Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, November 13, 2015

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 15

                                       
அச்சுப்பிச்சுஅப்புமணி !
மனதிலுள்ள வலி தீரும் வரை வாய் விட்டு அழுத மாரியம்மா, " வா.  ராசா .. நாம போகலாம் " என்று சொல்லியபடி வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
அப்புமணியின்  வீட்டு வாசலில் நின்று கொண்ட மாரி , "அம்மா ... அம்மா ... செட்டியார் ஐயா குடுத்த துட்டு தம்பி ட்ரவுசர் பையில் இருக்கு. வாங்கிக் கோங்க.. நான் போறேன் " என்று குரல் கொடுத்தாள் .
"நில்லு... என்ன அவசரம் மாரி? இவ்வளவு சீக்கிரத்தில் முட்டை வியாபார த்தை முடிச்சிட்டியா?" என்று கேட்டபடி வெளி வாசலுக்கு வந்த அம்மா, "என்ன மாரி, உன் முகமெல்லாம் வீங்கிப் போயிருக்கு.. அழுதியா என்ன?" என்று கேட்டாள் 
சந்தையில் நடந்த சம்பவத்தை மாரியம்மா சொன்னாள்.
"அப்புமணி ... உன் பையில் இருக்கிற பணத்தை எடு " என்று அம்மா சொன்னதும் பணத்தை எடுத்து அம்மாவிடம் கொடுத்தான் அப்புமணி. அதை மாரியம்மா கையில் கொடுத்த அம்மா , "அழாதே .. மாரி .. இந்தப் பணத்தை வச்சுக்கோ ... உன் பிள்ளைகளுக்கு வேணுங்கிறதை வாங்கிக் கொடு. இவனை உன்னோட அனுப்பினது என்னோட தப்புதான்" என்றாள் 
"அய்யய்யோ ... இவ்வளவு பணமா ? வேண்டாம்ம்மா " என்று மாரியம்மா சொல்ல, " இதில் ஒரு பங்கு உன்னோட முட்டைக்கான காசு.. இன்னொரு பங்கு உன் பிள்ளைகளுக்கு நான் குடுக்கிற பண்டிகைப் பரிசு. இன்னொரு பங்கு என் பிள்ளை பண்ணின தப்புக்கு நான் குடுக்கிற அபராதம்.. எந்த கேள்வியும் கேட்காமல் பணத்தை வாங்கிக்கிட்டு நீ போய்க்கிட்டே இரு  " என்று அம்மா சொல்ல, பணத்தை வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பி ப்  போனாள் மாரியம்மா. 
அவள் போனதும், "ஏண்டா .. அவ புருசன்தான் குடிகாரனாச்சே . அவன் கிட்டே இவ கையில் பணமிருக்கிற விஷயத்தை சொல்லலாமா ?" என்று அம்மா கேட்டாள்.
"மாரியக்கா அவ கையில் பணத்தை வச்சுகிட்டே பணம் இல்லேன்னு பொய் சொன்னா .. அரிசந்திர மகாராஜா மாதிரி எப்பவும் உண்மை பேசணும்னு நீ தானே சொன்னே ...அதான் அவ புருஷன் கிட்டே நான் உண்மையை சொன்னேன்"
"அடக் கடவுளே .... கடவுளே !" என்று தலையில் அடித்துக் கொண்ட அம்மா  "உன்னை கொன்னால் கூட பாவமே கிடையாது .. போதும் நீ உண்மை பேசின லட்சணம். இனிமே நீ எதைப் பார்த்தாலும் எதுவும் சொல்ல வேண்டாம். உன் திரு வாயை மூடிட்டு இருந்தாலே போதும். ஹூம்  .. மாரியம்மா ஓடி ஓடி  நாயா உழைக்கிற காசை அவ புருஷன் குடிச்சே அழிச்சிடுதான்.. என்னிக்குதான் இந்தக் குடி ஓயுமோ ?" என்று வருத்தத்துடன் சொன்னாள் 
"அதுக்குதானே கடையை மூடணும்னு சொல்றாங்க " என்றான் அப்புமணி  
"கடையை மூடிட்டா அவனவன் குடிக்கிறதை நிறுத்திடுவானா ? எந்த ஊரில் கடை திறந்திருக்கோ அங்கே போய்க் குடிப்பான்" என்றாள் அம்மா . 
"எப்புடிம்மா ?"
"தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் காபி குடிச்சு பழக்கப்பட்டவன் எதோ ஒரு நாள்  காபி வர கொஞ்சம் லேட் ஆயிட்டா பயங்கரமா டென்ஷன் ஆயிடுவான்.  நிதானம் இல்லாமே தவிப்பான். எந்த வேலையும் ஓடாது . அந்த ஒரே ஒரு வாய்க் காபி வயித்துக்குள்ளே இறங்கிட்டா நார்மல் ஆயிடுவான். காபி குடிக்கிறவனுக்கே அந்தக் கதின்னா ... போதைக்குப் பழக்கப்பட்டவன் என்ன மாதிரி நிலையில் இருப்பான்னு யோசிச்சுப் பார்க்கணும்.. எவனும் குடிக்கிற பழக்கத்துக்கு ஆளாகாமே பார்த்துக் கணும். அதுதான் பெரிய விஷயம் .. அது நடக்கக் கூடிய காரியமா ?" என்று கவலையுடன் சொன்ன அம்மா, "நான் கோவிலுக்குப் போயிட்டு வர்றேன் . அரை மணி நேரத்தில் வந்துடுவேன் " என்றாள். 
"அம்மா .... நானும் ..." என்று அப்புமணி ஆரம்பிக்க, "வாயைத் திறந்தால்  கொன்னுடுவேன். பக்கத்து வீட்டில் யாரும் இல்லே. ஊருக்குப் போயிட்டு வர இன்னும் ரெண்டு நாள் ஆகும். நீ அவங்க வீட்டைப் பார்த்திட்டு இரு  " என்று கோபமாக சொல்ல ," சரி .. சரி ... நீங்களே போய்க்கோங்க " என்று சொன்ன அப்புமணி சிறிது நேரம் கழித்து வீட்டின் பின் பக்கமுள்ள தோட்டத்துக்குப் போனான். அப்போது பக்கத்து வீட்டின் பின் பக்கமிருந்து தோளில்  ஒரு மூட்டையை சுமந்தபடி ஒருவன் போனதை அப்புமணி கவனித்தான். அவன் ஒரு திருடன் என்பதையும் புரிந்து கொண்டான் .
"அப்பப்பா .... இன்னிக்கு கோவிலில் ஒரே கூட்டம். சாமி தரிசனம் முடிச்சிட்டு வெளியில் வர்றதுக்குள் போதும் போதும்னு ஆயிட்டுது. நீ சமர்த்தா இருக்கிறே தானே?" என்று கேட்டபடி வீட்டுக்குள் வந்தாள் அம்மா. 
"அம்மா ... பக்கத்து வீட்டு மாமா அத்தை எல்லாரும் எப்போ அவங்க வீட்டுக்கு வருவாங்க ?" என்று கேட்டான் அப்புமணி 
"ஏன்  கேட்கிறே ?"
"இப்போ அவங்க வீட்டில் நிறைய சாமான் இருக்காது "
"என்னடா சொல்றே ?"
"நீ கோவிலுக்குப் போனியா ... அப்ப ஒரு ஆள் அந்த வீட்டிலிருந்த சாமானை மூட்டை கட்டி எடுத்துட்டுப் போயிட்டான்  "
"அடப் பாவி ... அதை நீ வேடிக்கை பார்த்திட்டா இருந்தே ? சத்தம் போட்டு ஊரைக் கூட்டி இருக்க வேண்டாமா? அவங்க நம்மள நம்பிதானே வீட்டை விட்டுட்டு போயிருக்காங்க  " என்று கோபத்துடன் கேட்டாள் அம்மா 
"நம்மள நம்பாட்டா, அனுமார் சஞ்சீவி மலையை தோளில் தூக்கிட்டு வந்த மாதிரி அத்தையும் மாமாவும் அவங்க  வீட்டை தோளில் தூக்கிட்டுப் போயிருப்பாங்களா ? நீங்கதானே சொன்னீங்க, நான் எதைப் பார்த்தாலும் வாயைத் திறக்க வேண்டாம் ... வாயை மூடிட்டு இருந்தாலே போதும்னு " என்று அப்புமணி நிதானமாக சொல்ல, "முட்டாளே ... உன்னை சொல்லிக் குத்தமில்லே .. என் புத்தியை செருப்பாலே அடிச்சுக்கணும்  " என்று சொல்லிவிட்டு வாசலுக்கு ஓடி வந்த அம்மா, அங்கிருந்தவர்களிடம் திருடன் வந்து போன விஷயத்தை சொல்ல, ஆளுக்கொரு பக்கமாக ஓடி திருடனைக் கண்டு பிடித்து சாமான்களை மீட்டு வந்தார்கள். அதன் பிறகுதான் அம்மா முகத்தில் சந்தோசம் வந்தது..   
---------------------------------------               தொடரும் ---------------------------------------        

No comments:

Post a Comment