Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, March 06, 2016

அன்பு சகோதரிகளே,

                                                       மகளிர் தின நல்வாழ்த்துக்கள் !

" ஆணுக்குப் பெண் நிகரென்று கூறடி தங்கம் ! " - எப்போதோ கேட்ட பாடல் வரிகள். ஆனால் மனதில் இன்றும் பசுமையாக நிற்கிறது.


இங்கு சில விஷயங்களை நாம் மனம் விட்டுப் பேசியே ஆகவேண்டும். கசப்பான விஷயம் என்றாலும் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் அதிகம் இருக்கிறது. ஆணுக்கு நிகராக நம்மை மாற்றிக் கொள்வது நல்ல விஷயந்தான். ஆனால் அந்தப் போட்டி எல்லா விஷயங்களிலும் இருக்க வேண்டாம். சில விஷயங்களில் அதைத் தவிர்ப்பதே நல்லது. கசப்பான மன உணர்வோடு தான் இதை சொல்லுகிறேன்.
இரண்டு நாட்களுக்கு முன் நான் எலெக்ரிக் ட்ரெயினில் பயணித்துக் கொண்டிருந்தேன். அன்றைய தினம்  ட்ரெயினில்  அதிக  கூட்டமில்லை. எல்லாப் பெட்டிகளும் காலியாகவே இருந்தது. இரண்டு பெண்கள் பேசிக் கொண்டு வந்தார்கள். எனக்கு முன்பாகவே அவர்களிருவரும் எதோ ஒரு ஸ்டேஷனில் ஏறியிருந்ததால் அவர்கள் பேச்சு எனக்கு முழுமையாகப் புரியவில்லை. ஓரளவு நான் புரிந்து கொண்ட செய்தி : இரண்டு பேரில் ஒருத்தி எப்போதோ ஏதோ காரணமாக ஒரு கவர்ன்மெண்ட் ஆபீசுக்குப் போயிருந்திருக்கிறாள்.அங்குள்ள ஒரு லேடி இவளிடம் ஏதோ பணம் கேட்டிருக்கிறாள். அந்த விஷயத்தை இவள் மற்றவளுக்கு விவரித்து சொல்லிக் கொண்டிருந்தாள். அவர்கள் பேசிக் கொண்ட வார்த்தைகளை எழுத்தில் கொண்டு வர முடியாது. ஒரு சில வார்த்தைகள் நாசூக்காக இருந்ததால் அவை மட்டும். "பிச்சைக்காரன் கூட பணிவாக் கேட்பான். நீ அவனை விட கேடு கெட்டவ .. அதிகார தோரணை கேட்குதா உனக்கு. இந்த மானங் கெட்டப் பொழைப்பு பொழைக்கிறதுக்கு வேறே எங்காது போலாமே. நிறைய துட்டு கிடைக்குமே.  இந்த கேடு கெட்டவ என்னைப் புழுவைப் பார்க்கிற மாதிரி பார்க்கிறா...." (இது போன்ற வசனங்கள் காதில் விழுந்து கொண்டே இருந்தது.அவர்கள் பல்லாவரம் ஸ்டேஷனில் இறங்கி விட்டார்கள். அவர்களிருவரும் போனதும்  அடுத்து நடந்த உரையாடல் கடைசியில் வருகிறது. முதலில் இதை முடிச்சுட்டு பிறகு அதைப் பார்க்கலாம்.)  
அரசு அலுவலகங்களில் லஞ்சம் பற்றி மீடியாக்கள் வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறது. பெண்கள் கைது செய்யப்பட்டு, சிறைக்குக் கொண்டு செல்வதை படம் பிடித்துக் காட்டுகிறார்கள். அதைப் பார்க்கும் போதெல்லாம், என் மனதுக்குள் நான் சொல்லிக் கொள்ளும் டயலாக்: தப்பு பண்றப்ப இப்படிப் பண்றோமேன்னு வெட்கப்படலே. பிடிபட்டதும் வெட்கம் வந்துட்டுதா ?".
அவனவன் கோடிகோடியா கொள்ளையடிக்கிறான். என்னவோ ஆயிரம் இரண்டாயிரம் கைநீட்டி வாங்கினபோது பிடிபட்டதை எதோ அல்கொய்தா தீவிரவாதியைப் பிடித்தது போல, வீரதீரப் பிரதாபம் போலப் படம் பிடித்து காட்டுகிறார்களே என்றும் நினைப்பேன். அந்த நினைப்பு வரும்போதே மனதில் வேறொரு எண்ணமும் வரும். கோடிகோடியாக சுருட்டினவன்   வீட்டு நாய்க்குட்டியைப் பத்தி பேசக் கூட எவனுக்கும் தைரியம் வராது. வெளியில் எந்த நாய் எப்படி குரைத்தாலும் சரி ; அது மாளிகைவாசிகளின் காதில் விழாது. ஆனால் நாமிருப்பது ? நடுத்தர மக்கள் வாழும் நாற்றம் பிடித்த இடத்தில். அடுத்த வீட்டு விஷயம் மற்றவர்களுக்கு அல்வாதுண்டு சாப்பிடுவது போல.சமயம் கிடைக்கும் போது வார்த்தை ஊசிகளால் குத்தி குத்தி ரணமாக்குமே. பணம் வாங்கியாச்சு. பிடி பட்டாச்சு. அது ஒண்ணும் தூக்குத் தண்டனைக் குற்றம் இல்லே. வீட்டுக்கும் வந்தாச்சு. உங்கள் வீட்டு ஆட்களே உங்களைக் கேட்பார்களே, சும்மா ஒரு வறட்டுக் கெளரவத்துக் காகவாவது, "நீ இப்படி சம்பாதித்துக் கொண்டு வந்துதான் எங்களுக்குப் போட்டாயா" என்று. அப்போ நீங்கள்  நொறுங்கிப் போயிட மாட்டீங்களா ?
உங்கள்  வீட்டிலும் குழந்தைகள் இருக்கிறார்கள். வெளியில் விளையாடப் போவார்கள். விளையாட்டில் ஏதாவது ஒரு தகராறு வரும்போது, தகராறு பற்றிய விஷயம் அவர்களுக்கு மறந்து போய்விடும். "ஏய் ... உங்கம்மா பத்தித் தெரியாதாடா..பெரிய இவன் மாதிரி பேசவந்துட்டே" என்ற வசனம் வரும். அதை பிஞ்சு உள்ளங்கள்  ஜீரணிக்குமா என்று யோசனை பண்ணிப் பாருங்கள். அவர்களை விடுங்க .. நீங்களே ஏதாவதொரு நியாயத்தை அக்கம் பக்கத்திலோ, அலுவலகத்திலோ கேட்டு விட்டால், அடுத்து வரும் வசனம் : "நீயெல்லாம் நியாயம் கேட்க வந்துட்டியா ?" என்பதுதான். 
சமுதாயத்தில் கவுரவமா வாழணும்னுதானே  தூங்க நினைத்தால் கூட அந்த எண்ணத்தைக் கொன்று விட்டு, சாப்பிட்டும் சாப்பிடாமலும் அரக்கப் பறக்க ஓடி அலுவலகம் வர்றோம். கேவலம் ஒரு அஞ்சாயிரம் பத்தாயிரம் ரூபாய்க்கு அந்த கவுரவத்தை ஏன் இழக்க வேண்டும்?  
மிடில் கிளாஸ் ஜனங்க கஷ்டம் எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். வீட்டில் படிக்கிற குழந்தைகள் இருந்தால் சம்பளத்தில் பாதி அதுக்கே போயிடும். அவங்களுக்கு நல்ல சாப்பாடு கொடுக்கணும். நல்ல நிலைக்குக் கொண்டு வரணும். இப்படி ஆயிரம் பிரச்சினை இருக்குது. இதுக்கு நாம வாங்குகிற சம்பளம் போதாது. அதுவும் தெரியும். அதையெல்லாம் விட அவர்களை தலை நிமிர்ந்து வாழ வைக்கும் பொறுப்பும் நமக்கு இருக்குதே. 
நமது சமுதாயம் ஆண்களுக்கென  சில நியாயங்களை வைத்திருக்கிறது.  "அவன் ஆம்பிளை .. சேறு கண்ட இடத்தில் இறங்குவான். தண்ணி கண்ட இடத்திலே காலைக் கழுவுவான். நீ பொம்பளை உன்னாலே அப்படி முடியுமா?" என்று சொல்லிச்சொல்லிதானே காலங் காலமாக பெண்களை வளர்த்து வருகிறார்கள். ஆனால் இந்த "பிடிபடும்" விஷயத்தில் மட்டும் இந்த வார்த்தைகளை  ஏற்றுக் கொண்டுதானே ஆக வேண்டி இருக்கிறது.  
ஒரு பழமொழி சொல்வாங்க; "கால் காசுக்காக அழிந்த மானம் கதறி அழுதாலும் திரும்ப வருமா  ?" 
அந்தப் பழமொழியை யோசிப்போம். நம்முடைய வருமானத்துக்குள் நம்மால் எதை செய்ய முடிகிறதோ அதை செய்யப் பழகிக் கொள்வோம். நியாயமான வழியில் சம்பாதித்து நாம் கந்தலைக் கட்டிக்கொண்டு வெளி இடங்களுக்குப்  போனால் கூட அது நமக்குக் கௌரவமே. 
போனதெல்லாம் போகட்டும். இந்த மகளிர் தினத்தில் " வேலை செய்யும் இடத்தில் சட்டத்துக்குப் புறம்பான, எனக்கு இழிவைத் தேடித் தருகிற எந்தவொரு  விஷயத்தையும் செய்ய மாட்டோம்" என்று உறுதி எடுத்துக் கொள்வோமே .  
மற்றொரு விஷயம் என்னவென்று சொல்லிவிடுகிறேன் : அந்தப் பெண்களுக்குள் நடந்த உரையாடலை என்னருகில் இருந்த மற்றவர்களும் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறார்கள். அவர்கள் இறங்கிப் போனதும் என் அருகில் இருந்த பெண் சொன்னது."ஏனுங்க ... நமக்கும் ஒருசில வேலை ஆக வேண்டி இருக்குது. அவளுக அதைக் கொண்டா ...இதைக் கொண்டானு நாலு வாட்டி, இல்லே நாப்பது வாட்டினு அலைய வைப்பாளுக. ஒரு அஞ்சு பத்தை நாய்க்குத் தூக்கிப் போடுத மாதிரி தூக்கிப் போட்டுட்டா, வாலை ஆட்டிகிட்டு நம்ம வேலையை செஞ்சு தருவாளுக. போனோமா வேலை யை முடிச்சோமானு இல்லாமே எதுக்கு தினமும் அலையணும். " 
அரசு ஊழியர்கள் சும்மா இருந்தால் கூட பொதுஜனம் என்கிற பேரில் இருக்கிற திருவளத்தார்கள் அவர்களை சும்மா இருக்க விட மாட்டார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன்.  இந்த இரண்டுமே நமக்கு வேண்டாங்க. கொஞ்சம் யோசிப்போமே.  
மகளிர் தினத்தில் இதைப் பற்றி யோசிக்க வேண்டும். எங்கள் கௌரவம் எங்கள் கையில் என்ற எண்ணம் எல்லோருக்கும் வர வேண்டும் என்பதற்காகவே இது இரண்டு நாட்கள் முன்பாகவே இங்கு  பதிவு செய்யப் படுகிறது.
(நானும் ஒரு அரசு ஊழியராக இருந்து ரிடையர் ஆனவள் என்பதைப் பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன். )

No comments:

Post a Comment