Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, June 02, 2019

Meaningful Two words in one word puzzles (06 - 10)

( குறிப்பு : ஒவ்வொரு புதிரிலும்  கோடிட்ட இடங்கள் இரண்டு உள்ளன. இரண்டிலும் வர வேண்டியது ஒரே ஒரு வார்த்தைதான். ஆனால் பிரித்து எழுதும்போது இரண்டு விதமான அர்த்தங்களைத் தரும்.)
புதிர் எண் 06

" ச்சே .. இந்த சாலை மறியலால் சரியான சமயத்துக்கு கோவிலுக்கு வரமுடியலே. கோவில் நடை மூடியாகிவிட்டது. வெளிப்பிரகார கதவு மட்டும் திறந்திருக்குது" என்று மனதுக்குள் நினைத்த அப்பா "சேகர். நீ அந்த மர நிழலில் நின்னுக்கோ. நான் போய் ஆர்டர் பண்ணின "பெர்த் டே கேக்" வாங்கிட்டு வந்துடறேன். யாராவது கண்ணில் பட்டால் அந்த கொழுக்கட்டையை எடுத்துக் கொடு. நான் ஐந்து நிமிடத்தில் வந்திடுவேன் " என்று சொல்லிச் சென்றவர் சிறிது நேரத்தில் கையில் பார்சலோடு வந்து சேர்ந்தார். மூடியில்லாத காலிப் பாத்திரத்தை கையில் வைத்து ஆட்டியபடி சேகர் நின்று கொண்டிருந்தான்." மூடி எங்கே ? கொழுக்கட்டை எங்கே?" என்று கேட்டவரிடம் அரசமரத்தை சுட்டிக் காட்டி "அவர்தான் கண்ணில் பட்டார். கொடுத்தேன் " என்றான் சேகர். அரச மர  நிழலில் இருந்த விநாயகர் முன்பு கொழுக்கட்டை படைக்கப் பட்டிருந்தது.
"சீக்கிரமா தரிசனம் முடிச்சிட்டு வெளி வாசலில் வந்து நின்னு, தரிசனம் பண்ணிட்டு வர்றவங்களுக்கு நம்ம பிள்ளை கையால் பிரசாதம் கொடுக்க சொல்லுங்க. நமக்கும் கொஞ்சம் கொண்டு வாருங்க " என்று வீட்டை விட்டுக் கிளம்பும்போது மனைவி சொன்னது நினைவுக்கு வந்தது.
இவர்கள் வரவுக்காக வாசலில் காத்திருந்த அம்மா, " ஏன் இவ்வளவு லேட்...பாத்திர மூடி எங்கே? நமக்கு பிரசாதம் எங்கே? கொண்டு போன அத்தனையையும் நம்ம  " - - -    - - - - " கொடுத்தான்?" என்று கேட்க, அதை " - - - - - - - " கொடுத்தான் என்று அமைதியான குரலில் சொன்னார் அப்பா.        


புதிர் எண் 07

கொலுப் பொம்மைகளை  ஆழ்ந்து ரசித்துக்  கொண்டிருந்த தோழியின் அருகில் வந்த சாரதா, "உனக்கு எந்த பொம்மை ரொம்ப பிடிச்சிருக்குது ?" என்று கேட்க, "வனவாசத்தின்போது  சீதை ஸ்ரீராமனிடம் கேட்ட " - - -    - - " பொம்மைதான் ரொம்ப பிடிச்சிருக்கு .. அதை எங்கே வாங்கினே ?" என்று தோழி கேட்க, " - - - - - " தீவுக்கு டூர் போயிருந்தப்ப வாங்கினேன்" என்றாள்  சாரதா 

புதிர் எண் 08

வீட்டில் அப்படியொன்றும் வசதி வாய்ப்பு இல்லாவிட்டாலும்,   ஒரே பிள்ளை என்று செல்லம் கொடுத்து பிரகாஷ்  கேட்டதையெல்லாம் கடன் பட்டாவது வாங்கிக் கொடுத்து பழக்கப்படுத்தி வைத்ததன் விளைவு  - பிரகாஷ் ஒரு "பந்தா பேர்வழி" ஆனதுதான். வீட்டிலும் வெளியிலும் அடிக்கும் லூட்டிக்கு ஒரு அளவே கிடையாது.
நண்பனை சந்திக்கச் செல்வதற்காக பீரோவை திறந்து ட்ரெஸ்ஸை எடுத்தவன், ஷர்ட்டின் ஓரத்தில் இருந்த கறையைப் பார்த்துவிட்டு " அம்மா ..என்ன இது ?" என்று அலற, ஓடிவந்த அம்மா,    ஷர்ட்டை கையில் வாங்கிப் பார்த்து விட்டு, " பேனா இங்க் கறை மாதிரி தெரியுது. ரொம்ப சின்ன கறை .. கண்ணுக்கு தெரியாமே துளியூண்டு இருக்கு. இப்போ போட்டுக்கோ. நாளைக்கு சுத்தம் பண்ணிடறேன் " என்றாள்.
"நோ .. மம்மி.. உனக்கு இது " - -  - " கறையா தெரியலாம். இதைப் போட்டுட்டு நான் வெளியில் போனால் அது எனக்கு " - - -". வேறே நல்லா ட்ரெஸ்ஸா எடுத்துக் கொடுங்க "என்றான்.    

புதிர் எண் 09

" சீரகம் சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப நல்லது. அகத்துக்குள்  அதாவது உடம்புக்குள் உள்ள உறுப்புகளை சீர் படுத்தும். அதனாலேயே அதை சீரகம்னு சொல்றதுண்டு" என்று நாட்டு மருத்துவர் சொல்ல, "அய்யா .. அப்படின்னா உடம்பில் ஏதாவது அடி பெரிய அளவில்  பட்டால், 
- - -   - - - " குணமாக " - - - - - - " சாப்பிட்டால் போதுமா ?" என்று கிண்டலாகக் கேட்டது அருகில் நின்று கொண்டிருந்த இளவட்டம் ஒன்று.

புதிர் எண் 10

"டேய் கண்ணா.. அப்பா வாசலில் நிற்கிறாரான்னு பாரு..  சமையலுக்கு  " - - - - - - " வாங்கிட்டு வர சொல்லு " என்று அம்மா சொல்ல, "என்ன காய்னு சொல்லாமே வெறுமே " - - - -   - - " வாங்கிட்டு வர சொல்றியே" என்று அலுத்துக் கொண்டான் மகன்.
அம்மா சொன்னது என்ன ? மகன் புரிந்து கொண்டது என்ன என்பது உங்களுக்கு புரியும்தானே ?

No comments:

Post a Comment