Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, August 24, 2012

Scanning of Inner- Heart ( மனதின் மறு பக்கம் ) - Scan Report No: 41

 ( நான் எழுதிய இந்த சிறுகதை 10.06.1992  'தேவி 'யில் வெளியாகியுள்ளது )

                                             ராத்திரி வேளையில் ? !

" அரசு அம்மா, உள்ளே வேலையா இருக்கீகளா ? " - வாசற்படியில் இருந்தே குரல் கொடுத்தாள் கோமதி.
" உள்ளே வாங்க , கோமக்கா . சோறு வடிச்சிட்டு இருக்கேன். வெளியே போயிருக்கிற அவக வந்து கை கால் கழுவறதுக்கு மின்னாடியே தட்டுலே 
சோத்தை வச்சிரணும் . இல்லாட்டி நட்டுவாங்கம் இல்லாமலே நாட்டியம் 
ஆட ஆரமிச்சிருவாக ". என்ற பவானி, அடுக்களை வேலையை முடித்து 
விட்டு, கைகளைப் புடவைத் தலைப்பில் துடைத்தபடியே வெளியில் வந்தாள் .
" இன்னிக்கி லீவாச்சே , எங்கே போயிருக்காக ? " - கோமதி கேட்டாள் .
" அதான் .. என்ன  எழவு ....வாயிலே நுழையாத பேரு .. அது ..   ஆங்க் ...
' அச்சோசி அசன் ' கூட்டமாம். அதுக்கு போயிருக்காக. ஒன் வீட்டிலே அவக போகலியா ?   "
" எங்க வீட்டிலே டவுணுக்குப்  போயிருக்காக. ஆமா , அக்கா , ஒங்களுக்கு 
ஒரு சங்கதி தெரியுமா ? " - வாசற்படிவரை சென்று வெளியே யாராவது 
வருகிறார்களா என எட்டிப்பார்த்துவிட்டு வந்த கோமதி , பவானி காதில் 
கிசுகிசு குரலில் கேட்டாள் .
" என்ன  சங்கதி ? "
" ராத்திரி நேரத்துலே , நடு சாமத்துலே ,'ஜல் ...ஜல் ..ஜல்'ன்னு சத்தம் கேட்குது .அதைத் தொடர்ந்து யாரோ ஓடறாப்பிலே ஒரு சத்தம். ' கீச் கீச் ' ன்னு ஒரு சத்தம் விட்டு விட்டுக் கேக்குது. ஒரு வாரமா நம்ம காலனிலே இப்படி சத்தம் கேக்குதே .  நீங்க எப்பயாவது  கேட்டுருக்கீகளா ? "
" கோமக்கா .. நானும்  சொல்லலானுதான் நினைக்கிறது. ஆனா ஒரு பயம் வந்து சொல்ல முடியாமே போயிடுது.  ஆமா , அது என்ன சத்தமா இருக்கும் ?
ஓடறது யாராயிருக்கும் ? " -- பவானிக்கு வார்த்தை தடுமாறியது.
"இந்த வீட்டுக்குக் குடி வர்றதுக்கு முன்னாடியே எங்க வீட்டுக்காரக என்கிட்டே சொன்னாக. 'ஏண்டீ கோமு, நாம போகப் போறோமே அந்த இடம் ஒரு அஞ்சு வருசத்துக்கு முன்னாலே சுடுகாடா இருந்திச்சாம். சேட் ஒருத்தன் எப்பிடியோ ' தகிடு தத்தம் ' பண்ணி  அந்த இடத்தை வாங்கி பிளாட் கட்டிட்டான். ஒரு மூணு வருசமா அதை யாருமே வாங்காததாலே , அத கொறஞ்ச வாடகைக்கு விட்டுட்டான் 'ன்னு. ஒருவேளை அந்தக் கோளாறா இருக்குமோ ? " - கோமு  சொல்லும்போதே அவள் குரல் தடுமாறியது.
" இந்தக் காலனி ஓரத்துலே இருக்கிற வயக்காட்டு கிணத்துலே ஏகப்பட்ட 
பொம்பளைக வேற  விழுந்து தற்கொலை பண்ணிகிட்டதா கூட சொல்லுதாக .எதுக்கும் நம்ம வீட்டுக்காரக காதுலே போட்டு வைப்போமா ? -  பவானி சொல்லி முடிப்பதற்குள் , வாசல் படியில் அவளது கணவன் வரும் ஓசை கேட்டது. கோமதி விடை பெற்றுக்கொண்டாள் .

சாப்பிட்டுவிட்டு ஓரு அட்டாகாசமான ஏப்பத்தைவெளியில்விட்டு விட்டு 
கட்டிலில் தனது உடலைச் சாய்த்தார் செல்வராஜ்
" ஏங்க , ஒரு விஷயம் ! "
" ம் ... ம் .. சொல்லு சொல்லு "
" தினமும் நடுசாமத்தில் சலக் சலக் ன்னு சத்தம் கேட்குது. யாரோ  நடந்து 
வர்றாப்லேயும் ஓடுறாப்லேயும் இருக்கு .கவனிச்சீகளா ?  ஏதாவது பேய்
பிசாசு வேலையா  இருக்குமோ ? -- அவள் சொல்லி முடிப்பதற்குள்  ' கடகட 'என சிரித்தார் செல்வராஜ்
" சிரிச்சது போறும் .சிரிப்ப அடக்குங்க.. அரசு முழிச்சிடப்போறான் "
" அடி பைத்தியமே ! இந்தக் காலனியிலே இருக்கிற பொம்பளைகளை மீறி எந்த பேய் பிசாசாவது   உள்ளே நுழைஞ்சிட முடியுமா ? உங்களைப் பார்த்தா இருக்கிற ஒன்னு ரெண்டும் பயந்து , ஊரை விட்டு ஓடிரும். ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமா வீடு பார்த்து வந்திருக்கோம். மனுஷன், விடிஞ்சதும் கிளம்பி வேலைக்குப் போனா, ராத்திரி பத்து பதினோரு மணிக்குத்தான் வீட்டுக்கு வர்றான் . தினம் முப்பது மைல் நாப்பது மைல்போயிட்டு வர்ற களைப்பில் படுத்துத் தூங்குதோம். இடி விழுந்தா கூட அது எங்களுக்கு தெரியாது.. மனுசனை கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்க விடு " என்ற செல்வராஜ் , வாயை அகலத் திறந்து ஒரு கொட்டாவியை வெளியேற்றி  விட்டு, மீண்டும் தூங்க ஆரம்பித்தார்
ஊருக்கு ஒதுக்குப் புறமான இடத்தில் அந்த காலனி இருந்தது. மொத்தம் 
பதினாறு வீடுகள்தான் . சகல வசதிகளுடன் இருந்த வீட்டை சேட் மிகக் 
குறைந்த வாடகைக்கு விட்டிருந்தார். வாடகை குறைவு என்பதாலும் , சேட் குடியிருப்பவர்களின் எந்தவொரு விஷயத்திலும் தலையிடாத தாலும் அங்குள்ள எல்லோருமே, தங்கள்  சொந்த வீடாகக் கருதியே அங்கு குடி இருந்தார்கள்.
ஊருக்கு ஒதுக்குப் புறத்தில்இருந்தாலும்,அந்த காலனியில் குதூகலத்தி ற்கு எப்போதும் பஞ்சமே இல்லை. எப்போதும் கலகலப்புதான். ஆனால் , கடந்த சில நாட்களாக  அங்கு கலகலப்பு மாறி மயான அமைதி குடி புகுந்திருந்தது .
ஆனால்,  அங்குள்ள ஆண்கள் யாரும் அதை கண்டு கொள்ளவே இல்லை. 
பெண்களால் அப்படி இருக்க முடியுமா ? மொட்டை மாடியில்  பெண்கள்
அனைவரும் ஒன்று கூடினர் ,
" கோமதியக்கா , அந்த சத்தத்தை நேத்து நானும் கேட்டேன் ." - இது திலகா .
" அந்த ஜல் ஜல் சத்தத்தைக் கேட்டதில் இருந்து எனக்கு தூக்கமே வரலே " -என்றாள்  பார்வதி.
ஆளுக்கொரு கதையாக  சொன்னார்கள்.
" யாராச்சும் .. கள்ளன்....கிள்ளன் ? " என்று சந்தேகத்தை கிளப்பினாள் , அஞ்சாம் நம்பர் அஞ்சுகம்.
" ஆமா ... சத்தம் குடுத்துக்கிட்டுதான் களவாணிப்பய வருவானாக்கும்."  - என்று கேட்டாள் பத்தாம் நம்பர்  வீ ட்டு பத்மா,
முகவாயை தோளில் இடித்தபடி" நம்ம வீட்டு ஆம்பளைகளை  நம்பி எந்த
பிரயோசனம் இல்லே.. இதுக்கு நாமதான் ஒரு முடிவு கட்டியாகணும் "  என்றாள் கோமதி
"என்ன செய்யலாம்?"என்ற எல்லோர் குரலிலும் குழப்பம் நிறைந்தி ருந்தது.
" நம்ம காலனிக்கு அடிக்கடி ஒரு குடுகுடுப்பைக் காரன் வருவானில்லே "
என்று கோமதி ஆரம்பிக்க,
 " ஆமாம், அவன் கையிலே ஒரு குரங்கைப் பிடிச்சிகிட்டு . ஆமா ..  அவனுக் கென்ன   என்ன?  "  என்று  படபடத்தாள் பவானி.
" அவனைக் கூப்பிட்டு மந்திரம் மாந்த்ரிகம்  செஞ்சா என்ன ? " - இது திலகாவின் யோசனை.
" நல்ல யோசனை " என்று ஒட்டு மொத்தமாக ஆமோதித்தார்கள் .
மாதக் கடைசி வார ஞாயிறன்று , ஆண்கள் எல்லோரும் அசோசியேசன்
கூட்டத்திற்கு சென்று விடுவதால், அப்போது மந்திரம் செய்வது என்றும்,
செலவை பதினாறு வீட்டுக்காரர்களும் பங்கிட்டுக் கொள்வது என்றும்
முடிவானது.  இந்த விஷயத்தை ஆண்களிடம் சொல்லக்கூடாது என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டபின் , பெண்களின் ரகசிய ஆலோசனைக் கூட்டம் அமைதியாக முடிந்தது.

அந்த குடுகுடுப்பைக் காரனுக்கு ஏகப் பட்ட மரியாதை காத்திருந்தது அந்த
குடியிருப்பிலுள்ள மொட்டை மாடியில். அவன் தோளில் உட்கார்ந்திருந்த
குரங்குக்கும் உபசரிப்புகள் .

101 முட்டைகள், 10 தேங்காய், ஒரு ஆட்டுக்குட்டி, ஒரு கோழி , வாழைப்பழ
தார் ஒன்று, பூ, கற்பூரம் , பூசணி , சாம்பிராணி, எலுமிச்சம்பழம் , இத்யாதி
பொருட்களின் நடுவில், முகம் நிறைய விபூதி குங்குமம் அள்ளிப் பூசியிருந்த குடுகுடுப்பைக் காரன், பார்க்கவே பயங்கரமான கோலத்தில் உட்கார்ந்து  இருந்தான். அவன் கையில் உடுக்கை. அவன் முன் வளர்க்கப் பட்டிருந்த ஹோமத்தீயில் இருந்து கிளம்பிய வெண்புகை அந்தப் பகுதியை மெல்ல தழுவிக் கொண்டிருந்தது.

" ஆத்தா .. காளீ .. வாடியம்மா..நீலி.. இந்த குடியிருப்பை ஆட்டி வைக்கிறது
யாரும்மா ? ஆத்தங்கரை அன்னம்மாவா ? இல்லே கால்வாக்கரை கன்னி
யம்மாவா  ? .. இல்லே ஆலமரத்து அனுசுயாவா ?  சட்டுனு வந்து புட்டு புட்டு சொல்லும்மா !.  ஏய் .. ஏய்  "

திடீரென்று கற்பூரத்தை உள்ளங்கையில் கொளுத்திய குடுகுடுப்பைக் காரன், " அடியே ,, அடியேனிடம் வாம்மா ! " என்று உடுக்கை அடித்துக் கொண்டே சொல்லி, ஏற்றிய கற்பூரத்தை தனது வாய்க்குள் போட்டுக் கொள்ள, அதைக் கண்ட பெண்கள் கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள். உடுக்கை சத்தம்அந்த பகுதியை உலுக்கியது.
" டேய் " .. பயங்கரமாக கத்தினான் அவன். சற்று தள்ளி நின்று கொண்டிருந்த பெண்கள், பயத்தில் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொண்டார்கள்.
" டேய் ,, நான் வேறு யாருமில்லேடா. வரதட்சினை கொடுமை தாங்காமே
இங்கே இருக்கிற கிணத்தில் விழுந்து செத்துப் போன  வரலட்சுமிதான்டா.
இதோ பாரு , எனக்குப் பின்னாலே ஒரு பட்டாளமே இருக்கு. குடிகாரக்
கணவனாலே கொலை செய்யப் பட்ட கோமளா, நாத்தனார் தீ வச்சுக் 
கொளுத்திய நளினி ... "
" அடுக்காதே அம்மா. நிறுத்து. காலனி ஜனங்க பயப்படுதாக. உனக்கு என்னவேணும் ? உன் ஆக்ரோசத்தை நிறுத்த உனக்கு தேவையானதை கேட்டு வாங்கிக்கோ " என்று ஆண், பெண் குரலில் மாறி மாறி குடுகுடுப் பாண்டி பேச , அவனுடன் இருந்த குரங்கும் திடீர்னு ஆடத் தொடங்கியது.
" அடேய் .. வரதட்சிணை வரலட்சுமி பேசுதேண்டா . என்  மாமியார் கேட்ட    
பத்து பவுன் நகையைக் குடுத்திடு. நான் பறந்திடுதேன்  .."
" ஏய்.. வரதட்சிணை , நிறுத்து, நாங்க குடுக்கிறத வாங்கிட்டு மருவாதியா
ஓடிப்போயிடு. இல்லே ..கால்வாய்க்கரை ஆலமரத்தில் உன்னை ஆணி அடிச்சுகட்டிப் போடுவேன். ம் "
" ம்  .. சரி .. சரி  பவுன் விக்கிற விலையில் , பத்து பவுன் கேட்கிறது சரியில்லே .
" ஒரு பவுன் குடுத்தாலும் போதும் ஓடிப்போயிடறேன். இல்லேன்னா இங்கேஇருக்கிற பொம்பளைகளை சும்மா விடமாட்டேன். ஆட்டிப் போடுவேன் ஆட்டி ".
 சிறிது நேரத்துக்குப் பின் தனது சுய குரலில் , " அம்மா , காலனிவாசிகளா,
வரலட்சுமி ஒரு பவுன் கேட்கிறா . என்ன சொல்லுதீக? " என்றான் குடுகுடுப்பை .வேறு  வழியின்றி தலை அசைத்தனர் பெண்கள்.
திடீர்னு ஆவேசமாகக் கத்தினான் குடுகுடுப்பைக் காரன்  " அடே .. நான்தான் கோமளா. என்னை மறந்திட்டியா ? என் புருஷன் என் பட்டுப் புடவையை வித்துக் குடிச்சிட்டு வந்தான் . ஏன்னு கேட்ட என்னை, அவன் கொன்னுட்டான். எனக்கொரு பட்டுப்புடவை வேணும். இல்லாட்டா ஆயிரத்தொரு ரூபா  வேணும்"
" அம்மா , ஜனங்களா, கோமளா பொல்லாதவ, பழி வாங்காமே விட மாட்டா.1001 ரூபா  கேட்கிறா."
அதற்கும் தலையாட்டினார்கள் பெண்கள். அவர்கள் உடல் பயத்தால் நடுங்கிக்கொண்டிருந்தது.
 " ஏய்   மறந்திட்டியேடா  பாவி ! நான்தான் நளினி. பகல் ஷோ சினிமா பார்க்க பக்கத்து வீட்டில் பத்து ரூபா கடன் வாங்கினேன். அதனால்தான் எனக்கும் என் புருசனுக்கும் சண்டை வந்துச்சுது . என் நாத்தனார் என் மேலே தீ வச்சா..நான்  செத்தேன் . அந்த . பத்து ரூபாயை நான் திருப்பிக் குடுக்கணும் "
" ஆயிரம் ரூபாய்க்கு கீழே கேட்கிற பேயை எல்லாம்  என்  குரங்குதான்
ஓட்டும் ! ஏய் ராமா , அந்த நளினியை ஓட்டுடா ராமா ! " என்று குடுகுடுப்பை சொல்ல, குரங்கு  ஆவேஷத்தோடு " ஆ .. ஊ .." என்று  சத்தமிட்டு ஆட ஆரம்பித்தது. தலை கீழாக தொங்கி குட்டிக் கரணம் அடித்தது. பிறகு கைகளைத் தட்டி 'கிகிய்  என்று சிரித்தது.

"சபாஷ்டா ராமா .. சபாஷ் ..! ஆ ... காளிக்கு நேரமாயிட்டுது.. காளி கேட்டதை குடுங்க .. நான் மலையேறனும் " என்றபடி தலையை நாலா பக்கமும் சுழற்றி ஆடினான் குடுகுடுப்பை. அவன் தோற்றமும், ஆட்டமும் பார்க்கவே  மிகவும் பயங்கரமாக இருந்தது.
சற்று நேரத்தில் நகையும் பணமும் கை மாறியது.
"அம்மாக்களா,நீங்க எல்லோரும் சந்தோசமா போங்க. கால்வாய்க் கரைக்குப் போய், நான்  ஆடு கோழி பலி கொடுக்கணும். ம் .. திரும்பிப் பார்க்காமே போங்க. நான் போறவரை நீங்க யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீங்க "என்று சொன்னதும், எல்லாரும் அவரவர் வீட்டுக்குள் போய் தாழிட்டுக்கொண்டார்கள் .
எல்லாவற்றையும் வாரி ஒரு மூட்டையாகக் கட்டிக்கொண்டு புறப்பட்டான் குடுகுடுப்பை.குரங்கு அவன் தோளில் தொற்றிக் கொண்டது  ஒரு கையில் ஆட்டுக்குட்டி, இன்னொரு கையில் கோழி சகிதம் வெளியில் வந்த அவன் ஆண்கள் வரும்முன் அந்த இடத்தை விட்டு வேகமாகப் போய்விட வேண்டும் என்ற எண்ணத்தில் வேகமாக வெளி யேற முயல, அந்த சமயத்தில் ஆண்கள் அங்கு நுழைந்தார்கள் .திருடனுக்கு தேள் கொட்டியது போல் பதட்டமானான் குடுகுடுப்பை . அவனது பதட்டம், மற்றவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்த " டேய்,  நில்லுடா , பையில் என்ன ? " என்று கேட்டபடி கையை ஓங்கினார் செல்வ ராஜ்.
" அய்யோ .. அடிக்காதீங்க. உண்மையை சொல்லிடுதேன் "
" உண்மையை சொல்லலே அடிச்சே கொன்னுடுவோம் " என்ற ஆண்கள்
அவனை உள்ளே இழுத்துச்சென்றனர்.
சத்தம் கேட்டு வெளியில் வந்த பெண்கள் , ' இவன் பேயை ஒட்டின
குடு குடுப்பைக்காரன் " என்றார்கள்.
" நீங்கள்லாம் இருக்கும்போது, இந்த குடியிருப்புக்கு பேய்னு ஒன்னு வருமாஎன்ன ? " என்று கேட்டு படபடத்தார் சுந்தரம் , பவானியின் புருசன்.
" நல்ல வேளை , கூட்டத்தை சீக்கிரம் முடிச்சிட்டு வந்ததால் இவனைப் பிடிக்கமுடிஞ்சுது.  டேய் .. அடி பட்டு சாகாதே . உண்மையை சொல்லு. நிசமாவேபேய் இருந்துதா ? இங்கே வந்துதா ? அதை நீ ஓட்டினியா ? "
" சொல்லிடுதேன்.  இங்கே வந்து நான் பிச்சைன்னு கேட்டப்போ  யாருமே
பிச்சை போடலே. என் பொழைப்புக்கு ஒரு வழி பண்ண நினைச்சேன். ஒரு
யோசனை வந்தது, பொம்பளைங்க பேய் பிசாசுக்கு பயப்படுவாங்க. அதனாலே என் குரங்கு  காலில் சலங்கையைக் கட்டி ராத்திரி நேரத்துலே ஓட விட்டேன் .அது ஓடும் . சில வீட்டுக் கதவை தட்டும் . நான் நினைச்ச மாதிரியே  இங்கே பொம்பளைங்க பயந்தாங்க. அந்த பயத்தை நான் காசாக் கிட்டேன்  சாமீ "
" அப்படின்னா , வரலட்சுமி, கோமளா , நளினி  .. இவங்கல்லாம் ? " என்று
பெண்கள் கேட்க,  " எல்லாமே பொம்பளைங்க பேருதான் . பேயும் இல்லே ..பிசாசும் இல்லே. என்னை மன்னிச்சிடுங்க .. நான் இனிமே இந்தப் பக்கம் வரவே மாட்டேன் "  என்று கெஞ்சினான் குடுகுடுப்பை.
"இந்தப் பக்கம் வரமாட்டே. வேறு எங்காவது போய் பொம்பளைங்க தனியா இருக்கும்போது உன் கைவரிசையை காட்டுவே . பேய்  ஓட்டிக் கிட்டு இருப்பே ! இப்போ நட போலீஸ் ஸ்டேஷன்க்கு " என்று அவனை ஒட்டிச்சென்றார்கள் ஆண்கள்.
 பெண்கள் முகம் அவமானத்தால் வெளுத்துப் போயிருந்தது
  

No comments:

Post a Comment