Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, November 06, 2015

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 14

                                       
      அச்சுப்பிச்சு அப்புமணி ! 
"அரிசந்திர மகாராஜன் கதையை நான் சரியாத்தானே சொன்னேன். பிறகு ஏன் இப்படிக் கோபமா பார்க்கறீங்க ?" என்று கேட்டான் அப்புமணி .
"உனக்கு சரியாத்தான் பேர் வச்சிருக்காங்க அச்சுப்பிச்சுன்னு. ஒரு கதை யோட அர்த்தத்தை அனர்த்தம் பண்றே ?" என்றாள் அம்மா 
"அனர்த்தம்னா என்ன ?"
"ஒரு விஷயத்தில் உள்ள கருத்தைத் தப்பாப் புரிஞ்சுக்கிறது. உயிரே போகிற நிலைமை வந்தால் கூட பொய் சொல்லகூடாது, உண்மைதான் பேசணும்னு ஒரு கதையை சொன்னால், நீ அதை புரிஞ்சுக்கிறதை விட்டுட்டு, உண்மையை சொன்னால் கஷ்டம் வரும். அதனால் பொய் பேசலாம்னு சொல்றே ?" என்று கேட்டாள் அம்மா. "இனிமேல் நானும் அரிசந்திர மஹராஜா மாதிரி உண்மைதான் பேசுவேன்" என்றான் அப்புமணி 
அப்போது வாசல் பக்கமிருந்து " அம்மா ... அப்பும்மா ... நான் மாரியம்மா வந்திருக்கேன். இன்னிக்கு உங்க பிள்ளையை என்னோடு சேர்த்து சந்தைக்கு அனுப்பி வைக்கிறதா சொன்னீகளே " என்று குரல் கேட்டு வாசலுக்கு வந்த அம்மா, "இதோ அனுப்பி வைக்கிறேன் " என்று அந்தப் பெண்ணிடம் சொல்லிவிட்டு, "அப்புமணி, நீ மாரியம்மா கூட சேர்ந்து சந்தைக்குப் போ. போன வாரம் நெல்லு வாங்கிட்டுப்போன செட்டியார் அதோட விலையை இந்த வாரம் தர்றதா சொன்னார். நீ மாரியம்மா கூட போனால் போதும். மத்ததை அவ பேசிக்குவா. செட்டியார் குடுக்கிற பணத்தை மட்டும் நீ பத்திரமா  வாங்கிட்டு வந்துடு. வழக்கமா இந்த மாதிரி வேலையை  சாமிக்கண்ணு பார்ப்பார். கீழே விழுந்து காலில் அடிபட்டு நடக்க முடியாமே படுத்துட்டார் . மாரியம்மாவை நம்பி செட்டியார் பணம் தர மாட்டார். உன்னைப் பார்த்தால்தான், உன்னை நம்பி பணத்தைக் குடுப்பார்" என்று அம்மா சொன்ன அடுத்த நொடியே சந்தோஷமாக சந்தைக்குக் கிளம்பினான் அப்புமணி.
"அக்கா .. உன் தலை மேலே கூடை வச்சிருக்கியே. அதில் என்ன இருக்குது  ?" என்று கேட்டான் அப்புமணி 
"முட்டை வச்சிருக்கேன் கண்ணு. இன்னிக்கு சந்தை கூடுற நாளாச்சே. நல்லா வியாபாரம் ஆகும். பிள்ளைகளுக்கு கறியும் சோறும் ஆக்கிப் போட்டு ரொம்ப நாளாச்சு.இன்னிக்கு வர்ற வரும்படியில் பிள்ளைகளுக்கு பிடிச்சதை எல்லாம் வாங்கிட்டுப் போகணும் " என்று உற்சாகமாக சொன்னாள்  மாரியம்மா.
"உன்னோட சேர்ந்து நானும் முட்டை விற்கட்டுமா ?"
"உனக்கு ஏன் ராசா அந்தத் தலைஎழுத்து ? கூட்டம் இருக்கிற இடமா பார்த்து கூடையை இறக்கி வச்சா ஒரு மணி நேரத்தில் கொண்டு வந்த எல்லாத்தையும் வித்துட்டுப் போயிடலாம். யாராது மொத்தமா கேட்டாக் கூட குடுத்துட்டு நாம வீட்டுக்கு நடையைக் கட்டலாம்"
"செட்டியார் எப்ப பணம் தருவார் ?"
"இதோ ... இப்ப போற வழியிலேயே அந்த வேலையை முதலில் முடிச்சிட்டு போவோம் " என்ற மாரியம்மா செட்டியார் கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
"செட்டியாரய்யா ..  வயல்வெளி அம்மா அவக புள்ளையை அனுப்பி இருக்காங்க. போன வாரம் வாங்கின நெல்லு மூட்டைக்கான துட்டை நீங்க இன்னிக்கு தர்றதா சொல்லி இருந்தீகளாமே. காசை எடுத்துக் குடுங்க. நான் போய் கடையைப் போடணும்"என்று மாரியம்மா சொன்ன அடுத்த நிமிடமே  பணத்தை எண்ணி ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு அப்புமணியிடம் கொடுத்தார் செட்டியார்.
"அப்பு .. பணத்தை பத்திரமா டவுசர் பையில் வச்சுக்கோ.  வா ... நான் அங்கே கொஞ்சம் தள்ளிப் போய் கடை போடறேன். நீ அந்த மர  நிழலில் உட்கார்ந்திரு" என்று சொல்ல , மரநிழலில் உட்கார்ந்து கொண்டு அங்கு நடப்பதை  வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் அப்புமணி. அவ்வப் போது மாரியம்மா முட்டை வியாபாரம் செய்வதையும் கவனித்துக் கொண்டு இருந்தான். வியாபாரத்தை முடித்த மாரியம்மா, பணத்தை ஒரு அழுக்குத் துணியில் கட்டி அதை  இடுப்பில் மறைத்து வைப்பதையும் கவனித்தான்.
அப்புமணி அருகில் வந்த மாரியம்மா, "வாங்க ... ராசா ... இப்பிடியே போய்க் கறிக்கடையில் கறி வாங்கிட்டு, பிள்ளைகளுக்கு திங்கிறதுக்கு ஏதாது வாங்கிட்டுப் போயிடலாம்" என்று சொல்லியபடி வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.
அப்போது .. "மாரியக்கா ... அங்கே போறது யாருன்னு பாருங்க.  உங்க புருசன்தான் " என்று சத்தமாக சொல்ல, அதைக் கேட்டு மாரியம்மாவின் கணவன் குடிகார ராசு அவர்களை நோக்கி வந்தான் 
"நீ இங்கேதான் இருக்கிறியா கண்ணு.. உன்னை எங்கெல்லாம் தேடறது ? கையில் இருக்கிற காசை எடு  " என்று மாரியம்மாவிடம் கேட்டான் 
"நான் இன்னிக்கு வியாபாரத்துக்கு வரலே. தெரிஞ்ச ஆளுங்க யாராச்சும் கண்ணில் பட்டால் புள்ளைகளுக்கு ஆக்கிப் போட துட்டைக் கடனா வாங்கிட்டுப் போலாம்னுதான் இங்கே சுத்திட்டு இருக்கேன்" என்றாள் மாரியம்மா 
"மாரியக்கா ... நீ பொய்தானே சொல்றே ? முட்டை வித்த காசை முடிச்சு போட்டு இடுப்பில் வச்சிருக்கே தானே ! உயிரே போற நிலைமை வந்தாக் கூட பொய் சொல்லக்கூடாது " என்று அப்புமணி சொல்ல , "அட .. பாருடா ... இங்கே ... இடுப்பு எப்ப பேங்கா மாறிச்சு ?" என்று கேட்டபடி மாரியம்மா  ஒளித்து வைத்திருந்த பணத்தை பிடுங்கிக் கொண்டு   மதுக் கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தான் ராசு.
"அடப் பாவி .. இன்னிக்கு வாய்க்கு ருசியா புள்ளைகளுக்கு ஆக்கிப் போட நினைச்சேன். அந்த நினைப்பில் மண்ணள்ளிப் போட்டுட்டியே " என்று கத்திக் கதறி மாரியம்மா அழ ஆரம்பிக்க, அதை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் அப்புமணி .
--------------------------------------------   தொடரும் ------------------------------    

No comments:

Post a Comment