Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Wednesday, July 05, 2017

பார்த்தேன்.. ரசித்தேன் .. (01)


இது ஒரு புதிய பகுதி ..திரையில் பார்த்து ரசித்த காட்சிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 
இசையால் வசமாகாத இதயந்தான் எது ?
அடம்பிடித்தோ அல்லது பசியினாலோ அழும் குழந்தைகூட ஒரு இசையைக் கேட்டதும் ( அது instrumental  ஆகட்டும் அல்லது vocal ஆகட்டும்.தனது அழுகையை ஒருநொடி நேரம் நிறுத்திவிட்டு அந்த ஒலியை உற்றுக் கேட்கின்றன.)
அந்தக்கால தத்துவப்பாடல்களைக் கேட்டு இன்றும் நாம் உருகுகிறோம்; இன்றைய இளந்தலை முறையினர் உட்பட.
அந்த பாடல்களின் வரிசையை பட்டியலிட ஆரம்பித்தால் அது நாட்கணக்கில் நீடிக்கும்.
உதாரணத்துக்கு ஒன்றிரெண்டு மட்டும்.
"மயக்கமா கலக்கமா "
"நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே "
"மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான். வாழும்வகை புரிந்து கொண்டான் "
- இது போன்ற பாடல்களை ஒரு பேப்பரில் எழுதி, இந்தப் பாடல்களை இதற்கு முன்பாக கேட்டிராத நபர்களிடம் கொடுத்து படித்துப் பார்க்க சொல்லுங்க.
நூற்றுக்கு தொண்ணூறு பேரிடம் பெரிதாக எந்தவொரு reaction ம் இராது.
அதே பாடல்களை இசைவடிவில் கேட்க சொல்லுங்கள். உருகிப் போவார்கள். எந்தவொரு வார்த்தைக்கும் உயிரூட்டுவது இசைதான்.
அந்தக்கால .. பழைய தமிழ்ப்பாடல்கள் அத்தனையும் தேன்சொட்டுதான்.
சில பாடல்கள் விதிவிலக்காக இருக்கலாம்.
எங்கள் வீட்டில் பழைய தமிழ்ப்பாடல்கள்தான் ஒலித்துக் கொண்டிருக்கும். எப்போதாவது இப்போதைய பாடல்கள் டீவீயில் ஓடிக்கொண்டிருக்கும். அது எனது கஸின் கண்ணில் பட்டுவிட்டால் போதும் .. அவள் கேட்கும் முதல் கேள்வியே ; "உன்னாலே இதை எப்படி சகிச்சுக்க முடியுது. பாட்டுன்னா ஒரு இனிமை வேணும்  டான்ஸுன்னா இதில் நளினம் இருக்கணும். பேய்பிடிச்சு ஆடுற மாதிரி அத்தனையும் ஆடுது. கழைக்கூத்தாடிங்க .. ஜிம்னாஸ்டிக் பண்ற மாதிரி  வித்தை காட்டுதுங்க. நீ பார்த்துட்டு இருக்கிறதை பார்க்க எனக்கு சகிக்கலே. இப்போ இதை நீ ஆஃ ப்  பண்ணு. நான் இங்கிருந்து கிளம்பியதும் இதைப் போட்டு ரசிச்சு பாரு " என்பதுதான்.
சொல்லாத சொல்லுக்கு .. வார்த்தைகளுக்கு மதிப்பு அதிகம்.
திரையில் பக்கம் பக்கமாக வசனம் பேசி நடித்த நடிகர் நடிகையர் அநேகர்.
ஆனால் அவை எல்லாமே நம் மனசில் நிற்குமென்று சொல்லமுடியாது. ஆனால் ஏதோ ஒரு பாடல் காட்சியில் அவர்கள் காட்டி இருக்கும் முகபாவம் இன்றும் நம் மனதில் நிற்கும்.
அப்படி நான் ரசித்த காட்சிகள் இந்த பகுதியில் இடம்பெறும். நேரம் கிடைக்கும் போது நீங்களும் பாருங்கள்.
(இப்போ நினைச்ச நேரத்தில் விரும்பின பாடலை பார்க்கும் டெக்னோலஜி வசதி இருக்கிறதாலே நாம கொஞ்சம் rewind ல் old days - golden days க்கு பயணித்துவிட்டு வரலாம்தானே.)
முதலாவதாக நீங்கள் பார்க்கப் போவது - பாவை விளக்கு படத்தில் இடம் பெற்ற "காவியமா நெஞ்சில் ஓவியமா " என்ற பாடல்.
நடிகர் திலகம் MN ராஜம் அந்த காட்சியில் வலம் வருவார்கள்.
தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க செல்லும் இருவரும் தங்களை ஷாஷகான் மும்தாஜாக கற்பனை செய்து கொண்டு தாஜ்மஹாலை வலம் வருவது போல   காட்சி வரும்.
எனக்கு MN ராஜம் மீது அப்படியொன்றும் பிரேமை கிடையாது. எனக்கு சரோஜா தேவி என்றால் உயிர்.
ஆனால்  "காவியமா நெஞ்சில் ஓவியமா " பாடலைப் பார்க்கும்போது இவர் எனது கனவுக்கன்னியை சற்றே பின்னுக்கு தள்ளி விட்டு விடுவார்.
முஸ்லீம் மன்னர்கள், ராணிகளுக்குரிய உடை நகைகளுடன் எந்தவொரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல்  நடந்து வருவார்கள் இருவரும்.
சிவாஜியின் வர்ணனையைக் கேட்டு ராஜம் தன்னுடைய முகத்தில் அப்படி யொரு வெட்கத்தைக் காட்டுவார்.
சிவாஜியின் கம்பீர நடைக்கு ஈடு கொடுத்து ராஜம் நாணத்துடன் கைகோர்த்து நடப்பார்.
ஷாஷகானும் மும்தாஜும் இப்படித்தான் உப்பரிகையிலும் தோட்டத்திலும் கை கோர்த்தபடி நடந்து சென்றிருப்பார்களோ என்று நினைக்கும் வண்ணம் அவர்கள் காலத்துக்கே நாம் சென்று விடுவோம்.
பாடல்வரிகளும் இசையும் காட்சி அமைப்பும் நம்மை அசையவிடாதபடி அங்கேயே கட்டிப்போட்டு விடும். அடுப்பில் பால் தீய்ந்த வாசனை கூட உங்களை அசைக்காது.
கே.வி.மகாதேவன் இசையில் திருச்சி லோகநாதன் மற்றும் சுசிலா பாடிய அருமையான பாடல்
பாடல் முழுக்க ஒரே ஒரு இடத்தில் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருக்கும். ஒரு வரிக்கு ஒரு காடு .. ஒரு மலை... ஒரு நதி.. அரைகுறை உடை என்று எந்த சமாச்சாரமும் கிடையாது
சுப்ரபாதம் கேட்கிறமாதிரி தினமும் நான் போட்டுப்பார்க்கும் பாடல்களில் இது முதல் இடத்தில் இருக்கிறது.
நீங்களும் பாருங்க... யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். பாடல் வரிகள் கீழே ....

காவியமா நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா

முகலாய சாம்ராஜ்ய தீபமே
சிரித்த முகத்தோடு நினைவில் கொஞ்சும் ரூபமே

மும்தாஜ்ஜே முத்தே என் பேகமே
பேசும் முழு மதியே என் இதய கீதமே

என்றும் இன்பமே பொங்கும் வண்ணமே
என்னை சொந்தம் கொண்ட தெய்வமே

அன்பின் அமுதமே அழகின் சிகரமே
ஆசை வடிவமே உலகின் அதிசயமே
என்னாளும் அழியாத நிலையிலே
காதல் ஒன்றை தான்வாழும் இந்த உலகிலே

கண்முன்னே தோன்றும் அந்த கனவிலே...
உள்ளம் கலந்திடுதே ஆனந்த உணர்விலே

கனியில் ஊறிடும் சுவையை மீறிடும்
இனிமை தருவதுண்மை காதலே

காலம் மாறினும் தேகம் அழியினும்
கதையில் கவிதையில் கலந்தே வாழுவோம்
காவியமா நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா

No comments:

Post a Comment