Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, April 30, 2016

ரோபோக்களின் உலகம் ?!

குழந்தைகளின் உலகம் தனி உலகம். அங்கு வசிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.கள்ளங்கபடமில்லாத மனதில் பட்டதை பளிச்சென்று சொல்லும் அவர்களது மழலை எனக்குப் பிடித்தமான ஒன்று.
இப்போது நாங்கள் இருப்பது தனிவீடு. பெரியவர்களை, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களைப் பார்ப்பதே அரிதான ஒன்று.பிறகு எங்கே குழந்தைகளை   பார்ப்பது?
எனது பள்ளிக்கூட நாட்களிலும்  சரி ( லைப்ரரியில் இருந்த நேரம் தவிர ), வேலைக்காக வெளியில் சென்று வந்த நாட்களிலும் சரி, எங்கள் வீட்டில் குழந்தைகள் பட்டாளமே இருக்கும். சில பெரிய குழந்தைகளும் இதில் உண்டு. ரொம்ப ரொம்ப சின்னக் குழந்தைகளோடு பொம்மை வைத்து விளையாடுவேன். கொஞ்சம் பெரிய குழந்தைகளோடு சீட்டுக் கச்சேரி, இன்னும் கொஞ்சம் வளர்ந்தவர்களோடு, அன்று பேப்பரில் படித்த விஷயம், ரேடியோவில் கேட்ட பாடல், பார்த்த சினிமா என்று எங்கள் அரட்டைக் கச்சேரி தொடங்கும்.
இதற்காக அம்மா அடிக்கடி திட்டுவாள். ‘எருமைக்கடா வயசு ஆகுது. பச்சப் புள்ளைகளைக் கூட்டி வச்சுகிட்டு விளையாடுதே. வெட்கமாயில்லே? உனக்கு வேறே வேலை வெட்டி இல்லை. அதுங்க படிக்க வேண்டாமா? வீட்டுப்பாடம் எழுத வேண்டாமா? நீ விளையாடிட்டு இருக்கிறே. அக்கம் பக்கத்தில் உள்ளவங்க ஏசுதாங்களே. அதுகூடவா அறிவில்லே? அதுங்கள வீட்டுக்கு அனுப்பு. நேரத்தோடு போய்ப் படிச்சிட்டு தூங்கட்டும்’ என்பாள்.
’இதோ பாரு... நான் யாரையும் கூப்பிடலே. அவங்கதான் வந்தாங்க’ என்பேன்.
சிலசமயம் ‘அதோ அந்த வீட்டில் நேத்து பிள்ளை பிறந்திருக்குதாம்.. பொம்மை வச்சு  விளையாட உன்னைக் கூப்பிட்டாங்க போயிட்டு வா’ என்பாள் அம்மா.
‘அதை இவ்வளவு லேட்டாவா சொல்றது? நான் ஆபீசிலிருந்து வந்ததுமே சொல்லியிருக்க வேண்டாமா?’என்பேன். தலையில் அடித்துக் கொள்வாள் அம்மா.
இப்போதெல்லாம் லீவு நாட்களில் கூட குழந்தைகள் ஏதோ ஒரு கோர்ஸில் சேர்ந்துடறாங்க. வீட்டில் இருக்கும்போது கூட சோட்டா பீம், டோரா, நிஞ்சா என்று எதோ ஒன்றில் லயித்து விடுகிறார்கள். அதுவும் இல்லாவிட்டால் கம்ப்யூட்டர் கேம். இதுதான் அவங்க உலகம்.
என் அக்காவின் பேத்தி அவ்வப்போது எங்க  வீட்டுக்கும் வரும். அதோடு சேர்ந்து பொம்மை வைத்து விளையாடுவேன். டீவியில் பழைய பாடல்களைக் கேட்டபிடி இருவரும் மணிக்கணக்கில் ஊஞ்சலில் படுத்துக் கொண்டு ஆடியபடியே பாட்டு கேட்போம். வீட்டுக்குள் ஓடிப்பிடித்து விளையாடுவோம்.
இதெல்லாம் ஒரு ஆறு மாதத்துக்கு முன்பான கதை. (இப்போ அதுக்கு போன மாதம் இரண்டு வயசு முடிஞ்சு போச்சு) நான் பழைய ஞாபகத்தில் அதை மடியில் வைத்துக் கொண்டு ஊஞ்சலில் உட்கார, மடியிலிருந்து குதித்து டீவீ முன்பாக உட்கார்ந்து கொண்டு ரிமோட்டைக் கையில் எடுத்து கொண்டு சோட்டா பீமை தேட ஆரம்பித்து விட்டது.
இப்போது என் கவலையெல்லாம், இனி வரும் காலங்களில், பிறக்கும் குழந்தைகள் எல்லாம் நேராக கம்ப்யூட்டர் அல்லது டீவி முன்பாக உட்கார்ந்து விடுவார்களோ என்பதுதான் ( ஒரு விளம்பரத்தில் வருவது போல).
அதிலே உனக்கு என்ன பிரச்னைனு கேட்கிறீங்களா? அதுங்க முன்னாடி பால் டம்ளரையோ அல்லது சாப்பாட்டுத் தட்டையோ நீட்டினால், மிஷின் மாதிரி கை நீட்டி வாங்குதுங்க. கையில் இருக்கிறது என்னனு தெரியாமே மிஷின் மாதிரி சாப்பிடுதுங்க. ஒருமுறைக்குப் பத்து முறை கூப்பிட்டா தான் நம்மை ஏறிட்டே பார்க்குதுங்க.
இப்படியே போனால் இதுங்க ஒரு ரோபோ மாதிரியே ஆகிவிடுங்க. எல்லாரும் எங்க வீட்டிலே குழந்தை பிறந்திருக்குதுனு சொல்றதுக்குப் பதிலா எங்க வீட்டிலும் ஒரு ரோபோ வந்துட்டுதுனு சொல்லிக் கொண்டு திரிய வேண்டியதுதான்.
அட.. எஞ்சாமி பகவானே.. வீட்டில் குழந்தைகள் ஓடிவிளையாடி சிரித்துப் பேசுவது கூட ‘அந்தக்காலத்திலே......’ என்கிற லிஸ்டில் சேர்ந்துடுமோனு பயமா இருக்குதுங்க. ப்ளீஸ்  யாராவது ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்து குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுங்களேன்.

No comments:

Post a Comment