Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Monday, August 21, 2017

வேண்டாமே வேறு பவித்ரா ...(20)


Image result for cartoon of running girl and chasing persons in staircase
இனிப்பு பதார்த்தங்களை வாயில் வைத்து அசைபோட்டுக் கொண்டிருக்கலாம். அதை விழுங்கியபின்பும் கூட கடைவாய்பற்களில் அதன் ஓரங்களில்   ஒட்டி யிருக்கும் இந்த இனிப்பை நாவு ருசி பார்த்துக்கொண்டிருக்கும்.
ஆனால் கசப்பான ஒன்றை விழுங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது அதை வாயில்வைத்து, நாவில், பல்லில் படாதபடி நொடிப் பொழுதில் விழுங்கி விடுவோம். 
கசப்பை அசைபோட யாரும் விரும்புவதில்லை. அதனால்தான் அன்று - "எங்க சுமிக்கு கல்யாண நிச்சயதார்த்தம்"  என்று குதூகலத்துடன் குழந்தைபோல டாடி சொல்லிக் கொண்டிருந்த அன்று - நடந்த நிகழ்வுகளுக்கு வர்ணனை வேண்டாம். அது காயத்தை ஆழப்படுத்தும்; மருந்திடாது.  அன்று நடந்த நிகழ்வுகளை  கதைச்சுருக்கம் போல சொல்கிறேன் என் அசட்டுப்பெண்ணே பவித்ரா.
"காட்சிகள் மாறும் நாடகம் போலே காலமும் மாறாதோ"னு கதாநாயகி வேண்டிக்கொள்வாள் ஒரு பாடல் காட்சியில்..
நாம் யாருமே வேண்டிக்கொள்ளாமல் விறுவிறுப்பாக வாழ்க்கைக்காட்சிகள் மாறும் என்றுகனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லையே. அதை யார்தான் எதிர்பார்த்தார்கள் ? 
ஒரு விஷயம் நடந்து முடிந்தபிறகு, அதைப் பற்றி நினைத்துப்பார்க்கும்போது நடந்ததெல்லாம் கனவா நனவா என்ற சந்தேகம் வந்துவிடும் . அதை ஜீரணிக்க சற்றுநேரம் பிடிக்கும். அந்த சற்றுநேரம் என்பது வருடக்கணக்கா அல்லது வாழ்க்கை முழுவதுமேவா என்பது ஆண்டவன் கையில்தான் இருக்கிறது.
நரேனின் அப்பா எங்கள் திருமணத்துக்கு இவ்வளவு எளிதில் சம்மதம் தந்துவிடுவார் என்று யார்தான் எதிர்பார்த்தார்கள்!
திரைப்படம் ஆரம்பிக்கும்போது, சினிமா டைட்டில் போடுவதற்கு முன்பாக பிறக்கிற ஒரு குழந்தை, டைட்டில் போட்டு முடிந்ததும் ஒரு வாலிபனாகவோ அல்லது அழகான இளம்பெண்ணாகவோ வளர்ந்துவிட்டது போன்ற சீன் வரும்.
ஒரேயொரு பாடல்காட்சியிலேயே ஒரு தொழிலாளி முதலாளியாக மாறி இருப்பான் . அல்லது ஒரு முதலாளி நடுத்தெருவுக்கு வந்திருப்பான்.
அதுபோலத்தானே நம் வாழ்க்கைப்படகும் திசைமாறி பயணிக்க ஆரம்பித்தது.  
நிச்சயதார்த்தவேலைகள் நடந்து கொண்டு இருந்த மும்முரம் என்ன !! வெளியூர்களில் இருந்து உறவினர்கள், நண்பர்கள் வருகை என்று வீட்டில் இருந்த மகிழ்ச்சி வெள்ளந்தான் என்ன என்ன !! இந்த இரண்டுக்கும் நடுவே டாடியின் உடல்நலம் என்ற பரபரப்பு.. எல்லாமே சேர்ந்து பவித்ராவின் மீதிருந்த பாதுகாப்புப் பார்வையை சற்றே விலக்கி வைத்துவிட்டது.
பவித்ரா வீட்டில் இல்லை என்பதே தொலைக்காட்சி மூலம்தானே  தெரிந்தது.
ஆயிரமாயிரம் திருமணக் கனவுகளில் நானும் நரேனும் மிதந்து கொண்டிருக்க திருமண நிச்சயதார்த்தப் பத்திரிக்கை வாசிக்கப்படுவதற்கு முன்பாக நரேன் அப்பாவின்  போன் அலறியது.
போனை எடுத்து காதில் வைத்துப் பேசியவர், "டீவீயை ஆன்.. நியூஸ் சேனலைப் போடுங்க " பண்ணுங்க என்று பரபரத்தார்.
அதில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த காட்சி.. என் அருமை செல்லம் போலீஸ் வேனில் ஏற்றப்படுகிறாள்.. விபசாரத்தில் ஈடுபட்டதால் கைது என்று கீழே பிளாஷ் நியூஸ்.
"நம்ம பவித்ரா ... நம்ம பவித்ராவா?" என்று உறவினர்களின் அலறலும்.. பரிகாசமும்..
"வீட்டுநிலைமை என்னனு தெரியாதஅளவுக்கு குழந்தைகளை ரொம்பவும் செல்லம் கொடுத்து வளர்த்திடறாங்க. பெரியஇடத்துப்பிள்ளைகள் போல வாழ வேண்டும் என்று ஆசைப்படும் குழந்தைகள் தங்கள் ஆடம்பரசெலவுக்கு கையில் காசில்லாதபோது இதுபோன்ற தொழிலுக்கு ரகசியமாக வந்து போகிறார்கள் என்று ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார்.
அதைக் கேட்ட நொடியிலேயே "அம்மா"னு சொல்லி அலறிக் கீழே விழுந்த அப்பா அதன் பின் எழும்பவே இல்லையே 
சற்று நேரம் கழித்து போன்,  செல்போன்  மாறிமாறி அலறிக் கொண்டிருந்தது. அதை எடுத்துப் பேசும் மனநிலையில் யாரும் இல்லை.
நொடிப்பொழுதில் மணவீடு மரணவீடானது.
"எனக்கும் கொஞ்சம் மனுஷத் தன்மை உண்டு.  என் மகன் ஆசைப்பட்டு கேட்டதை வாங்கிக்கொடுக்கும் அப்பாவாகத்தான் நான் இன்னும் இருக்கிறேன். இப்பவும் உன்னை எங்க வீட்டு மருமகளா நான் ஏத்துக்க ரெடி. கட்டினபுடவையோடு நீ வந்தால் போதும். ஆனா உன் வீட்டு காற்றுகூட என் வீட்டு பக்கம் வரக்கூடாது" என்று நரேனின் அப்பா சொன்னபோது, அவரைக் கையெடுத்துக் கும்பிட்டு.."காற்று மட்டும் இல்லை.. நானும் வர தயாராக இல்லை.. அதற்கான தகுதி எனக்கு இல்லை. உங்க அன்புக்கு நன்றி." என்று சொல்லி வழியனுப்பி வைக்கத்தான் முடிந்தது. இது அவசர முடிவு எல்லாருந்தான் சொன்னார்கள்.
என்னைப்பொறுத்தவரை இதுதான் சரியான முடிவு.. 
"இளமை துள்ளி எழுந்து நின்று காதல் என்றது
 குடும்ப நிலைமை எதிரில் நின்று கடமை என்றது
 காதல் என்னும் பூ உலர்ந்து கடமை வென்றது
 என்றும் மேடு பள்ளம் உள்ளதுதான் வாழ்க்கை என்பது"
வாழ்க்கைச் சக்கரத்தின் சுழற்சியில் எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கும். அதை எதிர் கொள்ளும் பக்குவம் தான் நமக்கு வேண்டும்.
அசட்டுப்பெண்ணே, வீட்டைவிட்டு வெளியில் போகும் முன்பாக இந்த காரணத்துக்காக போகிறேன் என்று ஒரேயொரு வார்த்தை சொல்லி இருந்தால் நம் வாழ்க்கைப்படகு தடுமாறும் நிலை வந்தே இருக்காதே!
"அக்கா.. இந்த ட்ரெஸ்க்கு இந்த ரிப்பன் மேட்ச் ஆகுதா ?"
"பூ வச்சா நல்லா இருக்குமா? ஹேர்பின் போட்டா நல்லா இருக்குமா ?"
"போட்டோ எடுக்கிறப்ப ஜடையை முன்னால் விட்டுக்கவா இல்லே பின்பக்கம் போட்டுக்கவா ?"
"சுமி.. ஏ ஸி போட்டுக்கலாமா இல்லே பேன் போதுமா?"னு நிக்கிறதுக்கும் நடக்கிறதுக்கும் ஒவ்வொண்ணுக்கும்  யோசனை கேட்பியேடி. அன்றைக்கு மட்டும் உன் புத்தி ஏன் அதுவாகவே .முடிவெடுத்தது ?
மறுநாள் காலையில் ராமானுஜம் அங்கிள் பின்பாக பதுங்கியபடி நீ  மெல்ல மெல்ல அடியெடுத்துவைத்தபோது "எங்கே போனே?" என்று டாடி கத்துவார்னு நீ எதிர்பார்த்தே. ஆனால் அவர் மூச்சு முதல்நாள் மாலையே அடங்கி விட்டது உனக்கு அப்போதுதான் தெரிந்தது.  
"பவி பத்திரமா இருக்கிறானு இன்பர்மேஷன் கொடுக்க எத்தனை தரம் ஒவ்வொரு நம்பருக்கும் மாறிமாறி போன் போட்டுட்டே இருந்தேன். யாரும் போனை எடுக்கலே !" என்று  அங்கலாய்த்தார் ராமானுஜம் .
"என்ன ஸார் .. எதையும் முழுசா தெரிஞ்சுக்கு முன்னாலே இப்படி அநியாயமா உயிரை விட்டுட்டீங்களே"னு பதறித்துடித்தார்.
எல்லாமே முடிந்தபின் யாரை சொல்வது? எதை சொல்வது?
என்ன நடந்தது ? எப்போ வெளியில் போனே என்று எத்தனை முறை எத்தனை பேர் துருவித் துருவி கேட்டோம். எதற்குமே பதில் சொல்லவில்லையே.
"நான் பிசினெஸ் விஷயமா க்ளையண்ட் ஒருத்தரைப் பார்க்கப் போனேன். வழியில் கார் பிரச்னை பண்ணிட்டுது. அது ஸ்லம் ஏரியா. மெக்கானிக் யாராது கிடைப்பாங்களானு தேடி அலையறச்சே ஒரு தெருவில் ஏகப்பட்ட கும்பல். நான் அங்கேபோய் என்னனு எட்டிப்பார்த்தேன். பிராத்தல் கேஸில் சிலரை பிடிச்சதா சொல்லி போலீஸ்வேனில் ஏத்திட்டு இருந்தாங்க. அதில் நம்ம பவித்ராவும் இருந்தா.. என்னால் நம்பமுடியலே. நம்ம வீட்டுக்குழந்தையா இல்லாட்டா நம்ம வீட்டுக்குழந்தை சாயலில் வேறு யாராவதாங்கிற குழப்பம் இருந்துச்சு. என்னைப்பார்த்துட்டு அங்கிள்னு இவ கத்தவுந்தான் இது நம்ம வீட்டுக்குழந்தைதாங்கிறது எனக்கு கன்பார்ம் ஆச்சு. அங்கிருந்த போலீஸ் அபீஷியல்ஸ் கிட்டே பேசினேன். அவங்க ரொம்பவும் ஆர்க்யூ பண்ணினாங்க. இதோ இப்பவே சி. எம்.க்கு போன் போடறேனு சொன்னேன். அடுத்த நிமிஷமே பவித்ராவை விட்டுவிட்டு அந்த வேன் அங்கேருந்து காத்து வேகத்தில் பறந்திட்டுது. இவ எது கேட்டாலும் பதில் சொல்ல மாட்டேங்கிறா. இதுக்குப் பின்னாலே ஏதோ ஒரு அண்டர் கிரவுண்ட் ஒர்க் இருக்குது.. அதை மட்டும் என்னாலே சொல்ல முடியும்." என்று தீர்மானமாக சொன்னார் ராமானுஜம்.
யாருக்காகவும் எதற்காகவும் காலமும் நேரமும் நிற்பதில்லை.
"அம்மா.. ஓடி வாங்கம்மா.." என்று கவிதா போட்ட அலறலில் தெருவில் நின்று கொண்டிருந்தவர்கள்,அந்தவழியாக போய்க்கொண்டிருந்தவர்கள் எல்லோரும் வீட்டுக்குள் ஓடி வந்தார்கள்.
"பாருங்கம்மா .. பவி அம்மா அறைக்குள்ளிருந்து ரத்தம் வருது "
என்ன நடந்திருக்கும் என்பதை அறிந்து கொள்ள அதிக நேரம் பிடிக்கவில்லை. உன்னுடைய அசட்டுத் தனத்துக்கு உன்னைப் பலிகொடுக்க நீ துணிந்து விட்டாய்..
முட்டாள் பெண்ணே.. உனக்காக என்னுடைய காதலை... கல்யாணத்தை தூக்கி எறிந்தேனே.. என்னைத்தூக்கி எறிந்துவிட்டுப்போக உனக்கு எப்படி மனம் வந்தது  ?
கடவுளுக்கு என்மீது இன்னும் சிறிது கருணை இருக்கிறதென்று நினைத்து மனத்தைத் தேற்றிக் கொண்டேன்.
உயிருக்கு எந்த ஆபத்தும்இல்லை என்று  சொன்ன  டாக்டர் எனக்கு கடவுளாக தெரிந்தார்.
அந்த சந்தோஷம் கூட அதிகநாள் நிலைக்காதபடி நீ முட்டாள்தனமாக ஒரு முடிவெடுத்தாயே.
எனக்கு மருந்தும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம். நான் தற்கொலை பண்ணிக்கப் போறேன்னு சொல்லி, நீ அறையைவிட்டு ஓடிவர, உன்னைத் தடுக்க முயன்றவர்களை தள்ளி விட்டுவிட்டு நீ மொட்டைமாடிக்கு ஓடினது புயல்வேகம்என்றால்,  மேல்மாடியிலிருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்த  ஒருவர் உன்னைத் தடுத்து நிறுத்தி தாங்கிப்பிடித்தது அசுர வேகம்.

                                                                       -------------------------  தொடரும் ----------------------- 

No comments:

Post a Comment