Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, November 28, 2015

DEAR VIEWERS,

                              விமரிசனங்கள் வரவேற்கப் படுகின்றன !

தொலைக் காட்சித் தொடர்களின் முடிவிலும், சில பத்திரிக்கைகளில் வெளியாகும் கட்டுரைகளின் கடைசி வரியிலும்  வெகு சாதாரணமாக நாம் பார்க்கக் கூடிய வார்த்தைகள் இவை. என்னுடைய நெருங்கிய தோழி ஒருத்தி என்னுடன் பேசிக் கொண்டிருக்கும்போது டீவீ சீரியல் பற்றிய பேச்சு எங்களுக்குள் வந்தது. "சீரியலை ஒளிபரப்பி முடிச்சிட்டான். இதுக்குப் பிறகு விமரிசனத்தை படிச்சுப் பார்த்து என்ன செய்யப் போறாங்க . முடிஞ்சது முடிஞ்சதுதானே ?" என்றாள்.
தோழிக்குக் கொடுத்த விளக்கத்தை இங்கும் பதிவு செய்கிறேன்.
"நாம ஒரு வேலையை ரொம்பவும் சிரத்தையா செஞ்சிட்டு இருப்போம். அப்போ அதில் இருக்கிற சிறு சிறு குறைகள் நம்ம கவனத்துக்கு வராது. ஆனால் அந்தக் குறைகள் எல்லாம் , நாம செய்ற வேலையை ஒரு ஓரமா உட்கார்ந்து வேடிக்கை பார்த்துட்டு இருக்கிறவங்களுக்கு உடனேயே கண்ணில் படும். அவர்கள் அதை சுட்டிக் காட்டினால் ஒரு சிலர் அதை சந்தோசமாக ஏற்றுக் கொள்வார்கள். அந்தத் தப்பைத் திருத்திக் கொள்வார்கள். நானே நிறைய விமரிசனம் எழுதி அனுப்பி யிருக்கிறேன். மொத்தத்தில் விமரிசனம் என்பது நடந்து முடிந்து விட்ட தவறுகளை சரி செய்வதற்கான சரியான வாய்ப்பு. தருணம் " என்று சொல்ல, "அதை அவங்க படிச்சுப் பார்ப்பாங்களா?" என்று எதிர்க் கேள்வி கேட்டாள் தோழி.
அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும் விதமாக நான் ஒரு லிஸ்டே அவங்க கிட்டே கொடுத்தேன். 
1. முன்னே "கிருஷ்ண தாசி"ன்னு ஒரு சீரியல் சன் டீவீ யில் வந்துது. ஜெமினி கணேஷ், நளினி, ரஞ்சிதா எல்லாரும் நடிச்சாங்க. அந்தக் கதையில் ஜெமினி  ஒரு கோபக்கார ஆள். கிராமத்தில் வசிப்பவர். அவருக்கு அந்த கிராமமே நடுங்கும். ஆனால் அந்த வீட்டில் உள்ள ஒரு ஆள் வேண்டாத வேலையெல்லாம் செய்வார். அந்த அக்கிரமத்தை செய்றது இவன்தான்கிறது  எல்லாருக்கும் தெரியும். ஆனால் ஜெமினிக்கு மட்டுந் தெரியாது என்பது போல காட்சிகள் வெளியாகின. அதைப் பார்த்த நான், "கிராமத்தில் எந்த ஒரு சிறு விஷயம் நடந்தாலும் அது உடனே எல்லாருக்கும் தெரிந்துவிடும். ஊருக்கே பெரிய மனுஷன் ஜெமினி. எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் அவருக்கு மட்டும் எப்படித் தெரியாமே போச்சு ?' என்று கேட்டு லெட்டர் அனுப்பினேன். அந்தக் கேள்விக்கு பதில் சொல்லும் விதமாக ஒரு காட்சி, நான் லெட்டெர் அனுப்பின மறு வாரமே வெளியானது. அதில் ஒருவர் சொல்லுவார், "ஊருக்கே தெரிஞ்ச விஷயம் உங்க அப்பாவுக்குத் தெரியாமல் இருக்குமா? எல்லாம் தெரிஞ்சிண்டுதான் எதுவுமே தெரியாத மாதிரி இருக்கிறார்"என்று. இந்த வார்த்தையை அவர்கள் போட்டு விட்டதால் சீரியல் பார்ப்பவர்களுக்கு ஜெமினியின் செய்கை ஒரு குறையாகத் தெரியாது.  
2. ஒரு சீரியல். அது "அரசி"யா அல்லது "அண்ணாமலை"யா என்பது நினைவில் இல்லை. அந்த சீரியலில் வரும் சம்பவங்கள் கிராமத்தில் நடப்பது போல வரும். ஆனால் ஒரு சீனில் டபுள் டெக்கர் பஸ் போவதை சீரியல் பார்க்கும்போது நான் கவனித்தேன். சென்னையைத் தவிர வேறு எந்த ஊரிலும் அந்த சமயத்தில் டபுள் டெக்கர் பஸ் செர்விஸ் கிடையாது . இன்னொரு சீனில், கதை பிளாஷ் பேக்கில் காட்டப் படும். அப்போது ரேடியோவில், "சென்னை வானொலி நிலையம், செய்திகள் " என்று சொல்வது போல ஒரு காட்சி வந்தது. கதையில் வரும் அந்த கால கட்டத்தில், "ஆகாஷ் வாணி, மத்ராஸ் வானொலி நிலையம்" என்றுதான் ரேடியோவில் சொல்வார்கள் . அதை அவர்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்பி RADAN MEDIA க்கு போன் செய்தேன். போனை எடுத்த ஒருவர், என்ன விஷயம் என்று விசாரித்தார். விஷயத்தை நான் சொன்னதும், "இந்த போனை டைரெக்டர்ட்டே கொடுக்கிறேன். நீங்களே இதை சொல்லுங்க" என்று சொல்லி போனை அவரிடம் கொடுத்தார் . (C.J. பாஸ்கர்தான் அந்த தொடரின் டைரெக்டர்). நான் சொல்வதைப் பொறுமை யாகக் கேட்ட அவர்  "தேங்க்ஸ். இது மாதிரி விஷயங்கள் உங்கள் கண்களில் படும்போது அதை எங்களுக்கு மறக்காமல் சொல்லுங்கள்" என்றார்.
3. கோலங்கள் சீரியல் ஒளிபரப்பான போது , அது பற்றி கருத்து தெரிவிக்க விகடன்டெலிவிஸ்டாஸ்க்கு போன் செய்தேன்.அங்கு போன் அட்டெண்ட் பண்ணின ஒருவர்  "இப்போ director இங்கே இருக்கிறார். நீங்களே சொல்லலாம்"என்றார். எனது கருத்தை திருச்செல்வத்திடம் சொன்ன போது  "அப்படிங்களா ? சரிங்க ... சரிங்க ... செஞ்சுடறோம் " என்று மட்டும் சொன்னார். (அவரிடம் நான் கேட்ட கேள்வி "அப்பாவையே அடிக்கத் துடிக்கிற, அழிக்கத் துடிக்கிற ஒருவன், எந்தவித பணபலமோ படை பலமோ இல்லாத ஒரு எளிய குடும்பத்துப் பெண்ணை நொடிப் பொழுது நேரத்தில் அடையாளம் இல்லாமல் பண்ணிவிடலாமே. அதை விட்டு விட்டு ஏன் மல்லுக்கு நிற்கவேண்டும்?"). அந்த வாரத்தில் சீரியல் மூலம் கிடைத்த பதில், "அந்த அபி அவ்வளவு சீக்கிரம் அழியக் கூடாது. என் கையால் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் அழியணும்).
4. சில வருடங்களுக்கு முன்பு "நிஜம் " என்ற நிகழ்ச்சியை சன் டீவீயில் இரவு பத்து மணிக்கு மேல் ஒளிபரப்பினார்கள். அதை நான் பார்ப்பேன். மறுநாளே அதை பற்றி அவர்களிடம் பேசுவேன். போன் அட்டெண்ட் பண்ணுவது யார் என்பதெல்லாம் தெரியாது. சொல்ல நினைப்பதை சொல்லி விடுவேன். "அடிக்கடி பேய்கள்  பத்தியே காட்டறீங்க. எனக்கும் ரொம்ப நாளா ஒரு ஆசை , எங்கள் வீட்டில் ஒரு பேய் வளர்க்கணும்னு . நீங்கள் பேய் பத்தின நிகழ்ச்சிகளை ஷூட் பண்றச்சே பேய் கிடைச்சா ஒரு பேயை கூட்டிட்டு வந்து என்கிட்டே கொடுங்களேன்" என்றேன். "இதெல்லாம் ஒரு விஷயமா ? நாட்டில் நிறைய ஆண்கள் அதுகூட குடித்தனமே நடத்தறாங்க " என்று பதில் வந்தது எதிர் முனையிலிருந்து .ஒரேஒரு முறை மட்டும் "நான் யாரோடு பேசறேன்னு தெரிஞ்சுக்கலாமா ?" என்று கேட்டேன். ஜெய ராணி என்று பதில் வந்தது. அவர்கள் முகம் அப்போது தெரியாது. சில வாரங்களுக்கு முன்பு விஜய் டீவீ யின்  "நீயா நானா " பகுதியில் guest ஆக வந்திருப்பவர் ஜெய ராணி என்று சொல்லி அவர் குறித்த விவரம் சொன்னார்கள். அப்போது எனக்கு நினைவில் வந்த விஷயம் நான் இவங்க கூட போனில் பேசியிருக்கிறேன்  என்பதுதான்.
5.விஜய் டீவீ யின்  "நீயா நானா " பகுதி ஒளி பரப்பாகும்போது எனது மனதில் தோன்றும் கருத்துக்களை கோபி ஸார்க்கு  sms பண்ணுவேன். (இப்போது அப்படி செய்வதில்லை. என்னுடைய மொபைலில் என்ன பிரச்சினை என்பது தெரியாது. நான் அனுப்பும் sms, எனக்கு வரும் smsக்கு நான் அனுப்பும்   பதில்கள் எல்லாம் என்னோட inbox க்கு திரும்பி வந்துடுது. அதனால் நான் சொல்ல நினைத்த விஷயத்தை போனில் சொல்லலாம் என்று நினைத்து கோபி ஸாரை போனில் தொடர்பு கொண்டேன்."நான் ரொம்பவும் முக்கியமான வேலையில் இருக்கிறேன். ஒரு அரைமணி நேரம் கழித்து தொடர்பு கொள்ளுங்களேன்" என்றார்.
இதற்கிடையில் எங்களது லஞ்ச் ப்ரேக் நேரம் வந்தது. அப்போது எனது தோழி, "நாமளே ஆபீசுக்குக் கிளம்பற அவசரத்தில் இருக்கிறோம். நேரம் காலம் தெரியாமே போன் பண்ணி நம்ம கழுத்தை அறுப்பாங்க.பாத் ரூமில் குளிச்சிட்டு இருப்போம். போன் உயிர் போற மாதிரி அலறும். ஓடி வந்து எடுப்போம்."ஒண்ணுமில்லே.. சும்மாத்தான் போன் பண்ணினேன். எப்படி இருக்கீங்க?'னு அவங்க கேட்கிறப்போ ஒரு பக்கம் சந்தோசமும் ஒரு பக்கம் அவங்க கழுத்தை அப்படியே நெரிக்கலாம் போல ஆத்திரமும் வருது. இன்னிக்குக் காலம் கார்த்தாலே ஒரு போன். அடுப்பில் வச்சிருந்த குழம்பு வத்தி துவையல் மாதிரி கட்டியா ஆகிப்போச்சு. இதை நீங்களும் சாப்பிட்டே ஆகணும் " என்ற படி அதை எனது தட்டிலும் வைத்தாள். தோழி சொன்ன விஷயம் என்னை சிந்திக்க வைத்தது.
"நாம பாட்டுக்கு இதைப் பத்தி  கருத்து சொல்றோம் ...அதைப் பத்தி   கருத்து சொல்றோம் அதுஇதுன்னு ஒவ்வொருத்தரையும் கூப்பிட்டு பேசிட்டு இருக்கிறோம். அவங்க என்ன அவசர வேலையில் இருக்கிறார் களோ என்பதை நாம நினைச்சு கூடப் பார்க்காமல், முட்டாள் மாதிரி யார் யார் நேரத்தைஎல்லாமோ வீணடிச்சிருக்கோமே" என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். அதன் பிறகு போனில் கருத்து சொல்வது sms ல் கருத்து சொல்வது என்று எல்லா விஷயத்தையும் நிறுத்தி விட்டேன். இப்போ நான் sms அனுப்பினாலும் அது வெளியில் போகாது என்பது தனிப் பட்ட விஷயம். எனது நெருங்கிய உறவுகளிடம் கூட மிகவும்  அவசியம் ஏற்பட்டால் மட்டுமே போனில் பேசுவேன்.  அதுவும் அவர்கள் கார் ஓட்டுகிறவர்கள்  டூ வீலரில் போகிறவர்கள் என்றால் போன் பண்ணும் முன்னாலே ஒருமுறைக்கு பலமுறை யோசித்த பிறகே போன் பண்ணுவேன். 
விளம்பரம், சைடு பிக்சர் எல்லாம் முடிஞ்சுது. இனி மெயின் பிக்சருக்கு வருவோம்.   
விமரிசனம் என்பது ஒரு தனிப்பட்ட மனிதருடைய வளர்ச்சிக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ மிகமிக தேவையான ஒன்று. ஆனால் விமரிசனங்கள் நேர்மையாக இருக்க வேண்டும். அதை ஏற்றுக் கொண்டு தன்னைத் திருத்திக் கொள்ளும் ஆரோக்கியமான மனப் பக்குவம் எல்லோருக்கும் வேண்டும். இதுபத்தி இங்கே ரொம்ப ரொம்ப விரிவாகவே பேசலாம். அதனாலே அடுப்படி வேலை, ஆபீஸ் வேலை இதை எல்லாம் முடிச்சிட்டு உங்களுக்கு நேரம் இருக்கிறப்போ கதை கேட்க உட்காருங்க. 
முதலில் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். வளர நினைப்பவர்கள் தங்களைப் பற்றிய விமரிசனங்களைக் காது கொடுத்து கேட்க வேண்டும். சுய சிந்தனை ஆரோக்கியமான சிந்தனை உள்ள எவனும் தனக்கு ஜால்ரா அடிப்பவனின்  தாளத்தை கேட்க மாட்டான். தன்னுடைய பாட்டுக்கு எதிர்ப் பாட்டு பாடுகிறவன் பக்கமே அவனது முழுக் கவனமும் இருக்கும். எதிர்ப் பாட்டில் சொல்லப் படும் சூசக வார்த்தைகளைப் புரிந்து கொண்டு அது திரும்ப நேராதபடி பார்த்துக் கொள்வான். அது வெற்றிக்கு முதல்படி.
இந்தக் காலத்தில்  மீடியாக்கள் உலகில் நடக்கும் பலபல  விஷயங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறது . இவை எதுவுமே இல்லாத அந்தக்   காலத்தில் ராஜாக்கள் இரவு நேரத்தில் மாறுவேடத்தில் வலம்வந்து மக்களின் கருத்துக்களைத் தெரிந்து கொண்டு அதற்குத் தகுந்தபடி தன்னை மாற்றிக் கொண்டார்கள். நியாயமான ஒன்றைக் கூட தனக்கு எதிராக நின்று சொல்வதற்கு தனிமனிதன் தயங்குவான். அவனவன் இருக்கும் இடத்தில் அவர்கள் கருத்துக்களைப் பகிரங்கமாக பகிர்ந்து கொள்வார்கள் என்பதை  உணர்ந்துதான் அந்தக் கால அரசர்கள் மாறு வேடத்தில்நகர்வலம் வந்தார்கள். அரசனைப்பற்றிய மக்களின் விமரிசன த்தை  அவர்கள் தெரிந்து கொண்டார்கள். தங்களைத் தாங்களே திருத்திக் கொண்டார்கள் . 
பத்திரிக்கைகளில் நாம் படிக்கும் ஒரு சில விமரிசனங்கள் காலத்துக்கும் அழியாமல் நமது நினைவில் நிற்கும். இப்போதெல்லாம் ஒரு நாளைக்கு ஒரு சினிமா வெளியாகிறது. கிட்டத் தட்ட 50 வருடங்களுக்கு முன்பு ஒரு வருடத்தில் பன்னிரண்டு படம் வெளியானால் அதுவே பெரிய விஷயம். வெளியாகும் எல்லாப் படங்களையும் பார்த்துவிடுவோம். அந்தப் படம் குறித்து பத்திரிக்கைகளில் வெளியாகும் விமரிசனங்களைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருப்போம். நிறைய வீடுகளில், ஒரு சினிமாப் படம் பற்றி நல்ல விதமாக விமரிசனங்கள் வந்தால் மட்டுமே அந்தப் படங்களுக்குத் தங்கள் வீட்டுக்குழந்தைகளை அழைத்து செல்வார்கள் . பல வருடங்களுக்கு முன்பு "சிவந்தமண்" என்ற திரைப்படம் வெளி வந்தது. படம் வெளியாகும் முன்பே அனைவரின் ஆர்வத்தையும் தூண்டிய படம் அது. ஸ்ரீதர் டைரெக்ஷனில் வெளிநாடுகளில்  படமாக்கப் பட்ட சிவாஜி நடித்த படம்.  படம் வெளியான பிறகு  நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு அது இல்லை என்பதை நாங்கள் உணர்ந்தோம். வெளிநாட்டுப் படப்பிடிப்பைத் தவிர அதில் வித்தியாசமாக எதுவுமில்லை. வழக்கமான சிவாஜி படமாகவே தோன்றியது. இந்த படத்துக்கான சினிமா விமரிசனம் குமுதம்  பத்திரிக்கையில் வெளியான போது, "நாங்கள் இன்னும் அதிகம் எதிர்பார்த்தோம்" என்று comment கொடுத்திருந்தார்கள். அதற்க்கு வாசகர் ஒருவர் "நீங்கள் எவ்வளவு எதிர் பார்த்தீர்கள்? அவங்க எவ்வளவு குடுத்தாங்க?" என்று கேள்வி கேட்டிருந்தார். அது வாசகர் கடிதம் பக்கத்தில் வெளியானது. அதைப் படித்த நாங்கள் எல்லோருமே, அவன்தான் அப்படிக் கேட்டான் என்றால் இவங்க துளிக்கூட வெட்கமில்லாமல் அதை பிரசுரம் பண்ணி இருக்காங்களே என்று சொல்லிக் கொண்டோம். 
நான் எழுதிய கதைகள் பத்திரிக்கைகளில் வெளியாகும் போதெல்லாம் என்னிடம்  பாராட்டுத் தெரிவித்தவர்களின் வார்த்தைகளுக்கு அளித்த மதிப்பை விட, அதிலுள்ள குறைகளை சுட்டிக் காட்டியவர்களின் வார்த்தைகளுக்கு அதிகம் மதிப்புக் கொடுத்து அந்தத் தவறு திரும்ப வராதபடி பார்த்துக் கொண்டேன். பொது வாழ்க்கையில் ஈடுபட நினைத்தால் அதற்க்கு நமது செய்கைகள் பற்றிய விமரிசனம் வேண்டும் என்பதையும், அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எனக்கு வேண்டும் என்பதையும் நான் எனக்குள்ளே நடைமுறைப் படுத்தி வைத்திருந்தேன்.
விமரிசனங்கள் ஜோதிடங்கள் எல்லாமே ட்ராபிக் சிக்னல் மாதிரிதான். முன்பின் தெரியாத ஒரு இடத்துக்கு வாகனத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது  அங்கங்கு காணப்படும்  ட்ராபிக் வார்னிங்களைப் புரிந்து கொண்டு நமது ட்ரைவிங்கை நமது கண்ட்ரோலில் வைத்திருந்தால் நாம் பார்க்க விரும்பியவர்களை நாம் நேரடியாக சென்று பார்க்கலாம். இது எல்லாம் வேலை வெட்டி இல்லாதவன் செய்றவன் வேலை. நாம் எல்லாந் தெரிந்த மேதாவி என்ற நினைப்பில் வண்டி ஓட்டினால் அப்புறம் மற்றவங்கள் வந்து நம்மைப் பார்க்கிற நிலைமை வந்து விடும். (இங்கு  TRAFFIC WARNING  என்று நான் சொல்வது, "இங்கு குறுகிய வளைவு உள்ளது ", "இங்கு ஆறு ஒன்று குறுக்கே ஓடுகிறது ", "அடுத்த பெட்ரோல் பங்க் இன்னும் பத்து கிலோ மீட்டர் தள்ளி இருக்கிறது" என்பது போன்ற எச்சரிக்கைக் குறிப்புகளைத்தான். 

ரொம்ப போரடிச்சிட்டோனோ. இதோ நிறுத்திட்டேன். இது பற்றிய உங்கள் விமரிசனங்களை நீங்கள் பதிவு செய்யலாம். யாரோட விமரிசனம் என்னைக் கோபப் படுத்துகிறதோ அது என்னை சிந்திக்கவும் வைக்கும். 
ஏதோ ஒரு கதையில் எப்போதோ படித்த வரிகள் : உங்களை யாராவது விமரிசனம் செய்தால் உங்களுக்குக் கோபம் வருகிறதா ? அப்படியானால் அது மிகச்சரியான விமரிசனந்தான்.!

No comments:

Post a Comment