Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, December 25, 2011

Scanning of Inner- Heart ( மனதின் மறு பக்கம் ) - Scan Report No: 3

                                      இனி குறையொன்றும் இல்லை !

மன்னனாக முடிசூட்டிக்கொண்ட பிறகு சந்திர வர்மன் கொண்டாடும் முதல் பிறந்த நாள் என்பதால் நாடே திருவிழா கோலம் பூண்டிருந்தது. நாடு முழுக்க கொண்டாட்டம் கும்மாளம்தான். ஒருநாளும் இல்லாத திருநாளாக, மன்னன் அன்று ராஜபவனி வர இருப்பதாக தெரிந்ததும் அலங்கார வளைவுகளுக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் கொஞ்சமும் குறைவில்லை. ஊர்வலம் வர இருக்கும் முக்கிய வீதிகள் மேடைகள் அமைத்து தங்கள் திறமையை காட்ட தயாராக இருக்கும் கலைஞர்கள் ஒருபுறமும், அங்கு நடக்க இருக்கும் வேடிக்கை விநோதங்களை காண்பதற்காக அக்கம் பக்கத்து ஊர்களிலிருந்து மட்டுமல்லாமல் அக்கம் பக்கத்துக்கு நாடுகளிலிருந்தும் மக்கள் வந்து குவிந்து விட்டதால்,  எங்கும் ஜன நெருக்கடிதான் தெரிந்தது.
வெகு நேரமாகியும் மன்னரின் ரதம் காணப்படாததால் மக்களின் ஆர்வம் படிப்படியாக குறைந்து, விரக்தியாக மாறி, வெறுப்பாக விஸ்வரூபம் எடுத்து உருமாறிக்கொண்டிருந்தது.  தாமதத்துக்கான காரணம் யாருக்கும் சரியாக தெரியவில்லை என்றாலும், அவரவர்களுக்கு மனதில் தோன்றிய காரணத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தார்கள். கூட்டம் அதிகமாக இருந்ததால் போக்குவரத்து தடைப்பட்டது. அதனால் வீட்டுக்கு திரும்ப நினைத்தவர்கள்கூட, வேறு வழியில்லாமல் நின்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள்.  நேரம் உச்சிப்பொழுதை நெருங்கிக்கொண்டிருந்தபோது பறையொலி  எழுந்து மன்னர் வந்து கொண்டிருக்கிறார் என்பதை அறிவித்ததும் "அப்பாடா" என்ற ஆயாச பெருமூச்சு அனைவரிடமிருந்தும் கிளம்பியது. மன்னரை வரவேற்க மக்கள் தயாரானார்கள்.  ரதத்தில்   மன்னரை பார்த்ததும் குலவையிட்டு தங்கள் சந்தோசத்தை தெரிவித்துக்  கொண்டாலும் , உடலளவிலும் மனதளவிலும் மக்கள் அனைவருமே சோர்ந்து போயிருந்தார்கள்.
வாழ்த்தொலிகளுக்கு நடுவே எழுந்த   " மன்னா ஒரு நிமிடம் " என்ற குரலைக் கேட்டு குரல் வந்த திசையில் தன் பார்வையை படரவிட்டான் சந்த்ரவர்மன்.
கூட்டத்திலிருந்து முண்டியடித்துக்கொண்டு வெளியில் வந்த வயதான முதியவர் ஒருவர் மன்னர் அருகில் வந்து, " மன்னா, இந்த ஏழை சொல்வதை சற்று காது கொடுத்து கேட்கவேண்டும்" என்றார் பணிவாக.
"சொல்லுங்கள் பெரியவரே!" என்றான் சந்திரவர்மன், அவரைவிடவும் பணிவாக.
"மன்னா, உனது பிறந்தநாள் எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடியதுதான். அதை நீ ஏதாவது ஒரு பொது இடத்திலோ அல்லது உனது அரண்மனையிலோ நீ கொண்டாடி இருக்கலாம். கடலளவு கூட்டம் வந்தாலும் தாங்கக்கூடியதல்லவா உனது அரண்மனை. நீயாக வந்து மக்களை சந்திப்பது நல்ல விசயந்தான். ஆனால் அதனால் ஏற்பட்ட ஜன நெரிசலை பார்த்தாயா?  வயலில் நாற்று நட்டு விட்டு வந்து குழந்தைகளுக்கு உணவளிக்கலாம் என்று நினைத்து வயல் வேலைக்கு கிளம்பி வந்த தாய்மார்கள் இன்னும் வயலுக்கே செல்லமுடியாமல் கூட்டத்தில் மாட்டிக்கொண்டிருக்கிரார்கள். இனி இவர்கள் எப்போது வயலுக்கு போவது? எப்போது வயல் வேலையை முடிப்பது ? எப்போது குழந்தைகளுக்கு உணவளிப்பது ? ஒரு சில வேலைகளை அந்தந்த நேரத்திலேயே செய்து முடிக்க வேண்டிய கட்டாயத்தில்  மக்கள் இருக்கிறார்கள் என்பது நீ அறியாத ஒன்றா ?  சரி எங்களை விடு. அதோ பார் அதிகாலையில் மேய்ச்சலுக்கு கிளம்பிய ஆடு மாடுகள் கூட மேய்ச்சல் நிலத்திற்கு போக முடியாமல் நிற்கின்றதே. மன்னா, எங்களுக்கு தெரியும், என்ன காரணத்தினால் பாதை தடை பட்டது என்பதும் இன்னும் சற்று நேரத்தில் அது சரியாகிவிடும் என்பதும். ஆனால் அந்த வாயற்ற ஜீவன்களுக்கு அது தெரியாதே மன்னா. உனது பிறந்த நாளில் வாயற்ற ஜீவன்கள் பட்டினி கிடப்பது உனக்கு அழகல்லவே. " என்றார் பெரியவர்.
"பெரியவரே. என்னுடைய தப்பை உணர்ந்தேன். அரண்மனையில் எனக்கு வாழ்த்து சொல்வதற்காக வந்த புலவர் பெருமக்களிடம் நான் உரையாடிக்கொண்டிருந்ததால் நேரம் போனது தெரியவில்லை. இதே போன்ற தவறு இனியொருமுறை நடக்காதபடி பார்த்துக்கொள்வது என்னுடைய கடமை. இனி என்னுடைய வருகையால், பாதைகள் அடைபட்டு போகாது. பெரியவரே. அரண்மனையில் எனது புகழ் பாட ஆயிரக்கணக்கானோர் இருக்கிறார்கள். ஆனால் எனது தவறை, என்னையறியாமலே நான் செய்யும் தவறை சுட்டிக்காட்ட யாருமே இல்லை. இனி அந்த பொறுப்பை தாங்கள்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்று மன்னன் சொல்ல, "மன்னா, உன் சித்தம் அதுவானால், அது என் பாக்கியம்" என்று பெரியவர் சொல்ல, "இப்படியொரு மன்னர் கிடைத்தது நாங்கள் செய்த பாக்கியந்தான் !" என்று மக்கள் உற்சாக குரல் எழுப்ப, அங்கே ஒரே கொண்டாட்டம் கும்மாளந்தான்.   

No comments:

Post a Comment