Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, October 24, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 131 )

                                       காரணமில்லாத காரியமா ?
"மம்மீ , போரடிக்குது மம்மீ "
"அதுக்கு என்னை என்னடி பண்ண சொல்றே ?" என்று அலுப்பு மிகுந்த குரலில் கேட்டாள் லலிதா 
"வீட்டுக்குப்  போகலாம்"
"போகலாம்டீ. நிவேதுவோட ப்ரோக்ராம் முடியட்டும். உடனே கிளம்பிட லாம். ஜனகணமன பாடுற வரை இருக்க வேண்டாம் "
"இவங்க பேசியே நம்மளைக் கொன்னுடுவாங்க போலிருக்கே " என்று சுபா சொல்ல அவளை முறைத்துப் பார்த்தாள் லலிதா 
"உங்களுக்கு இதைத் தவிர வேறு ஒண்ணும் தெரியாது . வேறு ஒண்ணும் முடியாது "
"அடியே, நானும் உன்னைப் போலத்தான் " தலைவிதியேன்னு " நொந்து போய் உட்கார்ந்திருக்கிறேன். என்னைப் படுத்திறியேடீ. இப்போ நாம எழும்பிப் போயிடலாம். யாரும் " ஏன் போறீங்க"ன்னு நம்மளத் தடுக்க மாட்டாங்க. நாளைக்கு நம்மளப் பார்த்ததுமே பார்வதி மாமி நம்ம கிட்டே "நேத்து எங்க நிவேது பண்ணின ப்ரோக்ராம் பார்த்தீங்களா ? எப்படி இருந்துச்சு"ன்னு கேட்பாங்க. அதுக்கு நாம பதில் சொல்லணுமே. நாம எதையுமே பார்க்காமே கற்பனையா "ஓஹோ ரொம்ப   ரொம்ப நன்னா பண்ணினா"னு நான் சொல்லி வைக்க," அவ ஆடறச்சே  கீழே விழுந்ததை நீங்க கவனிக்கலையானு மாமி கேட்டுட்டா நாம அப்பட்டமா பொய் சொல்றது அம்பலம் ஆயிடும். அதை அவாய்ட் பண்ண அந்த குழந்தை யோட ப்ரோக்ராம் வர்ற வரை இருக்கலாம்டி "
"நிகழ்ச்சி ஏற்பாடு பண்ணினவன் என் கையில் மாட்டினால் அவன் செத்தான் "
"ஏன்டீ ? "
"ஒரு நிகழ்ச்சிக்கு ஒரு செலிப்ரைட்டியைக் கூப்பிடும் போதே " இது ஊன முற்ற, மனநலம் குன்றிய குழந்தைகளுக்கானதொரு   விழா. எல்லாருமே முடியாத நிலையில் இருக்கிறவங்க. ஆனாலும்கூட  அவங்களுக்கான கலைநிகழ்ச்சியை நடத்த வேண்டிய நிலையில் நாங்க இருக்கிறோம் . தலைவர் இல்லாமல் ஒரு விழா சிறப்பாக இருக்காது. அந்தக் குறையை நீங்கதான் நிறைவு செய்யணும். அதே சமயம் குழந்தைங்க ரொம்ப டயர்ட் ஆகிடாமே நேரத்துக்கு அவங்களை வீட்டுக்கு அனுப்பி வைக்கணும். அதனாலே ஒரு அஞ்சே அஞ்சு நிமிஷ நேரத்துக்கு ஸ்பீச் கொடுத்தா போதும்"னு  சொல்லியே கூட்டிட்டு வரணும். இப்போ பாரு அவனவன் நிக்கிறதுக்கு மேடையும் கையில் மைக்கும் கிடைச்ச குஷியில் அவங்கவங்க வீரதீர பிரதாபங்களை அள்ளி வீசிகிட்டு இருக்காங்க. இவனுக எப்போ பேச்சை முடிச்சு எப்போ குழந்தைங்க நிகழ்ச்சி ஆரம்பிக்கிறது. நம்ம பேச்சை மத்தவங்க ரசிக்கிறாங்களா இல்லையா ங்கிறது கூட தெரியாம  எப்படி மம்மி இவங்க வார்த்தைகளைத் தோரணம் கட்டி வாய்ப்பந்தல் போட்டுட்டு இருக்கிறாங்க ?"
"கொஞ்ச நேரம் வாயை மூட்டிட்டு இரு . யார் காதிலாவது விழுந்து வைக்கப் போகுது. வந்த இடத்தில் வம்பை விலை குடுத்து வாங்கணுமா? " என்று மகளைக் கடிந்து கொண்டாள் லலிதா.
"மம்மீ . என்னை விட்டுத் தள்ளு . என் ப்ரெண்ட் சந்திரிகா பாவம் மம்மி . இன்னைக்கு திடீர்னு மத்தியானத்துக்கு மேலே க்ளாஸ் கிடையாதுன்னு சொல்லிட்டாங்க. அன்ட்டைமில் வீட்டுக்குப் போனால் அவங்க வீட்டில் யாரும் இருக்க மாட்டாங்கனு நினைச்சு அவ  நம்ம வீட்டுக்கு வந்ததுக்குப் பனிஷ்மெண்ட் மாதிரி நீ அவளையும் சேர்த்து இங்கே அழைச்சிட்டு வந்துட்டே .  நாங்க போய் வாசலில் வெயிட் பண்ணட்டுமா ?"
"ஒண்ணும் வேண்டாம் . கிளம்பு ...போகலாம் ... பார்வதி மாமியைப் பார்க்கிறச்சே எதையாவது சொல்லி சமாளிச்சுக்கலாம் "
"அப்பாடா .. இப்பத்தான் நீங்க நல்ல மம்மி "
மூவரும் வெளியில் வந்தார்கள்.
"மம்மி .. பஸ் பிடிக்க நாம பீச் ரோட்டுக்குப் போகணும் .."
"சரி .. ஆட்டோ பிடி "
"வேண்டாம் மம்மி. டைம் பாஸ் ஆகணுமே.. நடந்தே பஸ் ஸ்டாண்ட்க்கு   போகலாம். மம்மி, நீங்க அடிக்கடி சுந்தரி ஆன்ட்டி பத்தி சொல்வீங்களே. அவங்க இப்போ பதினைஞ்சு நாளா லீவில் இருக்கிறதா ரெண்டு நாள் முன்னாடி சொன்னீங்க. அவங்க வீடு இந்த ஏரியா தானே? அவங்களைப் பார்த்துட்டுப் போகலாமா ?" என்று சுபா கேட்கும்போதே, அவள் கையை ரகசியமாகக் கிள்ளிய சந்திரிகா "என்னடி இது! யார்  யார் வீட்டுக்கெல்லா மோ போலாம்னு சொல்றே. எனக்கு யாரையும் தெரியாதே. முன்னே பின்னே தெரியாதவங்க வீட்டுக்கு எப்படிடி போக முடியும்  ?  " என்றாள் .
"டோன்ட் வொரி .. நானும் அவங்களை பார்த்ததே கிடையாது . ஆனால் அவங்க ஒரு இண்டரெஸ்டிங் கேரக்டர். மம்மி எப்பவும் அவங்களைப் பத்தியே பேசுவாங்க. என்னோட ரூம் கார்பொரேசன் குப்பைத் தொட்டி யை விட மோசமான கண்டிஷனில்தான் இருக்கும். என் ரூமுக்குள் எட்டிப் பார்க்கும் மம்மி "உன்னையெல்லாம் சுந்தரி கிட்டே ட்ரைனிங் அனுப்பணும். ரெண்டே நாளில் தங்கக் கம்பியா உன்னை தட்டி நிமிர்த்தி விடுவா. ஆபீசில் அவங்க திங்க்ஸ் ஒவ்வொண்ணும் அவ்வளவு சுத்தமா இருக்கும். பைல்ஸ்சை  அவங்க மாதிரி மைண்டைன் பண்ண யாராலும் முடியாது"ன்னு சொல்வாங்க. ரொம்பவும் ஹெல்பிங் மைன்டெட் பெர்சன். நாமல்லாம் ஹோட்டல்க்கு சாப்பிடப் போனா நமக்கு வேண்டாததை தொடாமல் விட்டுடுவோம்தானே. அவங்க ஹோட்டல் போறப்போ கையோடு ஒரு கேரி பேக் எடுத்துட்டுப் போவாங்களாம். அவங்களோ, இல்லே  அவங்க கூட சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடற மற்ற பிரெண்ட்ஸ்ஸோ  வேண்டாம்னு ஒதுக்கி வைக்கிறதை அந்த கவரில் போட்டு எடுத்து வந்து  வாசலில் நிற்கிற பிச்சைக்காரனுக்கோ அல்லது நாய்க்கோ வைப்பாங்களாம். பிச்சைக்காரன் கண்ணில் படாட்டாலும் யாராவது கண்ணில் படறாங்களான்னு தேடிப்பிடிச்சு குடுப்பாங்களாம். வெளியூருக்கு போனால் .. சொந்தக்காரங்க வீட்டுக்கு போனாலும் கையோடு தேங்காய் எண்ணை, சோப்பு, துணி காயப் போட கயிறு, கிளிப் எல்லாம் கொண்டு போவாங்களாம் .  ஏன்னு கேட்டால், " சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் அவங்களைத் தொந்தரவு பண்ணக் கூடாதுன்னு சொல்வாங்களாம். வீட்டைக் க்ளீனா வச்சிருக்கிற விஷயத்தில் அவங்க பேரை சொல்லியே மம்மி என்னை டார்ச்சர் பண்ணுவாங்க. அவங்க வீடு எப்படி இருக்குனு பார்த்துட்டு வந்து நாமளும் அவங்களை பாலோ பண்ணலாமே. அதான் .." என்று விளக்கினாள் சுபா 
அவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்டுக் கொண்டே வந்த லலிதா "அவங்க அம்மாவுக்கு உடம்பு முடியலேன்னு லீவு போட்டாங்க . வாங்க போகலாம். வீட்டையும் பார்த்த மாதிரி இருக்கும் . அவங்க அம்மாவையும் விசாரிச்ச மாதிரி இருக்கும் " என்றாள் 
சுந்தரியின் வீட்டைத் தேடிக் கண்டு பிடிப்பது அப்படியொன்றும் பெரிய விஷயமாக இருந்திருக்கவில்லை. ஆனால் சுந்தரிதான் வீட்டில் இல்லை என்ற தகவலை சொன்ன பக்கத்து வீட்டுப் பெண்மணி. " அந்தம்மா வீட்டு சாவி இங்கேதான் இருக்குது. யார் வந்தாலும் கதவைத் திறந்து விட சொல்லிட்டுப் போயிருக்காங்க " என்று சொன்ன போது, " திருடன், திருட வந்தால்  கூடவா ?" என்று சுபா கேட்க, " ஏய் வாலு . கொஞ்சநேரம் வாயை மூடிக் கொண்டு சும்மா இரேன் " என்று லலிதா கடிந்து கொள்ள, "பாப்பா, திருட வர்றவன் கையோடு ஏதாது சாவியைக் கொண்டுட்டுதான் வருவான். நாம குடுக்கனுங்கிறதில்லே "என்று சொல்லியபடி சுந்தரியின் வீட்டுக் கதவைத் திறந்து விட்டாள்.
உள்ளே நுழைந்து வீட்டை ஏறிட்டுப் பார்த்த லலிதா அதிர்ந்து போனாள். காலண்டரில் தேதி கிழித்து பதினைந்து நாட்கள் ஆகியிருந்தது. தினசரி நாளிதழ்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இரைந்து கிடந்தன. சுபா வாயைக் கைகளால் பொத்திக் கொண்டு கேலி சிரிப்பு ஒன்றை அறை முழுக்க  பரவ விட்டாள். சுந்தரியை மொபைலில் அழைத்த லலிதா "நாங்க இப்போ உன் வீட்டில்தான் இருக்கிறோம். வீடு குப்பையா கிடக்குது . நான் சுத்தம் பண்ணட்டுமா ? இல்லே அதுக்கும் ஏதாவது ஒரு காரணம் வச்சிருக்கியா ?" என்று கேட்க ," கண்டிப்பா இருக்குது. அம்மாவை அழைச்சிட்டு வந்துட்டே இருக்கிறேன். நீ எதையும் தொடாதே முடிஞ்சா நாலைஞ்சு பேப்பரை வீடு முழுக்க கிழிச்சுப் போடு.  வந்ததும் விஷயத்தை, ஐ மீன் காரணத்தை சொல்றேன் " என்றாள்.
"என்ன ? அம்மாவை பார்க்க ஆஸ்பிடலுக்கும் வீட்டுக்கும் அலைந்ததில் வீட்டைக் கவனிக்க நேரமில்லைன்னு உங்க ப்ரெண்ட் சொல்லப் போறாங்க. அம்மா, ஒண்ணு தெரிஞ்சுக்கோங்க....வேண்டாம் . நான் சொன்னா நீங்க கேட்கவா போறீங்க? இவங்களை ரோல் மாடலா காட்டித் தானே இத்தனை நாள் என்னை மட்டம் தட்டினீங்க மம்மி . இனிமே அது நடக்காது . மைண்ட்  இட் " என்றாள் சுபா. 
சிறிது நேரத்தில் அம்மாவைக் கைத் தாங்கலாக அழைத்தபடி சுந்தரி வந்து சேர்ந்தாள்.
வீட்டுக்குள் நுழையும்போதே, " நான் ஒரு பத்து நாள் இல்லாட்டா போதும்  உடனே இந்த வீடே தலை கீழா மாறிடும் " என்று சுந்தரியின் தாய் சொல்லிக் கொண்டே வர,'இதைக்கவனி' என்பதுபோல சைகை செய்தாள் சுந்தரி.
"இப்போ எப்படி இருக்கீங்க . உடம்பு விஷயத்தில் கேர் எடுத்துக்கோங்க. நல்லா ரெஸ்ட் எடுங்க " என்றாள் லலிதா 
"என்னம்மா ரெஸ்ட்? ஒரு பதினைஞ்சு நாள் நான் வீட்டில் இல்லே. உடம்பு முடியாமே படுத்திட்டேன் . வீடு வீடாவா இருக்குது . நான் இல்லாட்டா இங்கே எதுவும் நடக்காது. அப்படி அப்படியே கிடக்கும் " என்று முனகிய குரலில் சொன்னாள் சுந்தரியின் தாய்.
"இதை.. இதை .. இதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன் " என்று லலிதாவின் காதருகில் கிசுகிசுத்த சுந்தரி, " இரு .. அம்மாவை பெட் ரூமில் விட்டுட்டு வர்றேன் . நீ என்ன குடிக்கிறே ? உன் பொண்ணுக்கு என்ன பிடிக்கும். உன் பொண்ணோட ப்ரெண்டுக்கு என்ன பிடிக்கும் ? என்றாள்.
"என் ப்ரெண்ட் இவனு உங்களுக்கு எப்படித் தெரியும் ஆன்ட்டி "
"சில விஷயங்களை சொல்லாமலே புரிஞ்சுக்க என் ப்ரெண்டாலே முடியும்" என்ற லலிதா, "உன்னோட திருப்திக்காக எங்க எல்லோருக்கு மே காபி குடு  " என்றாள் 
பத்து நிமிடங்களில் காபியோடு சுந்தரி வர, "அம்மா .. ம். .ம். " என்று ஜாடை  காட்டினாள் சுபா. " அதைத் தெரிஞ்சுக்காட்டா உனக்கு தலை வெடித்துப் போயிடுமே " என்ற லலிதா " என்னடி இது ட்டேட் கூட கிழிக்காமே, படிச்ச நியூஸ் பேப்பரை எடுத்து வைக்காமே ... " என்றாள்.
"காரணமாத்தான் ... எங்க அம்மாவோட நாற்பத்தைந்தாவது   வயதில் நான் பிறந்தேனாம். இப்போ அம்மாவுக்கு வயசு தொண்ணூறு. அம்மாவை நான் பாரமாக நினைச்சதே கிடையாது. ஆனால் அவங்களுக்கு என்னமோ அவங்க தண்டமா இந்த வீட்டில் இருக்கிற மாதிரி ஒரு பீலிங்க் . அதை மாற்ற, அவங்க இல்லாமே சின்ன சின்ன வேலைகூட இந்த வீட்டில் நடக்காது அப்படிங்கிற மாதிரி சீன்ஸ் கிரியேட் பண்ணி வச்சிருக்கிறேன் அதை செய்ய அவங்களை விட்டால் ஆள் இல்லைங்கிற நினைப்பில் அவங்க தெம்பா நடமாடறாங்க. அதுக்காக நான் செய்ற வேலை,  வீட்டை  கொஞ்சம் டர்ட்டி பண்ணி வைக்கிறது . அதில் இந்த டேட்  கிழிக்காதது, படிச்ச  பேப்பரை மடிச்சு ஒழுங்கா வைக்காததுல்லாம். ஒரு பத்து நிமிஷம் ரெஸ்ட் எடுப்பாங்க.  பிறகு  இந்த வேலையை செய்ய ஆரம்பிச்சுடுவாங்க. அவங்களுக்கு லைப்பில் ஒரு இஷ்டம், ஒரு பிடிப்பு  வருவதற்காக நான் செய்கிற சில்மிஷ வேலை இதெல்லாம்" என்று சிரித்துக் கொண்டே சுந்தரி சொல்ல , ஓரக் கண்ணால் சுபாவைப் பார்த்தாள் லலிதா.
"தப்பு .. தப்பு ... தப்பும்மா " என்று ரகசியமாக கன்னத்தைக் தட்டிக் காட்டினாள்  சுபா.
    

No comments:

Post a Comment