Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, July 19, 2013

Scanning of inner - heart ( Scan Report Number - 79 )

                                சமாளி- FICATION ? !
" டேய், ராஜேஷ் " என்று கத்திய படியே அறைக்குள் நுழையப்போன விசுவை ஒரே சமயத்தில் நாலு கரங்கள் வெளியே இழுத்து வந்தன
" டேய் என்னடா இது ? " என்றபடி தன் மீது விழுந்த கரங்களிலிருந்து தன்னை  விலக்கிக் கொண்டு கோபமாகப் பார்த்தான் விசு 
" மச்சி,  " தலை " இப்போ செம கடுப்பிலே இருக்கு. இப்போ போய் நீ மாட்டினே, மவனே நீ பொணம்தான் "
" அவனுக்கு என்னடா இப்போ பிரச்சினை ? எல்லாம் நல்லாப் போயிட்டு இருக்குதானே ? "
" புதுசா ஒரு பிரச்சினை முளைச்சிருக்குடா ? "
" என்ன ? " என்று பதறிப் போய்க் கேட்டான் விசு 
" நம்ம ஏரியா மெயின் ரோட்டில், லெப்ட் சைடில் பாதாள சாக்கடைக்கு குழி தோண்டற வேலை இப்போ ஆரம்பிச்சிருக்குடா "
" நல்ல விஷயம்தானே ! அதுக்கு இவன் ஏன் டென்சன் ஆகணும் ? "
" சொல்றதை முழுசும் கேளு. இடையிலே வாயைத் திறந்தே, மவனே நீ காலிதான் "
" சரி சொல்லு .... இதை சொல்ல வாயைத் திறக்கலாம்தானே ? "
"குழி வெட்டற வேலை ஆரம்பிசிட்டதாலே, விழாத்தலைவர் வர்ற வண்டி நம்ம ஏரியா உள்ளே வர முடியாது. வண்டியை ஓரம் கட்டிட்டு மெயின் ரோட்டிலிருந்து நடந்துதான் உள்ளே வரணும். நம்ம ஏரியா லட்சணம் நமக்கு தெரிஞ்சதுதானே, ஒரே குப்பையும் கூளமும், மேடும் பள்ளமும். அதை சரி பண்ணணும்னு  சம்பந்தப்பட்ட ஆபீசரைப் பார்த்தால் சரியான ரெஸ்பான்ஸ் இல்லே. சரி , நாமளே யாராவது ஆளை வச்சு சரி பண்ணலாம்னு பார்த்தா, ரெண்டு தெருவை சுத்தம் பண்ண நாலாயிரம் ரூபா கேட்கிறானுக, கொஞ்சம் கூட மன சாட்சியே இல்லாமல் " என்று பாலு சொல்ல, " நமக்கு தேவைங்கிறப்போ பணத்தைப் பார்த்தா முடியுமா ? " என்று கோபமாகக் கேட்டான் விசு 
" யப்பா , தர்ம தொரை , நீ இப்போ தர்ம அடி வாங்கப் போறே "
" ஏன்டா ? "
"நமக்கு கலெக்சன் என்னன்னு உனக்கு தெரியுமா? எவ்வளவு செலவுன்னு தெரியுமா ? "
"டேய் , அதைப் பத்தி பங்க்க்ஷன் முடிஞ்சப்பறம் பேசிக்கலாமே "
" மச்சி, நாம முதல் முறையா இந்தக் கபடிப் போட்டியை நம்ம ஏரியாவில் நடத்தறோம். இந்தமாதிரி விழாவுக்கு ஏற்பாடு பண்றதில் யாருக்கும் எந்த அனுபவமும் கிடையாது. ஏதோ ஆசைப் பட்டோம், ஆரம்பிச்சோம். அதில் என்னென்ன மாதிரி ரிஸ்க் இருக்குனு இப்போதானே நமக்கு  பிராக்டிகலா தெரியுது. இப்போ நம்ம கையிருப்பு வெறும் எழுநூத்து அம்பது ரூபா. இப்போ தெருசுத்தம் பண்ண திடீர்னு நாலாயிரம் ரூபாய்க்கு எங்கேடா  போறது.  நம்ம ஏரியா ஆளுங்க , நம்ம வீட்டு ஆளுங்கன்னு ஒருத்தர் பாக்கி இல்லாமே எல்லார் கிட்டே இருந்தும்  டொனேசன் வாங்கியாச்சு. இனிமே கழுத்திலே கத்தி வச்சு கேட்டாக்கூட எவனும் சல்லிக் காசு தர மாட்டான். இவ்வளவு ஏற்பாடும் பண்ணிட்டு தலைவரை இந்தக் குப்பைக்குள் நடத்திக் கூட்டிட்டு வர முடியுமான்னு ராஜேஷ் பீல் பண்றான் " என்று விளக்கினான் தாஸ்
சற்றுநேரம் யோசனையில் ஆழ்ந்தான் விசு 
" டேய், கையிருப்பு எவ்வளவுன்னு சொன்னே ? "
" 750 ரூபா "
" அதைக் குடுங்கடா "
" எதுக்குடா ? "
" கேள்வி கேட்காமே பணத்தைக் குடுங்கடா. நாளைக்கு தலைவர் வர்றப்போ நம்ம ரோடு கெட் - அப்பே மாறியிருக்கும் "
" என்னடா செய்யப் போறே ? "
"அதெல்லாம் உனக்கெதுக்கு ? நாளைக்கு நீங்க எதிர் பார்க்கிறபடி சுத்தமா இருக்கும் ரோடு "
" டேய் , எங்காவது தலைமறைவாயிட மாட்டியே ? "
"என்னடா பேசறே ? " என்று தாஸை அடக்கிய ரமேஷ், " டேவிட், கையிருப்பு பணத்தை விசுகிட்டே கொடுடா"என்று சொல்ல " இனிமே நம்ம  ரோடு மெயிண்டனன்ஸ் என் பொறுப்பு " என்று சொல்லிய விசு பணத்துடன் அங்கிருந்து பறந்தான்
இந்த பணத்தை வைத்துக் கொண்டு இவன் என்ன பண்ணப் போகிறான் என்ற கேள்வி எல்லார் மனதிலும் இருந்தாலும், எப்படியோ காரியம்  ஆனால் சரி என்ற எதிர் பார்ப்பும் இருந்தது
மறுநாள் காலை ...... நண்பர்கள் குழாம் விழா ஏற்பாட்டில் மும்முரமாக இருக்க, தெரு சுத்தம் செய்யும் வேலை ஒரு புறம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. " எப்படிடா ? " என்று நண்பர்கள் குழாம் கண்களாலேயே கேள்வி கேட்டுக் கொண்டாலும், அதைப் பற்றி நின்று விசாரிக்க யாருக்கும் நேரமும் பொறுமையும் இல்லை
சிறிது நேரத்தில் அந்த ஏரியா பரபரப்படைந்தது. விழாத் தலைவரை மெயின் ரோட்டிலிருந்து அழைத்து வந்து கொண்டிருந்தது விழா ஏற்பாடுக் கமிட்டி. வண்ணப் பூக்களை அள்ளி வீசியது போல தெரு முழுக்க வியாபித்திருந்த கலர்க் கோலங்களைக் கண்டு பிரமித்துப் போனார் தலைவர். "பார்த்து வாங்கப்பா . கஷ்டப்பட்டு போட்டிருக்காங்க. யாரும் அதுமேலே ஏறி நடந்துடாதீங்க" என்று தன்னுடன் வந்தவர் களுக்கு எச்சரிக்கை செய்தபடி, தன்னுடைய வேஷ்டி முனை பட்டு கோலம் கலைந்திடாதபடி வேஷ்டியைத் தூக்கிப் பிடித்தபடி நடந்து வந்தார் தலைவர் 
தலைவர் மேடையேறிய சிறிது நேரத்திலேயே கையில்  ஜிகுஜிகு பேப்பர் சுற்றிய கிப்ட் பாகெட்டுகளை தூக்கிக் கொண்டு ஓடி வந்தான் விசு 
" என்னடா இது ? எப்படிடா இதெல்லாம் ? " - வியந்து நின்றது விழா ஏற்பாட்டுக் குழு 
"முதல், இரண்டு , மூன்றாம் பரிசுன்னு மூன்று பரிசுகள் இந்த பாக்கெட்டில் இருக்கு. யார் யாருக்கு கொடுக்கணும்கிற விவரம் இதில் இருக்கு. விழா முடிந்து நன்றி சொல்லுவதற்கு முன்னாடி இந்த மூன்று லேடீஸ்ஸைக் கூப்பிட்டு தலைவர் கையாலேயே இந்த பரிசை அவங்க கிட்டே கொடுக்க சொல்லுங்க. நீங்க கொடுத்த 750 ரூபாயில், பேலன்ஸ் 150 இதோ இருக்கு, பிடியுங்க " என்றான் விசு 
" எப்படிடா இதெல்லாம் ? "
"ரொம்ப சிம்பிள்டா, இங்கிருந்து போனதும் எங்க அம்மா, தங்கைங்க கிட்டே,"நாளைக்கு ஒரு கோலப் போட்டி நடக்கப்போகுது. ஆனா, அதைப்  போட்டின்னு வெளியில் சொல்லாமல் ரொம்ப சஸ்பென்ஸ்ஸா நாங்க வச்சிருக்கோம். எந்த வீட்டு வாசல் சுத்தமா தெளிச்சி கிளிச்சு, கோலம் போட்டு ரொம்ப அழகா இருக்கோ, அந்த வீட்டுக்கு ப்ரைஸ் உண்டுன்னு ஒரு கதை விட்டேன். இந்த விஷயத்தை யாருக்கும் சொல்ல வேண்டாம் , ரகசியமா இருக்கட்டும்னு என் தங்கைகிட்டே சொன்னேன். அவகிட்டே ஒரு ரகசியம் சொன்னா , அது தினத்தந்தி ஹெட் லைன் நியூஸ் மாதிரி. அவ வீக்னெஸ் எனக்கு தெரியும்.  அதான் அப்படி சொன்னேன். நான் எதிர்பார்த்தபடி வேலை முடிஞ்சு போச்சு. அவங்க எதிர்பார்ப்புபடி பரிசு கொடுத்திடப் போறோம் "  என்று விசு, கேஷுவலாக சொல்ல " கேடிடா மாப்பிள்ளை நீ " என்று அவன் முதுகை தட்டிக் கொடுத்தன சில கரங்கள்.
" மச்சி, பாக்கெட் உள்ளே ஏதாவது இருக்குதானே ? " என்று சந்தேகக் கேள்விக் கணை தொடுத்தான் தாஸ் 
" இருக்குடா, 300, 200, 100 ன்னு மூன்று பிளாஸ்டிக் பான்சி ஐட்டம் இருக்கு. நாளைக்கு என் செலவில் கோலம் போட்ட எல்லாருக்கும் 5 ஸ்டார் சாக்கலேட் ஒன்னு குடுத்துடுவேன் " என்று விசு சொல்ல, அவனை கட்டி அனைத்துக் கொண்டு திக்கு முக்காட வைத்தது விழா ஏற்பாட்டுக் குழு. 


No comments:

Post a Comment