Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Tuesday, June 11, 2019

அது ஒரு அழகிய நிலாக்காலம் ! (02)


பத்திரிகைகள், டீவி சேனல்களில் "ஹிந்தி மொழி திணிப்பு" பற்றிய செய்திகளைப் படிக்கும்போது, விவாதங்களைப் பார்க்கும்போது அந்தநாள் ஞாபகங்கள் மனதில்  அலையடிக்கிறது.  
இன்றைய காலகட்டத்தில் மூன்று வயதுக்கு முன்பாகவே குழந்தைகளை  கொண்டு போய் ஸ்கூலில் தள்ளி விடுகிறோம். தள்ளப்பட்ட அந்த நாளிலிருந்தே தனக்கு சம்பந்தமில்லாத ஒரு மொழியை குழந்தை கற்றுக் கொள்ள ஆரம்பித்து விடுகிறது. 
ஆனால் A B C D என்கிற ஆங்கில எழுத்துக்களையே நாங்கள் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதுதான் கற்றுக்கொண்டோம். TABLE, CHAIR, WINDOW, DOOR போன்ற  வார்த்தைகளை அதன்பின் கற்றுக் கொண்டோம்.
நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது ஹிந்தி பீரியட் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் உண்டு. நானும் எனது நட்பு வட்டங்களும் அதைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டினோம். மற்ற பாடங்களைக் காட்டிலும் ஹிந்தியில் அதிக மார்க் வாங்குவோம்.
1967 ம் வருடம் என்று நினைக்கிறேன். அந்த காலகட்டத்தில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் வந்தது. தமிழுக்காக சிலர் தீக்குளித்தார்கள். போராட்டத்தில் நாங்கள் ஆர்வம் காட்டினோம். அது தமிழ் மீது உள்ள மிகப் பெரிய அக்கறையாலோ ஹிந்தி மீது உள்ள வெறுப்பினாலோ அல்ல. "போராட்டம் நடந்தால் ஸ்கூல்க்கு லீவு விடுவாங்க". அது மட்டுந் தான் எங்களுக்குத் தெரியும்.
அதே பள்ளியில் அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்து வந்து, ஹாஸ்டலில் தங்கிப் படித்த மாணவிகள் உண்டு. மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த அவர்களது பெற்றோர் பலர் கூலித் தொழிலாளர்கள். கிறிஸ்துவ மிஸ்ஸன்ஸ் உதவியால் கட்டணமின்றி ஹாஸ்டலில் தங்கி கல்வியும் கற்றுக் கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த வயதில் அவர்களுக்கு குடும்ப சூழ்நிலையோ வீட்டுக் கஷ்டமோ தெரியாது. அந்த பக்குவம் அந்த வயதில் அவர்களுக்கு / எங்களுக்கு இல்லை என்பதுதான் உண்மை.. எப்படா லீவு விடுவாங்க. வீட்டைப் பார்த்து ஓடலாம் என்கிற மனோநிலையில் இருப்பவர்கள்.
ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் வரும். ஸ்கூல் லீவு விடுவாங்க. சில நாட்கள் கழித்து பள்ளி திறக்கப்படும்.  அன்றைய தினமே அடுத்தாப்ல ஸ்ட்ரைக் எப்ப வரும் என்றுதான் பள்ளி முழுக்க பேச்சு இருக்கும். 
என்னுடன் படித்த சில மாணவிகள், "அடுத்த ஸ்ட்ரைக் எப்ப வரும். உங்க வீட்டுப் பக்கம் காலேஜ் பிள்ளைங்க இருந்தா கேட்டு சொல்லேன். நம்ம ஸ்கூல் முன்னாடி வந்து நின்னு போராட்டம் நடத்த சொல்லேன்" என்பார்கள். இதே போல வேறு சில மாணவிகளிடமும் ஹாஸ்டல் ஸ்டூடெண்ட்ஸ் கேட்ட விஷயம் எங்கள் க்ளாஸ் டீச்சர் காதுக்குப் போய்விட்டது.
அந்த மாணவிகளைக் கூப்பிட்டு, "உங்க அப்பா அம்மா இங்கே வந்து ஹெச்.எம் காலில் விழாத குறையாக அவங்க கஷ்டத்தை சொல்லி உங்களை ஹாஸ்டலில் சேர்த்து விட்டுட்டுப் போயிருக்காங்க. எங்க பொழைப்புதான் கூலித் தொழிலா போச்சு. என் பிள்ளையாவது படிச்சு நல்ல நிலைமைக்கு வரட்டும்னு அழுது புலம்பிட்டுப் போயிருக்காங்க. அவங்க நம்பிக்கையைக் காப்பாத்தணும்னு நினைக்கவே இல்லை. லீவுதான் பெரிசா போச்சு. உட்கார்ந்து சாப்பிட சொத்து இருந்தால் எந்த மொழியும் தேவை இல்லை. உழைச்சாதான் சோறுங்கிற நிலைமையில் நாம் இருக்கிறோம். படிச்சு முடிச்சாலும், தமிழ் நாட்டிலே பிறந்து படிச்சு முடிச்ச அத்தனை பேருக்கும் தமிழ் நாட்டிலேயே வேலை கிடைச்சிடாது பொழைப்புக்காக எங்கெங்கு போகப் போகிறோம்னு யாருக்கும் தெரியாது. பள்ளிக்கூட நேரத்தில், பைசா செலவில்லாமல் ஒரு மொழி யை கத்துக்கோங்கன்னு சொன்னா, அது எவ்வளவு பெரிய வரம்னு தெரியாமே ... முட்டாள்களே. ஹிந்தி படிக்கிறோம். அதில் பாஸ் ஆகணும்னு சொல்லாதே. பாஸ் ஆகியிருந்தாதான்  வேலை வாய்ப்புனு  கண்டிஷன் போடாதேனு போராடுங்க.. அதுவும்  இந்திய மொழிதான். எந்த கண்டிஷனும் இல்லாமே எத்தனை மொழியை வேணும்னாலும் பள்ளி நேரத்தில் கத்துக்  குடு. படிச்சு தெரிஞ்சுக்கிறோம்னு போராடுங்க ." என்று சொல்ல, அவங்க முன்னாடி அமைதியாக கைகட்டி நின்றுவிட்டு,  பிரெண்ட்ஸ் சர்க்கிளில் வந்து அவங்களைப் போலவே பேசி நடித்துக் காட்டினார்கள். நாங்கள் கைதட்டி ரசித்தோம்.
பள்ளியில் படித்த போது ஹிந்தி எழுத்துக்களை எழுதப் படிக்க எனக்குத் தெரியும். ஆனால் எல்லா வார்த்தைக்கும் அர்த்தம் தெரியாது.  பள்ளிப் படிப்பு முடிந்து வீட்டிலிருந்த நாட்களில் ஆராதனா, பாபி, யாதோங்கி பாரத் போன்ற ஹிந்திப் படங்களை பார்த்தபோது தான், காட்சியை ரசித்த நம்மால் கதை வசனத்தை, பாடல்களை ரசிக்க முடிய வில்லையே என்கிற ஆதங்கம் வந்தது.  என் பக்கத்து வீட்டிற்கு , டில்லியில் வளர்ந்த ஒருபெண் மருமகளாக வந்தாள்  அவங்க கிட்டே கேட்டு சில ஹிந்தி  வார்த்தைகளைக் கற்றுக் கொண்டேன்.  அதன் பின் தொலைக் காட்சி யில் (DD = 2) சனிக்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் ஹிந்திப் படங்களை பார்ப்பேன். அன்றைய தினம் என்னதான் தலை போகிற வேலை இருந்தாலும் அதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.
சென்னை வந்து மத்திய அரசுப் பணியில் சேர்ந்த பின் ஹிந்தி கற்றுக் கொள்ள வாய்ப்புக் கிடைத்தது.  ஆபீஸ் நேரத்தில், ஆபீஸ் செலவில் ஹிந்தி க்ளாஸ் சென்று வரலாம். பாஸ் ஆனால் அவார்ட், ஒரு இன்கிரிமெண்ட் உண்டு. ஃபெயில் ஆனால் பனிஷ்மென்ட் எதுவும் கிடையாது. 
நான்  ஹிந்தியில்  PRABODH, PRAVEEN, PRAGYA  என்ற மூன்று  லெவல் எக்ஸாமும் எழுதினேன். பாஸ் ஆனேன்.  அவார்ட் வாங்கினேன்.    ஒரு  இன்கிரிமெண்ட் வாங்கினேன்.
ஒரு சூழ்நிலையில்  என் சகோதரியின் பையன் பெண்ணுடன் சேர்ந்து டில்லிக்கு போக வேண்டிய கட்டாயம். அவர்கள் இரண்டு பேரும் ஹிந்தி என்றால் அது கிலோ என்ன விலை என்று கேட்கிற ரகம்.
குடும்ப நண்பர் வீட்டில் டில்லியில் தங்கினோம். எங்களை பிர்லா மந்திர்,  ரெட் ஃபோர்ட்  என்று அழைத்துச் சென்றார்கள்.
மறுநாள் அவர்களிடம், "நீங்க யாரும் என்னோடு வரக்கூடாது. நான் மட்டும் தனியாகப் போய் ஷாப்பிங் பண்ணிட்டு வருவேன்" என்று சொல்லி விட்டுக் கிளம்பினேன்.
நேராக Monday Market போனேன். பேரம் பேசி சில பொருட்கள் வாங்கினேன். மொழிதெரியாமல் சிலசமயம் தவித்தபோது,"அங்கிரேஜி மேம் போலோ; முஜே ஹிந்தி  நஹீம் மாலும்" என்பேன். அவர்களும் புரிந்து கொண்டு அங்கிருந்த தமிழரை அழைத்து எனக்கு பதில் சொல்ல சொன்னார்கள். இப்படியாக பர்சேஸ் முடிந்தது. வீட்டுக்கு வரும் பாதை மறந்து விட்டது. அரைகுறை ஹிந்தியில் குடும்ப நண்பரின் வீட்டின் அங்க அடையாளம் சொல்லி வீடு வந்து சேர்ந்தேன்.
நான் வீடு போய் சேரும்வரை அவங்க மனநிலை அவர்கள் வசம் இல்லை. என் தலையைக் கண்டதும், "அஞ்சு .. இப்பதான் எங்களுக்கு உயிரே வந்துச்சு" என்றார்கள் .   
ஹிந்தி எக்ஸாம் எழுதி அவார்ட் வாங்கினதெல்லாம் இந்த டில்லி டூருக்குப் பின்தான்.
இப்பவும் என்னாலே ஹிந்தி எழுதப் படிக்க முடியும். ஆனால் நிறைய வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாது 
ஹிந்திப் படங்கள் பார்த்து எவ்வளவோ காலம் ஆகிறது. ஹூம்.. அது ஒரு காலம்..

No comments:

Post a Comment