Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Thursday, August 31, 2017

வேண்டாமே வேறு பவித்ரா ...(30)

Image result for cartoon of tamilnadu village man working in paddy field
"சரிதான்.. அண்ணன் உங்ககிட்டே எதையும் சொல்லலே.. நான் ஒத்துக்கிறேன். அண்ணன் பவியை அவர் வீட்டில்தானே தங்கி இருக்கச்சொன்னார். ஆனா பவி எங்கோ ஒருமூலையில் ஒருகுடிலை போட்டுக்கிட்டு சந்நியாசி மாதிரி தனியா  இருக்கிறதுக்கு என்ன காரணம் ?"
"......................."
"ஏங்க.. உங்களைத்தான் கேக்கிறேன் .. என்ன காரணம் ?"
"...................."
"இதோ பாருங்க.. நீங்க பதில்சொல்லாமே அமைதியா இருக்கிறதைவச்சே இது பத்தின  விவரம் உங்களுக்குத் தெரியுங்கிறது எனக்கு தெரிஞ்சு போச்சு. இந்த விஷயம்...ஐ மீன்...பவித்ரா இங்கே தங்கி இல்லைங்கிறதாவது அண்ணனுக்கு தெரியுமா ?"
"தெரியாது "
இதைக் கேட்டதும் பிரபுவின் கோபம் எல்லை மீறியது.
"வாட் நான்சென்ஸ் .. உங்களை நம்பி ஒருத்தர் ஒரு பொருளை உங்ககிட்டே கொடுத்திருக்கிறார். அது உங்க கையை விட்டுப்போயிடுச்சு. ஆனா அதை நீங்க சம்பந்தப்பட்டவங்க கிட்டே சொல்லலே. இதை இப்பவே அண்ணனுக்கு போன் பண்ணி சொல்லுட்டுமா நான் ?"
"தம்பி .. அந்தப்பொண்ணு தனியா பிரிஞ்சு போனதுக்கு எங்க வீட்டு சண்டாளன் தான் காரணம் "
"யாரு? முருகய்யனா? அந்தராஸ்கல் என்ன பண்ணினான் அவங்க இங்கிருந்து கிளம்பிப் போகிற அளவுக்கு ?"
"தம்பி.. நடந்த எதையும் யாரிட்டயும் சொல்லக்கூடாது.. அப்படி சொல்லி, அது விஷயமா யாராவது ஏதாவது எங்கிட்டே கேட்டால் நான் இங்கிருந்து கிளம்பிப் போயிடுவேன். எங்கே போறேன்னு யாரிட்டயும் சொல்லமாட்டேன்னு அந்தப்  பொண்ணு சொல்லி இருக்குது தம்பி "   
"அதையெல்லாம் நான் பாத்துக்கிறேன்.. என்ன நடந்ததுங்கிறதை மட்டும் நீங்க இப்போ சொல்லுங்க.. டில்லியிலிருந்து வந்து பவித்ரா இங்கேதானே தங்கி இருந்தாங்க. அதிலிருந்து விவரமா சொல்லுங்க..."
"கிட்டத்தட்ட ஏழு எட்டு வருஷத்துக்கு முன்னால் ஒருநாள் ஷோபா அம்மா இந்த பவித்ராவைக் கூட்டிட்டு இங்கே வந்தாக. அப்போ இந்த பொண்ணுக்கு பதினாலு இல்லாட்டா பதினஞ்சு வயசு இருக்கும்யா.. ஆனா வயசுக்கு மீறின வளர்ச்சியா பார்க்கிறதுக்கு ரொம்ப அழகா நல்லா தளதளன்னு இருக்கும்யா . அதை  பா ர்த்துப்புட்டு  இங்கிட்டு இருக்கிற ஜனம் மொத்தமும் மூக்கு மேலே விரலை வச்சுது , இம்புட்டு அழகானு !"
"..................!"
"ஷோபா அம்மா ஒரேயொரு நாள்மட்டும் இங்கிட்டு தங்கி இருந்தாக. என்னையும் மாமாவையும் கூப்பிட்டு 'இது எங்க வீட்டுப்பொண்ணு.. கொஞ்ச நாளைக்குபட்டணத்தைவிட்டு ஒதுங்கிஇருக்கணும்னு நினைக்குதுனு ஷோபா அம்மா சொன்னாக. 
உடனே மாமாகூட 'ஏம்மா அப்படி?'னு கேட்டாக.
"இந்தப் பொண்ணோட அப்பா திடீர்னு இறந்து போயிட்டார். அதைத் தாங்கிக்க முடியாமே தற்கொலை பண்ணிக்கப்போறேன்னு சொல்லிட்டு என்னென்ன முட்டாள்தனம் உண்டோ அதையெல்லாம் செய்ய ஆரம்பிச்சிட்டா. இப்போ இவளுக்கு தேவை நல்ல ரெஸ்ட்தான். எந்த தொந்தரவும் இல்லாமே இயற்கை யான சூழ்நிலையில் கொஞ்சநாள் இருந்தாலே போதும்.. எல்லாம் சரியாயிடும் கவனமா பார்த்துக்கணும்னு டாக்டர் சொல்லி இருக்கார். அதனால்தான் உங்க குமார் அய்யா இவளை இங்கே கொண்டுபோய் விட்டுட்டு வந்திடுனு சொல்லி என்னை அனுப்பினார்  பொண்ணு ரொம்பவும் பெரியஇடம். ரொம்ப ஜாக்கிரதை யா பார்த்துக்கணும். இந்தப்பொண்ணுக்கு இங்கே ஏதாவது பிரச்னைனு எங்க காதுக்கு கம்பளைண்ட்னு  வந்தா நீங்க ரெண்டுபேரும் தொலைஞ்சீங்க. அதை மட்டும் ரெண்டுபேரும் நல்லா நினைவில் வச்சுக்கோங்கன்னு சொன்னாங்க. இதை எல்லாம் நீங்க சொல்லணுமா அம்மா.. நீங்களே கூட்டிட்டு வந்திருக்கி றத வச்சேஇந்தப்பொண்ணு உங்களுக்கு எம்புட்டு வேண்டியவகனு எங்களுக்கு தெரியாதா என்ன.. எங்க கண்ணுக்குள்ளே வச்சு பாதுகாப்போம்னு சொல்லி அவகளை வழியனுப்பி வச்சோம்"
"ரொம்ப நல்லா பாதுகாத்தீங்க" என்று சிரித்துக் கொண்டே சொன்னான் பிரபு .
"தம்பி..ஒரு சைடை மட்டும் பார்த்துட்டு எங்க மேலே பழி சொல்லக்கூடாதுங்க சாமி சத்தியமா எனக்குத்தெரிஞ்ச எல்லாவிவரத்தையும்  சொல்லிப்புடுதேன்   நான். அதுக்கு பிறகு எங்கே தப்பு, யார் மேலே தப்புனு நீங்களே சொல்லுங்க "
"சரி.. நீங்க சொல்லி முடிங்க.. நான் உங்களை ரொம்பவும் நம்பறேன் " 
"பவிம்மா மொதமொதலா இந்த ஊருக்கு   வந்தப்ப நாங்க எல்லாருமே அவகள தள்ளியே நின்னுதான் வேடிக்கை பார்ப்போம்.  ரொம்ப அழகானபொண்ணு.. அதுவும் பெரிய   இடத்துப்பொண்ணு  .. நம்மள கிள்ளுக்கீரையா நினைக்கும்னு நினைச்சு நாங்க தள்ளியே நிப்போம். ஆனா அதுக்கு கொஞ்சம் கூட கர்வம் கிடையாது..  "
"................!!"
"ஆனா அதுவே வலியவந்து எல்லாரிட்டேயும் பேசும். பழகும். தலைக்கனம் கொஞ்சங்கூட கிடையாது. எல்லாரிட்டேயும் தாயா பிள்ளையா பழக ஆரம்பி எல்லாரையும் அது பேச்சை கேக்கும்படி வச்சிட்டுது.  செலவு செய்ய அஞ்சவே செய்யாது. யாருக்கு என்னென்ன தேவைன்னு கேட்டு அதுவே வாங்கியாந்து தரும். சமையல் குறிப்பு புஸ்தகத்தை வாங்கிட்டு வந்து எங்க எல்லாருக்கும் எதையாவது செஞ்சு தரும் .. அது வந்ததுக்குப் பொறகு வந்ததுதான் இந்த கேஸ் அடுப்பு.. அதுக்கு முன்னாடி வரை இப்படியெல்லாம் அடுப்பை யாரும் இங்கே கொண்டாறலே. ஷோபா அம்மா, குமார் ஐயா வரும்போதெல்லாம் என்னோட சமையல்தான் .. குளிக்க அருவிக்கரைக்கு காரை எடுத்துட்டுப் போயிடுவாங்க ரெண்டு பேரும் . குடிக்க வெந்நீர் வச்சு தர்றது, சமைக்கிறது, பால் காய்ச்சி குடுக்கிறது எல்லாமே என் வீட்டில் விறகு அடுப்பில்தான்"      
"ஓஹோ.. நல்லா சமையல் பண்ணுவாங்களா ?"
இதைக்கேட்டதும் வள்ளி சிரித்தாள்.
"நான் கேட்ட கேள்விக்கு பதிலை சொல்லிட்டு சிரிச்சா நல்லா இருக்கும்!" என்றான் பிரபு.
"புஸ்தகத்தைகையில்வச்சுக்கிட்டு 'இதை படிச்சுப்பார்த்துட்டு இன்னிக்கு உங்க எல்லாருக்கும் மைசூர்பாகு பண்ணித்தர்றேன்னு' சொல்லும். உடனே மாமா, 'நான் இப்பவே போய் மருந்துக்கடைக்குப்போய் பேதி மாத்திரை வாங்கி கை இருப்பில வச்சிடுதேன்'னு கிண்டலா சொல்லுவாக. கொஞ்சநேரம் கழிச்சு கையில் ரெண்டு டம்ளரும் ஸ்பூனுமா வரும்.. இதை சாப்பிட்டு பார்த்துட்டு எப்படி இருக்குனு சொல்லுங்கன்னு சொல்லும். 
'என்னம்மா .. மைசூர்பாகு பண்ணித்தர்றேன்னு சொன்னீக.. உங்க டில்லியில் மைசூர்பாகை டம்ளரில் போட்டுதான் ஸ்பூனால் சாப்பிடுவார்களா?'னு மாமா கேட்பாக. 
கொஞ்சம் வாட்டர் அதிகமாயிடுச்சு. அதான் மைசூர்பாகு, பாயாசமா ஆயிட்ட மாதிரி தெரியுது...  ப்ளீஸ் சாப்பிடுங்க அங்கிள்னு கெஞ்சும்.  அப்புறம் கொஞ்ச நாள்லே ரொம்ப நல்லா சமைக்க கத்துக்கிட்டுது.. விதம்விதமா பலகாரம் பண்ணி அதை எடுத்துக்கிட்டு களத்துமேட்டுக்கு கொண்டு போகும். அங்கே வேலை பண்ணிட்டு இருக்கிறவங்களைக் கூப்பிட்டு நீங்க சாப்பிடுங்கனு உபசரிக்கும். அதுக்கு கைவஞ்சனை கிடையாது. எது பண்ணினாலும் அதை அங்கிட்டு இருக்கிற அத்தனை பேருக்கும் குடுத்திட்டுதான் இது வாயிலே வைக்கும்.  
அய்யா .. அது வீட்டிலே அது சமையல்கட்டு பக்கம் போனதே கிடையாதாம். எல்லாத்துக்கும் வேலைக்கு ஆளுங்க  இருக்கிறாகளாம். இங்கிட்டு வந்த பிறகு தான்  அது அடுப்படின்னா என்னனு தெரிஞ்சுகிட்டுது. நான் விறகு அடுப்பில் சமையல் செய்றத பார்த்துட்டு விழுந்து விழுந்து சிரிக்கும். 
'ஏன் சிரிக்கீங்கம்மா'னு கேட்பேன். ரெண்டு ஸ்டிக்கை வச்சு நெருப்பை வச்சு அது மேலே பானையை வைக்கிறீங்க. ஆனா மீல்ஸ் ரெடி ஆயிடுது. ரொம்ப ஆச்சரியமா இருக்குதுனு சொல்லும்..இப்போ என்னடான்னா அது பண்ற சமையலை மிஞ்ச இங்கிட்டு யாருமில்லே. ரெண்டுமூணு வருஷத்துக்கு முன்னே குமார் ஐயா ஷோபாம்மா, அவங்க குழந்தை எல்லாரும் இந்த வீட்டுக்கு வந்து பத்துநாள் தங்கி இருந்தாங்க. பத்துநாளும் பவிம்மா விதம் விதமா சமையல் செய்து குடுத்தாங்க. அதைப்பார்த்துட்டு ரெண்டுபேரும் அசந்து போயிட்டாங்க..'வாயாடி பவித்ராவுக்கு கையும் நல்லாவே சமையலில் விளையாடுது'னு சொல்லிட்டு ஷோபாம்மா அப்படியே அதைக்கட்டிப்பிடிச்சு முத்தம்  குடுத்தாங்க .
அட இம்புட்டு ஏன் ! யார் எது குடுத்தாலும் அதுக்கு ஆயிரம் குத்தம் சொல்லுத என் மாமனே, 'பவிம்மா... இன்னிக்கு என்ன பண்ணினே?'னு கேட்டு வாங்கி சாப்பிடுவாகன்னா பார்த்துக்கோங்களேன்.
"உங்க மாமாவுக்கு பவியைப் பிடிக்குமா ?"
"என்னய்யாஇப்படிக்கேட்டுட்டீக.. பெத்த பொண்ணாட்டம் அத  பார்த்துக்குவாக மாமா. இவக வீட்டுக்கு வர்றப்ப அந்தப்புள்ளை வீட்டில் இல்லாட்டா, 'எங்கிட்டு போச்சு,னு கேட்டு வீடு முழுக்க தேட ஆரம்பிச்சிடுவாக. புஸ்தகம் வாங்கப் போறேன்.. சாமான்செட்டு வாங்கப்போறேன்னு சொல்லிட்டு அதுபாட்டுக்கு வெளிலே கிளம்பிப்போயிரும். வர்றதுக்கு கொஞ்சம் தாமதமாயிட்டுன்னா, 'எங்கே..எங்கே'னு கேட்டு என்மாமன் என்னைப்பாடாய்படுத்தி   எடுத்துடுவாக.   அப்படி உசிருக்குஉசிரா நேசிச்ச மனுஷன் திடீர்னு மாறிப் போயிட்டாக அதை த்தான் என்னாலே தாங்கமுடியலே" என்று வள்ளி சொல்லும்போதே அவளை யும் அறியாமல் அவள் கண்கள் கலங்கி முகம் சிவந்து போனது.
அவள் அழுகிறாள் என்பதைப் புரிந்து கொண்டு, அந்த தாக்கத்திலிருந்து அவள் மீண்டு வெளியில் வரட்டும் என்று அமைதி காத்தான் பிரபு .

                                                                                  ---------------------தொடரும்----------------------    


No comments:

Post a Comment