேண்டீன் வசதி கிடையாது "
"சாப்பாடு கொண்டு வந்திருக்கிறேன் "
"குட்"
"வொர்க்கில் என்ன சந்தேகம் வந்தாலும் ஒரு முறைக்கு ரெண்டு முறையா கேட்டுக்கோங்க. ரொம்ப  பொறுமையா சொல்லித் தருவாங்க.. ஒண்ணை  சொல்லித் தரும்போது எல்லாம் புரிஞ்ச மாதிரி தலையை பூம்பூம் மாடு மாதிரி ஆட்டிட்டு, பிறகு வேலையில் தப்பு பண்ணினா கோபப் படுவாங்க. பார்த்து நடந்துக்கணும்"
"சரி ... ஸார் ஒரு டௌட் ..."
"இன்னும் நீங்க ஸீட்டில் உட்காரவே இல்லை .. அதற்குள் டௌட்டா ?"
"நானும் வந்ததிலிருந்து கவனிக்கறேன் .. எல்லாரும் "வீடு வீடு "னு பேசிக்கிறாங்க..  அது யாரோட ...."
"ஓ" என்று சத்தமாக சிரித்த அஹமத் "உங்க ஸீட்டை உங்களுக்குக் காட்டுறதுக்கு முன்னாலே  முதலில் வீட்டைக் காட்டறேன் .. வாங்க " என்றான்  
பதிலேதும் பேசாமல் நின்றாள் அர்ச்சனா  
"வெளியில் போயிருந்த வீடு இப்பத்தான் சீட் பக்கம் போனதாக ஞாபகம். வீடு முன்னாலே கொண்டு போய் நிறுத்தறேன். விஷ் பண்ணுங்கோ . பேச்சை துவக்கி வச்சிட்டு நான் கிளம்பிடுவேன் .  அப்புறம் எஞ்சாய் யுவர் ஸெல்ப் "
மௌனமாக தலையாட்டினாள் அர்ச்சனா 
காலையிலிருந்து அவள் உட்கார்ந்திருந்த இடத்துக்கே திரும்பவும் அவளை  அழைத்து வந்த அஹமத், அந்த ஹாலின் கடைசிப் பகுதிக்கு அவளை அழைத்து சென்றான். ஹான்ட் பேக்கில் எதையோ தேடிக் கொண்டிருந்தவரிடம்  "ஸார். இவங்க   நம்ம ஆபீசுக்கு புது வரவு .. வீடுன்னா என்னனு கேட்டாங்க.. புரிய வையுங்க " என்று சொல்லிவிட்டு   அவள் பக்கம் திரும்பி "இந்த இடத்தை விட்டு நகரும் போது உங்க சந்தேகம் கண்டிப்பா காணாமே போயிடும்  " என்று குறும்பு சிரிப்புடன் சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
"உட்காரும்மா .. உன் பேர் என்னம்மா ?"
"அர்ச்சனா "
"முதலில் ஒரு கேள்வி . நான் முதல் முதலா யாரை மீட் பண்ணினாலும் அவங்க கிட்டே நான் வழக்கமா கேட்கிற கேள்வி . இந்த பூமியில் எத்தனையோ இடங்கள் இருக்குது . எந்த இடத்துக்குப் போனாலும் அந்த இடத்துக்கு  சம்பந்தப் பட்டவங்களோட அனுமதி வேணும் ... அதுவும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் உள்ளே அலொவ் பண்ணுவாங்க .. வெளியில் விடுவாங்க . சில சமயம்  உள்ளே போக டிக்கெட் எடுக்கணும் .. யாரோட அனுமதியும் இல்லாமே .. பாஸ் போர்ட் .. விசா .. லொட்டு லொசுக்குனு எந்த டிமாண்டும் இல்லாமே  நினைச்ச நேரத்தில் நாம போகக் கூடிய இடம் எது தெரியுமா ?" என்று கேட்டுவிட்டு அவளைக் கூர்ந்து நோக்கினார் அவர்.
இப்படியொரு கேள்வியை சற்றும் எதிர்பாராத அர்ச்சனா சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்தாள். "எந்த இடம் .. எந்த இடம் " என்ற கேள்வி மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.
"தெரியலே " என்றாள் அசடு வழிய 
"வீடும்மா ... நம்ம வீடு "
"உனக்கு நாட்டுப் பற்று உண்டா .. அப்படியொரு சிந்தனையாவது உண்டா  ?"
சிறிதும் தயங்காமல் "அப்படியெல்லாம் நான் யோசித்துப் பார்த்ததே இல்லை " என்றாள் 
"உன்னோட உண்மையான பேச்சு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு "
"நாங்களும் நம்பர் ஒன் .. அப்படின்னு கொடி ஏத்தும்   போதெல்லாம் நாம பெருமை பேசிகிட்டாலும் நம்ம பிளஸ் மைனஸ் நமக்கு தெரியும் தானே?" 
"ஆமாம் "
"நாட்டோட மைனஸ் பாயிண்டை சரி பண்ணனும்னா அதுக்காக ஒட்டு மொத்த நாட்டையும்  குப்புறக் கவுத்தி சரி பார்க்கணும்கிற அவசியம் எதுவுமே இல்லே. ஒவ்வொருத்தரும் அவங்கவங்க வீட்டை சரி பண்ணினாலே போதும்.  அந்த வீட்டில் இருக்கிறவங்க சரியா நடந்து கிட்டாலே போதும் "
"எப்படி ஸார்?" என்ற கேள்வி ஆர்வத்துடன் வந்தது அர்ச்சனா விடமிருந்து.
"ஒவ்வொருத்தரும் அடுத்தவங்க விஷயத்தில் தலையிடாமே அவங்க அவங்க வீட்டு வேலையையும் மனுஷங்களையும் கவனிச்சு கிட்டாலே போதும்.. நிறைய பிரச்சினை சால்வ் ஆயிடும் "
"நீங்க சொல்றது புரியலே "
"என் வீடு சுத்தமாகத்தான் இருக்கும். அதே போல எங்களோட சுத்துப் புறமும் சுத்தமாத்தான் இருக்கும் .  எங்களுக்குப் பிடிச்ச விஷயங்களை எங்க வீட்டில் நாங்க செய்வோம் .. அடுத்த வீட்டுக்காரனுக்கு அது ஒரு நாளும் தொந்தரவா இருக்காது. யாராவது வந்து எங்ககிட்டே வந்து யோசனை கேட்டால் சொல்வோமே தவிர அடுத்தவங்க விவகாரங்களில் மூக்கை நுழைக்க மாட்டோம்ங்கிற வைராக்கியத்தில் இருந்தால் போதும்  யாருக்கும் எந்த பிரச்சினையும் வராது . பழைய தமிழ்ப் பாடல் ஒண்ணு உண்டு. ஸ்கூலில் நீ கூட படிச்சிருக்கலாம். ஒருவனைப் பலி குடுத்து ஒரு   குடும்பத்தைக் காப்பாற்றலாம். ஒரு குடும்பத்தை பலி குடுத்து ஒரு தெருவைக் காக்கலாம் .   ஒரு ஊரைக் காப்பாற்ற ஒரு தெருவைப் பலி கொடுக்கலாம். ஒரு நாட்டைக் காப்பாற்ற ஒரு ஊரை  பலி குடுக்கலாம் அதில் எந்த தப்பும் கிடையாது ன்னு அந்த பாடல் சொல்லும். இந்தப் பலிங்கிற வார்த்தைக்குப் பதிலா, சுயக் கட்டுப்பாடுங்கிற வார்த்தையைப் போட்டு அந்தப் பாடலைப் படிச்சுப் பாரு. ஒவ்வொரு வீடும்  அந்தக் குடும்பத்தினரின்  சுயக் கட்டுப் பாட்டில் இருந்தால்  போதும். அந்த வீடும் நிம்மதியா இருக்கும். அந்த  தெருவும்  நிம்மதியா இருக்கும். தெரு நிம்மதியா இருந்தா ஊர் நிம்மதியா இருக்கும். ஊர்கள் சேர்ந்ததுதானே நாடு . அதனால் நாடு நன்றாக இருக்கும். ஒரு நாடு நன்றாக இருக்க ஒரு வீடு அந்த வீட்டினர்  தன்னை அறிந்து நடந்துகிட்டாலே போதும். வீட்டை வெறும் வீடாகப் பார்க்காமல் ஒரு நாட்டோட அஸ்திவாரமா பார்க்கணும்னு நான் ஒவ்வொர்த்தர் கிட்டேயும் சொல்வேன் . எங்க அப்பா சுதந்திரப் போராட்ட தியாகி. அவர் விட்ட பணியை எப்போதும் நான் தொடருவேன். மத்தவங்க கேட்டாலும் கேட்காட்டாலும் என் கருத்தை அவங்க கிட்டே சொல்வேன்  "
"அதற்கு பலன் கிடைக்குதா ?" என்று ஆவலுடன் கேட்டாள் அர்ச்சனா 
"பலன்தானே ? பகவத் சிங் என்கிற என்னோட பேரை "வீடு"னு இந்த ஆபீசில் மாத்திட்டாங்க. அதை நான் பெரிசா எடுத்துக்கலே .. எப்படியோ வீடு நினைப்பில் இருந்தால் சரின்னு நினைச்சுக்குவேன் " என்றார் .
"மேடம் .. வீடு விவகாரம் புரிஞ்சுதா ? உங்க ஸீட்டுக்கு போகலாமா ?"
என்று குரல் கேட்டு திரும்பிய அர்ச்சனா "நீங்க இங்கேதான் இருந்தீங்களா  ?" என்று திகைப்புடன் கேட்க  பதிலேதும் சொல்லாமல் சிரித்த அஹ்மத், சிறிது நேரம் கழித்து "என்னதான் ராஜ உபசாரம் பண்ணி என்னை  ஒரு  ஸ்டார் ஹோட்டலில் தங்க வச்சாலும், அங்கெல்லாம் கிடைக்காத நிம்மதி, எந்தவொரு வசதியுமே இல்லாத எங்க வீட்டில்தான் கிடைக்கிறமாதிரி  எனக்கொரு பீலிங் .. வாடகை வீடு .. தண்ணீர் சரியாக வராது. காற்று கூட ரேஷனில் தான் வீசும் .. மழை காலத்தில் வீட்டுக்குள் தண்ணீர் வந்துடும். ஆனாலும் வீட்டுக்குள் நுழையறப்போ  கிடைக்கிற நிம்மதியே தனிதான். இந்த உலகத்திலே எனக்கு ரொம்ப பிடிச்ச இடம் எங்க வீடுதான். பிடிச்ச மனிதர் "வீடு " ஸார் தான் " என்றான் 
"எனக்கும் "வீடு" ரொம்ப பிடிச்சிருக்கு " என்றாள் அர்ச்சனா குதூகலத்துடன்  

No comments:

Post a Comment