Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, December 25, 2015

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 20

                                             
 அச்சுப்பிச்சு அப்புமணி !
"தம்பி" என்று அழைக்கும் குரல் கேட்டு பழைய நினைவுகளில் இருந்து தன்னை சுய நினைவுக்குக் கொண்டு வந்தான் சேகர்.
"நீ இன்னும் கிளம்பலையா ?" என்று கேட்ட சேகருக்கு அசட்டு சிரிப்பொன்றை பதிலாகத் தந்த தனம், "தம்பி, நாளைக்கு நான் வேலைக்கு வர மாட்டேன்." என்றாள்.
"என்ன விஷயம் ?" 
"கோவிலுக்கு மாவிளக்குப் போடப் போகணும் தம்பி "
"அதுக்குக் காசு பணம் எதாச்சும் வேணுமா ?"
"வேணாம் ... வேணாம் ... சொல்லாமக் கொள்ளாமே வேலைக்கு வராமே இருந்திட்டா நீ கோவிச்சுக்குவே ... அதான் முன்னாடியே சொல்றேன் .."
'"சரி ... சரி ... நிதானமா போயிட்டு நல்லா சாமி கும்பிட்டுட்டு வா. நாளைக்கு நானே வீட்டில் இருந்து இவரை கவனிச்சுக்கிறேன். நீ இப்போ கிளம்பு. அவர் தூங்கட்டும். நான் போய் வெளி வேலையை முடிச்சிட்டு வந்துடறேன் " என்று சொல்லி அங்கிருந்த கிளம்பிய சேகர், ராஜுவின் வீட்டுக்கு வந்தான். 
"என்னப்பா ... உன்னோட உடன் பிறவா சகோதரனைப் பார்த்தாச்சா ? என்ன சொன்னார் ?" என்று சிரித்துக் கொண்டே கேட்டான் ராஜு 
"என்ன நக்கலா ?" என்று கேட்டு கடுகடுத்தான் சேகர்.
"அந்த ஆள் விஷயத்தில் நீ ஏன் இவ்வளவு அக்கறை காட்டுறே ? அவரைப் பத்தி எதாச்சும் சொன்னா நீ டென்ஷன் ஆயிடறே ?" என்று சமாதானம் பேசும் குரலில் கேட்டான் ராஜு.
"நீ கேட்கிற இதே கேள்வியை என்னை நானே பல முறை கேட்டுப் பார்த்துட்டேன். எவனாவது காசை வீசினால் போதும், வாங்கின காசுக்கு வஞ்சகம் பண்ணாமே  அடிதடியில் இறங்கிற நான், ஊர் பேர் தெரியாத இவர் மேலே ஏன் இவ்வளவு அக்கறை வச்சிருக்கிறேன்... இந்தப் பாரத்தை ஏன் தூக்கி சுமக்கிறேன்னு எனக்கே தெரியலே.. ஒரு வேளை இது போன ஜென்ம பந்தமோ என்னவோ !" என்று விரக்தியான குரலில் கூறினான் சேகர் 
"கல்லுக்குள் ஈரம் இருக்கும்னு சொல்வாங்க.அடியாள் வேலை பார்க்கிற உனக்குள்ளே அது இருக்குங்கிறதை என்னாலே ஏத்துக்க முடியலே. "
"நாமே எல்லாரும் பிறக்கிறப்போ குழந்தையாகத்தானே பிறந்தோம். நம்மள இப்படி மாத்தினது இந்த சமுதாயந்தானே. ஆனாலும்  நமக்கு இந்த சமுதாயத்தோட எந்த பகையும் கிடையாது.வயித்தைப் பசி கிள்ளும் போது, கையும் காலும் ஆட்டோமாடிக்கா அடிதடியில் இறங்கிடுது. இந்தப் பொழைப்புக்காக நான் வருத்தப் பட்டாலும் வெட்கப் படலே. ஏன்னா இந்த வேலையை எனக்குக் குடுத்தது இந்த சொஸைட்டி தானே ?" 
"நீயாவது யாருமில்லா அநாதையா வளர்ந்து எங்கெங்கோ போய்த் திரிஞ்சு இந்த தொழிலுக்கு வந்திருக்கிறே. எனக்கு அம்மா அப்பா அக்கா தங்கைன்னு ஒரு பெரிய குடும்பம் இருக்குது. படிச்சேன். பர்ஸ்ட் கிளாசில் பாஸ்பண்ணினேன்.வேலை கிடைக்கலே.வேலைக்காக நாயா அலைஞ்சு பேயாய் திரிஞ்சு கடைசியா ஒருத்தட்டே வேலை  கேட்டுப் போனப்போ  என் தலை எழுத்தையே அது மாத்திட்டுது."
"என்ன சொல்றே ?"
"அட ஆமாம்ப்பா ... வேலை கேட்டுப் போன இடத்திலே , அங்கே இருந்த ஒருத்தன், 'உனக்கு நான் வேலை தர்றேன். உன் நேர்மையை டெஸ்ட் பண்ணனும். இந்த பார்சலை இந்த அட்ரஸ்ஸில் குடுத்துட்டு வா'ன்னு சொன்னான். சந்தோசமா கிளம்பினேன். வாசலை விட்டு இறங்கும் முன்னாடியே போலீஸ் என்னைப் பிடிச்சிட்டுது. பிறகுதான் தெரிஞ்சுது அது கஞ்சா விக்கிற கும்பல்னு. எந்தத் தப்புமே பண்ணாமே தண்டனை அனுபவிச்சேன். ஜெயிலுக்குப் போயிட்டு வந்தவன்னு சொல்லி எவனும் எனக்கு வேலை தரலே. நேர்மையா இருந்தப்போ கையில் சல்லிக் காசு கூட இருந்ததில்லே. பாவ புண்ணியத்தைப் பத்திக் கவலைப் படாமே என்னென்னவோ செய்றோம். கையில் காசு புரளுது. இதுதான் உலகம். என் வீட்டு ஜனங்க நான் என்னவோ ரொம்பவும் மதிப்பான வேலையில் இருக்கிறதா நினைச்சிட்டு இருக்காங்க. இந்த சமுதாயம் நல்லவங்களை உருவாக்குதோ இல்லையோ நிறைய கிரிமினல்களை உற்பத்தி செய்து கிட்டே இருக்குது.வறுமை ஒளிஞ்சா  குற்றங்களும் ஒளிஞ்சிடும் . அதை செய்ய எவனும் முன்வரலே. அவனவன் பாக்கெட்டை நிரப்புறதில் தான் குறியா இருக்காங்க. எது எதுக்கோ சர்வே எடுக்கிறாங்களே, எத்தனை பேர் விரும்பி இந்தமாதிரி தொழிலுக்கு வந்தாங்கனு ஒரு சர்வே எடுத்துப் பார்க்கட்டுமே "
"இப்போ இந்த மழை வேறே வந்து நிறைய பேர் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுட்டே  " என்று கவலையுடன் சொன்னான் சேகர் .
"நாட்டில் எத்தனையோ பணக்காரங்க, எத்தனை எத்தனையோ கோடீஸ் வரங்க. அவங்களைக் கம்பைர் பண்றப்போ பாதிக்கப்பட்டவங்க ரொம்ப குறைவுதான். ஒவ்வொரு பணக்காரனும் ஒவ்வொரு குடும்பத்துக்கு உதவிக் கரம் நீட்டினால் இவங்க மேலே ஏறி வந்துடுவாங்க தானே. ஐயா .. நீ அவங்களை சும்மா உட்கார வச்சு சாப்பாடு போட வேணாம். எந்தெந்தக் குடும்பத்துக்கு எது தேவைன்னு அதைக் குடுத்து உதவினா போதுமே. அவங்க ஆயுளுக்கும் இவங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருப்பாங்க தானே  " என்று வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னான் ராஜு.
"நான் செய்ற தொழில் தப்புன்னு அப்பப்போ என்னோட மனசாட்சி சொல்லும். என்னைப் பத்திக் கவலைப் படாத நாட்டைப் பத்தி நான் ஏன் கவலைப் படணும்னு சொல்லிச்சொல்லியே அதை தூங்க வச்சிடுவேன். நம்ம மனசிலும் வேதனை இருக்குங்கிறதை யாரும் புரிஞ்சுக்க மாட்டாங்க . நாம பேசறதைக் கேட்கிறவங்க, குட்டிச்சாத்தான் வேதம் ஓதுதுன்னு சொல்வாங்களே தவிர நம்ம பீலிங்கைப் புரிஞ்சுக்க மாட்டாங்க."
"அட .. விட்டுத் தள்ளு... இவனுக நம்மைப் புரிஞ்சுகிட்டா என்ன.. புரியாமே நடந்துகிட்டா என்ன ! நமக்குப் பசின்னு வயித்தில் மணி அடிக்கிறப்போ நாம யாரையாவது அடிப்போம். " என்று சிரித்துக் கொண்டே சொன்னான் ராஜு. 
இதற்கிடையில் ....
ரயில் வே ஸ்டேஷனை விட்டு வெளியில் வந்த அப்புமணி, ஸ்டேஷன் வாசலில் நிறைய பள்ளிக் குழந்தைகள் நிற்பது கண்டு அவர்களருகில் சென்றான். தன்னுடைய வயதை ஒத்தக் குழந்தைகளைப் பார்த்ததில் அவனுக்கு இனம் புரியாத சந்தோசம் வந்தது. அப்போது அங்கு வந்த பஸ் ஒன்றிலிருந்து இறங்கிய கண்டக்டர், "எல்லாரும் ஏறி உள்ளே வாங்க " என்று சொல்ல, " எங்க மிஸ் இன்னும் வரலியே " என்று கோரஸான குரலில் சொன்னார்கள் மாணவர்கள். "அவங்க உங்களுக்கான டிபன் வாங்கப் போன இடத்தில்  அங்கே எதுவும் ரெடியாகலையாம். அதனாலே உங்களை அழைச்சுகிட்டு எங்களை அங்கே வர சொல்லிட்டாங்க.  ஏறுங்க .. ஏறுங்க !" என்று சொல்லி கண்டக்டர் அவசரப்படுத்த எல்லாக் குழந்தைகளும் பஸ்ஸில் ஏறினார்கள். அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அப்புமணி அருகில் வந்த டிரைவர், "உனக்கு தனியா சொல்லணுமா ? ஏறிப் போய் உட்காரு " என்று சொல்லி பஸ்ஸில் ஏற்றி விட பதிலேதும் சொல்லாமல் அப்புமணி பஸ்ஸில் ஏறி, கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டான். அருகிலிருந்த சிறுவனிடம், "நாம இப்போ எங்கே போகிறோம் ?" என்று அப்புமணி கேட்க, "அது தெரியாமே பஸ்ஸில் ஏறினாயா ? மகாபலிபுரத்தில் நடக்கிற சித்திரப் போட்டியில் கலந்து கொள்ள சென்னையில் இருக்கிற கார்ப்பொரேசன் ஸ்கூல் ஸ்டூடெண்ட்ஸ், ஒவ்வொரு ஸ்கூலிலிருந்தும் தலா  ஐந்து  பேர்னு மொத்தம் 50 பேர்  போறோம். ஆமா ...நீ எந்த ஏரியா ?" என்று அவன் கேட்கும்போதே,"பஸ் கிளம்பும் முன்னே பிரேயர் பண்ணனும். எல்லாரும் அமைதியா கண்ணை மூடி உட்காருங்க" என்ற அதட்டலான குரல் கேட்டு அந்த சிறுவன் வாயையும் கண்களையும் மூடிக் கொண்டான். 
----------------------------------------------------------  தொடரும் --------------------------------------------------- 

No comments:

Post a Comment