Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, February 21, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 103 )

                                      கல்யாண சாப்பாடு !

புயல் வேகத்தில் கடந்து செல்லும் வாகனங்களோ, இடித்துத் தள்ளாத குறையாக தன்னைக் கடந்து செல்லும் மனிதர்களோ அல்லது வியாபாரிகளின் இரைச்சலோ, எதுவுமே மைதிலியின் மைண்டில் ரெகார்ட் ஆகவில்லை. கல்யாண மண்டபத்தைக் கண்டுபிடித்து தலையைக் காட்டிவிட்டு ஆபீசுக்கு ஓடணும். பர்சேஸ் டெண்டரை கம்ப்ளீட் பண்ணி மூணு மணிக்கு முன்னாடி சூப்பிரண்ட் டேபிளுக்கு அனுப்பாட்டா, அந்த மனுஷன் நாய் மாதிரி மேலே விழுந்து பிடுங்குவான் என்ற எண்ணம் மட்டுமே அவளை முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டிருந்தது. ஒருநாளும் காலை நேரத்தில் வராத அப்பா, இன்றைக்கென்று காலையில் வரவும் என்னவோ ஏதோவென்று பதறிப் போய் விட்டாள் மைதிலி.
"அடுத்த தெருவில் என் பால்ய சிநேகிதன் வீடு கிரஹப் பிரவேசம் பண்றான். அதான் உன்னையும் எட்டிப் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன். நீ சீக்கிரமாவே கிளம்பறாப்லே தெரியுது " என்றார் அப்பா.
" எங்க ஆபீசுக்கு வழக்கமா ஸ்டேசனேரி ஐட்டம் சப்ளை பண்றவர் பொண்ணுக்கு கல்யாணம், குரோம்பேட்டையில். எங்கள் செக்ஸனில் உள்ள நாலு பேரை மட்டும் பத்திரிக்கை வச்சு கூப்பிட்டு இருக்கிறார். தவிர்க்க முடியாத நபர் என்கிறதாலே எங்க மூணு பேரை மட்டும் போகச் சொன்னார் சூப்பிரண்ட். குரோம்பேட்டை எனக்கு பழக்கமில்லாத ஏரியா . இன்றைக்கு முடிக்க வேண்டிய அவசர வேலை ஒண்ணும் இருக்கு. அதான் என்ன செய்றதுன்னு புரியாமே குழப்பத்தில் இருக்கிறேன். பத்திரிக்கை குடுத்தவரைத் தவிர அவர் வீட்டில் யாரையுமே எங்களுக்குத் தெரியாது. வரலேன்னு சொன்னாலும் லாரன்ஸும் லலிதாவும் ' நீங்க வந்தே ஆகணும்'னு அடம்பிடிக்கிறாங்க. அதான் கல்யாணத்துக்குக் கிளம்பிட்டு இருக்கிறேன் " என்றாள் மைதிலி 
" நீ கிளம்பும்மா. நானும் கிளம்பறேன் " என்று அப்பா கிளம்பியபோது, " அப்பா, இருந்து ஒரு வாய் காப்பி குடிச்சுட்டு போங்கோ"ன்னு சொல்லக் கூட நேரமில்லாமல் போயிட்டுதே " என்று தன்னையே நொந்தபடி கல்யாண மண்டப பெயர் பலகையைத் தேடிக் கண்டு பிடித்த  மைதிலி, "அப்பாடா ஒரு வழியாக வந்து சேர்ந்தாச்சு " என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் 
"கல்யாண மண்டப வாசலில் நான் நிற்பேன் . உங்களில் யார் முதலில் வந்தாலும் அங்கேயே நில்லுங்க " என்று லலிதா சொன்னது நினைவு வந்தது  
ஊஹூம் .. ரெண்டு பேரையும் காணலியே .. சொன்னா சொன்ன நேரத்துக்குள் ஓடி வர்றவங்களாச்சே என்று நினைத்து வராதவர்களுக்கா க கவலைப் பட்டுக் கொண்டு நின்று கொண்டிருந்த  மைதிலியை  " மேடம் " என்ற குரல், திரும்பிப் பார்க்க வைத்தது.
" வாங்க ... உள்ளே வாங்க .. முகூர்த்த நேரம் ஆரம்பிக்கப் போகுது . நீங்க போய் அதுக்கு முன்னாலே சாப்பிட்டுட்டு வந்துடுங்க " என்றார் ஒருவர் .
"என்னோட பிரண்ட்ஸ் வருவாங்க .. அதான் வெயிட் பண்றேன் "
"அவங்க வரட்டும் ... நீங்க போய்  முதலில் சாப்பிடுங்க " என்று அவர் சொல்ல, அவருடன் நின்று கொண்டிருந்த ஒரு சிறுமி " வாங்க ஆன்ட்டி " என்று மைதிலியின் கையைப் பிடித்து இழுத்து அழைத்தபோது அதை மறுக்க மைதிலியால் முடியவில்லை.
கல்யாணத்துக்கு வருகிறவர்களை நன்றாகக் கவனிக்க வேண்டும் என்று அந்த வீட்டுப் பெரியவர்கள் சொல்லியிருந்தார்களோ என்னவோ, அந்த சிறுமி, அங்கிருந்த எல்லோரையும் ஓடி ஓடி உபசரித்தாள். சாப்பாடு தேவாமிர்தம் என்று நாக்கு சொன்னாலும் அதை முழுதும் அனுபவிக்க முடியாதபடி வராத பிரண்ட்ஸ்ம், டெண்டரும் தடை செய்து கொண்டிருந் தது.
சாப்பிட்டு முடித்து கை அலம்பிக் கொண்டு வந்தவளை "மேடம், திருப்தியா சாப்பிட்டீங்களா ? " என்ற குரல் நிறுத்தியது.
இது லாரன்ஸ் குரலாச்சே  என்று நினைத்தபடி சுற்றுமுற்றும் பார்த்தாள்.
"மேடம் , மேலே பாருங்க "
நிமிர்ந்து பார்த்த மைதிலியைப் பார்த்து குறும்பாக சிரித்தார்கள் லலிதாவும் உடனிருந்த லாரன்ஸும்.
"ரைட் சைடு போனா  ஸ்டேர் கேஸ் வரும் . ஏறி மாடிக்கு வாங்க "
"வாசலில் வெயிட் பண்றேன்னு சொல்லிட்டு , மாடி மேலே நின்னுகிட்டு கமென்ட் குடுக்கறீங்களா " என்றபடி மாடிக்கு விரைந்தாள் மைதிலி. 
யாருமில்லாத இடத்துக்கு அவளை தனியாக அழைத்துச்சென்ற இருவரும்  " நாம அட்டெண்ட் பண்ண வேண்டிய கல்யாணம் மாடியிலே இருக்கு. கீழே நடப்பது வேறு யார் வீட்டுக் கல்யாணமோ " என்றனர்.
" அய்யய்யோ . நான் அந்த வீட்டில் சாப்பிட்டேனே " என்றாள் மைதிலி பதறிய குரலில்.  
"நீங்க மட்டுமல்ல . நாங்களும் அங்கேதான் சாப்பிட்டோம். உங்களுக்காக வாசலில் வெயிட் பண்ணிட்டு இருந்தோம். ஒருவர் மாற்றி ஒருவர் வந்து "சாப்பிட வாங்க" ன்னு  கட்டாயப் படுத்தினாங்க. சாப்பிட்டு முடிச்ச பிறகு தான் தெரிஞ்சுது அது ராஜு ஸார் வீட்டு விஷேசமில்லேன்னு. ஒரே இடத்தில் ரெண்டு கல்யாண மண்டபம் இருக்கும் . அதில் வேறே வேறே வீட்டுக் கல்யாணம் நடக்கும்னு நாங்க கொஞ்சமும் எதிர்பார்க்கலே. பத்திரிக்கையிலிருந்த அட்ரஸ் நினைவில் இருந்தது . கல்யாண மண்டபத்தை பார்த்ததும் உள்ளே நுழைஞ்சிட்டோம்   " என்று விவரித்தார் லாரன்ஸ் 
"அப்படின்னா என்னையாவது முதலிலேயே வார்ன் பண்ணி யிருக்க லாமே ?"
"செஞ்சிருக்கலாம்தான் . முதல் காரணம், இந்த வீட்டு சாப்பாடு ரொம்ப சுமார்னு வாசனையே சொல்லுது. கீழே சூப்பர் சாப்பாடு . ரெண்டாவது காரணம், இடம் மாறி நாங்க சாப்பிட்ட விஷயத்தை சொல்லி  சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நீங்க கிண்டலடிப்பீங்க.இனிமே அது முடியாது பாருங்க " என்று சொல்லிச் சிரித்தார் லாரன்ஸ் 
"அப்படின்னா அந்த வீட்டு பொண்ணு மாப்பிள்ளைக்கும் ஏதாவது கிப்ட் கொடுத்துட்டுப் போயிடலாம் "
" நாங்களும் நினைச்சோம் . அதிலேயும் ஒரு சிக்கல் "
"என்ன சிக்கல்? பொண்ணு வீட்டுக்காரன் நம்மளை, மாப்பிள்ளை வீட்டுக்கு தெரிஞ்சவங்கன்னு நினைச்சுப்பாங்க. மாப்பிள்ளை வீட்டுக் காரன்  நாம பொண்ணு வீட்டுக்கு வேண்டியவங்கன்னு நினைச்சுப்பாங்க . அதனாலே மொய் குடுத்துட்டுப் போயிடலாம். அது ஒரு பெரிய விஷயமே இல்லை. இதே கல்யாண வீட்டில் ஏதாவது ஒரு விலையுயர்ந்த பொருள் காணாமே போய் கல்யாணத்துக்கு வந்தவங்க யார் யார்னு வீடியோவில்  செக் பண்ண ஆரம்பிச்சா நம்ம மூணு பேரையும் யாருக்கும் தெரியாதுன்னு ரெண்டு வீட்டுக்காரங்களும் சொல்வாங்க. இடம் மாறி சாப்பிட்ட அவமானம் போதாதுன்னு இன்னொரு அவமானம் தேவையா? மானசீகமா அவங்க கிட்டே மன்னிப்பு கேட்டுட்டு கிப்டை ராஜு ஸாரிடம் சேர்த்துட்டு போயிடலாம் " என்று இருவரும் சேர்ந்து சொன்னபோது மைதிலியால் மறுக்க முடியவில்லை . எல்லாக் களோபரமும் முடிந்து ஆபீஸ் வந்து சேர்ந்தபோது, அவர்கள் எதிரில் தென்பட்டவர்கள் எல்லாம் " கல்யாணத்துக்குப் போயிட்டு வந்தாச்சா  ? கல்யாண சாப்பாடெல்லாம் எப்படி ? " என்று கேசுவலாக விசாரித்தாலும் கூட  மூவரின் மனசுக்குள்ளும் ஒரு " அரிப்பு " இருக்கத் தான் செய்தது.

No comments:

Post a Comment