Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, November 27, 2015

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 17

                           
          அச்சுப்பிச்சு அப்புமணி !
அமெரிக்கக் கனவுகளோடு தூங்கி எழுந்த அப்புமணி மறுநாள் காலையில் மிகவும் உற்சாகமாகத்தான் பள்ளிக்குக் கிளம்பிப் போனான். ஆனால் வீடு திரும்பும்போது அவன் முகத்தில் ஒரு கவலை இருந்தது. அதை அம்மாவும் கவனித்தாள்.
"அப்பு ... என்ன ... ஏன் டல்லா இருக்கிறே ?"
"நம்ம நாட்டாமை தாத்தா வீட்டுக்கு  ஒரு குண்டு அண்ணன் வருவான் தானே. பார்க்கிறதுக்கு சினைப் பன்னி மாதிரி இருப்பானே. அவன் ... அவன் ... என்னை திட்டினான். கையை ஓங்கிக்கிட்டு அடிக்க வந்தான்" என்று அழுகிற குரலில் சொன்னான் அப்புமணி.
"உனக்கு அந்தப் பக்கம் எந்த வேலையும் இல்லையே. பிறகு ஏன் அங்கே போனே ?"
"ஸ்கூலுக்கு வழக்கமா போற பாதையில் தண்ணி தேங்கி நின்னுச்சு.
அசுத்த தண்ணியிலே சேத்துத் தண்ணியிலே, காலை வைக்கக் கூடாதுனு நீங்க எப்பவும் எங்கிட்டே சொல்லுவீங்கதானே .அதான் ரெண்டு தெரு சுத்தி நாட்டாமை   தாத்தா வீட்டு வழியா ஸ்கூல் போகலாம்னு நினைச்சு போனேன் "
"அதுக்காகவா அவன் உன்னைத் திட்டினான். அடிக்க வந்தான்?" என்று கோபமாகக் கேட்டாள் அம்மா. 
"நான் அவன் கிட்டே 'அன்னிக்கு டவுண் மீட்டிங்கில் கங்கையையும் காவிரியையும் ஒண்ணு சேர்க்கணும்னு கையிலே கொடி பிடிச்சிட்டு கத்துனீங்கதானே. ரெண்டு நாளைக்கு முன்னே பெய்ஞ்ச மழையில் ஊரெல்லாம் தண்ணி வெள்ளமா ஓடுச்சே  .. இப்போ அந்த வெள்ளத்தைக் காணலையே. அதை எந்த ஆத்திலே கொண்டு போய் சேர்த்தீங்கனு கேட்டேன். அதுக்குதான் அவன் அடிக்க வந்தான். என்னை 'உதவாக் கரை, நீயெல்லாம் கேள்வி கேட்கிற அளவுக்கு நான் இறங்கிப் போயிட்டேனா?' அப்படின்னு  கேட்டான். நாட்டாமை தாத்தா வந்து அவனை திட்டினார். 'நீ ஸ்கூலுக்கு போடா கண்ணா'ன்னு எங்கிட்டே சொன்னார்." என்றான் அப்புமணி. 
"உள்ளதை சொன்னா எவனுக்கும் கோபம் வரத்தானே செய்யும். அவன் கிடக்கிறான் கழிசடை.  உனக்கு சுடசுட அடை தோசை சுட்டுத் தர்றேன். நீ சாப்பிடு.  அப்புறமா நாம கோவிலுக்குப் போயிட்டு வரலாம் " என்று அப்புமணியை சமாதானப் படுத்தினாள் அம்மா . 
வெள்ளித் தட்டில் சுட சுட அடைதோசையை அப்புமணி முன்பாக வைத்து விட்டு  "சாப்பிடு .. அம்மா காபி கலந்துட்டு வர்றேன் " என்ற சொல்லி சமையலறைக்கு சென்ற அம்மா சிறிது நேரத்தில் காபி டம்பளருடன் அங்கு வந்தாள். அப்புமணி முன்பாக வைத்த அடைதோசை அப்படியே இருந்தது .
"ஏன் கண்ணு சாப்பிடலே ?" என்று அம்மா கேட்க, "அம்மா, நீ எனக்கு உருப்படாத ராஜகுமாரன் கதை சொல்லி இருக்கிறேதானே ?" என்று கேட்டான் அப்புமணி  
"ஆமாம் .. அதுக்கு என்ன இப்போ ?"
"அந்தக் கதையில் வர்ற ராஜகுமாரனை யாருக்குமே பிடிக்காது. அவனை எல்லாருமே  'உருப்படாதவன்', 'உதவாக்கரை'னுதான் சொல்லுவாங்க. உடனே அவனோட அம்மா அந்த ராஜகுமாரனைக் கூப்பிட்டு, ' நீ இந்த அரண்மனையை விட்டுப் போய் ஊர் உலகமெல்லாம் சுத்திப் பார்த்து நாலு நல்லது கெட்டதை தெரிஞ்சுகிட்டு முழு மனுஷனாத் திரும்பி வா' அப்படின்னு சொல்லியிருப்பாங்க. அவனும் அதைக் கேட்டு ஊர் உலக மெல்லாம் சுத்திட்டு ரொம்பவும் அனுபவஸ்தனா அந்த நாட்டுக்குத் திரும்பி வருவான். அதுக்குப் பிறகு அவனை எல்லோருக்கும் பிடிக்கும் " என்று அப்புமணி சொல்லிக்கொண்டிருக்கும் போதே,"ஆமாம் .. அதுக்கு என்ன இப்போ? அடை ஆறுது .. சீக்கிரம் சாப்பிடு " என்றாள் அம்மா.
"எனக்கு சாப்பாடு வேண்டாம். நானும் அந்த உருப்படாத ராஜகுமாரன் மாதிரி வீட்டை விட்டுப் போகப் போறேன்" என்று அப்புமணி சொல்ல அதைக் கேட்டு பதறிப் போனாள் அம்மா, 
"உன்னை யார் வேணும்னாலும் என்ன வேணும்னாலும் சொல்லட்டும். அதைப்பத்தி எனக்கு எந்தக் கவலையும் இல்லே. நீ அந்த மாதிரி பேச்சைக் காதிலேயே வாங்காதே. எனக்குப் பிள்ளையா நீ இந்த வீட்டில் இருந்தால் அதுவே போதும். என் உடம்பில் உயிர் இருக்கிறவரை உனக்கு அந்த நினைப்பே வரக்கூடாது. அம்மா இன்னும் இந்த உலகத்தில்  உயிரோடு இருக்கிறேன்னு சொன்னால் அது உனக்காக மட்டுந்தான். நீ எங்கேயும் போகக் கூடாது. அந்த நினைப்பு கூட உனக்கு வரக் கூடாது " என்று அழுது கொண்டே சொன்னாள்  அம்மா.
"அம்மா ... நான் உலகத்தைப் பத்தி தெரிஞ்சுக்க வேண்டாமா ?"
"அப்பு ... உனக்கு யாரைத் தெரியும் ? என்ன தெரியும் ? நீ எங்கே போவே ?"
"அதெல்லாம் எனக்குத் தெரியாது. நானும் உருப்படாத ராஜகுமாரன் மாதிரி கால் போன போக்கில் போவேன்"
"வேண்டாம் கண்ணு. நீ குழந்தைடா ... இந்த உலகம் ரொம்பப் பொல்லாத உலகம்டா. அதை புரிஞ்சுக்கிற பக்குவம் உனக்குக் கிடையாது கண்ணு ".
"அரண்மனையை விட்டு உலகத்தை சுத்திப் பார்க்கக் கிளம்பின ராஜ குமாரனை அவங்க அம்மா, அதான் அந்த நாட்டு ராணி  எவ்வளவு சந்தோசமா வாழ்த்தி வழியனுப்பி வச்சாங்க. நீ மட்டும் ஏன் அழறே ?"
"அது கதைடா.. இது நிஜ வாழ்க்கை ... கதையில் நடக்கிறதெல்லாம் நிஜ வாழ்க்கையில் அவ்வளவு சீக்கிரத்தில் நடந்துடாது "
"என்னைப் போகக் கூடாதுன்னு நீங்க சொன்னா உங்களுக்குத் தெரியாமே நான் வீட்டை விட்டு ஓடிப் போயிடுவேன்"
"நீ எங்கே போவே ? உனக்குப் பசி எடுக்கும் போது  உனக்கு யார் சாப்பாடு போடுவாங்க ?  எங்கே தங்குவே ?"என்று அம்மா கேட்க,"அதெல்லாம் எனக்குத் தெரியாது. எங்கியோ போவேன். என்னத்தையோ செய்வேன். அது பத்தி எனக்கே தெரியாது. ஆனால் போவேன். நீங்க வேண்டாம்னு சொன்னால் நீங்க தூங்கிட்டு இருக்கிறப்போ ஓடிப் போயிடுவேன்   " என்று பிடிவாதமாக சொன்னான் அப்புமணி. 
சிறிது நேரம் யோசனையில் இருந்த அம்மா, "ரெண்டு செட் டிரஸ் எடுத்து வச்சுக்கோ. அம்மா உனக்கு நூறு ரூபா தர்றேன். அதை பத்திரமா வச்சுக்கோ. பணம் செலவாகிப் போயிட்டா மேற்கொண்டு பணத்துக்காக  நீ திருடக் கூடாது. பிச்சை எடுக்கக் கூடாது. அம்மா உனக்கொரு லெட்டர் தருவேன். அதைப் பத்திரமா கையில் வச்சுக்கோ. பணம் செலவழிஞ்சு போய் வீட்டுக்குத் திரும்ப முடியாத நிலைமையில் நீ இருந்தால் அந்த இடத்துக்குப் பக்கத்தில் இருக்கிற போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்  இந்த லெட்டரைக் காட்டு ." என்று அம்மா சொல்லும்போதே "ஏன்? அதில் என்ன எழுதுவே ?" என்று கேட்டான் அப்புமணி.
"அந்த கடிதத்தில் 'இந்தப் பையன் விளையாட்டுத்தனமாக வீட்டை விட்டுக் கிளம்பி வந்திருக்கிறான். கீழ்க்கண்ட விலாசத்துக்கு தகுந்த துணையோடு இந்தப் பையனை அனுப்பி வைக்கவும். அதற்க்கான செலவை நான் தந்து விடுகிறேன்'னு எழுதுவேன். அதைப் படிச்சிட்டு அவங்க உன்னை இங்கே கொண்டாந்து விட்டுடுவாங்க" என்று விளக்கினாள் அம்மா  
மனசுக்குள் ஆயிரமாயிரம் கவலையும் பயமும் இருந்தாலும், யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு ஓடி விடக் கூடாதே என்ற பயத்தில்தான் அம்மா இந்த ஏற்பாட்டை செய்தாள். அப்புமணி ஈ எறும்புக்குக் கூட தீங்கு பண்ண மாட்டான். அவனுக்குத் தெய்வம் காவலாக இருக்கும். அதுவும் இல்லாமல் வெளியூர் போகிற அளவுக்கெல்லாம் அவனுக்குத் துளியும் தைரியமோ சாமர்த்தியமோ கிடையாது. பஸ் ஸ்டாண்ட் வரை போவான். தூக்கம் வந்தால் வீட்டைப் பார்த்து ஓடி வந்து விடுவான் என்று தனது மனதுக்குள் அம்மா ஒரு கணக்குப் போட்டு வைத்திருக்க,  "விதி" வேறு விதமாக கணக்குப் போட்டுள்ளதை அம்மா அறிந்திருக்கவில்லை ..
-----------------------------------------------------   தொடரும் -----------------------------------------------------

No comments:

Post a Comment