Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, May 01, 2016

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 36

   
                                             
 அச்சுப்பிச்சு அப்புமணி !
"என்ன அப்பு, உன்னை புக்ஸ் தானே எடுக்கச் சொன்னேன். பெட்டியை ஏன் இழுத்தே?" என்று கடிந்து கொண்ட சேகர்,"தனம்...தனம்...." எங்கே போய் தொலைஞ்சே?" என்று வாசல் வரை ஓடி வந்து குரல் கொடுத்தான்.
தெரு முனையிலிருந்தபடியே அதைக் கவனித்து விட்ட தனம், "என்னப்பா ... ரேஷன் வாங்கப் போனேன். அங்கே ஒரே கூட்டம். கொஞ்சம் லேட் ஆயிட்டுது..ஏன்.. அப்பு ஏதாது குறும்பு பண்ணினா ?"  என்று கேட்டபடியே ஓடி வந்தாள்.
"ஏதாது ஆட்டோவைக் கூட்டிட்டு வா... ஆஸ்பத்திரிக்குப் போணும் " என்று பரபரப்புடன் சொன்னான் சேகர் 
"என்னப்பா .... யாருக்கு என்ன ?" என்று கேட்டாள் தனம்.
"கேள்வி கேட்காமே சொன்னதை செய் " என்றான் சேகர் கோபமாக. 
அதைக் கண்டு பயந்து போய்"இதோப்பா " என்று சொல்லி கையில் இருந்த பையை வாசலில் வீசிவிட்டு, ஆட்டோ கூட்டிக் கொண்டு வர ஓடினாள்.
அப்புமணியும், நிவேதிதாவும் பயத்தில் உறைந்து போய் ஒரு மூலையில் அடங்கி ஒடுங்கி நின்றார்கள்.
அதைப் பார்க்கும்போது சேகருக்கே மனதை என்னவோ செய்ததது.
அப்புமணி அருகில் வந்து அவன் தலையைத் தடவிக் கொடுத்தபடி, "ஸாரி கண்ணு .... அண்ணனுக்கு அடி பட்டதும் பதறிப் போயிட்டேன். இப்போ அவரை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போறேன். எல்லாம் சரியாயிடும். நீ பயப்படாதே. அந்தப் பொண்ணு பத்திரம். அதுக்கு  தமிழ் தெரியாது. எங்காவது போயிடாமே பார்த்துக்கோ"என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, "தம்பி ... ஆட்டோ " என்று வாசலில் நின்று குரல் கொடுத்தாள் தனம்.
"ஆட்டோக்காரரையும் கூட்டிட்டு நீயும் உள்ளே வா. ஆளுக்கொரு பக்கமா  இவரைத் தூக்கினாதான் ஆட்டோவில் ஏத்த முடியும் "
"சரி "
ஒரு வழியாக மூவரும் சேர்ந்து அடிபட்டவரை அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்குக் கிளம்பினார்கள்.
ஆட்டோ புறப்படும் சமயத்தில் கூட ,"அப்பு பத்திரம். நீ பயப்படாதே. நாங்க இப்போ வந்துடுவோம்.. நாங்க வர நேரம் ஆயிட்டா நீ சாப்பிடு . அந்தப் பொண்ணுக்கும் என்ன வேணும்னு கேட்டுக்கோ " என்றான் பரபரப்புடன்.
அந்த நல்ல குணம் நிவேதிதாவை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.   
அவர்கள் கிளம்பிப் போய் சில நிமிட நேரம் ஆகியும் எதுவும் பேசாமல் இருவரும் அமைதியாக இருந்தார்கள். 
மௌனத்தைக் கலைக்க நினைத்த நிவேதிதா, "என்ன அப்பு ? பயந்துட்டியா ? அவருக்கு தலையில் லேசா காயம் .... அவ்வளவுதான் ... நீ பயப்படாதே. எல்லாத்தையும் டாக்டர்ஸ் சரி பண்ணிடுவாங்க " என்றாள்.
"பொம்மை ராஜாவுக்கு எதுவும் ஆகாதுதானே ?" என்று நடுங்கிய குரலில் கேட்டான்  அப்புமணி 
"எதுவும் ஆகாது " என்று தைரியம் சொன்னாள் நிவேதிதா 
"அவருக்கு ஏதாது ஆனா, நாந்தான் கொலை பண்ணினேன்னு போலீஸ் என்னை ஜெயிலில் போட்டுடுமா ?" என்று அப்பாவித்தனமாகக் கேட்டான் அப்புமணி.  
அந்த கேள்வி சிரிப்பை வரவழைத்தாலும்,ஒரு நொடிப்பொழுது நேரத்தில் யோசித்துப் பார்த்த நிவேதிதா,"ஒருவேளை போலீஸ் வந்தாலும் வரலாம் " என்றாள் 
"அய்யய்யோ ... அப்படின்னா நான் உலகத்தை எப்படி சுத்திப் பார்க்கிறது ?" என்று கவலையுடன் கேட்டான் 
"போடா ... மண்டு ... அப்போ கூட உலகத்தை  சுத்திப் பார்க்கிறது எப்படினு கவலைப்படறே ... உங்க அம்மாவை நினைச்சு கவலைப்படலே அப்படித் தானே ?"
"ஏய்...போலீஸ் இங்கே வர்றதுக்கு முன்னாடி நாம எங்காது ஓடிப் போயிட லாமா ?"
"எங்கே போறது ? நீயே சொல்லு .... உன் கையில் பணம் இருக்கா ? நாம எங்கே போக முடியும் ?"
"எங்கிட்டே பணம் இல்லே. தனம் வச்சிருப்பா.. எடுத்துக்கலாம் "
"திருட போறியா ?"
"இப்போ நமக்கு காசு வேணும். எடுத்துக்குவோம். அண்ணன் வரவும் சொல்லிடலாம் "
"அண்ணன் வர்றதுக்குள் போலீஸ் வந்துட்டா....?" என்று கேட்டு அப்புமணி முகத்தைப் பார்த்தாள்  நிவேதிதா.
அவன் முகத்தில் பயம் தெரிந்தது. இதைப் பயன்படுத்திக் கொள் என்று நிவேதிதாவின் மைண்ட் வாய்ஸ் சொன்னது.
"அப்பு எனக்கொரு யோசனை "
"சொல்லு "
"போலீஸ் இங்கே வர்றதுக்கு முன்னாடி நாம அங்கே போயிட்டா என்ன ?" என்று நிவேதிதா கேட்க அவளைக் குழப்பத்துடன் பார்த்தான் அப்புமணி.
இவனை இன்னும் குழப்ப வேண்டும் என்று நினைத்த நிவேதிதா, "யெஸ் அப்பு..போலீஸ் இங்கே வந்த பிறகு நாம என்ன சொன்னாலும் அவங்க நம்ப மாட்டாங்க. அதனாலே அவங்க இங்கே வர்றதுக்கு முன்னாடி நாம அங்கே போய் உண்மையை சொல்லிடலாம். வா ... நாம உடனே  போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகலாம்" என்று சொன்னாள் நிவேதிதா 
"எந்த போலீஸ் கிட்டே ?"
"அதெல்லாம் போற வழியில் பார்த்துக்கலாம் "
சிறிதுநேரம் யோசித்த அப்புமணி,"நாம சின்னபோலீஸ்கிட்டே போலாமா  ?" என்று கேட்டான்.
அவரைப் பற்றி ஏற்கனவே அப்புமணி பேச்சுவாக்கில் நிவேதிதாவிடம் சொல்லி இருந்ததால், "அப்படின்னா உடனே கிளம்பு ... உங்க அண்ணன் வர்றதுக்குள் நாம  இங்கிருந்து போயிடலாம்"என்றுஅவசரப் படுத்தினாள்.
"அண்ணன் வர்றதுக்கு முன்னாடியா ....?" என்று அப்புமணி யோசிக்க, இவனை ரொம்பவும் யோசிக்க விடக்கூடாது என்று முடிவு செய்த நிவேதிதா,"அவர் இங்கே வரும்போதே போலீஷோட வந்துட்டார்னா நாம தப்பிக்கவே முடியாது " என்றாள்.
"சின்ன போலீஷைப் பார்க்க நடந்து போக முடியாது. அது அங்கே  இருக்குது " என்று எங்கோ ஒரு பக்கம் கையைக் காட்டினான் அப்புமணி.
"சரி ... நாம ஆட்டோ பிடிச்சு போயிடலாம் "
"அதுக்குக் காசு "
"அதெல்லாம் வேண்டாம். நாம காசில்லாமே போயிடலாம் "
"நீயென்ன லூஸா ? காசில்லாம ஆட்டோ ஓசியில் வருமா ?"
"அப்பு ... முதலில் நாம் இங்கிருந்து போயிடலாம்.."
"ஆமா... காசில்லாமே போனோம்னா ஆட்டோக்காரன் அதுக்காக நம்மள வேறே போலீஸ் கிட்டே பிடிச்சுக் குடுப்பான்  "
"அப்படி எதுவும் நடக்காது. முதலில் நாம் வெளியே போவோம். ஆட்டோ பிடிப்போம் ... சின்ன போலீஷைப் போய்ப் பார்ப்போம். ஓகேவா?" என்று நிவேதிதா கேட்க அரைகுறை மனதுடன் தலை ஆட்டினான் அப்புமணி .
"அப்பு ... இந்த இடத்தை விட்டு வாசலுக்குப் போன பிறகு, எது நடந்தாலும் அதுக்கு நான் கேரண்டி... நீ பயப்படாமல் வா " என்று தைரியம் சொல்லி   அவனை அங்கிருந்து கிளப்பினாள் நிவேதிதா. இவர்கள் வாசலுக்கு வரவும் அந்தப் பக்கமாக ஒரு ஆட்டோ வரவும் சரியாக இருந்தது
ஆட்டோவை கைகாட்டி நிறுத்திய நிவேதிதா, முதலில் அப்புமணியை வண்டிக்குள் ஏற்றி விட்டாள். அவன் அருகில் உட்கார்ந்து கொண்டு, "போலீஸ் கமிஷனர் ஆபீசுக்குப் போங்க " என்றாள் 
"ஐயோ ..லூஸு ... அவர் சின்ன போலீஸ் " என்று அப்புமணி சொல்ல, "அப்பு .. வில் யூ கீப் கொயெட் .. வாயை மூட்டிட்டு வரணும்... நான் சொல்ற வரை வாயைத் திறக்கக் கூடாது " என்று கடுமையான குரலில் நிவேதிதா சொல்ல, அதைக் கேட்டு அப்புமணி பயந்து போனாலும்,"உனக்கென்ன... ஆட்டோவில் ஏறினதும் பேய்  பிடிச்சிட்டா ... வீட்டுக்குள் நல்லாதானே இருந்தே?" என்று பயந்த குரலில் கேட்டான்.
"நோ மை ஸ்வீட் பாய் ... எனக்கு எதுவும் ஆகலே. வெய்ட் அண்ட் சீ " என்று சொல்ல, "எல்லாரும் என்னைத்தான் லூஸுன்னு சொல்வாங்க. நீ என்னைவிட முழு லூஸா இருக்கிறே" என்று அப்புமணி சொல்ல, அவர்கள் பேசுவதைக் கேட்ட ஆட்டோக்காரர், "என்ன பிள்ளைங்களா ? வீட்டில் பெரியவங்க யாரும் இல்லையா ? தனியா கிளம்பி வந்துருக்கீங்க கையில் காசு பணம் இருக்கா ? என்று கேட்க, "இல்லை "என்று சொல்ல வாயைத்திறந்த அப்புமணியின் வாயைக் கைகளால் மூடினாள் நிவேதிதா .அதை முன்பக்கக் கண்ணாடி வழியே ஆட்டோக்காரரும் பார்த்தார். "ரெண்டு லூசுங்க கிட்டே வந்து மாட்டிக் கிட்டோமோ " என்று அவர் நினைத்தாலும், "சரி.. பக்கத்தில் இருக்கிற அசிஸ்டன்ட் கமிஷனர் ஆபீசுக்குப் போகலாம். அங்கே போய்  என்னதான் நடக்குதுன்னு பார்ப்போம்" என்ற முடிவுடன் வண்டியை அசிஸ்டன்ட்கமிஷனர் ஆபீஸ் இருக்கும் இடத்துக்கு  ஓட்டினார்.
----------------------------------------------------- தொடரும் ---------------------------------------------

No comments:

Post a Comment