Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, July 12, 2013

Scanning of inner - heart ( Scan Report Number - 78 )

                ஆறுதலா ஒரு நாலு வார்த்தை ...

" என்னங்க இது ! டூர் முடிஞ்சு 20 நாள் கழிச்சு வீட்டுக்குள் நுழையறீங்க. உங்களைப் பார்க்காமே குழந்தைங்க ஏங்கிப் போய் இருக்காங்க. இப்ப அவங்க ஸ்கூல் விட்டு வர்ற நேரம். வீட்டுக்குள் வந்ததுமே வெளியில் போயிட்டு வரேன்னு காலில் சக்கரத்தைக் கட்டிக்கிட்டு பறக்கறீங்க. மொதல்லே நீங்க போய் கைகால் அலம்பிட்டு வேறே டிரஸ் மாத்துங்க. குழந்தைங்க வீட்டுக்கு வரும் போது இப்படி கசங்கின ட்ரஸ்ஸும் கலைஞ்ச தலையுமா நிக்காதீங்க " என்று கடிந்து கொண்டாள் பார்வதி.
"இல்லேடி, நம்ம வீட்டுக்கு வருவாரே என்னோட வேலை பார்க்கிற ராஜா ராம். அவருக்கு திடீர்னு உடம்புக்கு முடியாமேப் போய், உடனடியா ஓபன் ஹார்ட் சர்ஜெரி பண்ற அளவுக்கு ஆயிடுச்சாம் ? " என்றார் கேசவன்.
" எப்போங்க ? " என்று பதறிப் போய்க் கேட்டாள்   பார்வதி 
"நான் இங்கிருந்து கிளம்பிப் போன மறுநாள் இப்படி ஆகியிருக்கு. சுப்பு மணி  எனக்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னார். ராஜாராம் சார் இந்த ஏரியாவிலிருந்து வீடு மாற்றி வில்லி வாக்கம் பக்கம் போயிட்டாரே. அது ஒரு மூலை. நம்ம வீடு ஒரு மூலை. அவர்  ராமச்ச்சந்ராவிலே   அட்மிட் ஆகியிருக்காராம்.இதுன்னா நமக்கு ரொம்பப் பக்கமாப் போயிடும். அதான் நான் ஆஸ்பத்திரிக்குப் போய் அவரைப் பார்த்திட்டு ஆறுதலா   ஒரு நாலு வார்த்தை பேசிட்டு வந்திடறேன். போயிட்டு வந்து ட்ரஸ் மாத்திக்கிறேன் " என்று சொல்லிவிட்டு டூர் வீலரில் பறந்தார் கேசவன்.

ஆஸ்பத்திரியில் 

" சிஸ்டர், என்னை நாளைக்கு வீட்டுக்கு அனுப்பிடுவீங்கதானே ? " என்று மெல்லிய குரலில் கேட்டார் ராஜாராம் 
" விசிட்டர்ஸ் ஹவர்ஸ் முடிஞ்சதும் டாக்டர் வருவார். உங்களை செக் பண்ணிட்டு நீங்க எப்போ போகலாம்னு சொல்வார். ஏன் ஸார், இங்கே உங்களுக்கு ஏதாவது அசௌகரியம் இருக்கா ? "
"நோ, சிஸ்டர்  நோ,  நாட் அட் ஆல்.  சிஸ்டர், எனக்கு ரொம்பவும் சின்ன  வயசில்  இருந்தே ஆஸ்பத்திரி, மருந்து மாத்திரைன்னா ரொம்ப பயம். வேறு யார் கையிலாவது ஊசி ஏற்றிக் கொண்டிருந்தாலும் சரி, அதை நான் பார்க்க மாட்டேன் . அந்த இடத்தை விட்டே ஓடிடுவேன். பயம் காரணமாகவே எனக்கிருந்த பிரச்சினையை வெளியில் சொல்லாமல் எனக்குள்ளேயே அனுபவிச்சிட்டு இருந்தேன்.டாக்டர்ஸ், நீங்கள்லாம் குடுத்த தைரியத்தில் தான் நான் ஆபரேசனுக்கு சம்மதிச்சேன். இப்போ என்னோட பயம் ஓரளவு குறைஞ்சு போயிடுச்சு " என்று சிறு குழந்தை போல் சொல்லி சிரித்தார்.
அவரருகில் வந்து BP, பல்ஸ் செக் பண்ணிய நர்ஸ், " எல்லாம் நார்மலா இருக்கு. ஆனா கொஞ்ச நாளைக்கு உடல் ஆரோக்கிய விஷயத்தில் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். எதற்குமே  டென்சன் ஆகாதீங்க. கேர்புல்லா இருக்கணும். இப்போ ரௌண்ட்ஸ் வரும் டாக்டர் எல்லாத்தையும் விளக்கமா சொல்வார். அவர் சொல்ற தேதியில் கண்டிப்பா செக் - அப்க்கு வரணும். இப்போ நீங்க மெதுவா வாக் போகலாம் ரூமுக்குள்ளேயே " என்று சொல்லியபடி சிஸ்டர் அங்கிருந்து நகர்ந்த சிறிது நேரத்திலேயே கேசவன் வந்து சேர்ந்தார்.
"என்ன ராஜா ஸார், எப்படி இருக்கீங்க ? நான் இப்பத்தான் டூர் முடிஞ்சு வந்தேன். லக்கேஜை வீட்டில் வீசிட்டு நேரா இங்கேதான் ஓடி வர்றேன். உங்களைப் பார்த்து ஆறுதலா நாலு வார்த்தைப் பேசிட்டுப் போனாதான் எனக்கு ஆறுதலா இருக்கும் " என்றார் கேசவன் 
"இப்போ பரவாயில்லை ஸார் . காலில் நரம்பு எடுத்த இடத்தில் கொஞ்சம் அதிகமாவே  பெயின் இருக்கத்தான் செய்யுது. அதுக்கு மருந்து மாத்திரை குடுக்கிறாங்க. போகப் போக சரியாகிடும்னு சொல்றாங்க " என்றார் ராஜாராம் 
" அவங்க சொல்றாங்கன்னு நீங்க அலட்சியமா இருந்திடக் கூடாது ஸார். இப்போ வீட்டுக்குக் கிளம்பிப் போறீங்க, அங்கே போன பிறகு இந்த வலி  தாங்க முடியாத அளவுக்கு அதிகம் ஆனா, அதுவும் மிட் நைட்டில் அதிகமானா  என்ன பண்ண முடியும் . உங்க வீடு ஒரு மூலை. ஆஸ்பத்திரி ஒரு மூலை. வந்து சேர்றதுக்குள் ஏடா கூடமா ஏதாவது ஆயிட்டா ? டாக்டர்ஸ் அப்படித்தான் சொல்வாங்க. ஒரு நாளைக்கு குறைஞ்சது அம்பது நூறு கேஸ் பார்க்கிறவங்களுக்கு, பொழுது மொத்தத்தையும் நோயாளிங்க கூட கழிக்கிறவங்களுக்கு  இது எல்லாமே சர்வ சாதாரணம் தான்.  நாமதான் எச்சரிக்கையா இருக்கணும்." என்று கேசவன் சொல்ல, 
" சரி " என்றார் ராஜாராம் மெல்லிய குரலில்.
"எங்க சொந்தக்காரப் பையன் ஒருத்தனுக்கு இதே மாதிரிதான் ஹார்ட் ஆபரேசன் நடந்துச்சு. அந்தப்  பையனை அவங்க வீட்டுக்கு  அனுப்பறச்சே எல்லாமே நார்மல்.இனி  பயப்பட ஒண்ணுமில்லேன்னு சொல்லி அனுப்பி னாங்க. அப்புறம் பாருங்க , தையல் போட்ட இடத்திலே நீர் கோர்த்து, பிறகு சலம் கட்டி என்னென்னவோ அமர்க்களம் ஆச்சு. பிறகுதான் தெரிய வந்துச்சு, இவங்க தையல் போடறச்சே எதோ நரம்பை உள்ளே வச்சு தைச்சுட்டாங்கனு. அப்புறம் திரும்ப ஒரு சர்ஜெரி. அதுக்குப் பணம் செலவு . பணம் போறது ஒரு பக்கம் இருக்கட்டும். அவஸ்தையை யார் அனுபவி க்கிறது . அந்த மாதிரி உங்க கேசில் எதுவும் ஆயிடலைதானே  ? " என்று மிகுந்த அக்கரையுடன் கேசவன் கேட்க யோசனையில் ஆழ்ந்தார் ராஜா ராம்.
" இன்னொரு கேஸ் பார்த்தீங்கன்னா, எங்க வீட்டுக்கு மேல் போர்ஷனில் குடியிருக்கிற ஒருத்தர், ஹார்ட்டுக்காகத்தான்  ட்ரீட்மென்ட் எடுத்தார் . ஆஞ்சியோவோ என்ன எழவோ சொல்றாங்களே , அது பேர்கூட  என் வாய்க்குள் நுழைய மாட்டேங்குது. அதை அவருக்குப் பண்ணினாங்க. ஆஸ்பத்திரியிலிருந்து நல்லாத்தான் வெளியில் வந்தார்.வீட்டுக்கு வந்து  ஒரே  ஒரு வருஷம்  நல்லாத்தான் நார்மலாத்தான் இருந்தார். அன்னைக்கு அவர் பேரனுக்குப் பிறந்த நாள். முதல் நாள் கேக் வெட்டறது, மறுநாள் மொட்டை போடறது காது குத்தறதுன்னு  எல்லா ஏற்பாடும் செய்து வச்சிருந்தார். கேக் வெட்டி முடிஞ்சதும் குழந்தையை கையில் வாங்கி கொஞ்சினவர், " இதைப் பிடி" ன்னு பக்கத்தில் நின்னுகிட்டிருந்தவங்க கிட்டே குழந்தையைக் கொடுத்து விட்டு கீழே சாஞ்சவர் சாய்ந்ததுதான். பொட்டுனு உயிர் போயிட்டுது. வலி, உயிர் போறதுக்கான சிம்பல் எதுவுமே இல்லாமே எல்லாமே சடனா முடிஞ்சு போச்சு. பிறந்த நாளைக்குன்னு  சந்தோசமா  வந்த உறவுக்காரக் கும்பல் இவருக்குப் பால் ஊத்திட்டுப் போனதுதான் மிச்சம். இதை ஏன் சொல்றேன்னா, நமக்கு இப்போ  பெய்ன் எதுவும் இல்லே, நாம நல்லா யிட்டோம்னு  நினைச்சு நீங்க அசால்ட்டா இருந்துடக் கூடாது. எப்பவும் அலர்ட்டா இருக்கணும். எந்த நேரம் எது நடக்கும்னு தெரியாதுங்கிற ஒரு எச்சரிக்கை உணர்வோடு இருக்கணும் " என்றார் கேசவன்.
இவர் சொன்னதற்கு ராஜாராமிடமிருந்து எந்த ரியாக்ஸனும் இல்லாத தால்  அருகில் சென்று பார்த்தார். கண்கள் மூடியிருந்தது. " சரிதான் . இவர் தூங்க ஏதாவது மருந்து மாத்திரை கொடுத்திருப்பாங்க போலிருக்கு. அதான்  பேசிட்டு இருக்கிறப்பவே தூங்கிட்டார் போலிருக்கு.  சரி . இப்போ தூங்கிறவரை நாம டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் " என்று மனதுக்குள் நினைத்தபடி அங்கிருந்து  வெளியில் வந்தார். அவர் வீட்டு ஆட்களி டமோ அல்லது ஆஸ்பத்திரி ஸ்டாப்ங்க யாரிடமாவதோ  'போயிட்டு வரேன்'னு சொல்லி விட்டுப் போகலாம்னு நினைத்து சுற்று முற்றும் பார்த்தார். ஆனால் அவரது மொபைலில் அழைப்பு வர, மொபைலை கையில்  எடுத்து, " சொல்லு சரவணா. டூர் முடிஞ்சு வந்திட்டேன் . நம்ம ராஜாராம் சாரைப் பார்த்து ஆறுதலா ஒரு நாலு வார்த்தைப் பேசிட்டு வரலாம்னு நான் ஆஸ்பத்திரிக்கு வந்து அவரைப் பார்த்துட்டு , அவருக்கு நாலு வார்த்தை  தைரியம் சொல்லிட்டு வெளியில் வர்றேன்,நீயும் ரிங் பண்றே. இப்போ நான் எங்க  வீட்டுக்குப் போறேன் . வீட்டுக்குப் போய் குழந்தைகளைப் பார்த்திட்டு, ஆஸ்பத்திரி மருந்து நெடியைக் குளிச்சு சுத்தம் பண்ணிட்டு கோவிலில் வந்து உன்னை பார்க்கிறேன். நீ வழக்கமா நாம உட்கார்ற இடத்தில் வெய்ட் பண்ணு " என்று சொல்லியபடி ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தார் கேசவன்.
ஆறு மணிக்குப் பிறகு அங்கு வந்த டியூட்டி நர்ஸ்  ராஜாராம் அருகில் சென்று " சார். இந்த மாத்திரையைப் போட்டுக்கோங்க " என்றாள் . எந்த அசைவும் அவரிடம் இல்லாததால் " டாக்டர் " என்று குரல் கொடுத்தபடி வெளியில் ஓடி வந்தார் நர்ஸ் .     








No comments:

Post a Comment