Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, December 23, 2011

Scanning of Inner- Heart ( மனதின் மறு பக்கம் ) - Scan Report No: 4

           


அழுக்கு வேஷ்டி சாமியாரும் துறவும் !

புள்ளைகளா, ராமாயாணம் படிச்சிருப்பீகதானே ? என்னளா இது, இப்படி திடுதிப்புன்னு கேட்குதாளே இந்த கோமதி ஆச்சி, இவ ரொம்ப குசும்பு பிடிச்சவளா இருப்பா போலிருக்கேன்னு நெனச்சிறாதீக.  நான் சொல்ல வந்த சங்கதிக்கும் ராமாயானதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லே. நானு அந்த காலத்து அஞ்சாம் கிளாஸ். எங்க வீட்டு ஐயா தமிழ் வாத்தியாரு. அவக போய் சேர்ந்து ரொம்ப காலம் ஆச்சு. சில நாளு, ராத்தூக்கம் பிடிக்காமே நானும் எங்க  வீட்டு ஐயாவும் விடியற வரை கொட்ட கொட்ட முழிசிட்டுருப்போம். பொழுது போய் தொலையனுமேனு எதையாவது பேசிகிட்டே இருப்போம். அப்பல்லாம் எங்க வீட்டு ஐயா ராமாயாணத்த பத்திதான் பேசிட்டே இருப்பாக.  பாதி கேட்டுட்டுருக்கும்போதே பாவி மக தூங்கி தொலைச்சிருவேன். வாய் மட்டும் "உம்" கொட்டிட்டே இருக்கும் . 
எதுக்கெடுத்தாலும் எங்க வீட்டு ஐயா ராமாயணம் கதையை உதாரணம் காமிச்சுதான் பேசுவாக. அந்த பழக்கம் என்கிட்டேயும் தொத்திகிட்டுது. 
நம்ம ராமன் காட்டுக்கு போறத பத்தி கம்பர் ஐயா என்ன சொல்லுதாகன்னு தெரியுமா? ராமன் போறத பத்தி சங்கடப்பட்டு கிளி அழுதுச்சு, பூ அழுதுச்சு, பூனை அழுதுச்சு. தாய் வயத்திலே, கருவிலே இருந்த புள்ளைகூட அழுதுசுனு ஒவ்வொன்னா வரிசையா பட்டியல் போட்டுருப்பாக. ஆனா, ராமன்,திரும்பவும் நாட்டுக்குள்ளே வர்றத பத்தி சொல்லும்போது, கிளி சிரிச்சிது, பூ சிரிச்சிது, பூனை சிரிச்சுது, புள்ளை சிரிசிதுன்னு சொல்லாமே, ராமன் காட்டுக்கு போறத நினச்சு யாருல்லாம் சங்கட பட்டாகளோ அவக எல்லோரும் சந்தோஷ பட்டாகணு ஒத்த வார்த்தையிலே முடிச்சிருப்பாக.
அந்தமாரி (அந்த மாதிரி ) "அழுக்கு வேஷ்டி சாமியார்" யாரு, எங்கிட்டுருந்து வந்தாக, அவகளுக்கு இங்கிட்டு என்ன ஜோலின்னு நினச்சு கொஞ்சமும் கவலைப்படாத இந்த ஊர் ஜனம் அத்தனை பேரும்,  சாமி ஏன் இப்படி எதுவுமே பேசாத மௌன சாமியா ஆயிட்டாகனு நினைச்சு மனசு சங்கட படுதாக. அவக சங்கடம் அம்புட்டு இம்புட்டுன்னு இல்லே; அதை சொல்ல வாய் வார்த்தையும் இல்லே.கொஞ்ச நாளைக்கு முன்னமே தான், சரியா சொல்லனும்னா, ஒரு ஏழெட்டு மாசம் முன்னே தான் சாமி இந்த ஊருக்கு வந்தாக. அவக தாடி மீசை, அழுக்கு வேஷ்டி இத எல்லாம் பார்த்துட்டு இந்த ஊர் பொம்பளைக  அவகளை கோட்டிக்கார பயனு நினச்சு பயந்து ஒதுங்கி போனாக,; அதுக்கு பிறகு ஜனம் அத்தனையும் அவகளை  "அழுக்கு வேஷ்டி சாமி"ன்னு அடைமொழி வச்சே சொல்ல ஆரம்பிச்சாக. ஆம்பிளைக யாரும் சாமிய ஒரு பெரிய விசயமாவே நினைக்கலே. அவக அவக மனசிலே ஆயிரத்தெட்டு கவலை. அதனாலே அவக யாரும் சாமிய பத்தி கவலை படலே. இந்த ஊரிலேருக்கிற ஒன்னு ரெண்டு துணிஞ்ச பொம்பளைகதான் சாமி கிட்டே போய், அவக யாரு, எவருனு விவரம் கேட்டாக.
"சொல்லுத அளவுக்கு எதுவுமே இல்லை. வடக்கே பூரா சுத்தி அலைஞ்சிட்டு இங்கிட்டு வந்திட்டதா சாமி சொன்னாக. இங்கிட்டுருக்கிற பொம்பளைக சாமிகிட்டே போய் பேசிறத பார்த்த இங்கிட்டுருக்கிற விடலை புள்ளைக, "ஊர் உலகத்திலே அழுக்கு வேஷ்டி கட்டிட்டு ஒருத்தன் வெளியே  நடமாடிடக்கூடாதே. உடனே அம்புட்டு பொம்பளைகளும் "சாமி'ன்னு சொல்லி அவன் கால்லே விழுந்துருவீகளே. உங்க காதிலே கழுத்திலே கிடக்கிறத அவன் அறுத்துட்டு ஓடறவரை "சாமி சாமி"ன்னு அவன் பின்னாலேதானே சுத்துவீக"னு  கேலி பேசுச்சுக;  "அழுக்கு வேஷ்டி சாமியார்"ன்னு அடைமொழி கொடுத்து பேசின விடலைகல்லாம்கூட நாளாக நாளாக சாமி பக்கம் வர ஆரம்பிசிட்டுக.  பொழுது போகாத நேரத்திலே சாமிகூட உக்கார்ந்து கதை பேச ஆரம்பிசுதுக.
பெரியவக சின்னவக, இருக்கிறவக இல்லாதவங்க என்கிற வேத்துமை இல்லாமே சாமி எல்லாரு கிட்டேயும் சரிசமமாதான் பேசி பழகினாக. குடுத்த வேலையை செஞ்சாக. போட்ட சோத்தை தின்னாக. நோய் கண்டவகளை கண்டுபிட்டா மருந்து சொன்னாக. சாமியை இங்கிட்டு எல்லாத்துக்குமே ரொம்பவுமே பிடிச்சு போச்சு. பௌர்ணமி நாள்லே ஆத்தோரம் உக்கார்ந்து கதை எல்லாம் சொன்னாக. சாமி எப்பவுமே கலகலப்பா இருக்கும். அதனாலேயே அவைகளை அம்புட்டு பேருக்கும் பிடிச்சு போச்சு. எங்க வீட்டு ஐயா மாதிரியே சாமியும் விஷயம் தெரிஞ்ச ஆளுதான்.  புராண கதையாகட்டும்; இன்னிக்கு நடக்கிற சினிமா கதையாகட்டும்; எல்லாத்தையுமே சாமி புட்டு புட்டு வச்சிடும். ஆனாலும்
எனக்கு அவக கிட்டே கொஞ்சம்கூட பிடிக்காத கேட்ட குணம் என்னன்னா சாமி எப்பவும் பொம்பளைகளை மட்டம் தட்டியே பேசும். அதனாலேதான் அவகளை ஆம்பிளைகளுக்கு ரொம்பவும் பிடிச்சு போச்சோ என்னவோ; ஆனா பொம்பளைக்க யாரும் இதை ஒரு விசயமாவே நினைக்கலே.
வீம்புக்குன்னே இங்கிட்டுருக்கிற விடலை புள்ளைக சாமிகிட்டே "ஆம்பிளை சாமியாருங்க ரொம்ப பேர் இருக்காக. ஆனாக்க பொம்பளை சாமியாரை என்கிட்டுமே காண்கலையே? அது ஏன் சாமி?ன்னு கேட்பானுக. உடனே அழுக்கு வேஷ்டி சாமிக்கு சிரிப்பாணி அள்ளிட்டு போகும். கொதப்பிகிட்டு இருக்கிற வெத்தலைய சுவத்தோரம் துப்பிட்டு வந்து, "பொம்பளையாலே அம்புட்டு சீக்கிரம் எதையும்  உட்டுட முடியாது.  பொம்பளைக்கு துறவு சரிப்பட்டு வராது"ன்னு சொல்லிப்பிட்டு சில்லறைய அள்ளி சிதறி விட்டாப்லே சிரிப்பாக. அத கேட்டுபிட்டு ஆம்பளைகளும் விழுந்து விழுந்து சிரிப்பாக. ஆனா அதை பொம்பளைக யாரும் சட்டை பண்ணவே இல்லை.
என் வீட்டிலே குடியிருக்காகளே தங்கராசும் அவன் பொஞ்சாதி பாப்புவும் 
(பாப்புங்கிறது நான் வச்ச பேருதான். அந்த புள்ளே பேர் வடக்கத்தி பேர் மாதிரி இருக்கும். அந்த சனியன் பிடிச்ச பேர் என் வாய்க்குள்ளேயே நுழையாது.  அந்த புள்ளையும் வடக்கத்தி புள்ளைதான். அது பேர் என் வாயிலே நுழையாததாலே நான் "பாப்பு" "பாப்ப்பு"ன்னு கூப்பிடுவேன். கடைசிலே பாப்புங்கிறதே  அதுக்கு பேரா ஆயிட்டுது. இம்புட்டு ஏன். ? நம்ம தங்கராசு பய கூட அவளை "பாப்பு"னே கூப்பிட ஆரம்பிச்சிட்டான்.  ஊருக்கு போயிருந்தவக போன பௌர்ணமிக்கு நாலு நா மின்னாடிதான் வீட்டுக்கு திரும்பி வந்தாக.  பாப்பு முழுகாமே இருந்தா. புள்ளை வயித்துக்குள்ளே நிலை  மாறி கிடக்குன்னு டாக்டரம்மா சொல்லிபுட்டா . நிக்கக்கூடாது , நடக்கக்கூடாதுன்னு வேறே சொல்லிபுட்டாளாம். நாங்கல்லாம் அந்த காலத்திலே மருந்தை கண்டோமா மாத்திரைய கண்டோமா. நானும் ஏழு பெத்தேன். நாளை எமன் கிட்டே வாரி குடுத்திட்டேன். மிச்ச மூணுலே ஒன்னு மதுரையிலே இருக்கு. மத்த ரெண்டு திண்டுகல்லிலே இருக்கு. ஆஸ்பத்திரின்னா என்னன்னு எங்களுக்கு தெரியாது. இப்போ புதுசு புதுசா எதை எதையோ கண்டு பிடிக்காக. நோவும் புதுசு புதுசாதான் வருது. டாக்டரம்மா சொன்னத கேட்டு இந்த தங்கராசு பய ரொம்பவுமே பயந்து போயிட்டான், பாப்புவை கொண்டு போய் அவன் அம்மை வீட்டிலே விட்டுட்டு வந்துட்டான். அங்கேயும் ஒன்னும் செழிப்பு கிடையாது. கஷ்ட ஜீவனம்தான். அதான் தங்கராசும் அந்த பக்கம் ஏதாது ஜோலி கிடைச்சா பார்க்கலாம்னுட்டு அம்மை  வீட்டுக்கே போய்ட்டான். ஒரு வழியா புள்ளை வயித்தை விட்டு கழிஞ்சு தாயும் புள்ளையும் நல்லாயிட்டாக. அதை கேட்ட பொறகுதான் எனக்கு போன உசிரு திரும்பி வந்தாப்லே இருந்துது.  தங்கராசு மட்டும் வந்து அப்பப்போ எட்டி பார்த்துட்டு போவான், இப்ப பொஞ்சாதி புள்ளைய கூடிட்டு வந்திட்டான். புள்ளை நல்லாதான் இருக்கிறான். தலைபுள்ளை, அதுவும் ஆம்பிளை புள்ளை . அப்படியே அம்மையை உரிச்சு வச்சிருக்கிறான். ஆம்பிளை பிள்ளை அம்மை மாதிரி இருந்தா அதிர்ஷ்டம்னு சொல்லுவாங்க. புள்ளை பெத்து எடுத்துட்டு    வீட்டுக்கு வந்ததுமே அழுக்கு வேஷ்டி சாமியாரை பத்தி கேள்விப்பட்டு சாமியை பௌர்ணமியன்னிக்கு வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டிருந்தா பாப்பு. சாமியும் சாப்பிட வந்தாக. வந்ததுமே இந்த புள்ளைய பார்த்துட்டு அப்படியே மலைச்சு போய் நின்னுட்டாக.
பாப்பு வடையும் பாயாசமுமா வச்சிருந்தா. எனக்கும் கொண்டாந்து குடுத்தா. ஆனா எனக்குதான் திங்கவே விளங்கலே. எனக்குந்தான் வயசு எழுபத்தாறு முடிய போகுதே. எதையாவது "குடு" "குடு"ன்னு வாய் கேட்குது.  ஆனா வயிறுதான் எதையுமே ஏத்துக்க மாட்டேங்குது. சாப்பிட்டு முடிச்சதுமே சாமி என் வீட்டு  திண்ணையிலே வந்து உக்காந்தாக. " என்ன பெரியம்மா தூக்கம்மா?"ன்னு  விசாரிச்சாக,; எனக்கு அப்பவே பொறி தட்டுச்சு. சாமி நம்ம கிட்டே எதையோ பேச நினைக்காகனு புரிஞ்சு போச்சுது.
"இல்லே சாமி, வயசு ஏற ஏற தூக்கம் நம்மள விட்டு போயிடுதே. சாப்பிட்ட களைப்பு. அதான் சித்த நேரம் கண்ணசருவோம்னு தலையை கீழே
சாய்ச்சேன். என்ன சங்கதி' ன்னு கேட்டேன்.
" ஒண்ணுமில்லே. இந்த புள்ளை பாப்புவை பார்த்தா இந்த பக்கம் உள்ள புள்ளை மாதிரி தெரியலியே"னு சாமி கேட்டாக.  ஆமாம் சாமி, வடக்கே எங்கியோ தூரா தொலையிலே இருக்கிற ஊராம். இந்த புள்ளை அப்பன் அம்மையை எதிர்த்து பேசிட்டு நம்ம தங்கராசை கட்டிக்கிட்டு வந்திட்டுது. இந்த பய தங்கராசும் நல்லா படிச்ச பயதான். ஆனா எதோ சண்டையிலே படிச்சதுக்கான அத்தாச்சி எல்லாம் எரிஞ்சு போச்சாம். இந்த பக்கம் வந்து வயலு வேலையை பார்துட்டுக்கிறானு சொன்னேன். அந்த சமயம் பார்த்து தங்கராசு அந்த பக்கம் வந்தாப்லே . " என்னப்பா நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டாச்சா"னு  சாமி கேட்க, "ஆமாம்"னான் தங்கராசு.
"அப்படின்னா இப்படி உக்காருப்பா"ன்னு சாமி சொல்ல, அவக பக்கத்திலே வந்து உக்கார்ந்தான் தங்கராசு. சரிதான், ஆம்பிள்ளைக  ரெண்டு பேரும் எதோ பேசப்போறாக போலிருக்கு. அங்கன நமக்கென்ன ஜோலின்னு நினச்சிட்டு நான் எந்திரிச்சு உள்ளே போயிட்டேன்.  இருந்தாலும் அவக ரெண்டு பேரும் பேசினது எனக்கு காதிலே விழத்தான் செஞ்சுது.
எடுத்த எடுப்பிலேயே சாமி " தம்பி, உன் பொஞ்சாதி பாப்பு சர்மா அய்யா வீட்டு  பொண்ணுதானேனு கேட்டாக.
"ஆமாம் சாமி. அவகளை உங்களுக்கு தெரியுமா"ன்னு தங்கராசு கேட்டான்.
"தெரியுமாவா ? தம்பி, ஒவ்வொரு பௌர்ணமிக்கும் சர்மா அய்யா ஹரிதுவாரிலே உள்ள பண்டாரம் பரதேசிகளுக்கு சாப்பாடு போடுவார். நானே எத்தினியோ தடவை அங்கே சாப்பிட்டுருக்கிறேன். இந்த புள்ளைதான் சாப்பாடு பரிமாறும். மூணு சுமங்கலி பொண்ணுகளுக்கு அய்யா தங்க காசு தருவார்.  உன் வீட்டம்மா பாப்பு பௌர்ணமியன்னிக்கு பிறந்தாளாம். கொள்ளை அழகாம். சாட்சாத் அம்பாளே வந்து பொண்ணா பிறந்திருக்கிறதா எல்லோரும் கொண்டாடினாங்களாம். இந்த புள்ளை பிறந்த பிறகுதான்  அய்யாவோட வியாபாரம் பெருகி கோடீஸ்வரன் ஆனாராம். அப்பேர்ப்பட்ட கோடீஸ்வரன் வீட்டு பொண்ணு இந்த மண் குடிசையில் ! எப்படியப்பா ?'ன்னு சாமி கேட்க," சாமி, என் குடும்பம் வசதி இல்லாத குடும்பம்தான். கடனை உடனை வாங்கி எங்க அப்பா என்னை நல்லா படிக்க வச்சார். டில்லியில் நல்ல வேலையும் கிடைச்சுது. வேலை விசயமா அடிக்கடி ஹரித்துவார் போவேன். அப்பத்தான் எனக்கும் இவளுக்கும் பழக்கம் வந்துச்சு.  இவ வீட்டுக்கு தெரிஞ்சு ஏக ரகளை. எல்லா எதிர்ப்பையும் மீறி இவ என்னை கல்யாணம் பண்ணிகிட்டா.  இவ அப்பா கோப பட்டார். இவ மனசை மாத்த முயற்சி செஞ்சார். இவ பிடிவாதத்தில் அவர் தோத்து போய் "எனக்கு பொண்ணே இல்லை. செத்து போயிட்டான்னு நினைசுகிறேனு  சொல்லிட்டு போயிட்டார். ஆனா இவளோட உறவுக்காரங்க எங்களை டில்லியில் இருக்க விடாமே பண்ணினாங்க. நான் பார்திட்டுருந்த வேலையிலிருந்து என்னை துரத்தி அடிச்சாங்க.  என்னோட சர்டிபிக்கேட்  எல்லாத்தையும் தேடி எடுத்து கொளுத்தினாங்க. டில்லியில் நான் கூலி வேலைகூட பார்க்க முடியாதபடி துரத்தி அடிச்சாங்க. உயிர் பிழைச்சா போதும்னு இங்கே வந்தோம். இங்கு வந்தும் வம்பு பண்ணினாங்க. இங்கே வயல் வேலைக்கு ஆள் கிடைப்பது குதிரை கொம்பா இருந்துச்சு. அதனாலே கிடைச்ச என்னை விட்டுடுட கூடாதுன்னு இந்த ஊர்க்காரங்க எல்லாரும் சேர்ந்து வந்தவங்களை துரத்தி அடிச்சிட்டாங்க.  இதுதான் பாதுகாப்பான இடமா தெரிஞ்சுது. நான் மட்டும் தனி ஆளா இருந்தா வந்தது வரட்டும்னு எதிர்த்து சண்டைக்கு போயிருப்பேன். ஆனால் என்னை நம்பி ஒருத்தி வந்துட்டா. அவளுக்கு நான் வேணுங்கிறத நினைச்சு இங்கேய தங்கிட்டேன். கஷ்ட ஜீவனம்தான். ஆனா பட்டினி கிடைக்கலே. எதோ வாழ்க்கை ஓடிட்டு இருக்கு. சாமி, பாப்பு அவ பிள்ளை கூட மல்லு கட்டிட்டுருப்பா. கூடமாட போய் ஏதாவது ஒத்தாசை பண்ணனும். நான் போறேன். நீங்க இந்த திண்ணையிலேயே படுத்து தூங்கலாம். கோமதி ஆச்சி ஒன்னும் சொல்ல மாட்டாங்கன்னு சொல்லிட்டு போய்ட்டான்.
வெளியிலே ஒரு சத்தத்தையும் காணோம். சரி, சாமி கெளம்பி போயிட்டாக போலிருக்குன்னு நினசிகிட்டு வாசலுக்கு வந்து மெதுவா எட்டி பார்த்தேன். எதையோ தொலைசிட்டமாரி  சாமி எதோ தடுமாத்ததிலிருந்தாக. தனக்கு தானே பேசிக்கிற மாரி இருந்துச்சு. பைய பூனை மாதிரி சன்னலோரமா போய் சாமி என்ன பேசுதாகனு கவனிச்சேன்.
அழுக்கு வேஷ்டி சாமி சொன்னதை ஒரு வார்த்தைகூட பிசகாமே அப்படியே உங்ககிட்டே சொல்லுதேன். சாமி சொல்லுச்சு, "சித்தி கொடுமை தாங்காமல் சிறு வயசில் வீட்டை விட்டு ஓடி போய், கால் போன போக்கிலே சுற்றி அலைஞ்சிட்டு, இமயமலை அடிவாரத்திலிருந்த சன்யாசிகளுக்கு எடுபிடி வேலை செஞ்சு வயித்தை கழுவிட்டு இருந்தேன். கால போக்கில் என்னையும் சாமின்னு எல்லாரும் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. துறக்க எதுவுமே இல்லாத என்னை துறவின்னு சொல்லி இந்த ஊர் கொண்டாடுது. கோடானுகோடி செல்வத்தை மனசுக்கு பிடிச்ச ஒருவனுக்காக இந்த பொண்ணு தூக்கி எறிஞ்சிட்டு வந்திருக்கிறா. இவதானே உண்மையான துறவி,  இவ மட்டும் என்ன ... ஊர் உலகத்தில் இருக்கிற அத்தனை பெண்களுமே  பிறந்து வளர்ந்த குடும்பத்தை பிரிஞ்சு, முழுசும் மாறுபட்ட சூழ்நிலைக்கு அவங்களை தயார் பண்ணிக்கிட்டு, அவங்க புகுந்த வீட்டு சூழ்நிலைக்கு தகுந்தாப்லே தங்களை மாத்திகிட்டு, அந்த குடும்பம் தழைக்க வாரிசுகளை உருவாக்கி அவர்களின் வளர்ச்சிக்காக தங்களை அர்ப்பணம் செய்கிறார்களே. அதுதானே உண்மையான துறவு.  இல்வாழ்க்கையை விட்டு வெளியேறுவது ஆண்களுக்கான துறவறம். பெண்களுக்கு துறவறம்னு ஒன்னு தனியா தேவை இல்லை. பொம்பளைகளை பொறுத்தவரை சம்சார வாழ்க்கைதான் அவங்களோட சன்யாச வாழ்க்கை. இது தெரியாமே பெண்களால் எதையும் உதற முடியாது. அவங்களுக்கு சன்யாசம் சரிப்பட்டு வராதுன்னு கோட்டிக்காரன் மாதிரி சித்தாந்தம் பேசிகிட்டு திரிஞ்சேனேன்னு குரல் கம்முறாப்லே பேசிக்கிறது கேட்டது. அழுக்கு வேஷ்டி சாமியார் பேசி , அதை கடைசியா கேட்ட ஒரே ஒரு ஆள் நான் மட்டும்தான்.  அதுக்கு பெறகு சாமி பேசவே இல்லை. வெறும் கையசைப்பு இல்லாட்டா தலையசைப்பு மட்டுந்தான்.  இத பார்த்துட்டுதான் இந்த ஊருலே இருக்கிற அம்புட்டு ஜனமும் சாமி ஏன் பேச  மாட்டேங்குதுன்னு தெரியலியேனு நினச்சு சங்கட பட்டுடுருக்காக.
எங்க வீட்டு ஐயா அடிக்கடி சொல்லுவாக, "அறிஞ்சவன் பேச மாட்டான். பேசுறவன் அறிய மாட்டான்"ன்னு. அது எம்புட்டு உண்மைன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு. எனக்கு தெரிஞ்சதை "இதுதான் காரணம்"ன்னு மத்தவங்களுக்கும் சொல்லலாம்தான். ஆனா இங்கே இருக்கிறவங்க ரொம்ப குசும்பு பிடிச்சவங்களாசே. நான் சொல்றதுக்கு கண்ணு காத்து மூக்கு வச்சு சாமி வாயை கிளற ஆரம்பிசிருவாக. எனக்கென்னவோ சாமி மௌன சாமியா இருக்கிறதுதான் எல்லாருக்கும் நல்லதுன்னு தோணுது.  அதனாலேதான் எனக்கு தெரிஞ்ச ரகசியத்தை நான் யாருக்குமே சொல்லலே. அப்படின்னா, எங்க கிட்டே மட்டும் எப்படி சொல்ல தோணுச்சுன்னு கேட்கீகளா ? அடி ஆத்தாடி உங்களுக்கு தெரியாததா என்ன பொம்பளை கிட்டே ரகசியம் தங்காது. அவகளுக்கு தெரிஞ்சதை நாலுபேர் கிட்டே சொல்லாட்டா அவக தலையே வெடிசிடும்னு. அதுவுமில்லாமே நீங்க இருக்கிற ஜோலியை எல்லாம் விட்டுபுட்டு எங்க ஊரை தேடி கண்டுபிடிச்சு வந்து இந்த விஷயத்தை போட்டு உடைசிடவா போறீக? உங்களை நம்பலாந்தானே ?


No comments:

Post a Comment