Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, January 31, 2016

குழந்தைகளுக்கான குறுந் தொடர் - 25

                                         அச்சுப்பிச்சு அப்புமணி !

மொபைலில் யாருடனோ வெகு நேரம் பேசிக்  கொண்டிருந்த  சேகர், "ச்சே .. எப்பவும் ஏதாவது பிரச்சினை பண்றதே இவனுக்கு வேலையாப் போச்சு " என்றபடி மொபைலை ஸ்விச் ஆப் செய்தான்.
"என்ன .. என்ன விஷயம் ?" என்று ராஜு கேட்க, சேகர் பதில் சொல்வதற்கு முன்பாக ,   "பிரச்சினைஎங்கேதான்இல்லே. சீனாவிலே   கூடத்தான் பிரச்சினை இருக்குது" என்றான் அப்புமணி ரொம்ப கேஷுவலாக. அதைக் கேட்டு அதிர்ந்த ராஜு, இரண்டு கைகளாலும் நெஞ்சைப் பிடித்தபடி, "சேகர் ... எனக்கு என்னவோ பண்ணுதே . இந்த லூஸு உலகத்தைச் சுத்திப் பார்க்க வந்திருக்கேன்னு சொல்லிச்சு. எதையும் சுத்திப் பார்க்காமே இந்த ரூமை மட்டும் சுத்திச்சுத்தி வந்துச்சு. இப்ப உலக விஷயத்தைப் பேசுது. என்னாலே தாங்க முடியலே. என்னனு கேட்டு சொல்லு சீக்கிரம்.... ஐயோ ... எனக்கு நெஞ்சு வெடிச்சிடும் போலிருக்கே " என்று ஆக்ட் கொடுத்தான்.
"ஏய் .. அச்சு .. என்ன சொல்றே ? சீனாவில் என்ன பிரச்னை? அதை உனக்கு சொன்னது யாரு ?" என்று கேட்டான் சேகர்.
"என்னோட படிக்கிற பிள்ளைங்கதான் சொன்னாங்க "
"எப்போ?"
"முன்னயே "
"ஏய் .. எங்களைத் தாளிக்காமே விஷயத்தை சொல்லுடா  .."
"சொல்றேன்... கேட்டுக்கோங்க .. ரெண்டாம் வாட்டி கேட்டா சொல்ல மாட்டேன் " என்ற பீடிகையுடன், தொண்டையை சரி செய்தபடி குரலை செருமிக் கொள்வதைப் பார்த்த ராஜு தலையில் அடித்துக் கொண்டான். அதைப் பற்றிக் கவலைப்படாத அப்புமணி, "ஜனத்தொகை நிறைந்த   சைனாவில் ஒரு பிரச்சினை. இறந்து போன ஒருவனை எரிப்பதா அல்லது புதைப்பதா என்ற பிரச்சினை. எரித்து விட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.புதைத்து விட்டால் இரண்டு பிரச்சினை. அந்த இடத்தில் புல் முளைக்குமா முளைக்காதா என்பதுதான் அது. புல் முளைக்கா விட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை. புல் முளைத்து விட்டால் இரண்டு பிரச்சினை. அந்தப் புல்லை மாடு தின்னுமா தின்னாதா ? அந்தப் புல்லை மாடு தின்னாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை. அந்தப் புல்லை மாடு தின்று விட்டால் இரண்டு பிரச்சினை. அந்தப் புல்லைத்  தின்ற மாட்டுக்கு பால் சுரக்குமா சுரக்காதா? பால் சுரக்கா விட்டால் எந்தப் பிரச்சினையுமில்லை. பால் சுரந்து விட்டால் இரண்டு பிரச்சினை. சுரக்கும் அந்தப் பாலைக் கறக்கலாமா கறக்ககூடாதா?  பால் கறக்கா விட்டால் எந்தப்  பிரச்சினையும் இல்லை.  பால் கறந்து விட்டால் இரண்டு பிரச்சினை. அந்தப் பாலை மனிதர்கள் குடிக்கலாமா கூடாதா? அந்தப் பாலை மனிதர்கள் குடிக்காவிட்டால் எந்தப் பிரச்சினையுமில்லை. அந்தப் பாலை மனிதர்கள் குடித்தால்  இரண்டு பிரச்சினை. பாலைக் குடித்த அவர்கள் உயிரோடு இருப்பார்களா மாட்டார்களா ? அவர்கள் உயிரோடு இருந்து விட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை. இறந்து விட்டால் இரண்டு பிரச்சினை! இறந்து போனவர்களை எரிப்பதா புதைப்பதா? " என்று மூச்சைப் பிடித்தபடி சொல்லி முடித்தான் அப்புமணி. பிறகு "நாங்க இதை எங்க ஸ்கூலில் தினமும் சொல்லுவோம்." என்றான்.
இந்த நேரத்தில் வேலைக்காரி தனம் அங்கே வர , "அக்கா ... தனம் அக்கா .. இந்த ஏரியாவில் ரொம்பவும் பாழடைஞ்ச கிணறு எங்கே இருக்குதுக்க?" என்று பரிதாபமாகக் கேட்டான் ராஜு .
"ஏன் தம்பி கேக்குறீங்க ?" என்று ஒன்றும் புரியாதவளாகக் கேட்டாள் தனம். 
"அய்யய்யோ எனக்குத் தாங்க முடியலேக்கா . உடனே ஏதாவது ஒரு கிணத்துலே குதிக்கணும் போல இருக்குதுக்கா" என்று ராஜு சொல்ல, அவனை முறைத்துப் பார்த்த சேகர், "குழந்தைப் பையன்.. விளையாட்டா அப்பாவித்தனமா ஏதோ சொன்னா அதை ரசிக்காமே சீரியஸா பார்க்கிறே ?" என்றான் கடுப்புடன்.
"நீயும் உன் ரசனையும். எனக்குக் கொலை வெறி கொலை வெறி போல வருதே" என்று பாடினான் ராஜு .
"வா .. அச்சு ...நாம வெளியே போயிட்டு வரலாம் " என்று அப்புமணியுடன் சேகர் வெளியில் வந்தான். 
"அச்சு .. நீ பீச் பார்த்திருக்க மாட்டே தானே ?" என்று கேட்டான் சேகர்.
"நான் ராஜகுமாரியோட சேர்ந்து மகாபலிபுரம் பீச் பார்த்திருக்கேன் "
"அது யாரு ராஜகுமாரி ?"
"அவ பேரு.... பேரு ..."என்று அப்புமணி தலையை சொரிய , "சரி விட்டுத் தள்ளு. வா .. பீச் போகலாம் " என்றவன் ஒரு ஆட்டோவை கைதட்டிக் கூப்பிட்டான். அங்கிருந்து இருவரும் மெரினா போனார்கள் .
கடலைப் பார்த்ததும் அப்புமணி குஷியாகி விட்டான்.
"அப்பப்பா ... எவ்ளோ தண்ணீ .. வெளியே வருது.. உள்ளே ஓடுது. ஏன் சேகர் அண்ணா ?"
"அது இயற்கையோட அமைப்பு. கடவுளோட கட்டளை. அதுக்குக் கீழ்ப் படிஞ்சு நிக்குது ."
"நமக்கு கடவுள் எந்தக் கட்டளையும் போடலையா ?"
"நிறைய போட்டிருக்கார். ஆனா அதை நாம கேட்க மாட்டோம் "
"ஏன்?"
"ஏன்னா .. நாம மனுஷங்க .. நம்ம இஷ்டப்படிதான் நடப்போம்."
"எனக்கு ஒண்ணும் புரியலே "
"சரி .. விடு.. சுண்டல் சாப்பிடறியா ?"
"நான் மனசுக்குள் நினைச்சேன். நீங்க உடனேயே எங்கிட்டே வேணுமா ன்னு கேட்டுட்டீங்க  "
"உனக்கு வேணுங்கிறதை கேட்டு வாங்கிக்கோ. ஏன் வெட்கப் படறே ?"
"யாருட்டேயும் எதுவும் கேட்டு வாங்கி சாப்பிடக் கூடாதுன்னு எங்கம்மா சொல்லி இருக்காங்க."
"நான் உன்னோட அண்ணா தானே ?"
"அது எங்க அம்மாவுக்கு தெரியாதுதானே " என்றான் அப்புமணி 
சுண்டல் விற்பவரைக் கூப்பிட்டு "இந்தப் பையன் கையில் சுண்டலும் ரெண்டு முறுக்கும் கொடுங்க " என்றான் சேகர் 
"முறுக்கு வேணும்னு நான் நினைக்கவே இல்லை. இருந்தாலும்  வாங்கிக் குடுத்துட்டீங்க . நீங்க ரொம்ப நல்ல அண்ணா "
"பாராட்டெல்லாம் போதும். சிந்தாமே சாப்பிடு " என்றான் சேகர்.
அதன்பின் கேள்வி எதுவும் கேட்காமல் மௌனமாக சாப்பிட்ட அப்புமணி "அண்ணா ... நான் கை அலம்பிட்டு கொஞ்ச நேரம் அலையில் விளையாடிட்டு வர்றேன்  " என்று சொல்லிவிட்டு கடலை நோக்கி ஓட ஆரம்பித்தான். 
அதே சமயம் அங்கு வந்த இரண்டு போலீஸ் கான்ஸ்டபிளில் ஒருவர், "ஸார் ... அங்கே பாருங்க .... அவனைப் பார்த்தால் காசிமேடு குண்டு வெடிப்பில் நாம தேடற ஆள் மாதிரி இல்லே ?" என்று சந்தேகம் கேட்டார்.
"உனக்கு முன்னயே  நான் வாட்ச் பண்ணிக்கின்னுதான் இருக்கிறேன் .." என்று சொன்ன மற்றொரு கான்ஸ்டபிள், சேகரை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
அவர் வருவதைக் கவனித்து சுதாரித்துக் கொண்ட சேகர், வேகமாக எழுந்துஅங்கிருந்த ஜனக் கூட்டத்துக்குள் தன்னை ஒளித்துக் கொண்டான். சிறிது நேரம் இங்கும் அங்கும் சுற்றி அலைந்த  இருவரும் கடலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்.
"பெரிய மீன்   தப்பினா என்ன ! சின்ன மீன் இருக்கே. அதைப் பிடிச்சு வறுத்தா பெரிய மீன் இருக்கிற இடம் தெரிஞ்சிடப் போகுது" என்று சொல்லியபடி,கடலலையில் விளையாடிக்கொண்டிருந்த அப்புமணியின் கைகளை உடும்புப் பிடியாகப் பிடித்தார்கள்.
தன்னை சுற்றி நடப்பது என்ன என்பதே தெரியாமல் அப்புமணி நிற்க, அதை சேகர் கவனிக்கத் தவற வில்லை. 
---------------------------------------------------------------- தொடரும் -----------------------------------------------  

No comments:

Post a Comment