Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Wednesday, May 18, 2016

DEAR VIEWERS,

                                       
மரமே.... ஓ ...... மனமே.....!!
அந்தக்காலத்தில் சிறு குழந்தைகளுக்கு தாத்தா பாட்டிக்கள் கதையாக சொல்லும்   விஷயங்களில் ஒன்று, கேட்டதை எல்லாம்     கொடுக்கின்ற  மரம்! (அதென்ன அந்தக் காலத்தில்னு ஒரு ஆரம்பம்னு கேட்கிறீங்களா? இந்தக் காலத்தில் எத்தனை வீடுகளில் தாத்தா பாட்டி இருக்கிறார்கள்? எந்தெந்த ஹோமில் இருக்கிறார்களோ? எந்த தனிக் குடித்தனத்தில் வாடுகிறார்களோ. எல்லோரும் அறிந்த ஒன்றுதானே இது பராபரமே! அப்படியே தாத்தாபாட்டிங்க பேரக்குழந்தைங்களோடு நம்மவீட்டிலேயே இருந்தாலும் அவர்களுக்கு  டீவி சீரியல் பார்க்கவே பொழுது சரியா இருக்கிறப்ப, கதையாவது, அவங்க சொல்றதாவது? அவங்க கதையே பெருங்கதையா இருக்கிறப்போ நாம டிஸ்டர்ப் பண்ணக்கூடாது. அட அதை விடுங்க.. இப்போ உள்ள குழந்தைகள்ல எத்தனை பேருக்கு அதையெல்லாம் கேட்க ஆர்வம் நேரம் இருக்குது. அதுங்க பண்ணின தப்பைக் கண்டுபிடிச்சு, ‘இதை ஏன் பண்ணினே‘னு அவங்க கிட்டே கேளுங்க... நீங்க கற்பனையில் கூட நினைச்சுப் பார்த்திருக்காத லெவலுக்கு புதுப்புதுக் கதைகளை அவங்க உங்களுக்குச் சொல்வாங்க.)
எங்களுடைய சிறு வயதில் எங்கள் வீட்டுக்கு அருகிலிருந்த ஒரு அம்மா தினமும் கதை சொல்லுவாங்க. என்னதான் அவசர வேலை இருந்தால் கூட அதையெல்லாம் கொஞ்ச நேரத்துக்கு ஒத்தி வச்சிட்டு அக்கம்பக்கத்து வீட்டுப் பெரியவங்களே கூட அவங்க சொல்ற கதைகளை உட்கார்ந்து கேட்பாங்க. அவங்க சொன்ன கதைகளில் அடிக்கடி மரங்கள் வரும். அந்த மரங்கள்  பேசும். பாடும். கேட்டதையெல்லாம் தரும். தண்டிக்கும். பயம் காட்டும். அதைக் கேட்டுக்கேட்டு மரங்கள் என்றால் எனக்குரொம்பப் பிடிக்கும். ரொம்பவே  பிடிக்கும். (வேறென்ன பிடிக்கும்னு கேட்கிறீங்களா? மொட்டைமாடியில் பாய் விரித்துப் படுத்துக் கொண்டோ ஈசி சேரில் சாய்ந்து கொண்டோ முழு நிலவைப் பார்த்துக் கொண்டிருப்பது பிடிக்கும். கடல் அலையில் விளையாடப் பிடிக்கும். மணிக்கணக்கில் அருவி நீரில், ஆற்று நீரில் குளிக்கப் பிடிக்கும். மழையில் நனைவது ரொம்ப ரொம்பப் பிடிக்கும். ( ஆனால் உடம்புக்கு கொஞ்சமும் ஒத்துக் கொள்ளாத விஷயம் அது.) அதுவும் மழையில் நனைந்தபடி டூ வீலர் ஓட்டுவது பிடிக்கும். யானைன்னா பிடிக்கும். ஏனென்று தெரியவில்லை, இப்போதெல்லாம் யானையை டீவீயில் பார்த்தால்கூட எதோ ஒரு இனந் தெரியாத பயம் மனதுக்குள் வருகிறது. ஆள் நடமாட்டமில்லாத வனாந்திரப்பகுதியில் ரயில் போவதை, ஏதாவது ஒரு உயரமான இடத்தில் நின்று கொண்டு பார்ப்பது பிடிக்கும். முழுநிலவு நாளில் ஜன்னலோர ஸீட்டில் ரயில், பஸ்ஸில் அமர்ந்து கொண்டு இரவு முழுக்க நிலவைப் பார்த்தபடி பயணிப்பது பிடிக்கும். குழந்தைகளோடு விளையாடுவது, காற்றில் மிதந்து வரும் பாடலை ரசிப்பது .... இதெல்லாமே பிடிக்கும். இப்போ நாம பேசப் போறது மரத்தைப் பற்றி மட்டுந்தான்.)
மரங்கள் நிறைய விஷயங்களைப் பேசுவது போல சிறு வயதிலிருந்தே என் மனதுக்குள் ஒரு பீலிங்க் உண்டு. ஏதோ ஒரு கால கட்டத்தில் நாம் வசித்த இடங்களுக்குப் பிறகொரு நாளில் போகும் சந்தர்ப்பம் வரும் போது அங்குள்ள மரநிழலில் உட்கார்ந்திருந்த,விளையாடிய சம்பவங்கள் தான் அன்றைய  பொழுதுகள்தான் மனதை அதிகம் ஆட்கொள்ளும். நிறைய எழுத்தாளர்கள் அவர்கள் ரசித்த மரங்களைப் பற்றி கவிதை கதைகளாக புத்தகங்களில் பதிவு செய்ததை படிக்கும் போதெல்லாம், "ஓஹோ...இவங்க நம்மகேஸ்" என்று  நினைத்துக் கொள்வேன்.
நான் ஸ்கூல் பைனல் படித்த காலத்தில், ஸ்கூல் தொடங்கி ஆறுமாத காலத்துக்குள் எல்லா  போர்ஷனையும் விரைவாக முடித்து விடுவார்கள் . நாங்கள்  தினமும் ஸ்கூல்க்கு வந்து அட்டெண்டென்ஸ் கொடுத்து விட்டு ஸ்கூல்கேம்பசுக்குள்ளேயே  எல்லாரும் தனித்தனியாக எங்கு உட்கார்ந்து வேண்டுமானாலும் படிக்கலாம்.நானும் எனது நட்புவட்டங்களும் ஸ்கூல் ப்ளே கிரவுண்டில்  உள்ள  மரத்தடி நிழலில்தான் இருப்போம். 
ஆரம்பத்தில் ஒரு அரசு அலுவலகத்தில் நான்  temporary  வொர்க் பண்ணின காலத்தில் நானும் எனது தோழியும் அங்குள்ள மர நிழலில் உட்கார்ந்து தான் சாப்பிடுவோம். அந்த வழியாகப் போகிறவர்கள் வருகிறவர்கள் எல்லோரும், "என்னங்க ... இது... கேண்டீன் இருக்குது. அங்கே போய் சாப்பிடலாம். இல்லாட்டா உங்க ஸீட்டில் உட்கார்ந்து சாப்பிடலாம். என்ன இது மரத்தடி நிழலில் ?" என்று கேட்பார்கள்.
"எங்களுக்குப் பிடிச்சிருக்குது. நாங்கள் இருக்கிறோம் " என்போம்.
ரயிலில் பயணிக்கும்போது மரங்கள் நம்மோடு சேர்ந்து ஓடிவருவதைப் பார்க்கப் பிடிக்கும்.
வெளியூர்களுக்குப் போகும் போது ஊரை, கோவிலை சுற்றிப் பார்த்தபின் அங்கு தென்படும் மர நிழலில் 'அப்பாடா " என்று உட்காருவது பிடிக்கும்.
உங்களில் எத்தனை பேர் கவனிச்சிருப்பீங்கனு தெரியலே. கிராமப்புற எல்லா ரயில் நிலையங்களிலும், நகர்ப் புறங்களில் சில  ரயில் நிலையங் களிலும், பிளாட் பார்மில் வரிசையாக மரங்கள் இருக்கும். அங்கு ஒரு சிமெண்ட் பெஞ்சு இருக்கும். அதில் வயதான ஒரு சிலர் உட்கார்ந்து காற்று வாங்கியபடி அருகில் இருப்பவரிடம் பேசிக்கொண்டிருப்பார்கள். கிராமப் புறவாசிகள் பலருக்கும் ரயில்வே ஸ்டேசன் தான் பொழுது போக்குக்கான இடம். சாயங்காலம் காற்று வாங்க  ரயில்வே ஸ்டேஷனை நோக்கி வந்து விடுவார்கள். அதை ஒட்டிய பகுதிகளில் அதிக பில்டிங்க்ஸ் இல்லாமல் வெட்ட வெளியாக இருப்பதால் அங்கே வீசும் காற்று நம் மனதை வருடிக் கொடுப்பது போல இருக்கும். இப்போதும் நான் தினமும் ரசிப்பது லயிப்பது - கோடம்பாக்கம் ஸ்டேஷனில் ரயில்வே ட்ராக்கை ஒட்டி சில மரங்கள் இருக்கும். ட்ரைனை விட்டு இறங்கி ஸ்டேர் கேஸ் நோக்கி நடக்கும்போது அந்த மரங்களைப் பார்ப்பது, அதிலிருந்து வீசும் காற்றை சுவாசிப்பது, அந்த மரத்திலுள்ள சில பறவைகள் குரல் கொடுப்பதை ரசிப்பது எனது தினசரி நடவடிக்கை.  அதிலிருந்து வரும் காற்று என் மீது படும்போது ஒரு புத்துணர்ச்சியை உணர்வேன். 
திருவிளையாடல் புராணத்தில் வன்னி மரம் சாட்சி சொன்னதாக ஒரு கதை உண்டு.
அந்தமான் போயிருந்தபோது அங்குள்ள ஜெயிலில் ஒளியும் ஒலியும் என்ற நிகழ்ச்சி பார்த்தோம். சுதந்திரப் போராட்டத்தின் போது  கைதான வீரர்கள் பட்ட கஷ்டங்களை ஒளிஒலி நிகழ்ச்சியாக சொல்கிறார்கள். அதைக் கேட்கும் போது பார்க்கும்போது மனதுக்குள் இனந் தெரியாத ஒரு பாரம் ஏறும். நமக்கு அந்தமான் வந்த சந்தோசமே போயிடும். போராட்ட வீரர்கள் பட்ட கஷ்டங்களை அங்கிருந்த ஒரு மரம் சொல்வது போல காட்சியை அமைத்திருக்கிறார்கள். இங்கு நடந்த எல்லா சம்பவங்களை நேரில் பார்த்த ஒரே சாட்சி நான் என்று அந்த மரம் சொல்வது போல காட்சியை முடித்தார்கள்.அதைப்பார்த்துவிட்டு வந்தபின் நிறைய நாட்கள் தூக்கமில்லாமல் தவித்திருக்கிறேன். தனிமையில் அழுதிருக்கிறேன். அந்த அளவுக்கு உணர்ச்சி பூர்வமாக அதை அமைத்திருந்தார்கள்.
இப்போதுங்கூட வெளியூர்ப் பயணங்களின் போது வழியில் தென்படும் மரங்களில் ஊஞ்சல் கட்டி ஆடும் குழந்தைகளைப் பார்க்கும்போது எனக்கு ரொம்பப் பொறாமையாக இருக்கும். 
உங்களுக்கு இந்த மாதிரி அனுபவங்கள் ஆசைகள் உண்டா ? இதுவரை இல்லையா.. பரவாயில்லை. இனிமேல் மரங்களோடு மனம் விட்டுப் பேசிப் பொழுதை இனிதாக்குங்கள்!
( உலகத்தில் உள்ள அத்தனை உயிரினங்களுக்கும் தெரிந்த, ஆனால் இதுவரை அகராதி எழுதப்படாத மொழி எதுன்னு சொல்ல முடியுமா ? அது என்னனு யோசிச்சிட்டே இருங்க. விரைவில்  அதைப் பத்தி பேசுவோம்.)

No comments:

Post a Comment