Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, December 24, 2011

Scanning of Inner- Heart ( மனதின் மறு பக்கம் ) - Scan Report No: 2

                         
              " வலி " என்பது பொதுவுடைமை !

தன்னைப்பிடித்து யாரோ உலுக்குவது போன்ற உணர்வு வந்ததும் சுயநிலைக்கு வந்த பாலா, தன் மீது ஆச்சரியகுறியை வீசியபடி நின்று கொண்டிருந்த சிறுவனைப் பார்த்ததும் "என்ன தம்பி ?" என்றான் .
"அங்கிள், சிகரெட் முழுக்க எரிஞ்சு போச்சே. உங்களுக்கு கை சுடவே இல்லையா ?"
அப்போதுதான் கையை கவனித்த பாலா, கை விரல்களை உதறியபடி, விரல் நுனியில் துகளாய் ஒட்டியிருந்த சாம்பலை துடைத்தான்,
"அங்கிள், பப்ளிக் பிளேசில் சிகரெட் பிடிக்ககூடாதுன்னு T .V யிலே சொன்னாங்களே ?"
 "சாரிப்பா. மறந்துட்டேன்.  உன் பேர் என்னப்பா ?"
" சரவணன்"
"இங்கே ... எப்படி ... யாரோடு வந்தே ?"
"அங்கிள், எனக்கு தங்கச்சி பாப்பா பிறக்க போகுது. அம்மா உள்ளே இருக்காங்க. அப்பாவுந்தான். என்னை சமர்த்தா மரத்தடியில் விளையாட்டிட்டு     இருக்கணும்னு  சொல்லி இருக்கார் அப்பா. தங்கச்சி பாப்பா அம்மா வயிதிலேயிருந்து வெளியே வந்து "அண்ணா எங்கேனு  கேட்குமாம். அப்பத்தான் நான் போய் பார்க்கணுமாம். அங்கிள் நீங்க இங்கே இருக்கீங்களே. உங்களுக்கும் தங்கச்சி பாப்பா வரப்போகுதா ?"
"தங்கச்சி பாப்பா இல்லே. குழந்தை பிறக்கபோகுது "
"அங்கிள் "
"இதோ பாரு தம்பி, தொந்தரவு பண்ணாமே சமர்த்தா அங்கே போய் விளையாடு' என்றான் பாலா எரிச்சலுடன்.
வேறொரு சமயமாக இருந்திருந்தால் அந்த சிறுவனை தூக்கி உச்சி முகர்ந்து முத்தமிட்டிருப்பான்.  அவன் கவலை எல்லாம் லேபர் வார்டுக்குள் போன மனைவி எப்படி இருக்கிறாளோ ? டெலிவரி ஆக இன்னும் எவ்வளவு நேரமாகுமோ தெரியலையே என்பதுதான்.  லேபர் வார்டு அருகிலேயே நிற்கும் மாமனார் மாமியாரை பார்க்கும்போது எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது பாலாவிற்கு.  பிரைவேட் கிளினிக்கில் சேர்க்கலாம் என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்தான்.
" மாப்பிள்ளே, அழுதாலும் பிள்ளை அவள்தான் பெறணும். பிரைவேட் ஆஸ்பத்திரிலே  பணத்துக்கு ஆசைப்பட்டு நார்மல் டெலிவரியைக்கூட சிசேரியன்  ஆக்கிடுவாங்க. அதை சினிமா படத்திலே வேறு காட்டியிருக்காங்க.  இது தெரிஞ்சும் நாம அதுலே போய் விழணுமா என்ன ?  என்ன, கவர்மென்ட் ஆஸ்பத்திரியிலே சுத்தபத்தம் போதாது.  மூக்கை பிடிச்சிட்டு ஒரு மூணு நாளை ஓட்டிட்டு வந்திடோம்னா  பணம் மிச்சமாகுமே. பிரைவேட் ஆஸ்பத்திரியில் அழுற தண்ட செலவு  மிச்சமானா அந்த பணத்துக்கு சத்தான மருந்து மாத்திரை வாங்கி கொடுத்து என் பொண்ணோட உடம்பை மட்டுமில்லே,  உங்களுக்கு பிறக்க போகிற குழந்தை உடம்பையும் சேர்த்தே தேத்திடலாமே" என்று சொல்லி அவன் வாயை அடைத்து விட்டார்கள் இருவரும். வாயை மூடிக்கொண்டிருந்தது தன்னோட தப்புதானோ என்ற வருத்தம் ஏற்பட்டது பாலாவிற்கு.
பிரைவேட் கிளினிக்கில் கை நீட்டி வாங்குகிற பணத்துக்காகவாவது மனுசனை மனுசனா நினச்சு பதில் சொல்வாங்க. இங்கே மனுசங்க தவிப்பு புரியாமே, எதாவது கேட்டா நாயை  விரட்டுற மாதிரி விரட்டறாங்க. வார்டு பாய் கூட டாக்டர் மாதிரியான தோரணையில் பேசுகிறான்.  ச்சே. உள்ளே என்ன நடக்குதுனே தெரியலே. மஞ்சு எப்படி இருக்கிறாளோ தெரியலியே என்ற தவிப்பில் இருந்தான்.
விறுவிறுன்னு உள்ளே போய் எட்டி பார்த்துட்டு வந்திடலாமா ?  நான் உள்ளே போறதா பார்த்தா வாட்ச்மேன்  அடிக்க வருவான். அதிக பட்சம் போலீசில் ஹான்ட் ஓவர் பண்ணுவாங்க. அவ்வளவுதானே ? போய் பார்த்து விட்டு நிலைமை மோசமாக இருந்தால் பிரைவேட் கிளினிக்கில் அட்மிட் பண்ணிடலாமா  என்று மனம் யோசித்தது.
லேபர் வார்டில் பிரசவ வழியில் துடித்து கொண்டிருந்த மஞ்சு சுற்றுமுற்றும் பார்த்தாள். அறையில் யாருமே இல்லை. தலைச்சன் பிள்ளை, மெதுவாகத்தான் பிறக்கும் என்று சொல்லி இன்ஜெக்சன் போட்டு விட்டு போன நர்ஸ், அரைமணி நேரம் கழிந்த பிறகும்கூட அறைக்குள் வந்து எட்டிப் பார்க்கவில்லை.
கடவுளே பாலாவிற்கு தைரியம் கொடு என்று மனது பிரார்த்தித்தது.  வலியில் துடிதுடித்தே செத்து போய் விடுவோமோ என்ற பயம் மனதுக்குள் எழுந்தது.
ச்சே,  ச்சே, அப்படியெல்லாம் எதுவும் ஆகாது. இந்த உலகத்தின் ஜனத்தொகை கோடானு கோடி. அத்தனை பேரும் யாரோ ஒரு சிலரின் வலியில்தானே பிறந்திருக்கிறார்கள் என்று அறிவு தைரியம் சொன்னது.
அறைக்குள் யாரோ வரும் காலடி ஓசை கேட்டது. நெஞ்சு வரை வந்த  வலியை  பொறுத்துக்கொண்டு தலையை நிமிர்த்தி வாசலை பார்த்தாள். கையில் பேசினோடு ஆயா ஒருத்தி உள்ளே வந்தாள்.
"அம்மா இங்கே வாங்களேன்" என்று ஈனஸ்வரத்தில் முனகினாள்.
"பேசாமே படுத்திரும்மா. டாக்டரம்மா வந்து பார்ப்பாங்க . பொறுத்துக்கோ "
"அதில்லேம்மா " என்ற மஞ்சு , அருகில் வரும்படி ஆயாவை சைகை காட்டி அழைத்தாள்.
"என்னம்மா, சட்னு சொல்லு. டாக்டரம்மா வந்தா கன்னாபின்னான்னு கத்தும்." என்றபடி அருகில் வந்தாள் ஆயா.
"எனக்கொரு உதவி பண்ணனும்மா. வெளியே என் ஹஸ்பென்ட் நிற்பார். பேரு பாலா. அவர்ட்ட போய் எனக்கு இன்னும் பிரசவ  வலி வரலே. சும்மாதான் பெட்டில் படுத்திருக்கிறேன். வலி வர இன்னும் அஞ்சாறு மணி நேரம் ஆகும். நான் நல்லா இருக்கிறேன்னு சொல்லணும்." என்றாள் மஞ்சு மெல்லிய குரலில்.
"நல்ல பொண்ணும்மா நீ. உயிர் போற அவஸ்தையில் துடிச்சிட்டு இருக்கிறே. இன்னும் வலி வரலேன்னு போய் சொல்ல சொல்றே?" என்று வியந்தாள் ஆயா.
"அம்மா நான் பிரசவ வழியில் துடிச்சுகிட்டு இருக்கிறேன். நான் எப்படி இருக்கிறேனோ தெரியலியேனு என் ஹஸ்பென்ட் மனசுக்குள் துடிச்சு கிட்டு இருப்பார். நான் உடலில் அனுபவிக்கிற நரக வேதனையை என் ஹஸ்பென்ட் மனசுக்குள் அனுபவிச்சிட்டு இருப்பார்.  வலிங்கிறது ரெண்டு பேருக்கும் பொதுவானதுதானே. என் வலிக்கு மருந்து மாத்திரை இருக்கு. ஆனா என்னதான் தைரியம் சொன்னாலும் என்னையும் குழந்தையையும் கண்ணாலே பார்கிறவரை அவர் வேதனை பட்டுட்டு இருப்பார்.  எனக்கு இன்னும் வலியே வரலைன்னு தெரிஞ்சா கொஞ்ச நேரமாவது அமைதியா இருப்பார். அதற்குள் குழந்தை பிறந்திட்டா அந்த சேதியை அவரிடம் சொல்லிடலாம்.  கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்கம்மா " என்றாள் மஞ்சு திக்கி திணறியபடி.
"வயித்து சுமையோடு அவஸ்தை படும்போதுகூட உன்னை பத்தி கவலைபடாமே உன் புருசனைபத்தி கவலை படுதியே.  உன்னை கட்டிகிட்டவன் கொடுத்து வச்சவன்தான்",
"அம்மா இந்த சுமை பத்து மாச சுமைதான். இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்த பாரம் இறங்கிடும். ஆனா என்னையும் குழந்தையையும் காலம் பூராவும் சுமக்க போறவர் அவர்தானேம்மா!" என்று முனகிய குரலில் சொன்னாள் மஞ்சு.
"ஹும். பேறுகால நேரத்தில் புருஷனை ஏசுற பொம்பளைகளை பார்த்திருக்கிறேன். நீ என்னடான்னா அவன் மனசு படுற வேதனையை நினைச்சு வேதனை பட்டுட்டு இருக்கிறே. உன்னை போலவே எல்லா பொம்பளைகளும் இருந்துட்டா, வீட்டுக்குள் சண்டை சச்சரவு எதுவும் இருக்காது. வீடும் நாடும் நல்லா இருக்கும். அவன் பேர் என்னனு சொன்னே. பாலாதானே? நீ சொன்ன மாதிரியே சொல்லிடுதேன் கண்ணு. நீ தைரியமா இரு " என்று சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறிய ஆயாவை மனநிறைவோடு பார்த்தாள் மஞ்சு.


No comments:

Post a Comment