Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Tuesday, August 11, 2020

இதுக்குப் போய் அலட்டிக்கலாமா?


Dear viewers,
உறவினர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது தங்கத்தின் விலை உயர்வு பற்றிய பேச்சும் இடம் பெற்றது.
"அம்மாடி.. அவனவன் அன்றைய சாப்பாட்டுக்கே நொண்டி அடிச்சுகிட்டு இருக்கிறான்.ராக்கெட் வேகத்தில் ஏறுதே தங்கத்தின் விலை  ... ஒரு பவுன் விலை நாப்பதாயிரம் ரூபாயைத் தாண்டி விட்டது" என்று பெருமூச்சு விட்டேன்.
"ஏன்.. ஏதாவது நகை வாங்கணுமா ?" என்று கேட்டார் அவர்.
"எனக்கு நகை ஆசை கிடையாது.. வேலை பார்க்கிற காலத்தில் ஒரே ஒரு செயினை போட்டுக் கொண்டு போவேன். ஆபிசிலிருந்து வீடு திரும்பி, செருப்பை வாசலில் கழற்றும் போதே, கைகள்  செயினைக் கழற்றி முகம் பார்க்கும் கண்ணாடி மீது மாட்டும். மறுநாள் ஆபீஸ் போகும்போதுதான் அதை எடுத்து கழுத்தில் மாட்டுவேன்.. 
அதைப்பார்க்கும் என் அம்மா... "அது என்ன அவ்வளவு கனமாகவா இருக்குது? கழுத்தை இழுக்குதா? அது கழுத்தில் கிடந்தால் என்ன செய்யுது ?" என்பாள்.
"போம்மா.. வெளியில் போகும்போதாவது போட்டுக்கொண்டு போறேனேன்னு நினைச்சு சந்தோசப்படு.. இது மத்தவங்களுக்காக போடுற வேஷம். இது இல்லாமே போனால் நான் ரொம்பவும் வறுமையில் இருக்கிறதாக மத்தவங்க நினைச்சுக்குவாங்க.." என்பேன்.
நான் விரும்பி அணியும் ஒரே ஒரு ஆபரணம் மூக்குத்தி. மற்ற நகைகள் மீது ஆசை கிடையாது. இந்த செய்தியையும் உறவினரிடம் சொன்னேன்.
அது பற்றியே எங்கள் பேச்சு தொடர்ந்தது.
"சாப்பாடு இல்லாவிட்டால் நாம உயிர் வாழ முடியாது. பால் இல்லாமல் குழந்தைகள் உயிர் வாழ முடியாது. பெட்ரோல் இல்லாவிட்டால் எந்த வண்டியும் ஓடாது. ஆனால் வீட்டில் தங்கம் இல்லாவிட்டால் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. யாரும் சாகப்போவது இல்லை." என்றேன்.
கீழே வருவது என்னுடைய எண்ணம். இதை நீங்கள் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது.
தங்கம் விலை ஏறுகிறதா ? ஏறட்டுமே .. அதை துரத்தி பிடிச்சு ஏன் வாங்கறீங்க?
பணத்தை போட்டு தங்கத்தை வாங்கிவிட்டு, அதை வீட்டில் வச்சாலும் பயம்.. கழுத்தில் போட்டுக்கொண்டு போவதும் பயம்... வங்கியில் பாதுகாப்பாக வைத்தால் அதற்கு பணம் கொடுக்க வேண்டும்.. இப்படி அதுக்கு அடிமையாக வாழ்வதைவிட அதை தூக்கி எறிஞ்சிட்டு நிம்மதியாக இருக்கலாமே.
திருமண ஒப்பந்தமாக இத்தனை பவுன் நகை போடுகிறோம் என்று அக்ரிமெண்ட் போடாமல், இத்தனை லட்சம் ரூபாய்  நகைக்குப் பதிலாக தருகிறோம். அதை கல்யாண தினத்தன்று பெண் - பிள்ளையின் பேரில் ஜாயிண்ட் அக்கவுண்ட்டில் போடுவோம் என்று டெர்ம்ஸ் அண்ட் கன்டிஷன்ஸ் பேசுங்க.
தாலிக்கு கூட தங்கம் தேவை இல்லை. ஆதி காலத்தில் மஞ்சள் தானே மாங்கல்யத்தின்  அடையாள சின்னமாக இருந்தது. இன்றைய நவநாகரீக காலத்தில் கூட மஞ்சள் கயிற்றில்தானே தாலி கோர்க்கப்படுகிறது. காலத்தின் கட்டாயத்தால் தங்கத்துக்குப் பதிலாக மஞ்சளையே திருமாங்கல்யமாக அணிந்து கொள்ளுங்கள். (உடை விஷயத்தில் ஆதி மனிதர்களை இன்றைய இளந்தலைமுறையில் 50 சதவிகிதம் பேர் பின்பற்றுகிறார்கள். திருமாங்கல்ய விஷயத்தில் ஆதி மனிதர்களையே  வயதில் முதிர்ச்சி பெற்ற நாமும் பின்பற்றலாமே.
விசேஷ வீடுகளுக்குப் போகும்போது தங்கம் போட்டுட்டு போனால்தான் மதிப்பாக இருக்கும்னு நினைக்கிறீங்களா ? நீங்கள் போட்டிருக்கிற நகையை வைத்துதான் உங்கள் உறவும் உங்கள்  நட்பும் உங்களை  மதிக்குமென்றால் அந்த விசேஷ வீடே எனக்கு வேண்டாம் என்று ஒதுக்கி வையுங்கள்.
எவ்வளவோ பிரச்னைகள். எல்லாவற்றிக்கும் உலகில் தீர்வு கிடைத்ததில்லை. ஆனால் இந்த தங்கம் விஷயத்தில் நாம ரொம்ப ஈஸியாக ஒரு முடிவுக்கு வரலாம். தங்கத்தின் விலை உயர்வை பற்றி தேவை இல்லாமல் அலட்டிக்காமல், அதை ஒதுக்கி வைத்துவிட்டு வாழ கற்றுக்கொள்வோமே. கொரானாவோடு சேர்ந்து வாழ பழகிக் கொண்ட நமக்கு தங்கம் இல்லாமல் வாழ்வது அப்படி என்ன இமாலய முயற்சியா? வாயைக்கட்டி வயித்தைக் கட்டி பைசா பைசாவாக சேர்த்து கால்பவுன், அரை பவுன் தங்கம் வாங்கி, அதை கஷ்டப்பட்டு பாதுகாப்பதற்குப் பதிலாக அந்த பணத்தை Fixed Deposit ல் போட்டு வைத்தால் பணம் பத்திரமாக இருக்கும். தேவைப்படும்போது எடுத்துக்கலாம். அந்த பணத்துக்கு வட்டியும் கிடைக்கும். அதுவே ஒரு சேவிங்ஸ்.
இப்படி எல்லாம் யோசிக்கிறதை விட்டுட்டு தங்கம் விலை அதிகமாயிட்டுன்னு ஏன் கூச்சல் போடறீங்க.?
இன்னொரு விஷயம் ... டீவியில் இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாக ஒளிபரப்பாகும் காட்சியும் செய்தியும்  தற்கொலைகள் பற்றித்தான்.
அதில்  அற்ப காரணங்களுக்காக  தற்கொலை செய்பவர்கள் தான் அதிகம். 
அந்த நினைப்பில் இருக்கிறவர்களுக்கு ஒரேயொரு வார்த்தை... உங்களை வாழ விடாமல் யாராவது துன்புறுத்த, அதனால் இந்த முடிவுக்கு வருகிறீர்களா ? ஆம் என்றால், உங்கள் பக்கம்தான் நியாயம் இருக்கிறது என்றால், யாரால் இந்த முடிவுக்கு வந்தீர்களோ, அவர்களை முதலில் அனுப்பி விட்டு, அப்புறம் நீங்கள் போங்க...All the Best.
நான் நினைச்சது கிடைக்கலே. வீட்டில் லிப்ஸ்டிக் வாங்கி தரலே.. மார்க் கொறஞ்சு போச்சு..  நான் கேட்ட படிப்புக்கு சீட் கிடைக்கலே.. காலேஜ் போய்வர வண்டி வாகனம் இல்லே... என்பது போன்ற அல்ப விஷயங்களுக்கு தற்கொலைதான் முடிவு என்று நினைப்பவர்களை யாரும் தடுக்காதீர்கள்.. இதுங்க உயிரோடு இருந்து எதையும் கிழிக்கப் போவதில்லை. அவர்களைத் தடுக்காதீர்கள். அவர்கள் மனம்போலவே விட்டு விடுங்கள்.
கைகள் நிறைய படிச்ச படிப்புக்கு செர்டிபிகேட்ஸ் வச்சுக்கிட்டு எந்த வேலையும் கிடைக்காமல் அவனவன் கூலி வேலை செஞ்சு பிழைக்கிறான். 
இயற்கை பேரிடர், மற்ற கலவரங்கள் காரணமாக உறவுகளை இழந்து விட்டு  யாரையும் குறை சொல்லாமல், அவனவன் தன்னைத்தானே தேற்றிக் கொண்டு வாழ்கிறான். அவர்களும் மனிதர்கள்தான். அப்படிப்பட்ட மனிதர்கள் உங்கள் கண்ணில் பட்டால் ஆறுதல் தேறுதல் சொல்லுங்கள்.  சீட் கிடைக்கலே, போன் இல்லே, வண்டி வாங்க பணம் இல்லே என்று "போக" நினைப்பவர்களுக்கு டாட்டா காட்டி அனுப்பி வையுங்கள்.
இதைப்படிக்கும் போது கோபம் வருதுதானே. கொஞ்சம் நிதானமாக சிந்தித்துப் பாருங்கள்.. உண்மை புரியும்.
வாழ்க்கையில் எல்லாமே எல்லாருக்கும் கிடைத்து விடாது. தேடுவது, கேட்பது எல்லாமே கிடைத்து விட்டால் வாழ்க்கை ருசிக்காது .. ரசிக்காது . உப்புசப்பில்லாமல் இருக்கும்.
தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசி இருக்கும். அதை "இன்னிசை பாடி வரும் இந்த காற்றுக்கு உருவமில்லை" என்கிற சினிமா பாடல் அழகாக கவிதை நயத்தோடு சொல்கிறது. 


No comments:

Post a Comment