Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, December 16, 2011

Stories told by Grand - Ma (Story Number - 5 )

 
                    கழுதை மேல் போன கதை !

"பாட்டி, பாட்டி, மம்மியும் டாடியும் ஏதாவது சீரியஸா பேசிட்டுருக்கிறப்போ 'கண்டவங்க பேச்சையும் கேட்டா கழுதை மேலே போன கதையாத்தான் முடியும்"னு சொல்லுவாங்க, அது என்ன பாட்டி கழுதை மேலே போன கதை ?" என்று கேட்டாள் மனோ.
'அதை உங்க டாடி மம்மி கிட்டே கேட்கிறதுதானே?" என்றாள் பாட்டி.
"போ பாட்டி எங்க டாடி மம்மி எப்பவும் பிசி. கதை சொல்றதுக்கெல்லாம் அவங்களுக்கு நேரம் கிடையாது. அதனாலே டியுசனுக்குனு தனியா ஒருடீட்சர
அப்பாயன்ட் பண்ணி இருக்காங்க . நீதான் நிறைய கதையெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கிறியே. நீ சமர்த்து பாட்டியாச்சே. இன்னிக்கு கழுதை கதை சொல்லு பாட்டி ப்ளீஸ் பாட்டி " என்று பாட்டியின் கன்னத்தை கிள்ளி கொஞ்சினார்கள் இருவரும்.
"அத்சு. அத்சு". என்று தும்மிய பாட்டி " போதும்பா ஐஸ். ரொம்ப குளிருது" என்றாள்
"பாட்டி குளிருதுன்னு சொல்றாளே போ. போய் போர்வையை எடுத்துட்டு வா"
"போடி அசடு. பாட்டி தமாஷ் பண்றா."
:போடா லூசு. போர்வையை எடுத்துட்டு வானு நானும் சும்மா தமாஷுக்குத்தான் சொன்னேன்" என்றபடி வாசலுக்கு ஓடிய மனோ, " சத்யா, அப்பு, சிவா, ராதா, நிவேது, லாவண்யா எல்லாரும் ஓடி வாங்க.பாட்டி கதை சொல்லப்போறா " என்ற குரல் கொடுத்ததுமே, எல்லோரும் ஓடி வந்து பாட்டியை சுற்றி உட்கார்ந்து கொண்டனர்.
"கொஞ்சம் இருங்க" என்று எழுந்து சென்ற பாட்டி ஒரு தட்டு நிறைய கைமுறுக்கும், மா லாடும் எடுத்து வந்து அவர்கள் முன்பாக வைத்துவிட்டு "இதை சாப்பிட்டுகிட்டே கதை கேளுங்க" என்றாள்.
"பிரபு மனோ நீங்க ஊருக்கெல்லாம் போகாதீங்க. இங்கேயே இருங்க. நீங்க வந்த பிறகு எங்களுக்கும் தினம் தினமும் விதம் விதமா பலகாரமெல்லாம்
கிடைக்குது" என்றான் சிவா குஷியாக.
ஆளுக்கொரு முறுக்காக எடுத்து கடித்தபடி பாட்டியின் முகத்தை ஆவலுடன் பார்க்க பாட்டி கதை சொல்ல ஆரம்பித்தாள்.
"பாட்டி ஸ்டாப் பாட்டி. இன்னிக்கு நீ சொல்லப்போற கதையை தூய தமிழில் சொல்லணும்" என்றான் பிரபு
"ஏன்டா"
"ஏனென்ற கேள்வில்லாம் கூடாது. உனது தமிழ் புலமையை யாம் பரிசோதிக்க விரும்பி இக்கட்டளையை உங்கள் முன் சமர்ப்பித்தோம். அம்மணி போட்டிக்கு நீங்கள் தயார்தானே?" என்று அரசர்கள் பாணியில் பிரபு சொல்லவும் அங்கு பலத்த கை தட்டல் எழுந்தது.
"தங்கள் சித்தம் எனது பாக்கியம்" என்று பவ்யமாக சொன்ன பாட்டி கதை சொல்ல ஆரம்பித்தாள்.
அது ஒரு கடுமையான கோடைக்காலம். ஒரு தாத்தாவும் ஒரு பேரனும் ஒரு கழுதையை ஒட்டிக்கொண்டு பக்கத்து ஊருக்கு சென்று கொண்டிருந்தார்கள். அதாவது கழுதையை நடுவில் விட்டு, இரண்டு பேரும் இரண்டு பக்கமாக நடந்துகொண்டிருந்தார்கள். எதிரே வந்த ஒருவர் "கழுதையை ஏன் சும்மா நடத்தி கூட்டிட்டு போறீங்க? யாராவது ஒருத்தர் கழுதை மேலே உக்கார்ந்து போகலாமே ?" என்று சொல்லிவிட்டு போனார்,
உடனே தாத்தா, பேரனை கழுதை மேலே ஏறி உட்கார்ந்து வர சொன்னார்.
கொஞ்ச தூரம் போயிருப்பார்கள். எதிரே வந்த ஒருவர் " பாவம் வயதான கிழவன் நடந்து வருகிறான், வாலிப பையன் கழுதை மேலே சவாரி பண்ணிக்கொண்டு வருகிறான். காலம் கலி காலம் " என்று சொல்லி விட்டு போக, பேரன் கீழே இறங்கிக்கொண்டு தாத்தாவை கழுதை மேலே ஏறி கொள்ள சொன்னான்,. சிறிது தூரம் போயிருப்பார்கள். வழியில் வந்த ஒரு அம்மா, "பச்சை பிள்ளை நடந்து வருகிறான், கிழவனுக்கு கழுதை சவாரி வேண்டியதிருக்கிறதா? " என்று கேட்டு விட்டு போகவும், பேரனையும் கழுதை மேல் ஏறிக்கொள்ள சொன்னார் தாத்தா. கொஞ்ச தூரம் போயிருப்பார்கள். கழுதை மேல் இருவர் ஏறி வருவதைக்கண்ட திருவாளர் பொதுஜனம் ஒருவர் "வாயில்லா ஜீவன் மேலே கடா மாடு மாதிரி இரண்டு பேர் ஏறிட்டு போகிறார்களே? " என்றார்,
கழுதை மேலிருந்து இறங்கிய தாத்தாவும் பேரனும் நன்றாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதன்படி ஒரு பெரிய கம்பை எடுத்து அதில் கழுதையின் கால்களைக்கட்டி கம்பின் இரு முனையையும் ஆளுக்கொரு பக்கம் தூக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள், அதாவது கழுதை தலை கீழாக தொங்கிக்கொண்டிருக்க, கால்கள் இரண்டும் மேலே கம்புடன் சேர்த்து கட்டப்பட்டிருந்தது. இவர்கள் நடந்து செல்வதை ஊரே கூடி நின்று வேடிக்கை பார்த்தது. கூட்டத்திலிருந்த ஒருவர் "அட கிறுக்கு பயலுகளா, கழுதையை நடத்தி கூட்டிட்டு போகலாம். யாராவது ஒருத்தர் அது மேலே உட்கார்ந்து போகலாம். ஏன்? இரண்டு பேருமே கூட ஏறி உட்கார்ந்து போகலாம். கழுதை என்ன கூடாதுன்னா சொல்ல போகுது. இதையெல்லாம் விட்டுட்டு கழுதையை நீங்க சுமந்துட்டு போறீங்களே எதாவது நேர்த்தி கடனா?' என்று கேட்டார். பேரன் தாத்தாவை பார்த்தான். தாத்தா பேரனை பார்த்தார், இரண்டு பேரும் குனிந்து கீழே பார்த்தனர். அவர்கள் நடந்து  கொண்டிருந்தது ஒரு ஆற்று பாலத்தில். ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது. ஒரு நிமிட தயக்கத்துக்கு பிறகு கம்போடு சேர்த்து கழுதையையும் ஆற்றில் வீசிவிட்டு இருவரும் தலை தெறிக்க ஓட ஆரம்பித்தார்கள்.
'சரியான பத்தியக்காரனுகளாக இருப்பானுக போலிருக்கு" என்று ஒட்டு மொத்த கூட்டமும் இவர்களை விமரிசனம் பண்ணியது. யார் யார் என்ன சொன்னாலும் சரி. நமக்கு எது சரிப்பட்டு வரும் என்று யோசிக்கும் சுய சிந்தனை இல்லாமல் எல்லார் பேச்சையும் கேட்டு நடந்ததால் கண்ட பலன் என்ன? கழுதை கையை விட்டு போனதுதான்,! கழுதை மேலே ஏறி போன கதை இதுதான்" என்று முடித்த பாட்டி, "எப்படி என்னோட தமிழ் புலமை ?" என்று கேட்க, " மூதாட்டியே உனது தமிழ் புலமை கண்டு வியந்தோம். இப்போது உனது கை திறனை யாம் சோதிக்க விரும்புகிறோம். விரைந்து சென்று சுவையான உணவைக்கொண்டு வந்து எமது முன் வைப்பாயாக !" என்று பிரபு சொல்ல "ஒ" என்ற கூச்சல் அங்கு எழுந்தது..

No comments:

Post a Comment