Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, February 14, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 0102 )

                          அட .. இதுதாங்க உலகம் !!
" ராது, சொன்னதெல்லாம் ஞாபகத்தில் இருக்கட்டும் "
" ஐயோ அம்மா , ஆரம்பிச்சிட்டியா உன் சுப்ரபாதத்தை. அம்மா, தெரியாமத்தான் கேட்கிறேன். இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இதை சொல்லுவே ? கல்யாணத்தன்னிக்கு வரை சொல்லுவியா , இல்லே என் மாமியார் வீட்டிலும் வந்து சொல்லுவியா? கேட்டுக் கேட்டு  எனக்கு போரடிச்சுப் போச்சும்மா "
" ஒரு தடவை சொன்னதுமே உன் மண்டையிலே ஏறுவதா இருந்தா நான் ஏன் திரும்ப திரும்ப சொல்லப் போறேன். விடிஞ்சதிலிருந்து நீ வீட்டை விட்டுக் கிளம்பிப் போகிறவரை " ராது நோட்ஸ் எழுதினியே. அதை எடுத்து வச்சியா ? பர்ஸை மறக்காமே எடுத்து வச்சுக்கோ. டிபன் பாக்ஸ் மேஜை மேலே இருக்கு"ன்னு நான் கரடியாக் கத்திட்டு இருந்தாலும். "ம் .ம் "ன்னு தலையை ஆட்டிட்டு, பஸ் ஸ்டாப் வரை போயிட்டு, ' அதை மறந்திட்டேன்' ,  'இதை மறந்திட்டேன்'னு ஓடி வர்ற கேஸ் தானே நீ. அதான் மழைக்கால வறட்டுத்  தவளை மாதிரி சொன்னதையே சொல்லிட்டு இருக்கிறேன். திரும்பவும் சொல்றேன், மாமியார் மாமனார்க்கு மரியாதை குடுக்கணும்தான். அதுக்காக அடிமை சாசனம் எழுதிக் குடுத்து அடங்கிப் போகணும்கிற அவசியம் எதுவும் கிடையாது. நீ ஒண்ணும் அங்கே போய் சும்மா உட்கார்ந்து சோறு சாப்பிடப் போகலே. நீயும் ஆயிரம் ஆயிரமா சம்பாதிக்கிறே. மாப் பிள்ளைக்கு உன்னைவிட சம்பளம் குறைச்சல்தான். இருந்தாலும் லோக்கல் மாப்பிள்ளையா இருக்கிற ஒரே ஒரு காரணத்துக்காகத்தான் பேசி முடிவு பண்ணி இருக்கோம். நீ நினைச்சப்போ இங்கே வந்து போக வசதியா இருக்கணும். உன்னாலே வீட்டில் சாப்பாடு தயார் பண்ண முடியாட்டா இங்கே இருந்து கொடுத்து அனுப்பணும்னு எல்லாத்தையும் யோசிச்சுதான் இந்த வரனை பிக்ஸ் பண்ணியிருக்கோம். நாங்க எப்பவும் உன் பக்கத்திலேயே இருக்கோம். அதனாலே நீ யாருக்கும் பயப்பட வேண்டாம். சம்பளப் பணம் மொத்தத்தையும் அங்கே தாரை வார்த்திட வேண்டாம். உனக்கு ஆகிற செலவுக்குன்னு ஒரு கணக்குப் போட்டு அதை மட்டும் கொடு. உன்னைக் கண்டதும், சம்பளமில்லாத ஒரு வேலைக்காரி கிடைச்சிட்டானு நினைச்சு உன் மாமியார்க்காரி ' அந்த வேலையை முடிச்சிட்டுப் போ ', ' இந்த வேலையை முடிச்சிட்டுப் போ'ன்னு ஏதாவது வேலை ஏவிகிட்டே இருந்தான்னு வச்சுக்கோ, ' ஒண்ணு நான் ஆபீஸ் வேலைக்குப் போறேன் . இல்லாட்டா வீட்டிலிருந்து வீட்டு வேலையைக் கவனிக்கிறேன். என்னாலே ஒரே நேரத்தில் ரெண்டு குதிரை மேலே சவாரி பண்ண முடியாது'ன்னு  கட் அண்ட் ரைட்டா சொல்லிடு. முதலிலேயே யார் யாரை எங்கே வைக்கணுமோ அங்கே வைக்கத் தெரிஞ்சுக்கணும் . தலை மேலே ஏற விட்டுட்டு அப்புறமா அல்லல் படக் கூடாது  " என்று மூச்சு விடாமல் பேசிக் கொண்டிருந்தாள் தேவகி  
" ஐயோ, இந்த வீட்டில் யாருமே இல்லையா ? இந்த அம்மாகிட்டே இருந்து என்னை யாராவது  காப்பாத்துங்களேன் " என்று பொய் பயத்தில் அலறினாள் ராதா.
" உனக்கு நான் எது செய்தாலும் சொன்னாலும் கிண்டலாத்தான் தெரியும். எந்த அளவுக்கு யோசிச்சு யோசிச்சு நான் சொல்லியிருக்கிறேனு போகப் போகப் புரிஞ்சுக்குவே "
" இப்போ எனக்கு ஆபீஸுக்கு நேரமாயிட்டு . ஆளை விடு ! " என்று சொல்லி விட்டு அங்கிருந்து ஓடி மறைந்தாள்   ராதா.
அதுவரை அங்கே நடந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த வடிவாம்பாள் " நல்லா இருக்குடி , நீ பொண்ணுக்குப் புத்தி சொல்ற லட்சணம். உன்னைக் கட்டிக் கொடுத்து அனுப்பறப்போ " மாமனார் மாமியார்க்கு அடங்கிப் போகணும் . இனிமே அதுதான் உன் வீடு . எந்த சூழ்நிலையும் அந்த வீட்டை விட்டு கட்டின புருஷன் இல்லாமே வெளியேறக் கூடாது"ன்னு புத்தி சொல்லி அனுப்பினேன். உன் பொண்ணுக்கு நீ இந்த மாதிரி வேப்பிலை அடிக்கிறே  ? " என்று ஈனஸ்வரத்தில் முணங்கியபடி கேட்டாள் .
" அம்மா என்னோட காலம் வேறே . இப்போ உள்ள காலம் வேறே. நான் அதிகம் படிக்கலே. வேலை வெட்டிக்குப் போகலே. அதனால் வயிற்றுக் காகவாவது நான் அடங்கியே போக வேண்டிய சூழ்நிலை. ராது அப்படி யில்லையே  "
" படிச்சா பக்குவம் வரணும்; அடக்கி ஆள்கிற அகங்காரம் வரக்கூடாது " என்று மகளுக்குப் புத்தி சொன்னாள் வடிவாம்பாள் .
" அம்மா. இந்தா ... நீ சாப்பிட்டுட்டு, மாத்திரையைப் போட்டுட்டு பேசாமே போய்த் தூங்கு " என்று தேவகி சொல்ல அதன் பிறகு வடிவாம்பாள் சாப்பிட மட்டுமே வாயைத் திறந்தாள்.
" ஸார் " என்ற குரல் கேட்டு வாசலுக்கு வந்த தேவகி " ஓ, கல்யாணத் தரகரா ? வாங்க .. அடுத்த ஞாயிற்றுக் கிழமை ராதுவோட கல்யாணம் . நீங்க ஏற்பாடு பண்ணின வரன் . மறக்காமே கல்யாணத்துக்கு  நீங்க வந்திடணும். பத்திரிக்கை கொடுத்தார்தானே ? "  என்று விசாரித்தாள் தேவகி.
"அதிலெல்லாம் எந்தக் குறையும் இல்லே . வந்து சேர்ந்தது . நான் வந்த விஷயமே வேறே. பொண்ணு கல்யாணம் முடிஞ்சதும் பையனுக்கும் ஒரு வரன் பார்க்கணும்னு  ஸார் சொல்லியிருந்தார். உங்க எதிர்பார்ப்பு என்னன்னு தெளிவா சொல்லிடீங்கன்னா அதுக்குத் தோதுவா  வரன் கொண்டு வருவேன் "
"எங்களுக்குப் பெரிசா எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. பொண்ணு படிச்சவளா  வேலை பார்க்கிறவளா இருக்கணும். ஆனா, படிச்சிருக்கி றோம் வேலை பார்க்கிறோம்கிற திமிர்த்தனம் இல்லாமே இருக்கணும். எங்கள் வீட்டில் எங்கள் பேச்சுக்குக் கட்டுப் பட்டவளா இருக்கணும். அவ என்னதான் படிச்சிருந்தாலும் எவ்வளவு பெரிய உத்தியோகத்தில் இருந்தாலும் அடிப்படையில் தானொரு  பொம்பளைதான்  , இன்னொரு வீட்டுக்கு வாழ வந்திருக்கிறோம்கிற நினைப்பு என்னிக்கும் இருக்கிற வளா இருக்கணும். இன்னிக்கும் எங்கள் பையன் எங்கள் பேச்சுக்கு அடங்கி கட்டுப்பட்டுதான் இருக்கிறான். வரப் போற பொண்ணும் அப்படித் தான் இருக்கணும். உள்ளூர்ப் பொண்ணு வேண்டவே வேண்டாம். நினைச்சா உடனே பொறந்த வீட்டுக்குக் கிளம்பிப் போயிடுவா. அதனால் வெளியூர்,அதுவும்  கொஞ்சம் தொலைவா இருந்தாலும் பரவாயில்லை. சம்பளத்தை அப்படியே இங்கே கொண்டு வந்து தரணும். தன்னோட கையில் வச்சுகிட்டு நாட்டாமை பண்ற வேலையெல்லாம் எங்களுக்கு சரிப்பட்டு வராது. 100 பவுனுக்கு குறையாமே பார்த்துக்கோங்கோ. என்ன ... கொண்டு வந்தால், நாங்களா வாங்கி கழுத்தில் போட்டுக்கப் போறோம். அவ நகை .. அவ கழுத்து, அவ  கை .. அதைப் பத்தி எங்களுக்குக் கவலையில்லே. ஆனால் வரதட்சிணை பவுனுக்கு சரிசமமா இருக்கணும் . அதை மறந்துடாதீங்கோ. இப்போதைக்கு எங்கள் எதிர்பார்ப்பு இதுதான். வேறே ஏதாவது நினைவுக்கு   வந்தால் சொல்லி அனுப்பறேன் " என்றாள் தேவகி.
" சரிம்மா .. அப்போ நான் உத்தரவு வாங்கிக்கிறேன் " என்ற கல்யாணத் தரகர், " இதே பொம்பளை தன்னோட பொண்ணுக்கு வரன் பார்க்கிறப்போ எப்படி எப்படியெல்லாம் பேசுச்சு. பையனுக்கு வரன்னு சொன்னதும் என்னமா அடுக்கிக்கிட்டு போகுது .. ஹூம் ... ஊரான் பொண்ணுன்னா அவ்வளவு இளக்காரம் .  இதுதான் உலகம் ! " என்று மனதுக்குள் அசை போட்டபடி அங்கிருந்து கிளம்பினார். 

No comments:

Post a Comment