Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, February 07, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 101 )

               என்னை நினைச்சு நானும்  சிரிச்சேன் !!
"அதோ ஓடறார் ! பிடியுங்கோ ! விட்டுடாதீங்கோ ! " என்று சொல்லியபடி கடலளவு கும்பலாக நாங்கள்  துரத்திக் கொண்டு வர, எங்கள் பிடியில் அகப்படாமல் தலை தெறிக்க ஓடிக் கொண்டிருந்தார் "அவர் ".  மற்றவங்க மாதிரி என்னால் வேகமாக ஓட முடியாததால், கூட்டத்தை விட்டு  விலகி வெளியில் வந்து ரோட்டோரம் நின்றேன்.
ரோட்டோரமா நின்னு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த  ஒரு சிலர்  வந்து, என்னிடம் " யாரையோ துரத்துறீங்களே . என்ன விஷயம்?"னு கேக்கிறாங்க. ஓ . இவங்க யாருன்னு எனக்குப் புரிஞ்சு போச்சு. " என் வீட்டு மாடியிலே இடியே விழுந்தாக் கூட அதைப் போய்ப் பார்க்க நேரமில்லை "ன்னு சொல்ற கூட்டம் இவங்க . நாங்க  அப்படியில்லே ன்னு சொல்லச் சொல்லுங்க பார்ப்போம். சொல்ல மாட்டாங்க. சமுதாய அக்கறைன்னு ஒண்ணு இருந்திருந்தா இந்த சந்திப்புக்கு வராமல் இருந்திருப்பாங்களா என்ன ? இவங்க என்ன மாதிரி ஆளுங்க தெரியுமா ? எவனாவது ஏதாவது ஒரு விஷயத்துக்காக உயிரைக் குடுத்துப் போராடி, அது மத்தவங்களுக்குக் கிடைக்கும்படி செய்தாங்கன்னா, அதன் பலனை மட்டும் நேரடியாக அனுபவிக்கிறவங்க. நோகாமல் நோன்பு நோற்கிற ஜென்மங்கள். அவங்களே   "என்ன ? ஏது ? " ன்னு  திரும்பவும்   என்னை விசாரிக்கிறதாலே, நான் விஷயத்தை டீடைலா சொல்ல போறேன் . விஷயம் என்னனு  தெரிஞ்சுக்க பிரியப் படறவா மட்டும் இருங்கோ. நான்  பர்தரா கண்டினியூ பண்ணுவேன்.
யார் எக்கேடு கெட்டால் எனக்கென்னனு  நினைக்கிறவா இந்த இடத்தை விட்டு அந்தாண்டை போய், உருப்படியா வேலை வெட்டி ஏதாவது இருந்தா பாருங்கோ !. எனக்கும் அப்பப்போ சமுதாய சிந்தனை வரும் .ஆனா அது எப்போ எப்படி வரும்னு எனக்குத் தெரியாது.  அது இப்போ வந்திருக்குன்னு சொல்லி இங்கே நிற்க்கிறேளே....ஓடறது யார் ? ஏன் ஓடறார் ? அதைத் தெரிஞ்சுக்காட்டி என் தலையே ரெண்டா பொளந்துடும்னு  சொல்லிண்டு  இங்கேயே நிற்க்கிறேள் பாருங்கோ,
உங்களுக்காகத் தான் நான் இதை சொல்றேன். ஒரு காலத்தில்.. ஒரு காலத்திலென்ன வேண்டிக் கிடக்கு ? இப்போக் கூட  சந்திரனையும் செவ்வாயையும் "சாமி சாமி"ன்னு சொல்லி  நாம வணங்கிண்டு வர்றோம் .ஆனா அந்த ரெண்டையும் எட்டிப் பார்த்துட்டு வந்துட்டு மனுஷா மூளை. இன்னிக்குக் கடவுளையே கீழே கொண்டாந் துட்டாளே. மனுஷன் இருக்கிறானே மனுஷன்  இந்த லோகத்தில் அவனை அடிக்க ஆள் கிடையாது ? அவனுக்குத் தெரியாததுன்னு ஒண்ணுமே இல்லை,  பஞ்ச பூதத்தை அடக்கி ஆள்வதைத் தவிர. அதையும் கத்துன்டான்னா அப்புறம் லோகத்துக்கு கடவுள்னு ஒருத்தர் வேண்டவே வேண்டாம் . நம்புனா நம்புங்கோ, நம்பாட்டி இடத்தைக் காலி பண்ணுங்கோ. அதாலே எனக்கு தம்பிடி கூட நஷ்டம் கிடையாது. மனுஷனாலே முடியாதது எதுவும் இல்லே , ம் ... என்ன சொல்ல வந்தேன் ... பேச வந்த  டாபிக்கை விட்டுட்டு   அந்தாண்டை இந்தாண்டை திரும்பிப் பார்த்தாப் போச்சு. என்ன சொல்ல வந்தேன் என்கிறதே மறந்துடுது. டாக்டர்கிட்டே போய்க் காட்டலாம்னா அங்கே நம்ம சொத்தையே எழுதி வாங்கிடுவாங்களே.
இந்தக் கும்பலில்  நானும் ஒரு ஆளா நிற்க்கிறேன்னு சொன்னால், அதுக்குக் காரணம் இந்த ஆஸ்பத்திரி பிரச்சினைதாங்க. போன மாசத்திலே ஒரு நாள்  ... ம் ..... அன்னிக்கு மறுநாள் வெள்ளிக் கிழமைங்கிறதாலே ஆத்தை அலம்பி விட்டுடுண்டுருந்தேன். போன் அடிச்சுது.  சனியன் ... அதுக்குத் தான் நேரம் காலமே கிடையாதே. பண்ணிண்டு இருக்கிற கைக்காரியத்தை அப்படியே விட்டுட்டு ஓடிப் போய் எடுப்போம். இன்ன பேங்கிலிருந்து  பேசறோம். லோன் வேணுமா ? ஏதாவது இன்வெஸ்ட் பண்ற ஐடியா இருக்கானு கேட்டு நம்ம பொழுதை வீணடிப்பா. அதுக்காக அடிக்கிற போனை எடுக்காமே விட்டுட முடியாதே. போனை எடுக்க ஓடினேன் பாருங்கோ . ஈரத் தரை வழுக்கிடுச்சு. காலில் லேசா சுளுக்கு. எண்ணை தேச்சுண்டு படுத்திண்டுருந்தேன். வேலைக்குப் போன குழந்தைங்க ராத்திரி பத்து மணிக்கு மேலே  வீடு திரும்பி வந்தாங்க . என்  காலைப் பார்த்துட்டு என்ன ஏதுன்னு விசாரிச்சா . வழுக்கி விழுந்த கதையை சொன்னேன். டாக்டர் கிட்டே போகலாம்னு சொன்னா. ரெண்டு வாட்டி எண்ணை தேய்ச்சு நீவி விட்டு வெந்நீர் ஒத்தடம் கொடுத்தா சரியாப் போயிடும்னு சொன்னேன். அதைக் காதிலேயே வாங்கிக்காமே மறுநாள் என்னை டாக்டராண்டே அழைச்சிட்டுப் போனான் என்னோட மூத்த பிள்ளை. அங்கே என் காலைப் பத்தி என்குயரி பண்றதை விட, என்னோட வந்த பிள்ளை " எங்கே வேலை பார்க்கிறான்? என்ன வருமானம் ?" ன்னு கேட்டு எழுதறதுலேதான் கவனமா இருந்தா. ஒரு ஊசி போட்டு ரெண்டு மாத்திரையப் போட்டா நான் எழும்பி  ஓடவே ஆரம்பிச்சிருப்பேன். ஆனா , ரெண்டு நர்ஸ்ங்க  என்னைக் கைத் தாங்கலா அழைச்சிட்டுப் போய் ஒரு ஹாலில் உள்ள பெட்டில் படுக்க வச்சாங்க. பீபி செக் பண்ணினா. ஸ்கேன் எடுத்தா . ஏன்னு கேட்டா ' உங்களுக்கே தெரியாமே உங்களுக்கு பீபி இருக்கலாம் . அதான் தலை சுற்றி  கீழே விழுந்துருப்பீங்க. எதுக்கும் அப்சர்வேசனில் இருக்கட்டும்னு அட்மிஷன் போட்டோம் ' ன்னு சொன்னா.  எப்போ நான் ஆத்துக்குப் போகலாம்னு கேட்டதும், இப்போ " ஐ சீ யூ வில் இருக்கீங்க. நாளைக்கு ஜெனரல் வார்டுக்கு அனுப்பிடுவோம்ன்னு சொன்னா". ஒரு ஹாலில் நாலு கட்டிலைப் போட்டு ஒவ்வொரு பெட்டுக்கும் நடுவாலே ஒரு ஊதாக் கலர் போர்வையைத் தொங்க விட்டு  ஏசியைப் போட்டுட்டா அது ஐ சீ யூவாம். 
அட்மிட் ஆகி அன்னிக்குப் பொழுது ஓடிப் போச்சு. மறு நாளாவது ஆத்துக்கு அனுப்புவானு பார்த்தால், அதுவும் இல்லே. நாளைக் காலையில் டாக்டர் வந்து பார்த்துட்டு சொல்வார். அப்புறமா அனுப்பு வோம்னு பதில் சொன்னா . தலை விதியேனு மறுநாளும் தங்க வேண்டி யதாப் போச்சு. மறுநாள் ஞாயிற்று கிழமை. காலையில் வர்றேன்னு சொன்ன டாக்டர் வரவே இல்லை . மந்திரிங்க, விஐபி ங்க வரும்போது இதோ வரார் .. அதோ வரார்னு சொல்லுவா பாருங்க . அந்த மாதிரி சொல்லிண்டே இருந்தா ஒரு குள்ள நர்ஸ் .. கத்திரிக்காய்க்கு கை கால் முளைச்ச மாதிரி ஒரு உருவம். அவ கண்ணைப் பார்த்தாலே எனக்கு சப்த நாடியும் ஒடுங்கிடுது. இருந்தாலும் தைரியத்தை வரவழைச்சிட்டு , " ஏம்மா, நேத்து டூட்டி நேரத்திலே  வராத டாக்டர், இன்னிக்கு லீவு நாளில் வருவாரா? ஒருநாள் ரூம் வாடகைக்காக எங்களை இங்கே உட்கார வச்ச எங்களோட ஒரு நாள் பொழுதை வீணடிக்காதே. இன்னிக்கும் சேர்த்து எவ்வளவு கட்டணும்னு சொல்லு . தூக்கி எறிஞ்சிட்டு போய்க்கிட்டே இருப்போம்"ன்னு நான் சொன்னதும், இல்லாத நெத்திக் கண்ணாலே என்னைச் சுட்டு  பொசுக்கிட்டு போனவ, அஞ்சு நிமிசத்திலே திரும்பி வந்து இந்த பில்லை செட்டில் பண்ணிட்டுப் போங்க " என்றாள். பில்லைப் பார்த்து எனக்கு தலையே சுத்துச்சு . இருந்தாலும் வெளியே காட்டிக்கலே. இன்னும் பீபி நார்மலுக்கு வரலே . திரும்பவும் அட்மிட் ஆகிடுங்கோன்னு சொல்லுவாளோங்கிற பயத்தில் வாயை மூடிட்டு வந்தேன் . ஒண்ணுமே இல்லாத ஒரு விஷயத்துக்கு இப்படி அநியாயமாப் பணத்தை பறிச்சுட்டாளே என்கிற வயிற்தெரிச்சல்  இருக்கத்தான் செஞ்சுது. அதான், கடவுளோட ஒரு மீட்டிங்ன்னு சொன்னதும் நானும் வந்து கலந்துண்டேன்.
என்ன மீட்டிங்க்ன்னு கேட்கிறேளா ? என்னைப் பத்தி இவ்வளவு சொன்ன நான் அதை சொல்லாமே விடுவேனா ?
பூமியில் நாளுக்கு நாள் கொலை கொள்ளை குண்டு வெடிப்பு என்று சம்பவங்கள் பெருகிக் கொண்டே போக,  சட்டத்தால் தண்டனையால் எதுவும் செய்ய முடியாதுன்னு தெரிஞ்சிண்ட எல்லோரும் பகவானைப் பிரார்த்தனை பண்ண ஆரம்பிச்சிட்டா. இந்த "லொள்ளை " தாங்க முடியாமே , மேலே இருக்கிற சர்வ மத தெய்வமும் ஒண்ணு கூடிப் பேசி முடிவெடுத்து எங்களோட பிரதிநிதியா  ஒருத்தரை அனுப்பறோம். கோர்ட்டில் தேங்கிக் கிடக்கிற கேஸ்களை ஒரே நாளில் சில சமயம் பைசல் பண்ணுவாளே, அந்த மாதிரி உங்க கோரிக்கையை பைசல் பண்றோம். எல்லாரும் மெரீனா கடற்கரைக்கு வந்துடுங்கன்னு சொல்லி இருந்தது . சர்வ மத கடவுள்களின் பிரதிநிதி சொன்ன நேரத்தில் வந்தார் . கூட்டம் நல்லா ஆரம்பிச்சு நல்லாத்தான் போயிட்டிருந்துச்சு. ஒரே சமயத்தில் எல்லோரும் கத்தக் கூடாது. உங்களில் ஒருத்தர் மத்தவங்க சார்பில் பேசலாம்னு கடவுள் சொன்னதும்  ஒருத்தரை ஸ்பாட் அப்பா யிண்ட்மெண்டில் பிக்ஸ் பண்ணி, எல்லோருடைய குறைகளையும் பட்டியல் போட்டுக் கொடுத்து பேச சொன்னோம். " எங்களுக்குள் மதக் கலவரம் ஆரம்பிச்சு கொலையில் போய் முடியுது" ன்னு சொன்னதும், " படைக்கிறது மட்டும்தான் நாங்க செஞ்சோம் . பிரிக்கிறதை நீங்கதான் கையில் எடுத்தீங்க. பிரிச்சவன்தான் ஒட்ட வைக்கணும் " ன்னு பதில் வந்துது . விலை வாசி உயர்வைப் பத்திக் கேட்டால். வானம் பூமி நீர் நிலம் ன்னு  உங்களுக்குக் கொடுத்ததுடன் எங்கள் வேலை முடிஞ்சு போச்சு ன்னு  பதில் வந்துச்சு. இப்படி எதைக் கேட்டாலும், அதுக்குக் காரணம் நீங்கதானே தவிர எந்தக் கடவுளும் பொறுப்பாக முடியாதுன்னு அடிச்சு சொல்லிட்டார் கடவுள், நொந்து போன நாங்க விலை வாசி உயர்வைத் தடுக்க ஏதாவது வழி மட்டுமாவது சொல்லுங்கன்னு கேட்டோம். சரி அடிப்படை உணவுப் பொருள்களின் விலையை கட்டுக்குள் கொண்டு வரலாம்னு சொல்லி, அரிசியின் அதிக பட்ச விலையே 10 ரூபாயாத்தான் இருக்கணும் . மற்ற அரிசிகள் விலை தரத்துக்கு ஏத்தாப்லே அதைவிடக் குறைவா இருக்கணும்னு  கடவுள் யோசனை சொல்ல, ஓரளவு சமரசத்துக்கு வந்தாச்சு. இப்படி ஒவ்வொரு பொருளின் விலையையும் குறைக்க யோசனை சொல்லி, அந்தந்தப் பொருளை விக்கிறவங்களும் வேறே வழியில்லாமே , மத்தவங்களுக்காக ஒத்துக்கிட்டாங்க ..." என்று நான் சொல்லிக்கொண்டு வரும்போது ஒரு அவசரக் குடுக்கை, " ஆஹா .. நல்ல விஷயமெல்லாம் செஞ்சிட்டு பிறகு ஏன் அவர் தலை தெறிக்க ஓடறார்  " ன்னு கேட்கிறார். வியாபாரிங்க எல்லாரும் விலையைக் குறைக்க ஒத்துக் கிட்டோம். வியாபாரி இல்லாத மத்தவங்க அவங்க வாங்குகிற சம்பளத்தைக் குறைச்சுக்கணும்னு வர்த்தகம் பண்றவங்க சைடிலிருந்து ஒரு டாபிக் கடைசியா வந்துச்சு. இப்போ வாங்குகிற சம்பளத்தை எந்தக் காரணம் கொண்டும் குறைச்சு வாங்க நாங்க தயார் இல்லைன்னு  தெரு பெருக்குகிறவனிலிருந்து உயர் பதவியில் இருக்கிறவங்க வரை அத்தனை பேரும் அடிச்சு சொல்லியாச்சு. எல்லாருக்கும் அவங்க சொல்றதுதான் நியாயம்னு படறதாலே, இறங்கி வர யாரும் தயாரில்லை, ஆனால் பிரச்சினை தீர்ந்தே ஆகணும்னு அடம் பிடிச்சாங்க. தப்பிச்சா போதும்னு தலை தெறிக்க ஓடறார் கடவுள் "....
என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும் போது முதுகில் ஒரு கை பதிந்தது 
" ஐயோ நான் எதுவும் செய்யலே .. இதுவரை இங்கு நடந்ததைத் தானே சொன்னேன்  " 
" அம்மா ... அம்மா .. ஏன்ம்மா இன்னும் படுத்திருக்கே . உடம்புக்கு முடியலியா ? என்ன செய்து ? டாக்டர்கிட்டே போகலாமா ? நீ இப்படி ஒருநாளும்  எட்டு மணிவரை படுத்துத் தூங்க மாட்டியே.  நாங்களும் நீ எழும்புவே எழும்புவேன்னு வெயிட் பண்ணிப் பார்க்கிறோம். ஏதோ பினாத்தறே ? "
படுக்கையை விட்டு எழும்பி சுற்றுமுற்றும் பார்த்தேன். சிறிது நேர தடுமாற்றத்துக்குப் பின் கனவுக் காட்சிகள் நினைவில் வந்து போயின. சிரிப்பு வந்தது  
" என்னம்மா .. வேலைக்குப் போக டைம் ஆயிடுச்சு. உன்னை எழுப்பி சொல்லிட்டுப் போகலாம்னு பார்த்தால் , ஏதேதோ உளறுறே. உனக்கு நீயே பேசிக்கிறே .. சிரிக்கிறே .. எதை நினைச்சு சிரிக்கிறேன்னு சொன்னா நாங்களும் சேர்ந்து சிரிப்போம்தானே "
" என்னை நினைச்சு நானே சிரிச்சேன் ... இப்போ இது போதும் . ராத்திரி சாப்பாட்டு டைமில் மீதியை சொல்றேன் .  எல்லாரும் சேர்ந்து சிரிக்க லாம்  " என்றேன் நான் .

No comments:

Post a Comment