Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, July 09, 2017

Scanning of inner - heart ( Scan Report Number - 155)

  Image result for cartoon of two friends talking                          
                                கொஞ்சம் ஓவர்தான் !
"என்ன கோபி .. இப்போ திருப்தியா ?" என்று ராஜசேகர் கேட்டதுதான் தாமதம், அவனது இரு கைகளையும் பற்றிக்கொண்ட கோபி "உங்களுக்கு ரொம்பவும் பெரிய மனசு !" என்றான்.
"ச்சே .. என்னடா இது.. ரொம்பவும் மரியாதை குடுத்து பேசறே. நான் இன்னிக்கும் உன்னோட அதே ராஜாதான். ஒரு சினிமா பாட்டில் சிவாஜியிடம் சுந்தர்ராஜன் சொல்வாரே. பள்ளியை  விட்டதும் பாதைகள் மாறினோம். கடமையும்   வந்தது ..கவலையும் வந்ததுனு.. அந்த மாதிரி ஆரம்ப பள்ளி படிப்பு முடிஞ்சதும்  நாங்க அந்த ஊரை விட்டு  வெளியேறி வந்துட்டோம். நம்ம பாதை மாறிப்போச்சு. மற்ற பிரெண்ட்ஸ் எல்லாரையும் அடிக்கடி பார்ப்பேன். ம் .. உன்னைப் பார்க்கிற சந்தர்ப்பம்தாம் கிடைக்கவே இல்லை. இத்தனை வருஷத்துக்குப் பிறகு உன்னைப் பார்ப்பேன்னு நான் நினைக்கவே இல்லை." என்று நெகிழ்ச்சியுடன் சொன்னான் ராஜசேகர் 
"யானை மாதிரி உங்களுக்கும் ஞாபக சக்தி அதிகம்.  நீங்க என்கிட்டே வந்து பேசற வரை எனக்கு உங்களை அடையாளமே தெரியலை. ரொம்ப மாறி இருக்கீங்க"
"இந்த நீங்க.. நாங்க .. இதையெல்லாம் விட்டுட்டு என்னை ராஜான்னு கூப்பிடு "
"முடியலீங்க..ஏதோ ஒண்ணு தடுக்குது. அதை விடுங்க. நான் கேட்டதுமே கொஞ்சமும் மறுக்காமே பெரிய மனுஷங்களை நீங்க பேட்டி எடுத்ததை நான் பார்க்க அனுமதிச்சீங்களே.. இதை ஊருக்குப் போனதும் எல்லாருக்கும் டமாரம் அடிச்சு சொல்வேன்.. நானே பேட்டி எடுத்த மாதிரி..  "
இதைக் கேட்டதும் பதிலேதும் சொல்லாமல் சிரித்த ராஜசேகர், "இப்போ சொல்லு ... நம்ம கிராமத்தைப்பத்தி..உன்னைப் பார்த்த சந்தோஷத்தில் .. பேட்டி மும்முரத்தில் அதைப் பத்தி  கேட்க முடியாமே போச்சு...சொல்லு.. என்னென்ன மாற்றம்  வந்திருக்குது ?"
"இருபத்துஅஞ்சு வருஷத்துக்கு முந்தி அங்கே அஞ்சாம் வகுப்பு வரை மட்டுமே படிக்கிற வசதி இருந்துச்சு. ஆறாம் வகுப்பில் சேர பக்கத்தில் உள்ள டவுண் பள்ளிக்கூடத்துக்குப் போகணும். இப்பவும் அதே கதைதான். இன்னும் இருபத்து அஞ்சு வருஷம் கழிச்சு கேட்டாலும் இதே பதிலைத்தான் சொல்ல வேண்டி இருக்கும்னு நினைக்கிறேன். மாறாத விஷயம்னு சிலது இருக்குமே. அதில் நம்ம கிராமமும் ஒண்ணு..  ஆங்க் .. ஒரு ஆஸ்பத்திரி இருக்குது. அங்கே போவார் யாரும் கிடையாது. டாக்டர் நல்ல மனுஷன். யாரை பார்த்தாலும் 'எப்பவும் சுறுசுறுப்பா இருக்கணும். சோம்பலுக்கு இடம் குடுக்கக்கூடாது சாப்பாட்டில் நிறைய காய்கறி சேர்த்துக்கணும். தாகம் எடுத்தால்தான் தண்ணீர் குடிக்கணுங்கிறது இல்லாமே தினமும் தண்ணீர் நிறைய குடிக்கணும்னு சொல்வார். வேறே வேலைவெட்டி எதுவும் இல்லாமே இதை ஏன் இவர் சொல்லிக்கிட்டு திரியுறார்னு நினைப்பேன். எனக்கு அஞ்சாம் கிளாஸ்லேயே  படிப்பு மண்டையில் ஏறலே. டவுண் பள்ளிக்கூடத்துக்கு வேறே தெண்டம் அழ வேண்டாம்னு எங்க அப்பா என் படிப்பை நிப்பாட்டிட்டு என்னை மாடு  மேய்க்க அனுப்பினார். அப்போ பிடிச்ச மாட்டு கயிறை இன்னும் நான் விடலே கடவுள் புண்ணியத்தில் சாப்பாட்டுக்கு எந்த குறைச்சலும் இல்லே. வண்டி ஓடுது. ஆனா பிள்ளைகளைப் படிக்க வைக்கிறேன்.  உங்களைப்பத்தி சொல்லுங்க. பிள்ளை எத்தனை ? குட்டி எத்தனை ?"
"ரெண்டுமே ஒண்ணொண்ணுதான் .. நீ எப்படி ?"
"படிப்பில்தான் நான் உங்களை விட குறைச்சல். இந்த விஷயத்தில் உங்களை விட மூணுமடங்கு அதிகம்." என்று சொல்லும்போதே கோபிக்கு சிரிப்பு வந்தது.
"இன்னிக்கு என் வீட்டில் தங்கி இரு.  சென்னையை நல்லா சுத்திப்பார்த்துட்டு அப்புறம் ஊருக்குப் போகலாம்"
இதைக்கேட்டதும், "அய்யய்யோ" என்ற பதற்றத்துடன் ,"நம்ம ஊர் தலைவர் என்னைக்கூப்பிட்டு, 'பட்டணத்தில் ஒரு அவசர வேலை இருக்குது. நான் போயே ஆகணும். ஒருவாரமாவே உடம்புக்கு நல்லா இல்லே. தனியா நான் மட்டும் போறத வீட துணைக்கு யாராச்சும் வந்தா நல்லா இருக்கும். என் செலவுலே கூட்டிட்டு போறேன். ஓட்டல்லே ரூம் போடுவேன். நீ அங்கே இரு. கோட்டையிலே என் வேலையை முடிச்சிட்டு ஓட்டலுக்கு வந்து உன்னை பார்க்கிறேன். ரெண்டு பேரும் அன்னிக்கு ராத்திரியே  நம்ம ஊருக்கு திரும்பிற லாம்'னு  சொன்னாக. அடடா. பெரியமனுஷன் கேட்டாங்களேன்னு துணைக்கு வந்தேன். ஓட்டல் வாசலில் என்னை அடையாளம் தெரிஞ்சுக்கிட்டு நீங்க கூப்பிட்டு பேசுனீங்க. இந்த சந்தோசம் போதும். இன்னொருவாட்டி வர்றப்ப வீட்டுக்கு வாரேன்" என்றான் கோபி.    
"சரி. உன்னோட சூழ்நிலை அதுன்னா நான் கம்பெல் பண்ண மாட்டேன். இதோ என் விசிட்டிங் கார்ட்  இதில் என் வீட்டு அட்ரெஸ், ஃ போன் நம்பர் எல்லாமே இருக்குது. நினைச்சப்ப வரலாம்.. பேசலாம் " 
"எனக்கு ஒரு சந்தேகம் ரொம்ப நாளா இருந்துச்சு. இன்னிக்கு அது தீர்ந்து போச்சு.?"
"அப்படியா? எப்படி ? எனக்குத் தெரியாமே அதை தீர்ச்சு வைச்சது யார் ? "
"நீங்க முதல்லே ஒருத்தரை பேட்டி எடுத்தப்ப அவர், 'ரசாயன உரம், ரசாயன கழிவுகளால் நிலம் மிகவும் கெட்டு அதோட சுய தன்மையை இழந்துட்டுது. விளைஞ்ச பயிரைக்காக்க பூச்சிமருந்து அடிக்கிறோம். அந்த மருந்தோட வீரியம் விளையற   பொருளிலும் கண்டிப்பா இருக்கும். அது நம்ம உடலுக்கு கேடு செய்யுது. நோயைக் கொண்டு வருது. மனுஷன் தண்ணீரையும் விட்டு வைக்கலே. அதை சுத்தம் பண்றதா சொல்லி கெமிக்கல்ஸ் கலக்கிறான். மனுஷங்களுக்கு நோயைக் கொண்டு வர்றதே நாம சாப்பிடற சாப்பாடு, காய்கறி, பழம், தண்ணீர் .. இதெல்லாம்தான் 'னு சொன்னார்"
"பேஷ்.. அவர் ஒரேயொரு தரம் சொன்னதை இவ்வளவு அழகா மனப்பாடமா சொல்றே."
"நீங்க அடுத்தாப்லே ஒரு டாக்டரை பேட்டி எடுத்தீங்க. அப்போ அவர், "எல்லாரும் நிறைய காய்கறியை உணவில் சேர்த்துக்கணும். தண்ணீர் நிறைய குடிக்கணும்னு சொன்னார். ரெண்டுபேர் பேச்சையும் யோசிச்சு பார்க்கிறப்ப தான் எனக்கு நம்ம ஊர் டாக்டர் எதுக்காக எல்லார்கிட்டயும் காய்கறி நிறைய சாப்பிடுங்க.. தண்ணீர் நிறைய குடிங்கனு சொல்றார்ங்கிறது புரிஞ்சுது. " என்று கண்களை சிமிட்டி குறும்பு சிரிப்புடன் சொன்னான் கோபி.
இதைக்கேட்டு ஒருநிமிட நேரம் அசந்து போனாலும், "எனக்கும் இன்னிக்கு ஒரு சந்தேகம் தீர்ந்துச்சு" என்றான்.
"அப்படியா ?"
"ஆமாம். எங்க தாத்தா எப்பவோ ஒருக்கத்தான் எங்க வீட்டுக்கு வருவார். ஆனா அவர் பேச்சில்  'கிராமத்து குசும்பு'ங்கிற வார்த்தையை அடிக்கடி சொல்வார். அது என்னனு அவர் போனபிறகு யோசிச்சு பார்ப்பேன். அவரைப் பார்க்கிறச்சே அதை கேட்க மாட்டேன். ஆனா இன்னிக்கு புரிஞ்சு போச்சு " என்று கண்களை சிமிட்டி குறும்பு சிரிப்புடன் சொன்னான் ராஜசேகர்.

No comments:

Post a Comment