Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, December 18, 2015

குழந்தைகளுக்கான குறுந்தொடர் .. 19

                                            
  அச்சுப்பிச்சு அப்புமணி !
இரவு முழுக்க தூங்காமல் வீட்டு வாசலிலேயே தவம் கிடந்தாள் அம்மா. ஏதோ விளையாட்டாகத்தான்  சொல்கிறான், அங்கே இங்கே சுற்றி விட்டு வீட்டுக்கு வருவான் என்று நினைத்திருந்த அம்மாவின் நம்பிக்கை வீண் போனது. இதற்குள் அக்கம் பக்கத்து வீட்டினர் அங்கே வந்து விட்டார்கள்.
"என்னம்மா நீங்க .. வாசல் கதவை திறந்து வச்சிட்டு தெருவை வெறிச்சுப் பார்த்துட்டு நிக்கீங்க.  தெரு வாசல் தெளிச்சு கோலம் கூட போடலியே  ? உங்களுக்கு உடம்புக்கு முடியலியா ? நாங்க எது வேணும்னாலும் செஞ்சு தர்றோம். என்ன வேணும் சொல்லுங்க ?" என்றார்கள்.
இதைக் கேட்டு வாய் விட்டு "ஓ" என்று  பெரிய சத்தத்துடன் அழுத அம்மா, "எனக்கு என் பிள்ளை வேணும் " என்றாள் 
அப்போதுதான் அப்புமணி அங்கே இல்லாததைக் கவனித்த அவர்கள், "உங்க  பிள்ளை எங்கேம்மா? ஆளையே காணும்.ஒரு நிமிஷம் கூட சும்மா இராமே சுத்தி சுத்தி வருவானே " என்று கேட்டார்கள்.
அவர்களிடம் நடந்த விஷயத்தை சொன்னாள் அம்மா.
"நல்ல ஆளும்மா நீ. அவன் ஒரு ரெண்டுங் கெட்டான். உலகத்தை சுத்திப் பார்க்கப் போறேன்னு அவன் கிளம்பினால், நீ அவனைக் கண்டிக்கிறதை விட்டுட்டு கையில் காசு குடுத்து அனுப்பினாயாக்கும். இப்போ அழுது என்ன பிரயோஜனம்  ? " என்று கேட்ட வயதான பெரியவர் ஒருவர், "டேய் . ஆளுக்கொரு பக்கம் போய்த் தேடுங்கடா .. பக்கத்து டவுனுக்கு ரெண்டு பேர் போய்த் தேடுங்க" என்று உத்தரவு போட, சைக்கிளிலும், வண்டியைக் கட்டிக் கொண்டும் அப்புமணியை தேடி ஆளுக்கொரு பக்கம் ஓடினார்கள் . அப்புமணி 'உலகத்தைச் சுற்றிப் பார்க்க'ப் போவதாக சொல்லி  வீட்டை விட்டுப் போன விஷயம் அந்த கிராமம் முழுக்கப் பரவியது. 
சென்னையில் உள்ள மயிலாப்பூரின் ஒரு பகுதியில் ..... 
வீட்டுக்குள் நுழையும் போதே,"தனம் ... அண்ணன் சாப்பிட்டாரா ?" என்று கேட்டான் சேகர்.
"ஆமாம் தம்பி .. சாப்பிட்டுட்டு கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தார். இப்ப கொஞ்சம் முன்னாடிதான் தூங்கப் போனார்" 
"தூங்கட்டும் .. எழுப்பாதே .. செலவுக்குப் பணம் ஏதாது வேணுமா ?"
"வேண்டாம் தம்பி ... போன வாரம் நீ குடுத்த காசில் வீட்டு சாமான் வாங்கினது போக மீதி பணம் கையில் இருக்குது. அது இன்னும் ஒரு பத்து நாளைக்குத் தாக்குப் பிடிக்கும்.. தம்பி..நான் ஒண்ணு கேட்டால் நீ கோபப் பட மாட்டேதானே  ?" என்று கேட்டாள் தனம்.
"கோபம் வராதபடி கேள்வியைக் கேளு "
"நான் இங்கே வேலைக்கு சேர்ந்து முழுசா ஒரு மாசம் கூட முடியலே. நீ இந்த போர்ஷனுக்குக் குடி வந்து ரெண்டு மாசந்தான் ஆகுதுன்னு சொல்றாங்க. எனக்கு உன்னைப் பத்தி அதிகம் தெரியாது. அக்கம்பக்கத்து வீட்டு மனுஷங்க சொல்றதை வச்சு நான் தெரிஞ்சுகிட்ட விஷயம் , இவரு உன்னோட சொந்த அண்ணன் இல்லேங்கிறது. கூடப் பிறந்தவங்களை, அவ்வளவு ஏன் .. பெத்தவங்களைக் கூட பிள்ளைங்க கவனிக்காத இந்தக் காலத்திலே உனக்கு சொந்தபந்தமில்லாத, சுய நினைவு இல்லாத யாரோ ஒருத்தரை உன்கூடவே வச்சு   கவனிக்கிறியே  அது ஏன் தம்பி ?"
"அதுதான் எனக்கும் தெரியலே. காசுக்காக எந்த வேலையும் செய்றவன் நான். ஆனால் இவரை இவர் போக்கில் விட்டுட மனசு வரலே " என்று விரக்தியுடன் சொன்னான் சேகர்  
"கடைசிவரை இவருக்கு பழைய ஞாபகமே வராமே போயிட்டா ?" என்று தனம் கேட்க, "கடைசிவரை இவர் என் கூட இருப்பார்" என்று கொஞ்சம் கூட தயக்கம் இல்லாத குரலில் சொன்னான் சேகர். 
"பண்றது அடாவடி வேலை.. அதுக்கு பரிகாரமா இவரை வச்சுப் பாது காக்கிறியா ? " என்று கேட்டாள் தனம். 
"இதோ பாரு.... இதுதான் உன் லிமிட். வந்தோமா, வந்த வேலையைப் பார்த்தோமா, கிளம்பிப் போனோமான்னு இருக்கணும் ... கேள்வி கேட்கிற வேலை எல்லாம் என்கிட்டே வேண்டாம்" என்று கோபமாக சேகர் சொல்ல, " நீ எப்படியோ போ .. என் வேலை முடிஞ்சிட்டுது. நான் கிளம்பிப் போறேன்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து போனாள்  தனம் .
எதோ ஒரு வேகத்தில் சேகர் பேசி விட்டாலும் அவன் நினைவு கடந்த காலத்தையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது. 'ஆந்திரா ஜெயிலில் இருந்து நான் தப்பி ஓடி வரும்போது எனக்கு பதினெட்டு வயசு இருக்குமா ' என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்ட சேகர், 'இருக்கும் ' என்று பதிலும் சொல்லிக் கொண்டான். போலீஸ் கண்ணில் படாமல் ஒரு மறை விடத்தில் ஒளிந்திருந்த நான், யார் கண்ணிலும் படக்கூடாது என்ற நினைப்பில் ஓடும்போதுதானே இவர் மீது வேகமாக மோதினேன். "கங்கு  " என்று அலறிக் கொண்டே கீழே விழுந்தார் இவர். அதைக் கூட பெரிதாக நினைக்காமல் அங்கிருந்து ஓடிய நான் அன்று இரவு முழுதும் இவரைப் பற்றித் தானே நினைத்தேன். என்னோட சின்ன வயசில் என்னை வளர்த்து என்னைப் பிச்சை எடுக்கப் பழக்கிய தாத்தா   என்னை "கங்கு"னு தானே கூப்பிடுவார்.'நான் கும்பிடற கங்காதரன் நீ 'னு அடிக்கடி சொல்வார். தாத்தா செத்த பிறகு  நான் திருட்டுத் தொழிலுக்கு வந்தேன் .. நான் எங்கே வந்தேன் ? மற்றவங்க என்னை அந்தத் தொழிலுக்குப் பழக்கினாங்க. இவர் "கங்கு" என்று சொல்லி கீழே விழுந்த போது தாத்தாவே விழுந்தது போலப் பதறிப் போன நான் அவரை அங்கேயே விட்டு விட்டு வந்து விட்டேனேனு நினைச்சு பழையபடி அதே இடத்துக்கு ஓடினேன். மயக்க நிலையிலேயே இவர் இருந்தார். அவரை செக் பண்ணினபோது அவர் பையில் நிறைய பணம் இருப்பது தெரிந்தது. அந்தப் பணத்தில்தானே அவருக்கு நான் வைத்தியம் பார்த்தேன். அவருக்கு நினைவு திரும்ப பல நாட்கள் ஆகும்னு டாக்டர்கள் சொன்னார்கள்.  பத்து வருடங்கள் ஆகியும் இவருக்கு நினைவு திரும்பலியே.பேசும் சக்தியையும் இழந்து நிற்கிறாரே. அன்றைக்கு இருந்த சூழ்நிலையில் எல்லாத் தெலுங்கு பேப்பர்லேயும் விளம்பரம் குடுத்தும் இவரைத் தேடி யாரும் வரலியே. கைக்கூலி வாங்கி கிட்டு எத்தனையோ பேரை அடிச்சு துவைச்சிருக்கிறேன். இவர் மீது நான் தெரியாமல்தான் வந்து மோதினேன். ஆனாலும்  இவரை அப்படியே விட மனமில்லாமல் இன்று வரை நான் போகும் இடங்களுக்கெல்லாம் இவரை சேர்த்து சுமக்கிறேனே, அது ஏன் ? என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டிருந்தான் சேகர். 
------------------------------------------------- தொடரும் -----------------------------------------------

No comments:

Post a Comment