Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, November 20, 2015

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 16

                             
          அச்சுப்பிச்சு அப்புமணி !
திருடன் வந்ததைப் பார்த்த பிறகும் அப்புமணி அதைக் கண்டு கொள்ளாமல் இருந்ததால் அவனைத் திட்டித் தீர்த்த அம்மா அதற்காக வருத்தமும் பட்டாள்.
அன்று இரவு தற்செயலாக படுக்கையில் புரண்டு படுத்த அம்மா , அப்புமணிதூங்காமல் படுக்கையில் எழுந்து உட்கார்ந்திருப்பதைப் பார்த்து "என்னடா கண்ணு... தூக்கம் வரலியா ? அம்மா திட்டிட்டேன்னு நெனைச்சு வருத்தத்தில் இருக்கிறியா ? " என்று அவனது தலை முடியைக் கையால் கோதி விட்டபடி கேட்டாள்.
"இல்லேம்மா ... நான் அமெரிக்காவைப் பார்க்கத்தான் தூங்காமல் முழிச்சிட்டு இருக்கிறேன் " என்று பதில் சொன்னான் அப்புமணி. 
"என்னது !அமெரிக்காவைப் பார்க்க போறியா ?" என்று அதிர்ந்து போய்க் கேட்டாள் அம்மா 
"எங்க டீச்சர் பாடம் நடத்தறப்போ, 'பூமி சூரியனை தினந்தினம் சுத்தி வருது.இந்தியாவில் இரவாக இருக்கிறப்பஅமெரிக்காவில் பகல் நேரமாக இருக்கும்'னு சொன்னாங்க. நாம முழிச்சு கிட்டே இருந்தால், இந்த பூமி சுத்தறப்போ நாம எல்லாரும்  அமெரிக்காவுக்குப் போயிடுவோம் தானே? அதான் அமெரிக்காவைப்  பார்க்கிறதுக்காக நான் தூங்காமல் முழிச்சிட்டு இருக்கிறேன்" என்று பதில் சொன்னான் அப்புமணி.
இப்படியொரு முட்டாளாக இருக்கிறானே. இவனுக்கு என்ன சொல்லி புரிய வைப்பது என்பது புரியாமல் திகைத்துப் போன அம்மா, சற்று நேர யோசனைக்குப் பின்," நீ தேவையில்லாமே முழிச்சிட்டு இருக்காதே. பூமி சுத்தறப்போ, ராத்திரி நேரத்தில் நாம அமெரிக்கா போறப்ப,  அமெரிக்கா இங்கே வந்துடும். அங்கே இருக்கிறவங்களும் இந்தியா வந்திடுவாங்க தானே ! " என்றாள்.
"அப்படின்னா நாம இப்படியே மாறிமாறி சுத்திட்டே இருக்க வேண்டியது தானா?அமெரிக்காவை பார்க்க முடியாதா?"என்றுகேட்டான் அப்புமணி.  
"அது ஏன் உனக்கு அமெரிக்கா மேலே அப்படியொரு ஆசை ?"
"எல்லாரும் அமெரிக்கா அமெரிக்கான்னு சொல்றாங்களேன்னு நானும் சொன்னேன். அவ்வளவுதான் " என்றான் அப்புமணி 
"அவ்வளவுதானா? நானும் என்னவோ ஏதோன்னு நினைச்சு தடுமாறித் தான் போயிட்டேன். நீ நல்லா படிச்சு பெரிய ஆளாகி எல்லா நாட்டுக்கும் போயிட்டு வா" என்று அம்மா சொன்னதுமே, "அம்மா ... எனக்கு அந்தக் கால கதைகளை சொல்லேன் " என்றான் அப்புமணி 
"அந்தக் காலக் கதைகள்ன்னா ?"
"ம் .... அதாது சாமிக் கதைகள் ! ம் .... புராணக் கதைகள் "
"அது ஏன் ?"
"புராண காலத்து புஷ்பக விமானம், மந்திரக்கண்ணாடி, வில் அம்பு இதை யெல்லாம் பார்த்து பார்த்துதானே இந்தக் காலத்தில் ஏரோப்ளேன், டீவீ, அணுகுண்டு எல்லாம் கண்டு பிடிச்சிருக்காங்க"என்று அப்புமணி சொல்ல வியந்து போன அம்மா, "இதையெல்லாம் உனக்கு சொன்னது யாருடா ?" என்று கேட்டாள்.
"புராணக் கதைகள் பத்தின சினிமா பார்க்கும் போது நாம பார்த்திருக் கோமே, யாராவது ஒரு அசுரன் ஒரு தேவரையோ இல்லாட்டி பொம்பள சாமியையோ புஷ்பக விமானத்தில் கடத்திட்டு போவான் தானே. அது இப்ப ஏரோப்ளேனா மாறிப்போச்சு. தேவாதி தேவர்கள்   இல்லாட்டா ஏதோ அசுரர்கள்  மந்திரவாதிங்க ஒரு மந்திரகண்ணாடி முன்னால் நின்னு கிட்டு ஒரு கோலை ஆட்டுவாங்க .. உடனே எங்கெங்கு என்னென்ன நடக்கிறதுங்கிறது அந்த கண்ணாடியில் தெரியும். அது மாதிரி நாம இப்போ டீவீ முன்னாலே உட்கார்ந்துட்டு ரிமோட்டை அழுத்துறோம். உலகத்தில் எங்கெங்கே என்ன நடக்கிறதுங்கிறது தெரியுதுதானே. தேவர்கள்  அசுரர்களுக்கு நடுவிலே சண்டை நடக்கும். அப்போ அசுரர்கள் ஒரு ஆயுதத்தை விடுவாங்க. உடனே சாமி வீசுற ஆயுதம் அதைப் போய்த் தடுக்கும். அந்த மாதிரிதானே  இப்போ எல்லா நாட்டிலேயும் ராக்கெட், குண்டு எல்லாம் வீசி தாக்குறாங்க . நீயும் நிறைய புராணக் கதைகள் சொன்னால் அதை வச்சு புதுசு புதுசா எது எதையோ நான் கண்டு பிடிப்பேன். அப்படி நான் கண்டு பிடிச்சா என்னை ஒபாமா அமெரிக்கா வுக்கு வர சொல்லி கூப்பிடுவார்தானே?" என்று அப்பாவித் தனமாகக் கேட்டான் அப்புமணி.
அந்தப் பதிலை சற்றும் எதிர்பார்த்திராத,அந்த பதிலைக் கேட்டு திகைத்து போன அம்மா, "கண்டிப்பா கூப்பிடுவார். அவரே இங்கே வந்து உன்னை அமெரிக்காவுக்கு கூட்டிட்டுப் போவார் . உனக்கு ஏன் அமெரிக்கா மேலே,  ஒபாமா மேலே  அப்படி யொரு ஆசை ? " என்று கேட்டாள் .
"எனக்கு அவர் நடக்கிறது ரொம்பப் பிடிக்கும் ?" என்றான் அப்புமணி 
"நடக்கிறதுன்னா ?"
"அவர் நடந்து போறதை சொல்றேன் "
"என்னடா இது .. எல்லாருக்கும் இருக்கிற மாதிரி அவருக்கும் ரெண்டு காலுதான்.. எல்லாரையும் மாதிரிதான் அவரும் நடக்கிறார் "
"நீ பார்த்த லட்சணம் அவ்வளவுதான் ....டீவீயில் எத்தனையோ நாடுகளை எத்தனையோ தலைவர்களைக் காட்டறாங்க..அதில் நிறைய பேர் அவங்க என்னவோ ஏதோ ஒரு சவஊர்வலத்தில் போற மாதிரி உடம்பை அசைக்க முடியாமே அசைச்சு அவஸ்தைப் பட்டுகிட்டுதானே நடந்து போறாங்க. ஆனா ஒபாமா நடையில் ஒரு துள்ளல் இருக்குது. துள்ளி துள்ளி என்னமா நடந்து போறார் அரேபியக் குதிரை மாதிரி. நம்ம காந்திஜி நடையில் ஒரு வேகம் இருக்கும். இந்திரா காந்தியும் அப்படித்தான் நடப்பாங்க ...அவங்க நடையில் ஒரு கம்பீரம் இருக்கும்.  இந்திராகாந்தி நடைக்கு ஈடு குடுத்து யாராலும் நடக்க முடியாது. இந்திராகாந்தி நடந்து போனால், அவங்க  பின்னாலே போற செக்யூரிட்டி எல்லாரும் அவங்க பின்னாலே ஓடி ஓடித்தான் போவாங்க. அந்த நடையை அவங்களுக்குப் பின்னாலே இந்தியாவிலே வேறு யாரிட்டேயுமே பார்க்க முடியலே. MGR நடையில் ஒரு சுறுசுறுப்பு இருக்கும். " என்று அப்புமணி சொல்ல, "அப்பு .. இது நீயா பேசுற விஷயம் இல்லே.  இந்த மாதிரி பேச யார் சொல்லித் தந்தாங்க ?" என்று அம்மா கேட்டாள். 
"ஹிஹி " என்று அசடு வழிந்த அப்புமணி, "அன்னிக்கு நாங்க ஸ்கூல் போயிட்டு வரும்போது  டவுனில் ஒரு மீட்டிங் நடக்க இருந்துச்சு. அங்கே என்ன நடக்குன்னு பார்க்க நாங்க போனோம்.  ரொம்ப நேரம் ஆகியும் மீட்டிங் ஆரம்பிக்கவே இல்லே. அப்போ எங்க பக்கத்திலே ரெண்டு தாத்தா நின்னுட்டு இருந்தாங்க. அவங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கிறப்போ ஒரு தாத்தா பேசினது ரொம்ப வேடிக்கையா இருந்துச்சு.. கையைக் கையை ஆட்டி கண்ணை உருட்டிஉருட்டி பேசினார். அதை வேடிக்கை பார்த்துட்டே இருந்தேனா ... அப்போ அவங்க பேசினது என் காதில் விழுந்துச்சு ..  அதைத்தான் அப்படியே மனப்பாடம் பண்ணி இப்போ உன்கிட்டே அவுத்து விட்டேன். எப்படி இருக்கு நம்ம சரக்கு. சிங்காரி சரக்கு நல்ல சரக்கு. இந்த அப்புமணி சரக்கு ரொம்ப அசத்தற சரக்கு " என்று சிரிப்புடன் பாடினான் அப்புமணி .
"அதானே பார்த்தேன் ... என் பிள்ளையாவது இவ்வளவு விவரமா பேசறதாவது?எல்லா வீட்டிலேயும் எல்லாரும் தூங்கிட்டு இருக்காங்க தானே. நீயும் தூங்கு" என்று அம்மா சொன்னதும் அப்புமணியின் முகம் வாடிப் போனது.
"அப்படின்னா எனக்கு எதுவுமே தெரியாதா ?"  என்று கேட்டான் .
"உனக்கு எல்லாம் தெரியும். அதைத் தெரிஞ்சிக்கிற அளவுக்கு எனக்கு மூளை இல்லை .... போதுமா ?" என்று கேட்டாள் அம்மா 
"ஊம் ... அப்படி வாங்க வழிக்கு.... இப்போ நான் தூங்கப் போறேன்" என்று சொல்லி படுக்கையில் சுருண்டு படுத்தான் அப்புமணி. 
"கடவுளே ... இந்தப் பிள்ளையை எப்படிக் கரை சேர்க்கப் போறேனோ தெரியலையே " என்று கவலையுடன் சொன்ன அம்மா, அப்புமணியை அணைத்தபடி தூங்க ஆரம்பித்தாள்.
--------------------------------------          தொடரும் ----------------------------------

      

No comments:

Post a Comment