Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Monday, October 24, 2016

அட ! இதெல்லாம் அம்பது வருஷத்துக்கு முன்னாடிங்க ...(01)

Image result for images of old tamil movie

எனது நட்பு வட்டத்தில் இருக்கும் ஒருவர், "அந்தக்கால நிகழ்வுகளை - சமுதாய வாழ்க்கை, நடைமுறை சம்பவங்களை உங்கள் பிளாக்கில் பதிவு செய்யுங்கள். இந்தத் தலைமுறையினர் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும்" என்றார்.
"எழுதணும்னு நினைச்சா"நின்றது(வகுப்புக்குவெளியே),நடந்தது (காலில் செருப்பில்லாமல்)னு  எத்தனையோ விஷயங்களை எழுதலாம்.  ஆனால் நேரம் கிடைப்பதில்லை"னு சொன்னேன்.
(நல்லவேளையா,"நேரங்கிடைக்காத அளவுக்கு வீட்டில் அப்படி என்னத்த கிழிக்கிறீங்க? சொல்லுங்க..தெரிஞ்சுக்கிறேன்"னு அவர் சொல்லலே ).
இப்போ இங்கே பேசப்போற முதல்டாபிக் சினிமாவைப் பத்திதான். உலகம் முழுக்க ஒரு சர்வே எடுங்க. சினிமாங்கிற ஒன்றை  மீறி மக்கள் மனசிலே இருக்கிற எந்தவொரு  விஷயத்தையாவது  உங்களாலே "சட்"னு சொல்ல முடியுமா? முடியாதுதானே. அதிலிருந்தே அதன் பெருமையை தெரிஞ்சுக்கலாம். 
அப்போ சினிமாவுக்குனு ஒரு தனிமதிப்பும் மரியாதையும்  இருந்துச்சு. சினிமாவில் நடிக்க "இந்த மாதிரி தகுதிகள்" வேணும்னு ஒரு வரைமுறை  இருந்துச்சு.முக்கியமான தகுதி பெர்சனாலிட்டி. யாராவது அழகா இருந்தா போதும்.  உடனே "சினிமாக்காரங்க மாதிரி இருக்கிறா. ஹீரோ மாதிரி இருக்கிறான்..ஹீரோயின்மாதிரி இருக்கிறா. அடேயப்பா" னு சொல்வாங்க. 
அப்போ வருசத்துக்கு பன்னிரெண்டு படம் வந்தால் அதுவே அதிகம். சினிமா டிக்கெட் 25 பைசா, 66 பைசா, ஒரு ரூபா ஆறு பைசானு மூணு விதமா ரேட். நல்ல வசதியான வீட்டைச் சேர்ந்த  பெண்கள் கூட 25 பைசா, 66 பைசா டிக்கெட்டில்தான் படம் பார்ப்பார்கள். ஏன்னு கேட்டீங்கன்னா அதில்தான்  லேடீஸுக்கு தனி இட ஒதுக்கீடு இருக்கும். ஒரு ரூபா ஆறு பைசா டிக்கெட் கம்பைன்ட் ஸீட் . எவனாவது பக்கத்திலே வந்து உக்காந்து கிட்டு சிகரெட் புகையை மூஞ்சிக்கு நேரே ஊதி விட்டுகிட்டு இருப்பானுக . அதனாலே அந்த டிக்கெட்டில் போக யோசிப்போம்.
ரிலீஸ் ஆகிற எல்லா சினிமாவையும் பார்த்துடுவோம். பார்த்த சினிமா பத்தி பத்திரிகைகளில் என்னமாதிரி விமரிசனம் வந்திருக்குனு தெரிஞ்சு க்க ஆவலா இருப்போம். எங்க ரசனையோடு அந்தவிமரிசனம் ஒத்துப் போனா ரொம்பவும் சந்தோசப்படுவோம். நிறைய வீடுங்கள்ல ரிலீஸ் ஆன சினிமாவைப் பத்தி பத்திரிக்கை விமரிசனம் படித்த பிறகுதான் தங்கள் வீட்டுப்பெண்களை, அந்த வீட்டு 'ஆம்பிளைங்க" சினிமாவுக்கு கூட்டிட்டுப் போவாங்க. படம் பார்க்கப் போகணும்னு சொன்னாலே, உடனே "அந்தப் படத்தைப் பத்தி குமுதத்தில் என்ன எழுதி இருக்கிறான்?", "விகடனில் என்ன எழுதி இருக்கிறான்?"னுதான் கேட்பாங்க.  அதனால் ஒரு படம் வெளியாகும் முன்னாலேயே, "குமுதம், விகடன்காரங்க நல்லபடியா விமரிசனம் எழுதணும்"னு மனதுக்குள் வேண்டிக்கொள்ளும் பெண்கள் ஏராளம். சினிமா விமரிசனம் குமுதத்தில் மிகவும் நேர்மையாக இருக்கும் என்ற கருத்து எல்லோருக்குமே உண்டு. எங்கள் வீட்டில் இந்த மாதிரி கட்டுப்பாடு எதுவும் கிடையாது.  அப்போ எங்களுக்கிருந்த ஒரே ஒரு பொழுதுபோக்கு சினிமாமட்டும்தான். சிவாஜி நடித்த படம் என்றால் கதையும்  நடிப்பும் நன்றாக இருக்கும். M G R படங்கள் என்றால் பாட்டும் ஆட்டமும் நன்றாக இருக்கும் என்று படம் பார்க்கக் கிளம்பி விடுவோம். ஒருபடம் பார்த்துட்டு வந்தோம்னா அடுத்தபடம் பார்க்கும்வரை, இந்தப் படத்தையும் பாட்டையும் பற்றியே பேசிக் கொண்டிருப்போம். வீட்டு வாசலில்அல்லது மொட்டைமாடியில் பாய்விரித்து உட்கார்ந்து கொண்டு படத்தில் வந்த பாட்டுக்கள் வசனங்களை சொல்லி பொழுது போக்குவது எங்களது வாடிக்கை. 
இன்னிக்கு சூழ்நிலையிலே  நாம விரும்பின எந்தப் பாட்டையும் எந்த நேரத்திலேயும் கேட்க முடியும். அப்போ ரேடியோ தவிர வேறு எதுவும் கிடையாது. ரேடியோவில் பாடல் ஒலிபரப்புக்கு என்று தனிநேரம் உண்டு. அந்த நேரத்தில் நாங்கள் பார்த்த படத்தின் பாட்டு ஒலிபரப்பாகுமா என்று ரேடியோ முன்னால் தவம் கிடப்போம். இப்போ எத்தனை வீட்டில் ரேடியோ இருக்கிறது? எங்கள் வீட்டில் இப்போ ரேடியோ இல்லை. எங்க வீட்டுக்குழந்தைகளுக்கு ரேடியோ என்றால் என்னனு தெரியாது. இதுதான் உண்மை நிலவரம்.
ஹார்லிக்ஸ் விளம்பர நிகழ்ச்சி ஒன்று ரேடியோவில் ஒலிபரப்பாகும் சுசித்ராவின் குடும்பம் என்ற தலைப்பில். (50 வருசத்துக்கு முன்னாலே )
"இதுதான் ஹார்லிக்ஸ் குடும்பம் 
சுசித்ரா ஷங்கர் ராஜு ரவி சுஜாதா 
என்றும் சுறுசுறுப்புடனே 
ஆரோக்கியம் உள்ள நல்ல குடும்பம்
இது ஹார்லிக்ஸ் குடும்பம் !" என்ற விளம்பரப் பாடல் அன்றைய தினம் எல்லோருக்குமே மனப்பாடமான ஒன்று.       
இப்போ ஒரு படம் வெளியானால் அது வெளியாகும் முதல் நாளிலேயே  "வெற்றிகரமான" என்று விளம்பர வாக்கியம் சேர்க்கப்படுகிறது.
அப்போ ஒரு படம் வெளியாகி 25 மற்றும் 50 நாட்களைத் தாண்டி ஒரு தியேட்டரில் ஓடினால்தான் "வெற்றிகரமான 25வது நாள்", "வெற்றி கரமான  50வது நாள்"னு  போஸ்டர் ஒட்டுவார்கள். படம் 100 நாட்களைத் தாண்டி ஓடினால் அதில் நடிச்சவங்க அந்த படம் ஓடும் ஊருக்கு, தியேட்டருக்கு வருவாங்க. அவங்களைப் பார்க்க ஊரே காத்துக் கிடக்கும். களத்தூர் கண்ணம்மா என்ற சினிமா  - ஜெமினி, சாவித்திரி, கமல் நடித்த படம் . படத்தின் நூறாவது நாள் விழாவுக்கு இவர்கள் மூவரும் தூத்துக்குடி வந்திருந்தனர். அந்தப் படத்தில் ஜெமினி நடித்திருந்த ஒரு பாடல் காட்சியை (குழந்தை) கமல் நடித்துக்காட்டியது பற்றிய பேச்சு பல நாட்கள் வரை ஓடிக் கொண்டு இருந்தது.
அன்றைய படங்களில் நீளமான வசனங்கள் இருக்கும். அதை சொல்லி விளையாடுவோம் அல்லது மற்றவர்களை கடுப்பேத்துவோம். இப்போ சினிமாவில் யாராவது ரெண்டு வரி நீள டயலாக் பேசினா அதுவே பெரிய விஷயமா பேசப்படுது. அப்போ பாடலில்கூட உச்சரிப்பு அருமையா தெளிவா இருக்கும். இப்போ  கேட்கிற சில பாடலில் அவங்க என்ன சொல்றாங்கனே புரியமாட்டேங்குது. இந்தக் குழப்பத்தை தீர்க்கத்தான் ஒருசில  சேனல்களில் பாடல்காட்சி வர்றப்ப  அந்த பாட்டின் வரிகளை   டிஸ்பிளே பண்றாங்களோ என்னவோ. மத்த மொழிப்பாடல் ஒளி பரப்பாகும் போது  பாடல் வரிகளை தமிழில் ஒளிபரப்பினால் டபுள் ஓகே சொல்லலாம். இப்பல்லாம் தமிழ்ப்பாட்டுக்கே பாடல் வரிகளை தமிழில் டிஸ்பிளே பண்றாங்க. அட ! எஞ்சாமி பகவானே ! என்ன கொடுமை இது ?
நடிப்புங்கிறது லேசான விஷயம் இல்லே. ஒருத்தர் சந்தோச மூடில் செட்டுக்கு வந்திருப்பார். அன்னிக்கு அழுது நடிக்கிற நிர்பந்தம் இருக்கும். சுத்தி நிக்கிறவங்களைப் பத்தி கவலைப் படாமே வேண்டிய முகபாவனை தரணும். இது எல்லாமே எவ்வளவு கஷ்டம்னு நமக்கு எப்ப புரியும் தெரியுமா ? ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்கப்போயிட்டு அவன் - அதான் போட்டோ புடிக்கிறவன் 'இங்கே பார். தோள்பட்டை இன்னும் கொஞ்சம் தூக்கலா..முகம் கொஞ்சம் தணிவா இருக்கணும் .பார்வை இந்தப் பக்கம் இருக்கும்னு சொல்றப்ப நாம நமக்குத் தெரிஞ்ச கோணங்கித் தனம் அத்தனையையும் பண்ணுவோம். அப்பத்தான் "ச்ச்சே ... இந்த சினிமாவில் எப்படித்தான் வசனத்தையும் பேசிகிட்டு, மூஞ்சியிலே பாவத்தையும் காட்டிகிட்டு நடிக்கிறாங்களோனு தோணும்.
(இன்னொரு சங்கதி உங்களுக்கு மட்டும் சொல்லுதேன். அதை யாரிட்டயும் சொல்லிடாதீங்க: எங்க கணக்கு டீச்சர் என்னை எப்பவும் நீ "சினிமாவுல நடிக்கத்தான் லாயக்கு"னு ஏசுவாங்க. கணக்குப்பாடத்தில் நான் பாஸ் பண்ணினதா சரித்திரமே கிடையாது. மற்ற பாடங்களில் அதிக மார்க்கும் கணக்கில் பெயில் ஆவதையும் நினைத்து, அவங்க கிட்டே நான் வம்பு / அடம் பண்ணினதாக அவங்க நினைச்சாங்களே  தவிர எனக்கு கணக்கு மண்டையில் ஏறலை என்பதை அவங்க கடைசி வரை புரிஞ்சுக்கலே.  
ஆனா, கவர்ன்மெண்ட் சர்வீஸில் முதல் முதலாக  நான் அடியெடுத்து வைத்தது Senior Accounts Officeல் ( State Government). அதன் பின் மத்தியஅரசுப் பணியில் 33 வருட சர்வீஸ். அங்கும் Accounts and Establishment வேலைதான் பார்த்தேன். தினமும் லட்சக்கணக்கில் பணத்தின் வரவு செலவு கணக்குப் பார்க்கும் வேலை. ஒரு சின்ன தவறு கூட வந்தது இல்லை.
ஆனா, இன்னிக்கு வரை எனக்கு கணக்குப் பார்க்கத் தெரியாத ஒரு விஷயம் - கடைக்குப் போய் சாமான் வாங்கிட்டு பணம் குடுத்த பிறகு  மீதி பணத்தை எண்ணிப் பார்த்து வாங்கும் விஷயம். அவர்கள் கூடுதலாக பணத்தைக் கொடுக்கிறார்களா குறைஞ்சிருக்கானு   பார்க்க மாட்டேன். குடுக்கிற சில்லறையை வாங்கி பையில் போட்டுட்டு வந்துடுவேன்.) 
வீட்டிலிருந்தபடியே மலரும் நினைவுகளை அசைபோடும் போதெல்லாம் கணக்கு டீச்சர் சொன்ன மாதிரி சினிமாவில் நடிக்கப் போயிருந்தால் யார் அளவுக்குப் பேர் வாங்கி இருப்போம்னு நினைச்சுப் பார்க்கிறதுண்டு. 
அந்த நினைப்பு வருகிற சமயங்களிலெல்லாம் ஒரே ஒரு சினிமாவில் , ஒரே ஒரு சீரியலில், ஒரே ஒரு சீனில் மட்டும் தலை காட்ட வேண்டும் என்றும் நினைப்பேன்.  ஏன்னு கேட்க மாட்டீங்களா ? சரி நானே சொல்லிடுதேன். எதோ ஒரு வகையில் இந்த சமுதாயம் இந்த மக்கள் மேலே நமக்கு ஒரு ஆத்திரம் இருக்கும். அத்தனை பேரையும் ஒரே சமயத்தில் டார்ச்சர் பண்ணனும் போல ஒரு வெறி வரும். சினிமா, சீரியல் மூலமா ஒவ்வொரு வீட்டுக்குள்ளேயும் புகுந்து போதும் போதும்னு அவங்க சொல்ற அளவுக்கு நாம டார்ச்சர் பண்ணலாமே. என்னங்க ... நான் சொல்றது சரிதானே!
இன்னொரு முக்கியமான விஷயம். பழைய படங்கள் எல்லாமே பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள். அந்தக் காலத்தில் ஒரு குறிப்பிட்ட இடமோ ஊரோ எப்படி இருந்தது என்பதற்கான ஆதார சான்றுகள் சினிமாவில் நிறையவே உள்ளது.
உதாரணமாக : ஆண்டவன் கட்டளை படத்தில் வரும் "ஆறு மனமே ஆறு " என்ற பாடல் காட்சியையும், குமுதம் படத்தில் வரும் "கல்லிலே கலை வண்ணம் கண்டான்' என்ற பாடல்காட்சியைப் பார்த்துவிட்டு, திருச்செந்தூர், மகாபலிபுரம் போய் கடலைப் பாருங்கள். கடல் எந்த அளவுக்கு உள்வாங்கி  இருக்கிறதென்பது புரியும்.
(கச்சேரி இன்னிக்கு இம்புட்டுதான். மிச்சத்தை பொறகு வச்சுக்கலாம். செய்யவேண்டிய வேலை தலைக்கு மேலே இருக்குது. வேறே ஒண்ணும் இல்லே  தலைக்கு எண்ணெய் வச்சு ஜடை போட்டுக்கணும் ) 

No comments:

Post a Comment