Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Monday, December 05, 2011

Stories told by GRAND-MA ( Story number - 4 )

                                                          
                                                    
ராசி ?

வெளியில் சென்ற வேகத்திலேயே வீட்டிற்குள் பிரபு வருவதைக்கண்ட பாட்டி "என்னடா குழந்தே. வெளியில் போறேன். வர நேரமாகும்னு சொல்லிட்டு போனே. போன வேகத்திலேயே திரும்பி வர்றே. என்னடா விஷயம்  ?" என்று கேட்டாள் .
"போ பாட்டி. நான் போறச்சே அந்த சிவா குறுக்கே வந்தான். அவன் வந்தாலே எனக்கு ராசி கிடையாது. அன்னிக்கு அப்படித்தான். நான் வெளியே போறச்சே அவன் வந்தான். நான் சைக்கிளில் இருந்து விழுந்து எழும்பி வந்தேன். இன்னிக்கு அப்படி ஆயிடகூடாதேனுதான் நான் திரும்பி வந்துட்டேன்." என்று விளக்கம் சொன்னான் பிரபு.
"போடா புண்ணாக்கு! நீயே ஒரு அரைகுறை. சைக்கிள் ஓட்ட தெரியாமல் ஓட்டி நீ கீழே விழுந்தால் அதற்கு அவனா பொறுப்பு?" என்றாள் மனோ. 
"பாட்டி இந்த ஊரில் ஆம்புலன்ஸ் வசதி எல்லாம் உண்டா ?"
"ஏன்?"
"இப்போ ஒரு ஆள் ஆஸ்பிடலில் அட்மிட் ஆகபோகுது"
"பாட்டி அவன் என்னைத்தான் சொல்றான்"
"இதோ பாரு குழந்தே, நம்ம செயலுக்கு நாமதான் பொறுப்பு. இதிலே ராசி எங்கிருந்து வந்துசு ?. எல்லாத்துக்கும் நம்ம மனசுதான்  கண்ணு  காரணம்" என்றாள் பாட்டி.
"பாட்டி நீ அதற்கும் ஒரு கதை வச்சிருப்பியே . கொஞ்சம் எடுத்து விடறது" என்றனர் இருவரும் கோரசாக.
"ஒரு ராஜா நகர் வலம் வந்து கொண்டிருந்தார். ராஜா வருவதைக்கூட கவனிக்காமல் ஒரு கும்பல் கூடி நின்று ஒருவனை அடித்து துரத்திக் கொண்டிருந்தது.அங்கு போன ராஜா என்ன ஏதுன்னு விசாரித்தார்.ஒருத்தர் சொன்னார் - "ராஜாவே இதோ நிற்கிறானே இவன் ஒரு பிச்சைக்காரன். இவன் முகத்தில் முழிச்சா  அன்னிக்கு பூராவும் சாப்பாடே சாப்பிட முடியாமல் போயிடுது. அதனால்தான் இவனை இந்த இடத்தை விட்டு அடிச்சு விரட்டுறோம் னு "ஆச்சரியப்பட்ட ராஜா "அப்படி கூட ஒன்று இருக்கா என்ன ?" என்றார்.
"ஆமாம் " என்று எல்லோரும் அடித்து சொன்னார்கள். உடனே ராஜா சொன்னார்  "நீங்க சொல்றதவச்சு  மட்டும் இவனை வெளியே அனுப்பி விடமுடியாது. இவன் ராசியை நானும் சோதிக்கிறேன். அதன்பிறகு இவனை என்ன செய்வதென்று  யோசிக்கலாம்" என்றார். காவலரை அழைத்து அந்த பிச்சைக்காரனை அரண்மனைக்கு அழைத்து போக சொன்னார். மறுநாள் காலையில் அவன் முகத்தில் ராஜா முழிக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் பிறகு ராஜா தன்னுடைய காலைக்கடனை முடிக்கப்போனார்."
"காலைக்கடன்னா என்ன பாட்டி?"
"போடி லூசு! பல் தேய்த்து குளித்து முடிக்கிறது"
"டவுட் கேட்டா அதுக்குப்போய் ஏன்டா லூசுன்னு சொல்றே?"
"நீங்க சண்டையை போட்டு முடிங்க. அதற்கு பிறகு நான் கதை சொல்றேன்" என்று எழுந்தாள் பாட்டி.
"இல்லே பாட்டி. சமாதானம் ஆயிடுச்சு. நீ கதையை  ஸ்டார்ட் பண்ணு"
"அப்போ மந்திரி வேகவேகமா வந்தார். " மன்னா பக்கத்து நாட்டு மன்னன் நம்ம நாட்டின் மீது படையெடுக்க ஆயத்தமா இருப்பதாக ஒற்றன் செய்தி கொண்டு வந்திருக்கிறான்.அரசசபையை கூட்டி உடனே ஆலோசனை நடத்தவேண்டும் " என்றார்.
ராஜா "அப்படியே ஆகட்டும்"னு சொல்லிட்டு பால் கூட குடிக்காமல் சபைக்கு கிளம்பிட்டார். விவாதம் மத்தியானம் வரை தொடர்ந்தது. ராஜா எதுவுமே சாப்பிடலே.
அதற்குள் ஒரு காவலன் ஓடி வந்து " மன்னா. நண்பர்களுடன் விளையாட சென்ற நம் இளவரசர் நீரோடையில் விழுந்து விட்டார்.அவரை தேடி காவலர்கள் போயிருக்கிறார்கள். உங்களுக்கு சேதி சொல்ல நான் வந்தேன்" என்றதும், ராஜா சபையை கலைத்து விட்டு மகனை தேடி சென்றார். ஒருவழியா இளவரசனை கண்டுபிடித்து அரண்மனைக்குள் வருவதற்குள் இரவு ஆகிவிட்டது. அவனுக்கு வைத்தியம் பண்ணி அவன் கண் திறந்து பார்த்ததும்தான் அரசர் அந்த இடத்தை விட்டு போனார்.
இதற்குள் நடுநிசி ஆகிவிட்டது. ரொம்பவும் களைப்பாகி படுக்கைக்கு போனார். அப்போதுதான் அவருக்கு, தான் காலையிலிருந்து எதுவுமே சாப்பிடவில்லை என்ற நினைப்பு வந்தது. அந்த பிச்சைக்காரன் நினைப்பும் அவனைப்பற்றி மக்கள் சொன்னதும் நினைவுக்கு வந்தது.
மறுநாள் முதல் வேலையா ராஜசபையை கூட்டினார்.கூடியிருந்த மக்களிடம் "நீங்க சொன்னது சரிதான்.நேற்று நான் இவன் முகத்தில்தான் முழித்தேன். அரசனான எனக்கே நேற்று பூராவும் உணவு கிடைக்கவில்லை. எல்லாம் இருந்தும் சாப்பிடமுடியாத நிலைமை. சாதாரண பொது ஜனங்களாகிய நீங்க என்ன செய்வீங்க? இவனை வேறு ஊருக்கு அடித்து துரத்தினாலும் அங்குள்ளவங்களுக்கு இதே நிலைமைதானே ஏற்படும். அதனாலே இவனுக்கு மரண தண்டனை விதிக்கிறே"னு சொன்னார்.
கூட்டத்தினர் கை தட்டி சந்தோசபட்டார்கள்.
அந்த பிச்சைக்காரனிடம் ராஜா கேட்டார் " நீ சாகறதுக்கு முன்னாடி என்ன சொல்ல விரும்பறேனு".
அதற்கு அவன், " என்னோட முகத்திலே நீங்க முழிச்ச  மாதிரி, நானும் உங்க முகத்திலே முதல் முறையா முழிச்சேன் . என்னோடோ முகத்திலே முழிச்சதாலே  உங்களுக்கு சாப்பாடுதான் கிடைக்கலே. ஆனால் உங்க முகத்திலே முழிச்ச  ராசி, என்னோட உயிரே போகப்போகுதே. இதற்கு என்ன சொல்றீங்க"னு கேட்க, தன்னோட தப்பை உணர்ந்த ராஜா மக்களிடம் ,
" ஒவ்வொருவருடைய நல்லது  கெட்டதுக்கும்அவங்கவங்க செய்கைதான் பொறுப்பே தவிர, மற்றவர்கள் பொறுப்பாக மாட்டார்கள்.இந்த பிச்சைக்காரனை துன்புறுத்துவது எந்த வகையிலும் நியாயமில்லை"னு சொல்லி  விட்டு அந்த பிச்சைகாரனுக்கு பணம் கொடுத்து "ஏதாவது தொழில் பண்ணி பிழைசுகோனு" அனுப்பிவச்சார். "இப்போ உனக்கு நான் சொல்றேன்,  நீ கீழே விழுந்ததுக்கும் சிவா எதிரே வந்ததுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாதுன்னு" என்று பாட்டி சொல்ல, " பாட்டி நான் இப்போ சிவா வீடு வரை போயிட்டு வந்திடறேன்" என்று கிளம்பினாள் மனோ.
"ஏன்டீ?"
"பிரபு போறப்போ சிவா வந்த மாதிரி, சிவா கிளம்பறப்போ பிரபு எதிரே போயிருக்கிறான். சிவாவுக்கு ஏதாவது ஆச்சுதான்னு கேட்டு தெரிஞ்சிட்டு வந்திடறேன்" என்று மனோ சொல்ல,
 " பாட்டி கிராமத்து வீட்டிலெல்லாம்  உலக்கைன்னு ஒன்னு இருக்குமே அது உன் வீட்டில் எங்கே வச்சிருக்கிறே?" என்றான் பிரபு
"உலக்கை எதுக்குடா இப்போ?"
"மனோ தலையில்  போடத்தான்!" என்று பிரபு சொல்ல, அங்கிருந்து ஓட்டம் எடுத்தாள் மனோ.

No comments:

Post a Comment