Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, January 31, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 100 )

                                   பயிர் வளர்ப்போம் !!
நவகிரகங்களை சுற்றிக் கொண்டிருந்த லலிதாவின் கண்களில் பட்டாள் பாகீரதி. " என்ன இது, மாமி உட்கார்ந்திருக்கிற தோரணையே சரி யில்லையே . இப்படி ஒரு நாளும் கோவில் நடைப் படியில் உட்கார மாட்டாளே. என்னவாக இருக்கும் ?" என்று லலிதாவின் மனம் பரபரத்தாலும், " ஆச்சு. இன்னும் ரெண்டே ரெண்டு சுற்று. அதை முடிச்சிட்டுப் போய் விசாரிக்கலாம் " என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
சுற்றி முடித்ததும், பாகீரதி அருகில் போய் " என்ன மாமி, உடம்புக்கு முடியலையா ? நீங்க இப்படி உட்கார்ந்திருந்து நான் பார்த்ததே இல்லையே " என்று அவள் தோளைத் தொட்டுச் சொல்லி, அவளருகில் போய் அமர்ந்தாள்.
"பெத்து வச்சிருக்கிறேனே ஒரு பிள்ளையை, அவனை நினைச்சுதான் கவலை லலிதா "
" என்ன பண்றான்? வேலைக்குப் போகிறான்தானே ? பொண்டாட்டி கூட சண்டை சச்சரவு எதுவும் இல்லாமே நல்லா வச்சிருக்கிறாந்தானே ? " என்று லலிதா ஆதங்கத்துடன் கேட்க " எல்லாம் நாங்க செஞ்ச பாவம் !" என்றபடி தலையைக் கவிழ்த்தாள். அது அழுகையை மறைப்பதற்காக என்பதை லலிதா புரிந்து கொண்டாள். அவளையும் மீறி சிரிப்பு வந்தது. அதை பாகீரதி கவனித்து விட்டாள் என்பதும் லலிதாவிற்க்குப் புரிந்தது.
"சிரிக்கிறேன்னு தப்பா நெனச்சுக்காதீங்க மாமி "
"தப்பு ஒண்ணும் இல்லேடி .. என் பொளைப்புதான் சிரிப்பா சிரிச்சுக் கிடக்குதே "
"இப்போ " எல்லாம் நாங்க செஞ்ச பாவம் !" ன்னு சொல்ற நீங்க கிட்டத்தட்ட் இருபத்தேழு வருஷத்துக்கு முன்னே என்ன சொல்லி யிருப்பீ ங்கனு நினைச்சுப் பார்த்தேன். அதான் சிரிப்பு வந்தது " என்று லலிதா சொன்னதும் " என்ன சொல்லியிருப்பேன் ? " என்று வாய் விட்டுக் கேட்ட பாகீரதி யோசனையில் ஆழ்ந்தாள்.
"பிறந்தது ஆண் குழந்தைன்னு தெரிஞ்சதும், உலகத்தையே ஜெயிச்ச மாதிரி ஒரு கர்வம் வந்திருக்கும். நீங்க ரொம்பவும் புண்ணியம் பண்ணி யிருக்கிறதா  மனசு சொல்லியிருக்கும். அந்தப் பிள்ளை வளர்ந்து தனக்கு ஒரு வாழ்க்கையை அமைச்சுக்கிறப்போ, அது தன்னை சங்கடப் படுத்தும். அழ வைக்கும்னு நினைச்சுக்கூட பார்த்திருக்க மாட்டீங்க. என் பிள்ளை என்னிக்கும் எங்க பிள்ளையாய் இருப்பான்னு  நம்பிக்கையில் இருக்க வைத்திருக்கும் . அப்படித்தானே  ? "
"அப்படி சந்தோசப் பட்டது தப்புன்னு சொல்ல வர்றியா ? "
"அய்யய்யோ, இல்லே மாமீ  சந்தோசப் பட்டது தப்புன்னு சொல்ல வரலே.  நம்ம எதிர் பார்ப்புகளை நம்ம குழந்தைங்க மேலே வைக்கிறதுதான் தப்பு " 
"உங்கிட்டே ஒண்ணு கேட்கணும். ஒரு ஆம்பிளைப் பிள்ளையைப் பெத்து வச்சுகிட்டு  நான் அல்லாடிகிட்டு இருக்கிறேன் . மூணு பிள்ளைகளை வச்சிருக்கிற நீ எப்படி சந்தோசமா இருக்கிறே  ? "
"மாமி, நான் உங்களை ஒண்ணு கேட்டா கோபப்பட மாட்டீங்கதானே. நேத்து உங்க வீட்டில் ஒரு சச்சரவு. அது பணம் விஷயமாக ... போனமாதம் வரை சம்பளப்  பில் பேப்பரை உங்ககிட்டே காட்டினான். இந்த தடவை பொண்டாட்டி கிட்டே காட்டினான். அதை நீங்க இன்சல்ட்டா நினைக்கிறீங்க... இது ... இதுதானே உங்க மனசிலே நடக்கிற போராட்டம் " என்று கேட்டு பாகீரதியை பார்த்தாள் லலிதா 
"என்னடி இது ! எல்லாத்தையும் பக்கத்தில் இருந்து பார்த்தாப்லே சொல்றே ? " என்று வியந்து போனாள் பாகீரதி 
"மாமி ஒரு சம்பவம் ... அது சோகமாக இருக்கலாம் .. அல்லது சந்தோசமான சம்பவமாவும் இருக்கலாம். எதைப் பார்க்கிறோமோ அந்த பீலிங்க் தான் எல்லோருக்கும் இருக்கும். இப்போ ஒரு வீட்டில் , ஒரு பையன் வெளியிலிருந்து வந்ததும்  தன்னுடைய கையிலுள்ள பொருளை மனைவியிடம் கொடுப்பதை ரெண்டு பொம்பளைங்க பார்த்தாங்கன்னு வச்சுக்கோங்க, அதைப் பார்த்து ஒருத்தி சந்தோசப்படுவா .. அது பொண்ணைப் பெத்தவ."ஆஹா நம்ம பொண்ணை, நம்ம மாப்பிள்ளை ரொம்பவும் மதிப்பும் மரியாதையுமா வச்சிருக்கிறானேன்னு நினைப்பா . இன்னொருத்தி வருத்தப்படுவா " நேத்து வரை நம்மளைக் கூப்பிட்டு கிட்டு வீட்டுக்குள் நுழைஞ்ச  பிள்ளை , எதையும் நம்ம கையில் கொண்டு வந்து கொடுத்த பிள்ளை , இன்னிக்கு வேறொருத்தி கையில் கொண்டு போய்க்கொடுக்கிறானே " என்று நினைத்து . இது மனுஷ சுபாவம் . உலக வழக்கம். இதுக்கு யார் மேலேயும் குத்தம் சொல்ல முடியாது . கூடாது." என்று லலிதா சொல்லும்போதே " போடி இவளே ! நீ அப்படித்தான் இருக்கிறியா ? " என்று கேட்டாள் பாகீரதி. 
"இருக்கிறதுக்கு என்னைப் பழக்கி வச்சிருக்கிறேன். நான் கல்யாணமாகி மாமியார் வீட்டுக்குப் போனப்போ எனக்கும் என் மாமியாருக்கும் சின்ன சின்ன சண்டைகள் வரும். அப்பல்லாம் எங்க மாமனார் " இதோ பாரு சீதா நீ தேவையில்லாமே அவ விஷயத்தில் தலையிடாதே. யாராவது உங்கிட்டே வந்து யோசனை கேட்டா மட்டும் நீ பேசு. நம்ம குழந்தையை பல கஷ்டங்களுக்கு நடுவில் படிக்க வச்சு  ஆளாக்கி வேலை வாங்கிக் கொடுத்தோம். ஆனால் முழு பலனை   நாம அனுபவிக்காமே நேத்து வந்த யாரோ ஒருத்தி அனுபவிக்கிறானு நீ நினைக்காதே. நம்ம சந்தோசத்துக்கு நாம கல்யாணம் பண்ணிண்டோம். குழந்தையைப் பெத்து வளர்த்து ஆளாக்கினோம் . இன்னிக்கு அவன் வேறொரு குடும்பத்தை தயார் பண்ண  உழைக்கிறான் ... அதில் முழு கவனமும் வச்சிருக்கிறான்னு நீ நினைச்சுப் பாரு. நினைக்கப் பழகிக்கோ . அப்புறம் உன் மனசில் வருத்தம் சஞ்சலம் எதுவும் இருக்காது"ன்னு என்னோட மாமியார் கிட்டே சொல்வார். எனக்கு அடுத்தடுத்து மூணு ஆண் குழந்தைங்க பிறந்ததும், எங்க மாமனார் என்னோட மாமியார்க்கு சொன்னதை எனக்கு சொன்னதாக நினைச்சுகிட்டேன் . மனசிலே எந்தவொரு எதிர்பார்ப்பும் வைக்காமே குழந்தைகளை வளர்த்து ஆளாக்க வேண்டியது நம்ம டூட்டி. அதை நாம் சரியா செஞ்சா போதும்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டு என்னைப் பக்குவப்படுத்தி கிட்டேன். அதே சமயம் எங்க முதுமைக்குனு ஒரு சேமிப்பை நான் அப்பவே சேர்க்க ஆரம்பிச்சிட்டேன். இப்போ என் பிள்ளைங்க என்னை நல்லாத்தான் வச்சிருக்காங்க. ஆனா வண்டி கடைசி வரை இப்படியே ஒரே சீரா ஓடும்னு யாராலும் சொல்லமுடியாது. அதனாலே அவங்களை, அவங்க கையை எதிர் பார்க்காதபடி என்னை நானே மாத்தி அமைச்சுகிட்டேன். ஒரு குடும்பத்திலோ அல்லது தனி மனுசனிடமோ கோபமோ விரக்தியோவர என்ன காரணம்னு  யோசிச்சுப் பாருங்க ... " நினைச்சது நடக்கலே .. எதிர் பார்த்தது கிடைக்கலே " என்ற பதில்தான் கிடைக்கும்.  எதிர்பார்ப்புக்கும் ஏமாற்றத்துக்கும் இடையில் நடக்கிறதுதான் வாழ்க்கைன்னு நினைச்சு நம்மை நாமே பக்குவப் படுத்தி கிட்டா, எந்த சம்பவமும் எந்த சூழ்நிலையும் நம்மளை எதுவும் செய்யாது. முக்கியமான ஒண்ணு, குழந்தைகளை வளர்க்கும்போது, ஒரு மரம் அல்லது செடியை நட்டு பராமரிக்கிற மாதிரி நினைச்சுக்கணும் . பலன் நமக்குக் கிடைச்சா சந்தோசம் . மத்தவங்களுக்கு கிடைச்சாலும் சந்தோசம் . தரிசா போகாமே இருந்தால் சரின்னு நினைச்சுக்கணும்   " என்று சொல்லிக் கொண்டிருந்த லலிதாவை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த  பாகீரதி, " கீதை சொன்ன கண்ணன் மாதிரி, கோவிலில் வச்சு எனக்கு நம்பிக்கை டானிக் தந்திருக்கிறே. முயற்சி பண்ணிப் பார்க்கிறேன். வேலைக்குப் போயிருக்கிற ரெண்டு பேரும் திரும்பி வர்றதுக்குள் வீட்டுக்குப் போய் சூடா ஏதாவது பண்ணிக் கொடுக்கிறேன் " என்றபடி அங்கிருந்து கிளம்பிய பாகீரதி, "வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்"னு அரசாங்கம் விளம்பரப் படுத்துவது இதைத்தானா ? " என்று கேலியும் கிண்டலும் நிறைந்த குரலில் கேட்டாள்.

No comments:

Post a Comment