Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, January 01, 2016

குழந்தைகளுக்கான குறுந் தொடர் - 21

                                                                 
 அச்சுப்பிச்சு அப்புமணி !
பலவேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்களும், ஆசிரியர்களும் குழந்தை களும் அந்த சுற்றலா பயணத்தில் இருந்ததால்,அப்புமணியை அந்தக் கூட்டத்துக்குக் கொஞ்சமும்  சம்பந்தமில்லாத ஆளாக யாருமே நினைக்க வில்லை. 
குழந்தைகள் எல்லோரும் ஆடல் பாடல் என்று பஸ்ஸுக்குள் இருந்த அனைவரையும் உற்சாகப்படுத்திக் கொண்டிருந் தார்கள். அதை அப்புமணி மிகவும் ரசித்தான். அவர்களின் தன்னை  மறந்த சந்தோசம் அப்புமணியையும் தொற்றிக் கொண்டது. பஸ்ஸின் முன் ஸீட்டில் உட்கார்ந்திருந்த ஆசிரியர்கள் தாங்கள் வாங்கிக் கொண்டு வந்திருந்த பன், பிஸ்கட் பாக்கெட்டுகளைப் பிரித்து அடுத்தவரிடம் கொடுக்க அது ஒவ்வொரு கையாக மாறி, கடைசி இருக்கை வரை வந்து சேர்ந்தது. அதை அப்புமணி ரசித்து சாப்பிட்டான். அந்த சந்தோசம் சில மணி நேரங்கள்தான். இதற்குள் மஹாபலிபுரம் வந்து விடவே, பஸ்ஸை ஓரங்கட்டிய டிரைவர், எல்லாரும் இறங்கலாம் என்று குரல் கொடுத்தார்.
பஸ்ஸை விட்டு இறங்கிய மாணவர்கள் இரண்டு இரண்டு பேராக கை கோர்த்துக் கொள்ள, கடைசியாக இறங்கிய அப்புமணி மாணவர்களின் வரிசையில் நிற்காமல் தனது எதிரே தெரிந்த பாதையில் நடக்க ஆரம்பித்தான். "டேய்...இங்கேவா " என்று மாணவன் ஒருவன் கூப்பிட்டது அப்புமணியின்  காதுகளில் விழவே இல்லை. தன் போக்கில் நடந்து கொண்டிருந்தான். ஆசிரியர் ஒருவர் மாணவர்களின் எண்ணிக்கையை சரி பார்த்து  விட்டு, "எல்லாரும் ஒரு ஓரமாக நடக்க ஆரம்பிக்கலாம் " என்று குரல் கொடுத்ததும் மாணவர்களின் அணிவகுப்பு தொடங்கியது.
தெருவோரம் சிலை செதுக்கிக் கொண்டு இருந்தவர்களை வேடிக்கை பார்த்தபடி  அப்புமணி நடந்து கொண்டிருக்க, அவனருகில் வந்த ஒருவர் , "தம்பி, உலைக்கன்னேசுவரர் கோவிலுக்கு எப்படிப் போகணும் ?" என்று கேட்டார். 
"தெரியாது. நான் வேறே ஊர் ... இந்த ஊரில் இருக்கிறவங்களைக் கேட்டுப் பாருங்க  " என்றான் அப்புமணி.
"வேறே ஊர்னு சொல்றே ! தனியாக நடந்து வர்றே ... உன்னோடு சேர்ந்து யாரும் வரலியா?"
"வரலே "
"காலங் கெட்டுக் கிடக்குது. தனியா வந்தேன்னு சொல்றே .. உலகந் தெரியாதபிள்ளையா இருக்கிறியேப்பா" என்று கவலையுடன் சொன்னார் அவர். 
"அதைத் தெரிஞ்சுக்கத் தானே நான் வீட்டை விட்டு வந்திருக்கிறேன் " என்று அப்புமணி சொல்ல, அவனை விநோதமாகப் பார்த்தார் அவர்.
இதற்குள் அங்கு வந்த போலீஸ் காரர் ஒருவர்."ஏய் .. ஓரமா நின்னு கதை பேசு " என்று லத்தியை சுழற்றியபடி வந்தார். அப்புமணியிடம் பேசிக் கொண்டிருந்த அந்த நபர், "என்ன ஸார் போலீஸ் கெடுபிடி அதிகமா இருக்குது. யாராவது பெரிய மனுஷங்க வர்றாகளா ?" என்று கேட்டார்.
"பெரிய மனுஷன் வீட்டுப் பொண்ணு தான் இந்தக் காய்ஞ்ச பூமியையும்  பாறாங் கல்லையும் சுத்திப் பார்க்க வருது " என்று சலிப்புடன் சொன்னார் போலீஸ் காரர். 
"இந்த ஊரிலேயே இருக்கிற உங்களுக்கு இந்த இடமெல்லாம் தினமும் பார்த்துப் பார்த்து அலுத்துப் போன ஒண்ணு . எங்களைப் போல புதுசா வர்றவங்களுக்கு இது  ஆச்சரியமான ஒன்று .. எங்கே பார்த்தாலும் கற்சிலை .. என்னவொரு கலைவண்ணம் .. என்னவொரு ரசனை !" என்று அவர் சொல்ல, "அதை ஒரு ஓரமா நின்னு ரசிங்க " என்று கடுகடுத்தார் கான்ஸ்டபிள்.
அப்போது கப்பல் போன்ற பெரிய கார் ஒன்று வந்து நிற்க அதிலிருந்து தேவதை போல் இறங்கி வந்தாள் சிறுமி ஒருத்தி. அவள் பின்னாலேயே காவலர்கள் ஓடி வந்தார்கள். அப்போது ... யாருமே எதிர்பாராத விதத்தில் அவளருகில் ஓடி சென்ற அப்புமணி, "உன்னைப் பார்த்தால் கதையில் வர்ற தேவதை மாதிரி இருக்குது" என்றான்.
காவலர்களின் வலிய கரங்கள் அப்புமணியின் தோள்களை இறுக்கிப் பிடிக்க, "லீவ் ஹிம்.  நோ ப்ராப்ளெம் ... லெட் ஹிம் டு கம் வித் மீ " என்று அந்த சிறுமி சொல்ல, "மேம் " என்று அவர்கள் தயங்கினாலும் , அந்த சிறுமி சொன்னதால் அப்புமணியை செக் பண்ணி விட்டு அவர்களுடன் அப்புமணி சேர்ந்து வர அனுமதித்தார்கள் .
"உன் பேர் என்ன ?" என்று கேட்டாள் அந்த சிறுமி 
"ஹே .. அவங்க கிட்டே 'தஸ்ஸு புஸ்ஸு'ன்னு இங்கிலீஷில் பேசினே. என்கூட தமிழில் பேசறே ! உனக்கு தமிழ் தெரியுமா ? உங்க வீடு எங்கே இருக்குது ? என் பேரு அச்சுப்பிச்சு அப்புமணி. உன்னோட பேர் என்ன? " என்று அப்புமணி கேட்டான்.
"ஓ .. அச்சுப்பிச்சு ... ரொம்ப வித்தியாசமான பேரா இருக்குதே. இது யார் வச்ச பேர்.? நான் அமெரிக்காவிலிருந்து வர்றேன். என்னோட பேர் நிவேதிதா. எங்க தாத்தா ஒரு மீட்டிங் விஷயமா இந்தியா வந்தார். இந்தியாவைப் பார்க்கணும்னு எனக்கு ரொம்பவும் ஆசை "
"அச்சுப்பிச்சுங்கிற பேரை என்னோடு படிக்கிறவங்க என்னோட பிரெண்ட் வச்சாங்க.உனக்குஇந்தியாவைப் பார்க்க ஆசை..எனக்கு அமெரிக்காவைப் பார்க்க ஆசை. இப்போ நான் உலகத்தை சுத்திப் பார்க்கத்தான் எங்க வீட்டை விட்டு ஊரை விட்டு வந்திருக்கிறேன் " என்றான் அப்புமணி ரொம்பவும் கேஷுவலாக .
"வாவ் .. உலகத்தை சுத்திப் பார்க்கக் கிளம்பி வந்திருக்கியா ? நீ நார்மலாத் தானே இருக்கிறே ?  " என்று ஆச்சரியமாகக் கேட்டாள் நிவேதிதா 
"நீ கேக்கிறது ஒண்ணுமே புரியலே .. இங்கே கடல் இருக்குது . நாம கடல் தண்ணீரில் காலை நனைச்சு விளையாடலாமா? " என்று கேட்டான் அப்புமணி.
"உங்க வீட்டில் உன்னைத் தேட மாட்டாங்களா ?" என்று கேட்ட நிவேதிதாவிடம், "நான் எங்க அம்மா கிட்டே சொல்லிட்டு தானே வந்தேன். நீ கடல் பார்க்க வர்றியா இல்லையா ... முதலில் அதை சொல்லு " என்று கேட்டான் அப்புமணி . 
"செக்யூரிட்டி கார்ட்ஸ் கிட்டே சொல்லலாம். நாம இப்போ அவங்க கண்ட்ரோலில் தான் இருக்கிறோம். " என்று சொன்ன நிவேதிதா, தனது விருப்பத்தை அவர்களிடம் ஆங்கிலத்தில் சொல்ல, அதை ஆச்சரியமாகப் பார்த்தபடி அப்புமணி நின்று கொண்டிருந்தான்  
"திஸ் பாய் ..." என்று அவர்கள் சொல்லும்போதே, " ஹீ வில் கம் வித் அஸ்" என்று நிவேதிதா சொல்ல, அனைவரும் கடற்கரையை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள் . 

No comments:

Post a Comment