Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, May 22, 2016

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 39

அச்சுப்பிச்சு அப்புமணி !
மேலதிகாரியுடன் அறைக்குள் வந்த "சின்ன போலீஷை"ப் பார்த்ததும் அப்புமணி எழும்பி நின்று "நான் .... நான்..." என்றான்.
"நீ தத்துப்பித்துங்கிறதை நான் சொல்லிட் டேன். நீ உட்கார்"என்றார் அப்புமணிக்கு நண்பனாகிப் போன காவல்துறை அதிகாரி.
"ஹாய் ... பேபி... உன்னோட தாத்தா வந்துட்டே இருக்கிறதா தகவல் வந்துது. ஹௌ டூ யூ பீல்? தாத்தா வந்ததும் தான் எதுவும் பேசுவேன்னு சொன்னியாமே ..."என்று சிரித்துக் கொண்டே கேட்டார் அதிகாரி.
பின்பு, "அந்தப் பையன் ஏதோ கொலை செஞ்சதா அவனே  சொல்றான்னு சொன்னீங்களே. அதைப்பத்தி டீடைல்டா விசாரிங்க "அவர் சொல்லும் போதே. "நோ...ஸார்..பரண் மேலே இருந்த ஒரு புக் எடுக்கும்போது அங்கே இருந்த பெட்டி கீழே விழுந்தது. அதனாலே அந்த இடத்தில் படுத்திருந்தவர் தலையில் லேசா காயம். தட்ஸ் ஆல். நொவ் ஹி இஸ் இன் ஆஸ்பிடல் . நோ ப்ராப்ளெம் ஸார். அந்த இடத்தை விட்டு வெளியே வர்றதுக்கு நான் 'அதுஇது'னு சொல்லி அப்புவை கன்ப்யூஸ் பண்ணினேன்" என்று பதில் சொன்னாள் நிவேதிதா.  
"குழந்தைங்க சொல்றது  இருக்கட்டும். அது என்னனு விசாரியுங்க " என்று சொல்லிவிட்டு அங்கிருந்து போனார் மேலதிகாரி.
அதேசமயம் ஆஸ்பத்திரியில் படுக்கையில் இருந்தவரை கொஞ்சமும்  சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தான் சேகர்.
"நான் எங்கே இருக்கிறேன் ? என்னை ஏன் இங்கே படுக்க வச்சிருக்கீங்க  ? என் கங்கு எங்கே? இப்பவே நான் பார்க்கணும்" என்று சொல்லிக் கொண்டு இருந்தார் காயம் பட்டவர்.
"இதோ டாக்டர் வந்துடுவார். அவர்கிட்டே கேட்டுட்டு உடனே உங்களை வயல்வெளி கிராமத்துக்குக் கூட்டிட்டுப் போறேன்" என்று சொன்ன சேகர் டாக்டரைப் பார்க்க அவர் அறைக்கு ஓடினான். சேகர் சொல்வதைக் கேட்ட டாக்டர் வேறு வழியின்றி  பெர்மிஷன் கொடுக்க, திரும்பவும் அறைக்குத் திரும்பி வந்த சேகர், "அண்ணே ... டாக்டர் போக சொல்லிட்டார்.  கால்- டாக்ஸி வர சொல்றேன். உங்க உடம்பு இருக்கிற நிலையில் பஸ் பிரயாணம் சரிப்பட்டு வராது" என்றான்.
'என்னை ப்ளைட்டில் வேணும்னாலும் கூட்டிட்டுப் போ. என்ன செலவானா லும் சரி. நான் குடுத்திடுவேன் "  
"இப்போ அதுவா பிரச்சினை ? உங்க உடல்நிலை ... "
"அதெல்லாம் எதுவுமில்லை. நான் கங்குவைப் பார்க்கணும். என்னோட குழந்தையைப் பார்க்கணும்"என்று பிடிவாதமாக சொல்ல, "இதோ டாக்ஸி கொண்டு வர்றேன்" என்று வெளியில் ஓடிவந்த சேகர், தனத்துக்குப் போன் பண்ணி, "தனம் எங்கிருக்கிறே ?" என்றான்.
"உன் வீட்டாண்டைதான் இருக்கிறேன். இந்தப் பசங்களைக் காணும்ப்பா.. எல்லா இடத்திலும் தேடித்தேடிப் பார்த்துட்டேன். எங்கியும் இல்லேப்பா .. ரெண்டு பசங்க ஆட்டோலே ஏறிப் போனதைப் பார்த்ததா பெட்டிக்கடைக் காரர் சொல்றார்ப்பா" என்று அழும் குரலில் சொன்னாள் தனம்.
"ஓ ... கடவுளே... அப்பு ஒரு அறியாப் பையனாச்சே. அவனை தனியா விட்டது என் தப்புதான். இங்கே அண்ணனுக்கு நினைவு திரும்பிட்டுது. அவர்சொல்ற ஊருபேரு இதையெல்லாம் வச்சுப் பார்க்கிறப்போ அண்ணன் தான் அப்புவோட அப்பாவோன்னு எனக்கொரு டவுட். இப்பப் பார்த்து இந்தப் பையன் எங்கே போனான். சரி ... பிரவீனை விட்டு அவனைத் தேட சொல்றேன்.இப்போ நான் அண்ணனைக் கூட்டிட்டு வயல்வெளி போறேன். அப்பு வந்தால் அவனை பிரவீனோடு சேர்த்து அங்கே அனுப்பு. இப்போ நான் கிளம்பறேன்" என்றான்.
"அந்தப் பொண்ணுப்பா ?" என்று தனம் கேட்க, அப்பு கிடைச்சா அதும் கிடைச்சிடும்" என்று படபடப்பான குரலில் சொல்லிவிட்டு போனைக் கட் பண்ணினான் சேகர். 
கமிஷனர் அலுவலகம் ஒருவித பரபரப்புடன் காணப்பட்டது. கடத்தப்பட்ட தாக சொல்லப்பட்ட பெண், வீட்டில் பத்திரமாக இருப்பதாக செய்தி வந்தது. இப்போது ஒரு சிறுமி வந்து தான்தான் அந்தக் கடத்தப்பட்ட பெண் என்று சொன்னது எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தாத்தா வந்த பிறகு தான் எதையும் பேசுவேன் என்று  நிவேதிதா பிடிவாதமாக இருந்ததால் அங்கிருந்த அனைவருமே அவரின் வருகைக்காகக் காத்திருந்தார்கள். 
அதோ .... இதோ .... என்று அனைவருமே ஒருவித பரபரப்பில் இருக்க நேரம் ஓடிக் கொண்டிருந்தது.
அப்போது, "வந்துட்டார்" என்று காவலர் ஒருவர் ஓடி வந்து செய்தி சொல்ல, அதைக் கேட்டதும் வாசலுக்கு ஓடி வந்த நிவேதிதா, தாத்தாவை கண்டதும் ஓடிப்போய் அவர்கழுத்தைக்கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தாள் . அதுவரை அவள் அடக்கி வைத்திருந்த மனஉணர்வுகள் அழுகையாக வெளிப்பட ஆரம்பித்தது. அவள் மனம் விட்டு அழட்டும் என்று நினைத்த தாத்தா அவளது முதுகை மெதுவாக வருடி, 'நீ எப்பேர்ப் பட்ட தைரியமான பொண்ணு. நீ அழலாமா? என் பேத்தி ரொம்பவும் தைரியசாலி, எதையும் துணிச்சலா சந்திக்கும் சாமர்த்தியம் அவளுக்கு உண்டுன்னு நான் எல்லார்கிட்டேயும் சொல்லிட்டு இருக்கிறேன். நீ அழறே?  இதை நான் உன்கிட்டே எதிர்பார்க்கலையே" என்று சிரித்துக் கொண்டே கேட்டார். 
அங்கு வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அதிகாரி, "வாங்க ஸார்.." என்று வரவேற்று உள்ளே அழைத்து வந்தனர்.
அறைக்குள் சென்று அனைவரும் அமர்ந்ததும், "உங்க பேத்தி இங்கே இருக்கிறப்ப, அவ உங்க வீட்டில் இருக்கிறதா சொன்னதுக்கு ஏதாவது காரணம் உண்டா ?" என்று கேட்டார் அதிகாரி.
"நிவேதுவை யாரோ கடத்திட்டுப் போனதா என் சன்னோட பிரெண்ட்ஸ் சொன்னதும்  ரொம்ப அதிர்ச்சியா இருந்துச்சு. தேட ஆரம்பித்தோம். எங்களுக்கு இந்த நாட்டிலும் சரி .. நாங்க இருக்கிற இடத்திலும் சரி, பகையோ எதிரியோ கிடையாது. ஒருவேளை யாராவது பணத்துக்காகக்  கடத்தியிருந்தால் கடத்தல்காரங்க கிட்டே இருந்து ஏதாவது டிமான்ட்ஸ் வந்திருக்கும். அப்படி எதுவும் வரலே. இதற்கிடையிலே மினிஸ்டர் பொண்ணு கடத்தல்னு ஒரு நியூஸ்ம், அது தப்பான நியூஸ்னும் செய்தி வந்துச்சு. அதுக்கும் என் பேத்தி காணாமல் போனதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோனு கணக்குப் போட்டுப் பார்த்தேன். யாராவது திட்டம் போட்டுக் கடத்தி இருந்தால் அவங்க குழம்பி போகட்டும்னு நானே ஒரு திட்டம் போட்டு என் பேத்தி எங்க வீட்டில் இருக்கிறதா சொல்லி நியூஸ் குடுத்திட்டு நான் ரகசியமா தேட ஆரம்பிச்சேன். ஒவ்வொரு இடமா தேடி  எங்களுக்குக் கிடைச்ச ஆதாரங்களை வச்சு ஆந்திராவுக்கு வந்தோம். அப்பத்தான் நிவேது அனுப்பின மெயில்  பார்த்தேன். உடனே ஓடி வந்தேன்" என்று விளக்கினார்.
அவர் சொல்வதை அனைவரும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தனர். "மற்ற விஷயங்களை உங்க பேத்திதான் சொல்லணும். ஆனால் நீங்கள் வந்தபிறகுதான் சொல்வேன்னு அவ பிடிவாதமா இருக்கிறா" என்று போலீஸ் அதிகாரி சொல்ல, "அப்படியா ?" என்பதுபோல தாத்தா, பேத்தியைப் பார்க்க, அவள் அப்புமணியின் முகத்தில் தெரிந்த தவிப்பைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பின் மெதுவாக தலையசைத்தாள்.அந்தத் தலை அசைப்புக்குள், "உன்னோட அண்ணனை நான் காட்டிக் குடுக்க மாட்டேன்" என்ற உறுதிமொழி இருந்ததை அப்புமணி உணர்ந்தான். 
"பேசும்மா .... நிவேது என்ன நடந்ததுன்னு சொல்லு " என்றார் தாத்தா.
"என்ன தாத்தா நடந்துச்சு ... இராமாயணக் கதைதான் நடந்துச்சு " என்று பதில் சொன்னாள் நிவேதிதா பெரிய மனுஷி போன்ற தோரணையில்.
"புரியலைம்மா ... புரியும்படி சொல்லு "
"தாத்தா நீங்க எனக்கு அடிக்கடி இராமாயணக்கதை சொல்வீங்களே .. அதில் ராமனுக்கு உரிய பதவியை கைகேயி வஞ்சகமா வாங்கி தன்னோட மகன் பரதனுக்குக் குடுக்க நினைச்சா. சில ட்ராமாஸ் அங்கே நடந்துச்சு. ராமன் காட்டுக்குப் போயிட்டார். பின்னாடியே லட்சுமணன் போனான். எந்த மகனுக்காக ஒரு அம்மா ஆட்சியைப் பிடிச்சுக் குடுத்தாளோ அந்த அம்மாவும் வேண்டாம் ஆட்சியும்வேண்டாம்னுட்டு பரதன் போயிட்டான்.  நீங்க எல்லாரும் வேண்டாம்னு தூக்கிப் போட்டதைப் பிடிக்க நான் என்ன மடையனா, எனக்கும் ஆட்சி வேண்டாம்ங்கிற மாதிரி சத்ருக்கனன் போயிட்டான். எனக்குஉனக்கு என்கிற நிலைமாறி, யாருக்கும் வேண்டாம் கிற நிலைமை வந்து கடைசியில் ஒரு பாதுகைதான் அரியாசனத்தில் இருந்துது. அதே மாதிரி மினிஸ்டர் பொண்ணுன்னு நினைச்சு என்னைக் கடத்திட்டு அது நான் இல்லேன்னு தெரிஞ்சதும், தனக்கு நான் தேவை இல்லைன்னு ஒருத்தன் என்னை வேறொருத்தன் கிட்டே விட்டுட்டுப் போயிட்டான். நான் மெண்டல் மாதிரி  ஆக்ட் குடுக்கவும் அவன் என்னை வேறொருத்தன் தலையில் கட்டிட்டான், உனக்கு யூஸ் ஆகும்னா நீ வச்சுக்கோ என்கிற மாதிரி.. இப்படி ஒவ்வொரு இடமா மாறி கடைசியா நான் சென்னை வந்துட்டேன். தாத்தா ... நீங்க அடிக்கடி சொல்வீங்களே, எந்தவொரு நல்லவன் கிட்டேயும் எதோ ஒரு கெட்ட குணம் இருக்கும். மிருகங்கள் கிட்டே கூட எதோ ஒரு நல்ல குணம் இருக்கும்னு . அது உண்மைன்னு நான் தெரிஞ்சுகிட்டேன் தாத்தா. அவங்க என்னை நடத்தியே பல இடத்துக்கு  கூட்டிட்டுப் போனாங்க.. ஆனா ஒருவேளை சாப்பாடாவது போட்டாங்க. பேப்பர்ல என்னென்னவோ நியூஸ் படிக்கிறோம்.  நான் தனியா மாட்டி கிட்டப்ப கூட அவங்க எந்த ராங்க் ஆக்ட்டும்  பண்ணலே தாத்தா " என்று நிவேதிதா சொல்ல, தனது கண்களில் வடிந்த நீரைக் கட்டுப்படுத்தக் கூட முடியாத நிலையில் தாத்தா உட்கார்ந்திருந்தார்.        
----------------------------------------------------------  தொடரும் --------------------------------------       

No comments:

Post a Comment