வள்ளியின் கண்ணீர் நிற்பதாக இல்லை. அதைக்காண சகியாதவனாக எழுந்து வாசல் கதவை நோக்கி நடக்க ஆரம்பித்தான் பிரபு. ஏற்கனவே பூட்டியிருந்த கதவு தாழ்ப்பாளை நன்கு அழுத்தியபடி திரும்பிப் பார்த்தான்.
கண்ணீரைப் புடவைத்தலைப்பில் துடைத்து விட்டபடி வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் வள்ளி.
திரும்பி வந்து கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்தவன், "ஸாரிங்க .. பழசைப் பேசி உங்க மனசை நோகடிச்சிட்டேன்.. உங்களை அழவைக்கிறது என்னோட ஆசை இல்லை. ஊருக்குக் கிளம்பறதுக்கு முன்னாடி என்னாலே முடிஞ்ச நல்லதை நான் அவங்களுக்கு செஞ்சிட்டுப் போகணும்னு நினைக்கிறேன்..என்னை தப்பா எடை போட்டுடாதீங்க" என்றான் மன்னிப்புக் கேட்கும் குரலில்.
"அதெல்லாம்இல்லீங்கய்யா..உங்கமனசு எனக்குப்புரியுது..சிலவிஷயங்களை.. பழசை .. நடந்து முடிஞ்சதை நினைச்சுப் பார்க்கிறப்ப இந்த பாழாப்போன மனசு தாங்க மாட்டேங்குது. எந்தக் கவலையும் இல்லாமே ஆறேழு வருசமா சிட்டுக் குருவி மாதிரி எந்தக் கவலையும் இல்லாமே சுத்தி திரிஞ்சுக்கிட்டு இருந்த பொண்ணு, சிறகொடிஞ்சபறவை மாதிரி அந்தகுடிசைக்குள் முடங்கும்படி ஆகி போச்சு. யாரோட கொள்ளிக்கண்ணு பட்டுதோ தெரியலை. எல்லாம் தலைகீழா மாறிப்போச்சு "
"அதைத்தான் கொஞ்சம் விவரமா சொல்லுங்க "
"வழக்கமா பவிம்மா புஸ்தகம் வாங்கிறதுக்கு.. பேங்கில் பணம் எடுக்கிறதுக்கு தனியாத்தான் போயிட்டுவரும். வீட்டிலே வேலைவெட்டி எதுவும் இல்லாட்டா நானும் வரேன்னு சொல்லி அதுகூட நானும் கிளம்பிப் போவேன். ரெண்டு பேரும் ஏதாது கதை பேசிட்டே பொடிநடையாவே வீடு வந்து சேர்ந்திருவோம். அன்னிக்கும் அப்படித்தான் அது கிளம்பிப் போச்சு. மாமாவும் ஊரில் இல்லை. வீட்டில் தனியா இருக்க எனக்கும் சங்கடமா இருந்துச்சு. இருங்கம்மா நானும் உங்ககூட சேர்ந்து வாரேன்னு சொல்லி பவிம்மாகூட டவுனுக்குப் போனேன். போயிட்டு திரும்பி வீட்டுக்குவர்றதுக்கு ரெண்டுபேரும் பஸ்ஸுக்கு நின்னுட்டு இருந்தோம். அப்போ ஒருத்தன் எங்க பக்கத்திலே வந்து நின்னான். பவிம்மா கிட்டே வந்து அது முகத்தை உத்துப் பார்த்துட்டு அதுக்கிட்டே இந்தியில் என்னவோ கோபமா கேட்டான். எனக்கு அது என்னனு புரியலே. பவிம்மா வுக்கும் அவனை மொதல்ல அடையாளம் தெரியலேன்னு நினைக்கிறேன். ஒண்ணும் புரியாமே அவனைப் பார்த்துட்டு இருந்தாங்க. பொறகு ஞாபகம் வந்துட்டு போலிருக்குது. 'நீயா?"னு கேட்டுச்சு.
நான் பவிம்மாகிட்டே அவன் என்ன கேட்கிறான்னு கேட்டேன். அதுக்கு பவிம்மா 'நீ இங்கேதான் தலைமறைவா இருக்கிறியா'ன்னு என்னைக் கேட்கி றான்'னு எங்கிட்டே சொல்லிச்சு. அவன்கிட்டே, "நான் ஏண்டா தலை மறைவா இருக்கணும். நான் என்ன உன்னைப்போல கிரிமினலா என்ன?. கிரிமினல் நீயே இவ்வளவு தைரியமா நெஞ்சை நிமிர்த்துக்கிட்டு ரொம்ப யோக்கியன் மாதிரி திரியறப்ப நான் ஏன் தலைமறைவா இருக்கணும்னு கேட்டுது... தமிழ்லதான் கேட்டுச்சு. அதுக்கு அவன் "ச்சீ "னு துப்பினான்.
எனக்கு வந்த கோபத்தில் அவனை அடிக்கிறதுக்கு கையை ஓங்கிட்டேன். பவி என் கையைப்பிடிச்சுக்கிட்டு, 'கண்ட சாக்கடையையும் உன் கையாலே தொட்டு உன் கையை அசுத்தம் பண்ணிக்காதே'னு சொல்லுச்சு. அவன்கிட்டே இப்போ நீ செஞ்ச காரியத்தை, துப்பினியே.. அதை முகம்பார்க்கிற கண்ணாடி முன்னாடி நின்னு பண்ணு. ரொம்பவும் பொருத்தமா இருக்கும்'னு சொல்லுச்சு. அது சொல்லிட்டு இருக்கறச்சே பஸ் வந்துட்டுது. நாங்க வீட்டுக்கு வந்து சேர்ந்து ட்டோம்.
வர்ற வழியிலே அதுவே ஏதாது சொல்லும்னு நான் நினைச்சேன். அது எதுவும் பேசாமலே வந்துச்சு. பொறகு , 'அது யாரும்மா'னு நானே கேட்டேன். அதுக்கு 'அது ஒரு சாக்கடை'னு மட்டும் சொல்லுச்சு.
'இந்த சாக்கடை டில்லியில் இருந்துச்சு. இங்கே எப்படி வந்துச்சு? ஏன் வந்துச்சு னு தெரியலே. ஒருவேளை நான் எங்கே இருக்கிறேன்னு தெரிஞ்சுக்கிட்டு என்னைவச்சு சுமிகிட்டே ஒரு டிராமா பண்ண பிளான் பண்ணி இருப்பான் . இவன் சுமிக்கு ஏதாவது பிரச்னை பண்ணாமே இருக்கணும். அதுக்கு உடனே ராம்குமார்ஸாருக்கு போன் பண்ணி இந்த ராஸ்கல் பத்தி சொல்லணும்னு சொல்லுச்சு.
அப்பத்தான் நான், 'அம்மா நீங்க சொல்றது.. அவன் செய்றது எதுவுமே எனக்குப் புரியலே .. விவரமா சொல்லுங்க .. வம்புக்குனு வாலாட்ட அவன் வந்திருந்தா அவன் வாலை ஒட்ட வெட்டி அவன் கையிலேயே கொடுத்திருவோம்'னு நான் சொன்னேன்.
உடனே, 'இந்த பூச்சாண்டிக்கு பயப்படற ஆள் நான் இல்லே. இந்த ஏழு வருஷத்திலே நான் எப்படியொரு அவதாரம் எடுத்திருக்கிறேன்னு அவனுக்கு காட்ட அதிக நேரம் பிடிக்காது. ஒரு சாக்கடை கூட மோதி என்னோட தரத்தை நான் ஏன் கெடுத்துக்கணும்னு யோசிக்கிறேன். அவனுக்கு நேர்வழின்னா என்ன, அது எப்படி இருக்கும்னு தெரியாது. அவன் பிறந்து வளர்ந்த குடும்பத்து பழக்கம்தானே அவன் உடம்பில் ஓடிட்டு இருக்கும். இதுங்ககூட சரிக்கு சமமா நின்னு பேசறது கூட கேவலம்'னு பவிம்மா சொல்லுச்சு..
'இல்லேம்மா.. எனக்குப் புரியும்படி சொல்லுங்க'னு நான் சொன்னதும் ரூமுக்கு போய் ஒரு டைரியை எடுத்துட்டு வந்து என் கையிலே குடுத்து 'இத படிச்சு பாருங்க..தெரியும்.'னு சொல்லுச்சு. அதுலே நிறைய இந்தியிலே எழுதி இருந்து ச்சு. எனக்கு இந்தி படிக்க தெரியாதேன்னு சொன்னதும், இந்தியிலே எழுதி இருந்ததை எல்லாம் அடிச்சிட்டு, அது மேலேயே தமிழ்ல எழுதிக் கொடுத்துச்சு. அன்னிக்கு நீங்க கூட கொண்டாந்து உங்க ரூமுலே உட்க்காந்து படிசீங்களே அதே டைரிதான்.
அதுக்குப் பொறகுதான் எனக்கு எல்லா விஷயமும் விளங்கிச்சு. அதை தனியா விட பயப்படுவேன். அதுகிட்டேயே சொல்லுவேன். அது கேட்காது.
'நீங்க பயப்படாதீங்க வள்ளி. அவன் இங்கே வாலாட்டினா அன்னியோட அவன் கதை முடிஞ்சுது. இங்கே நடக்கிற ஒவ்வொரு விஷயத்தையும் அந்தந்த தேதியில், கடிகார நேரத்தைக்கூட குறிச்சு வச்சு ரெகார்ட் பண்ணிடுவேன். நான் போற வழியில் யாராவது தும்மினால்கூட இந்த இடத்தில் நான் நின்னுட்டு இருக்கிறப்ப இவங்க தும்மினாங்க..இவன் என்னை இடிக்கிறமாதிரி வந்தான்' னு நோட் பண்ணி வச்சிடுவேன். அது ஒண்ணு போதும்..'னு சொல்லிடும்.
'குமார் ஐயா காதில் ஒரு வார்த்தை போட்டுடலாமே'னு நான் சொல்லுவேன். அதுக்கு 'அவன் ஏற்கனவே அடிபட்ட நாய். உள்ளேஇருந்து இப்பதான் வெளியே வந்திருக்குது.. கொஞ்சநாள் அது சுதந்திர காற்றை சுவாசிக்கட்டும். அன்னிக்கு நாம பஸ்ஸில் ஏறுறப்ப ஹிந்தியில் அவன் கத்தினான். நீங்ககூட அவன் என்ன சொல்றான்னு கேட்டீங்களே. அவன், 'உன் அக்காவுக்கு நான்தான் எமன்'னு ஹிந்தியில் சொன்னான்.
அதனாலேதான் இங்கே நடக்கிற ஒவ்வொரு விஷயத்தையும் நான் டைரியில் நோட் பண்ணி வச்சிட்டு வரேன்னு பவிம்மா சொல்லுச்சு.
அதனாலே என்ன பிரயோசனம்னு நான் கேட்டதுக்கு, 'இது அடிபட்ட நாய். இது நேரா வந்து வாலாட்டாது. இதைப்போல கேடுகெட்ட ஜென்மங்களை கூட்டு சேர்த்துக்கிட்டு தெருவில் நான் போறப்பவும் வர்றப்பவும் குலைச்சுகிட்டே நிக்கும். இப்போதைக்கு இவனை டச் பண்ணவே கூடாது. நமக்கு பிரச்னைனு வர்றப்ப இவனுக்காக ஓடிஓடி உழைக்கிற நாய்களை நாலு தட்டு தட்டினா .. அந்த வேலையைக்கூட நாம செய்ய வேண்டாம். ராம்குமார் சார் காதில் விஷயத்தை போட்டுட்டா அவர் பெரிய லெவெலில் மூவ்பண்ணி தட்டி எடுத்து உண்மையை வர வச்சிடுவார். எவனுக்காகவோ அடிவாங்க அதுகளுக்கு தலை எழுத்தா என்ன? அதுங்க இவனை அடிச்சே கூட்டிட்டு வரும். இது நடக்குதா இல்லையானு மட்டும் பார்னு சொல்லுச்சு."என்று பெருமூச்சுடன் சொல்லி நிறுத்தினாள் வள்ளி.
"பவித்ரா டைரியைப் படிச்சு, டில்லியில் நடந்த எல்லா விஷயத்தையும் நீங்க தெரிஞ்சிருக்கீங்க. அந்த கிரிமினல் இங்கே வந்து வாலாட்டும்போதும் நீங்க பவித்ராவோட இருந்திருக்கீங்க. டில்லியில் வாலாட்டின ரமேஷ் நாய்தான் இங்கே வந்திருக்கிறான்னு தெரிஞ்சபிறகும்கூட நீங்க ஏன் அண்ணன் கிட்டே சொல்லலே. அண்ணனுக்கு இதெல்லாம் ஏற்கனவே தெரிஞ்ச விஷயந்தானே. சொல்லவேண்டாம்னு நினைச்சீங்களா இல்லாட்டா சொல்ல வேண்டாம்னு பவித்ரா சொன்னாங்களா ?"
"அந்தப்பொண்ணுதான் தம்பி வேண்டாம்னு சொல்லிட்டுது. அதற்கான சமயம் வரும்போது சொல்லிக்கலாம்னு சொல்லிட்டுது."
"அப்புறம் அவனை பார்த்தீங்களா ?'
"பார்த்தேன்.."
"எங்கே? எப்போ ?"
"ஒருவாட்டி அவனை களத்துமேடு ரோட்டில் பார்த்தேன். என்னை அவன் அடையாளம் தெரிஞ்சு 'ஏ..பொண்ணு..இங்கேவா'னு கையைக் காட்டினான். நான் உடனே 'விளக்குமாறு பிஞ்சு போயிடும்.. நாயே'னு சொன்னேன். உடனே நிக்காமே வேகவேகமா போயிட்டான். பொறகு ஒருவாட்டி நான் டவுனுக்குப் போயிருக்கப்ப என் மாமன் கூட அவன் நின்னதைப் பார்த்தேன். பக்கத்திலேயே வாத்தியார் ஐயாவும் நின்னுட்டு இருந்தாக. அந்த சாக்கடைகூட இவக ரெண்டு பேருக்கும் பேச்சு என்ன வேண்டி கிடக்குனு நினைச்சுகிட்டு எதையும் காணாத மாதிரி நான் இருந்திட்டேன். ஆனா அதுக்குப் பொறகு அவனை ஆளையே காண்கலே..சரிதான் இந்த நாய் வேறே இடம்தேடி ஓடிட்டு போலிருக்குதுனு நினைச்சுகிட்டேன். போன நாய் சும்மா போகலே. என் மாமன்கிட்டேயும் அந்த வாத்தியார்கிட்டேயும் ஓதி விட்டுட்டுதான் ஓடி இருக்குனு பொறகுதான் எனக்கு தெரிஞ்சுது."
"என்ன செஞ்சிட்டு போனான்..?"
இந்த சமயத்தில் வாசல் கதவு திறக்கும் சத்தம் கேட்டது.
இந்த சமயத்தில் வாசல் கதவு திறக்கும் சத்தம் கேட்டது.
"தம்பி.. மாமா வந்திட்டாக .. சாப்பாடு எடுத்து வைக்கணும்... பொறவாட்டி பேசுவோமா?" என்று சொல்லி எழுந்தாள் வள்ளி .
வாசல் கதவைத் திறந்து கொண்டு வீட்டுக்குள் வந்து கொண்டிருந்த முருகய்ய னை ஏறிட்டுப்பார்த்த பிரபு, அவன் முகத்தில் தெரிந்த கோபக்களையைக் கண்டு சற்று அதிர்ந்துதான் போனான்.
---------------- தொடரும் --------------------------
No comments:
Post a Comment