Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, March 20, 2016

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 30

      
      அச்சுப்பிச்சு அப்புமணி !
"டேய்... இதெல்லாம் தேவையா ? நாம இதுவரை இந்த கடத்தல் வேலை எதுவும் செஞ்சதில்லே ..இப்போ இது ரிஸ்க் மாதிரி தெரியுதேடா " என்று கவலையுடன் கேட்டான் சேகர்.
"அடப் போடா ... இவனே.... பயந்தா எப்போ பணக்காரன் ஆறது ? பாரின் காரில் ஊரை சுத்தி வர்றது."
"உள்ளதும் போச்சு நொள்ளைக் கண்ணாங்கிற மாதிரி ஆயிடபோகுது . எனக்கென்னவோ இதில் அவ்வளவு இன்ட்ரெஸ்ட் இல்லே "
"பாரு சேகர் ... லட்டு மாதிரி கையில் துட்டு வர்ற சான்ஸ் ... மிஸ் பண்ண வேண்டாம் "
"நீ சொல்றமாதிரியே வச்சுக்குவோம் .. லாபம் வர்ற மேட்டர்னா இதை அவங்க டீல் பண்ணாமே நம்ம கிட்டே ஏன் விட்டு வைக்கிறாங்க.?"
"போடா ... இவனே ... நம்மள யார் டீல் பண்ண சொன்னாங்க ? அந்த பொண்ணு நம்ம கஸ்டடியிலே இருக்கும்.அவ்வளவுதான். திரும்ப அவங்க கையிலே பத்திரமா சேர்க்கணும். அதுக்கு அவங்க நமக்கு ஒரு நாளைக்கு ஐந்தாயிரம் ரூபா காசு கைமேலே கிடைக்கும் "
"நெஜமாவா ?'
"அட ... ஆமாம்டா ... இந்நேரம் அது தனம் வீட்டுக்கு வந்து சேர்ந்திருக்கும். வா .. நாம போய்ப் பார்த்துட்டு வரலாம் "
"சரி ..அப்புமணி அலையிலே விளையாடிட்டு இருக்கிறான். அவனையும் கூட்டிட்டுப் போகலாம் "
"பூனையை மடியிலே கட்டிக்கிறதுங்கிறது இதுதான். பார்த்துட்டே இரு ... ஒருநாள் இல்லாட்டா ஒருநாள் அவன் நம்ம மொத்தப் பேருக்கும் ஆப்பு வைக்கப் போறான். லூஸு நம்மளை லூஸாக்கப் போகுது "
"இதோ பாரு... நீ தேவையில்லாமே பயப்படறே " என்று சேகர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பிரவீன் கையிலிருந்த மொபைல் பளிச்சிட்டது 
மொபைலை எடுத்துப் பேசிய பிரவீன்,"அப்படியா ?"என்று சோகமான குரலில் கேட்டவன்  "சரி " என்று மொபைலை ஆப் பண்ணினான்.
 "என்னடா  ?" 
"பார்ட்டி வர கொஞ்சம் லேட் ஆகுமாம் "
"சரி வா. நாம அப்புமணியை தனத்தோட வீட்டில் விட்டுடலாம். பாவம். சின்னப் பையன். தனியா போரடிச்சிட்டு இருப்பான் "
"கவலையைப்பாரேன்...உன்னோட உடன்பிறவா அண்ணாத்தே வந்தாச்சா ?"
"ஆமாம் "
அங்கிருந்து கிளம்பி எல்லோரும் தனத்தின் வீட்டுக்கு வந்தார்கள். ஆனால் வழியிலேயே  தனம்  இவர்களை "வாங்க, வாங்க'னு புன்னகை யோடு அழைத்தாள். 
"உன்னை இங்கே நாங்க எதிர் பார்க்கலே.  நீ திரும்பி வர இன்னும் ரெண்டு நாளாகும்னு நினைச்சோம் "
"நீ உன் அண்ணனைக் கொண்டாந்து விட்டுட்டேனு தகவல் வந்துச்சு. பாவம் அந்த மனுஷன். பார்த்துக்க ஆள் வேணுமேன்னு சீக்கிரம் திரும்பி வந்துட்டேன்." 
"உனக்கு இன்னொரு வேலை இருக்குது. இந்தப் பையனை உன் வீட்டில் வச்சுக்கணும்."
"அட ... இதுதானா ? ஒண்ணு இல்லே ... ஒன்பது பையனை வேணும்னாலும் கொண்டாந்து விடு. காசை மட்டும் கணக்காக் குடுத்துடு. சொல்லிப் புட்டேன். காசு விஷயத்திலே மட்டும் நான் கணக்கா இருப்பேன்."
"உன்னை என்னிக்காவது ஏமாத்தி இருக்கிறோமா ?" என்று கோபமாகக் கேட்டான் சேகர் 
"சும்மா ஒரு பேச்சுக்குக் கேட்டா கோவிச்சுக்கிறியே கண்ணு" என்று சமாதானம் செய்வது போலக் கூறினாள் தனம் 
"இந்தப் பையனை உன் வீட்டில் வச்சு பத்திரமா பார்த்துக்கோ" என்று சேகர் சொன்னதைக் கேட்ட அப்புமணி, "ஊஹூம்..நான் உங்ககூட மட்டுந் தான் இருப்பேன்" என்றான்.
"அப்படியே ரெண்டு ஓங்கி விட்டேன்னா தெரியும் !" என்று கைகளை ஓங்கிய பிரவீனை முறைத்துப் பார்த்த சேகர், "வா ... அப்பு ... நாம நம்ம வீட்டுக்குப் போலாம்" என்று சொல்லி வந்த வழியே திரும்பி நடக்க ஆரம்பித்தான்.
"அந்தப் பையனைப் பத்தி யார் என்ன சொன்னாலும் சேகர் தம்பிக்கு கோபம் வரும்னு உனக்குத் தெரியாதா? நீ ஏன் அவனை சீண்டறே ?" என்று கேட்டாள்  தனம்.
பிறகு சேகர் அருகில் வந்து "உன் வெல்லக்கட்டி தம்பி கரைஞ்சு போயிடாமே நான் பார்த்துக்கறேன் " என்றவள், 'அப்புக் கண்ணு ... நீ எங்க வீட்டுக்கு வந்ததே இல்லியே.. எங்க வீட்டில் உன்னோட விளையாட ஒரு மாமா இருக்கிறார் " என்று சொல்லும்போதே, "ஆமா... மாமா அப்படியே கிளுகிளுனு  வாயைத் திறந்து பேசிட்டுதான் மறுவேலை பார்ப்பார் " என்று பிரவீன் கிண்டலாக சொல்ல, அவனைக் கோபத்தோடு பார்த்தான் சேகர்.
"கண்ணு .. நீ இன்னிக்கு ராப் பொழுது மட்டும் என் வீட்டில் இரு. உனக்கு பொழுது போகலேன்னா நாளைக்குக் காலையில் கிளம்பிப் போயிடு " என்று சொல்ல அரைகுறை மனதோடு சம்மதித்தான் அப்புமணி 
"போரடிச்சா கொண்டாந்து அண்ணாகிட்டே விடுவே தானே?" என்று கேட்ட அப்புமணியைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டான் பிரவீன். நடக்கும் அத்தனை சம்பவங்களையும் வேடிக்கை பார்த்தபடி மௌனமாக வந்தான் ராஜு.
"நீ கவலைப்படாமே போ தம்பி.  வேறே எதோ ஒரு பொண்ணு வருதுன்னு சொன்னியே. அது வந்தால் ரெண்டும் சேர்ந்து விளையாட ஆரமிச்சுரும். இந்த தம்பி பொழுது போகலேன்னு சொல்லவே சொல்லாது" என்று சேகருக்கு தைரியம் சொன்ன தனம், அப்புமணியை அழைத்துக் கொண்டு தனது வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
வீட்டுக்கதவை தனம் திறக்கும்போதே,"தனம்அக்கா...எனக்கு போரடிக்கு . நான் சேகர் அண்ணாகூட   இருக்கப் போறேன்" என்றான் அப்புமணி 
"அடப் பாவி... வீட்டுக்குள்ளே வர முன்னாடியே உனக்கு போரடிக்குதா ?" என்று வியந்து போய்க் கேட்டாள் தனம் 
"ஆமாம்.. எனக்கு இங்கே ஒரு வேலையும் இல்லை. என்னோடு பேசக் கூட யாருமில்லே " என்று அழும் குரலில் சொன்னான் அப்புமணி 
"ஆமா ... இதுக்கு முன்னாடி துரை இருபத்து நாலு மணி நேரமும் வேலை பார்த்துட்டு தானே இருந்தீங்க ?"என்று கிண்டலாகக் கேட்ட தனம் , "இங்கே வந்து இந்த மாமாவைப் பாரேன் " என்றாள் 
"பார்த்தாச்சு. இவரை நீ உள்ளே வச்சுப் பூட்டிட்டு வந்தியா ? "
"ஆமாம். இவரோட உனக்குப் பொழுது போகும்"
"ஆமாம்... சும்மா பொம்மை ராஜா மாதிரி உக்காந்திருக்காரு ... இவரோட எனக்கு பொழுது போகுமா  ?" என்று கோபமாகக் கேட்டான் அப்புமணி 
"சீக்கிரமே உன்னோட விளையாட ஒரு அக்கா வரப் போறா "
"எப்போ ?"
"சீக்கிரமே...இப்போவந்துட்டே இருக்கிறா"என்றுதனம்சொல்ல, அப்புமணி  சமாதானம் ஆனான் 
"அக்கா ... இவர் யாரு?"
"யாருக்குத் தெரியும் ?"
"அப்புறம் ஏன் இங்கே இருக்காரு ?"
"உன்னைத் தூக்கி சுமக்கிற மாதிரி சேகர் தம்பி இவரையும் தூக்கி சுமக்குது" என்று தனம் சொல்ல, அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்த அந்த மனிதர் அப்புமணி அருகில் வந்து தலைமுடி யைக் கைகளால் கோதியபடி கன்னத்தில் முத்தமிட்டார். அதைக் கண்டு அதிர்ந்து போய் நின்றாள் தனம்.
எந்த அசைவும் இல்லாமே பிடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி உட்கார்ந்தே இருக்கிற இவருக்குள்ளும் இப்படியொரு பாச உணர்வா என்று பிரமித்துப் போனாள். இதை உடனேயே சேகரிடம் சொல்ல அவள் மனம் பரபரத்தது.
----------------------------------------------------------  தொடரும் ------------------------------------------ 
 
 

No comments:

Post a Comment