Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, March 06, 2016

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 28

                                         
 அச்சுப்பிச்சு அப்புமணி !
அப்புமணிஎன்னஆனானோஎன்ற  கவலையில் அன்று இரவு முழுவதும் சேகருக்கு தூக்கம் வரவில்லை.
ச்சே...தப்புப் பண்ணிட்டேனே. நான் ஒரு முட்டாள் என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டான். விடிகிற நேரத்தில்தான் சற்று கண்ணயர்ந்தான்.
"அண்ணா !" என்று அழைக்கும் குரல் கேட்டது. 
கண் விழித்துப் பார்த்தவன், அப்புமணியின் நினைவாகவேஇருப்பதால் உண்டான பிரமை யாக இருக்குமோ என்று நினைத்தபடி படுக்கை யில் உருண்டு படுத்தான்.மீண்டும் அதே குரல் கேட்கவும் எழுந்து போய்க் கதவைத் திறந்தவனுக்கு, நடப்பது கனவா நனவா என்ற சந்தேகம் வந்தது. ஓடிச்சென்று அவனை அணைத்துக் கொண்டான்.
"ச்சே .. நான் என்ன சின்ன பாப்பாவா ?" என்ற கேள்வி வந்ததும்தான், 'சந்தேகமே இல்லை, இது அப்புமணிதான், நடப்பது எல்லாமே நிஜந்தான்' என்று உறுதியாக நம்பினான் சேகர்..
இரண்டு கைகளாலும் அவன் தோளைப் பிடித்து உலுக்கி, "அப்பு .... அப்பு ... உனக்கு ஒண்ணும் ஆகலேதானே ?" என்று கேட்டான்.
"என்ன கேட்கிறீங்க அண்ணா ?"
"போலீஸ் உன்னை அடிச்சாங்களா?உன்னை எப்படி வெளியில் விட்டாங்க ? நேத்து ராத்திரி சாப்பிட்டியா? ஏதாவது வாங்கிக் குடுத்தாங்களா ?" என்று பரிதவிப்புடன் கேட்டான் சேகர் 
"என்னை யாரும் அடிக்கலே.எனக்குதான் சின்னபோலீஸ்,பெரிய போலீஸ்  - அதான் அந்த ஐநூத்தி ஒண்ணு எல்லாரையும் தெரியுமே "
"என்ன சொல்றே ? போலீஷை உனக்குத் தெரியுமா "
" ஓ ... தெரியுமே ... எங்க தோட்டத்துக்கு வந்திருக்காங்களே "
"எப்போ ?"
"நீங்க எங்க ஊருக்கு வந்துட்டுப் போனீங்கதானே. அப்போ !"
அப்புமணி சொன்னதைக் கேட்டதுமே,அந்த சூழ்நிலை என்ன என்பதை நினைவுபடுத்திக் கொண்ட சேகர், "ஆமாம். நேற்று நீ எங்கே இருந்தே?" என்று கேட்டான்.
"குண்டு போலீஷைப் பார்த்ததும் நீங்க என்னை விட்டுட்டு ஓடிட்டீங்க தானே ?"
"ஸாரிடா ... செல்லம் .."
"இதுக்கெல்லாம் ஸாரியா ? அவங்க என்னைக் கூட்டிட்டு ஒரு ஆபீசுக்குப் போனாங்க. உன்னை என்ன பண்றோம்னு பாருன்னு மிரட்டினாங்க. ஆனா சின்ன போலீஸ் வந்ததும் கப்சிப்னு ஆயிட்டாங்க. எனக்கு ஜூஸ் வாங்கிக் குடுத்தாங்க."
"உன்னை வேறு எதுவும் கேட்கலியா ?"
"கேட்டாங்களே ? ஏன் இங்கே வந்தே ? எங்கே தங்கி இருக்கே ? பீச்சுக்கு ஏன் தனியா வந்தே? உன்னோட யார் வந்தாங்கனு கேட்டாங்க.. அதுக்கு நான், "உருப்படாத ராஜகுமாரன் மாதிரி உலகத்தை சுத்திப்பார்க்க வந்த விஷயத்தை சொன்னேன். "அப்படின்னா சரி .. போ"னு நேத்தே என்னை போக சொல்லிட்டாங்க " 
"ராத்திரி பூரா எங்கே இருந்தே ?"
"என் பின்னாலேயே ஒரு குண்டு போலீஸ் வந்தாரு. நான் உடனே பஸ் நிக்கிற இடத்திலே நிறைய பெஞ்சு இருக்குமே. அங்கே போய் உட்கார்ந்து கிட்டேன். அதுக்குள்ளே ராத்திரி ஆயிடுச்சா.. நான் அங்கேயே தூங்கிப் போயிட்டேன். காலைலே எழுந்திருச்சு ஓடியாந்துட்டேன்."
"உனக்கு இங்கே வர வழி எப்படி தெரிஞ்சுது?"
"அங்கே ஒரு அண்ணா டூ வீலரில் வந்தார்..அவர் யார் கிட்டேயோ யாரை யோ பீச்சில் வந்து பார்க்கிறதா போனில் பேசிட்டிருந்தது எனக்கு கேட்டுது. அந்த அண்ணா கிட்டே  என்னை பீச்சில் இறக்கி விடுங்கன்னு கேட்டேன். விட்டாரு. அங்கேருந்து வரத்தான் எனக்கு வழி தெரியுமே. வந்துட்டேன் " என்று சொல்லி கலகலவென்று சிரித்தான் அப்புமணி.
"உன்னைப் பார்த்ததும்தான் எனக்குப் போன உயிரே திரும்பி வந்துச்சுது!" என்று பெருமூச்சுடன் சொன்னான் சேகர்.
"அண்ணா ... நீங்க  என்ன தப்பு பண்ணுனீங்க ? போலீஷைக் கண்டதும் ஏன் ஓடியாந்தீங்க ?"
"என்ன அப்பு கேட்கிறே ?"
"எனக்கு எல்லாம் தெரியும்."
"சரி இருக்கட்டும் ... என்னைப் பத்தி உன்கிட்டே ஏதாவது கேட்டாங்களா? அதை சொல்லு "
"குண்டு போலீஸ்தான் கேட்டார் .. சின்ன போலீஸ் எதுவும் கேட்கலே "
"கேட்டிருந்தா நீ என்ன சொல்லி இருப்பே ?"
"பொய் சொல்லி இருப்பேன் "
இதைக் கேட்டு அதிர்ந்து போன சேகர் "ஏன்?" என்றான்.
"நான் உண்மை பேசப் போய்த்தான் குடிகாரப் புருஷன் கிட்டே மாரியக்கா அடி வாங்கினாங்க. அப்போ எங்கம்மா சொன்னாங்க, "உண்மை பேசறதா லே யாருக்காவது  கஷ்டம் வரும்னு தெரிஞ்சா, அந்த மாதிரி சமயத்தில் எதுவும் பேசாமே இருந்திடணும்"னு. நீங்க நல்லவர் .. எனக்கு எந்தக் கெடுதலும் நீங்க பண்ணலே. அப்புறம் நான் ஏன் உங்களைப் பத்தி சொல்ல ணும் ?"
இதைக்கேட்டதும் அவனை  கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தான்  சேகர்.
"அண்ணா நீங்க ஏன் தப்பு பண்றீங்க ?"
"நானா எதுவும் பண்ணலே. அந்த சூழ்நிலைக்கு என்னைக் கொண்டாந்துட் டாங்க "
"இப்போ தெரிஞ்சேதானே பண்றீங்க "
"உன்னைப்போல நான் சின்னப்பிள்ளையா இருக்கிறப்ப எனக்கு வீடு கிடையாது.ரோடுதான் எனக்கு வீடு. பசின்னா என்னனு உனக்கு தெரியாது . அதோட வலி சின்ன வயசிலிருந்தே எனக்குத் தெரியும். எனக்கு சாப்பாடு போட்டவங்க என்ன செய்ய சொல்றாங்களோ, அதை செய்வேன். "
"இப்போ நீங்க பெரிய அண்ணாதானே ... வேலை பார்க்கிறதுதானே "
"எனக்குத் தெரிஞ்ச ஒரே ஒரு வேலை இதுதான்ப்பா "
"நான் உலகத்தை சுத்திப் பார்த்துட்டு வந்து உங்களை எங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன். நீங்க என்னோடேயே இருக்கலாம். எங்க வயல்லே நீங்க வேலை பார்க்கலாம்."
அதைக் கேட்டு மௌனமாக இருந்தான் சேகர். அவன் தலை குனித்து உட்கார்ந்திருந்தான் .
அவனருகில் வந்து அவன் முகத்தை நிமிர்த்தி, "எங்க ஊருக்கு வருவீங்க தானே?" என்று கேட்ட அப்புமணி, சேகரின் கண்களிலிருந்து அருவி போல வடியும் கண்ணீரைக் கண்டு பதறிப் போனான்.  
-----------------------------------------------------தொடரும் ---------------------------------------------- 

No comments:

Post a Comment