Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, October 22, 2016

(எங்க) விகடன் தாத்தாவுக்கு வயசு 90!


Image result for image of S S Vasan
 விகடன் நிறுவனர் திரு S.S.வாசன்   
விகடனுக்கு வயது 90 என்ற செய்தியை தொலைக்காட்சி, பத்திரிக்கைகள் மூலமாகத் தெரிந்துகொண்டபோது மனதுக்குள் ஒரு இனம் புரியாத சந்தோசம். ஒரு "சீனியர் தாத்தா" பற்றி இங்கு பதிவு செய்யப்படுவது எனது மலரும் நினைவுகளும் ஆதங்கங்களுந்தான். மற்றபடி அவரைப்பற்றிக் கருத்து தெரிவிக்க எனக்கு எந்தத் தகுதியும் கிடையாது.  
விகடன் என்று சொன்னாலே நினைவுக்கு வருவது அதில் வெளியாகும் ஹாஸ்யங்கள்தான். (இப்போ "ஜோக் / காமெடி" என்று சொல்வதை அந்தக் காலத்தில் "தமாஷ் / ஹேஸ்யம்" என்றுதான் சொல்வார்கள்). அட்டையில் வெளியாகும் தமாஷ் எப்பேர்ப்பட்ட சிடுமூஞ்சியையும் சிரிக்க வைத்துவிடும் . காலமாற்றத்துக்குத் தகுந்தபடி விகடன் தன்னை மாற்றிக் கொண்டது. எதனாலோ அந்த மாற்றங்களை எங்களைப்போல ஒரு சிலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அட்டைப்படக் காமெடியிலிருந்து  தனி நபர்களின் போட்டோவுக்கு மாறிய அந்த மாற்றத்தை, அதை ஏற்றுக் கொள்ள முடியாத எங்கள் மன நிலையை அப்போதே நாங்கள் விகடனுக்குத் தெரிவித்தோம்.   
அந்தக்காலத்தில் விகடனில் வெளியான கொத்தமங்கலம் சுப்புவின் "தில்லானா மோகனாம்பாள்", மணியனின் தொடர்கதைகள் காலங்கள் பல கடந்தும் என்றும் நினைவில் நிற்கும். அவரது கதையைப் படிக்கும்போது கதை படிக்கின்றோம் என்ற உணர்வைவிட அந்தக் கதையோடு சேர்ந்து நாமும் பயணிப்பது போன்ற உணர்வு வரும். அந்தக் கதையைப் படித்த தெக்கத்திக்காரங்களுக்கு "மெட்ராஸ்" என்பது ஒரு கனவு உலகம். இந்திரபுரி.  
14.09.1991ல் மாலைமுரசில் நான் எழுதிய முதல் சிறுகதை வெளியானது. கதைகள் எழுதுவதை காட்டிலும் குழந்தைகளுக்கான புதிர்கள் எழுதுவதில்தான் ஆர்வம் காட்டினேன். எப்போதாவதுதான் கதை எழுத உட்காருவேன். நிறைய கதைகள் எழுதணும். பக்கத்தை நிரப்பணும்னு நான் நினைச்சதில்லே. கதை எழுதணும்னு எப்போ தோணுதோ அப்போ எழுதுவேன். ஆனால் புதிர்களை இரவில் விழித்திருந்தாவது எழுதுவேன். அல்லது கோலம் போடுவேன். எனது படைப்புகள் பத்திரிகையில் வருமே தவிர அதை எழுதுவது நான் என்பது பக்கத்து வீட்டினருக்குக்கூடத் தெரியாது.  நான் எழுதிய மூன்று சிறுகதைகள் விகடனில் வெளியாகி பரிசு பெற்றது. விகடன் நடத்திய கதைப்போட்டியில் எனக்கு இரண்டு பரிசுகள் கிடைத்தது. விகடனில் எனது போட்டோவும் வெளியாகி இருந்தது. அதன்பின் பஸ்ஸுக்கு காத்திருப்ப வர்கள் கூட எனக்கு "ஹாய் " அல்லது "ஹலோ " சொல்வார்கள். அதே ரூட்டில் நான் வருஷக் கணக்கில் டூ வீலர் ஓட்டிக் கொண்டு போயிருக்கிறேன். என்னை யாரும் கண்டு கொண்டது இல்லை. ஆனால் விகடனில் நான் எழுதிய கதையைப் படித்த சிலர், நான் சிக்கனலுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கும்போது  பிரெண்ட்லி ஆகக் கை காட்டி, "படிச்சோம்.நல்லா இருந்துச்சு " என்று சைகை செய்வார்கள்.
ஒருநாள் வழியில் ஒருவர் கைகாட்டி என்னை நிறுத்தினார். லிப்ட் கேட்கிறார் என்று நினைத்து "நோ " என்றேன். "ஒரே ஒரு நிமிஷம்" என்று கத்தினார். வண்டியை நிறுத்தினேன். "என் மனசிலே பட்டதை சொல்லிடறேன். நானும் விகடன் வாசகன். சாப்பிடாமே இருந்தாலும் இருப்போம். விகடன் படிக்காமே இருக்க மாட்டோம். உங்களோட முதல் கதைக்கு முதல் பரிசு குடுக்காமே மூணாம் பரிசு குடுத்திருக்காங்களேன்னு ரொம்பவும் நாங்க வருத்தப் பட்டோம். இன்னொரு கதைக்கு முதல் பரிசு குடுத்ததும்தான்  எங்களுக்கு ஆறுதலா இருந்துச்சு. எனக்குத் தெரிஞ்சு விகடன் வைத்த ஒரு போட்டியில், இரண்டு பரிசு வாங்கின ஒரே ஒரு ஆளு நீங்களாத்தான் இருப்பீங்கனு நினைக்கிறன். விகடன் சரித்திரத்திலேயே இதுதான் முதல் தடவை" என்றார். என்னையும் அறியாமல் அழுதுவிட்டேன். அதை பார்த்ததும் "ஸாரி .. போங்கம்மா " என்றார் .
சத்தம் போட்டு சொல்வேன்-என்னையும் நாலு பேருக்குத் தெரியும்னா அது விகடன் மூலமாகத்தான். அவர்கள் எனக்குக் கொடுத்த சந்தர்ப்பங்கள் அநேகம். கோலங்கள் சீரியல் வெளியாகிக் கொண்டிருந்த காலத்தில், "அவள் விகடன்" கோலப்பகுதிக்கு கோலம் செலெக்ட் பண்ணும் பொறுப்பு தந்தார்கள். ஒன்றல்ல இரண்டல்ல கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் விகடன் அலுவலகம் சென்று வந்திருக்கிறேன். விகடன் அலுவலகம் செல்லும்போதெல்லாம் சொந்த சகோதரன் வீட்டில் காலடி எடுத்து வைப்பது போன்ற உணர்வில் நினைவில் மிதந்திருக்கிறேன். விகடன் குழுமம் நடத்திய விழாக்களில் நடுவராகப் பணி புரியும் பல சந்தர்ப்பங்களை எனக்கு அளித்ததை இன்றும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.அண்ணா சாலையில் நடைபெற்றுக் கொண்டிருந்த மேம்பால வேலைகளினால் டிராஃபிக் ஜாம். அதனால் ரூட் மாறி இருந்தது. அந்த சிக்கல்களைச சமாளித்து போய்வருவது எனக்கு மிகவும் கஷ்டமான ஒன்றாகத் தோன்றியதால், மேற்கொண்டு கோலம் பார்க்கும் பணியைத் தொடர முடியாமல் போனது.   
இந்தியா, இந்துமதம் போல, விகடனும் ஒரு ஆலமரம்.. அந்த ஆலமரநிழலில் இளைப்பாறிய வர்கள், தங்களை வளர்த்துக் கொண்டவர்கள், காலூன்றி நின்றவர்கள்  அநேகர். அதில் நானும் ஒருத்தி என்பதை பெருமையுடன் மனமகிழ்வோடு சொல்லிக் கொள்கிறேன்.
யுகங்கள் மாறினாலும், வேர்கள் விழுதுகள் தாங்கி நிற்க ஆலமரம் என்றென்றும் நிலைத்திருக்கும். தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும். தன்னை அண்டி வந்தோருக்கு அடைக்கலம் / நிழல் தரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை 
விகடனின்  90-வது வயதுக்கு வணங்கி எனது சிரம் தாழ்த்தி மன மகிழ்வோடு விகடன்  தாள் பணிகிறேன், அவரது ஆசீர்வாதம் வேண்டி !

No comments:

Post a Comment