Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, April 03, 2016

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 32

                   
   அச்சுப்பிச்சு அப்புமணி !  
"அக்கா உனக்கு இந்தி தெரியுமா? நீ இந்தி பேசுறியே?" என்று வியப்புடன் கேட்டான் அப்புமணி 
"இந்தின்னா என்னன்னே தெரியாத தமிழ்க் காரங்க நான் இந்தி பேசறதைப் பார்த்து, 'அட... இது  இந்தியெல்லாம் கூட தெரிஞ்சு வச்சிருக்குதே'னு நினைப்பாங்க. நான் பேசற இந்தியைக்கேட்டா,இந்திதெரிஞ்ச மனுஷங்க  சிரிப்பா  சிரிப்பா ங்க " என்றாள் தனம்.
"சிரிக்கட்டும்....சிரிக்கட்டும்..சிரிக்கிறது நல்ல விஷயந்தானே ?.. நான் வாயைத் திறந்தாக்கூட எல்லாரும் சிரிக்கிறாங்க. அதுக்காக நான் வாயை மூடிட்டா இருக்க முடியும்?" என்று பெரிய மனிதத் தோரணையில் கேட்டான் அப்புமணி.
"பிள்ளைங்களா... சாப்பிட்டுட்டு விளையாடிட்டு இருங்க.  நான் சேட்டு வீட்டுக்குப் போய்த் துணி துவைச்சுப் போட்டுட்டு வந்துடறேன் " என்று கிளம்பிப் போனாள் தனம்.
"அக்கா ...இந்தப் பொண்ணு ...?" என்று அப்புமணி கேட்க, " அதுக்கு இந்த ஊரிலே ஒரு மண்ணும் தெரியாது. அது எங்கேயும் போகாது " என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினாள் தனம்.
அவள் கிளம்பிப்போன அடுத்த வினாடியே கதவை சாத்திவிட்டு வந்த நிவேதிதா, "இப்போ சொல்லு... நீ எப்படி இவங்க கிட்டே வந்து மாட்டினே ?" என்று கேட்டாள் 
"நான் ஒண்ணும் மாட்டலே. சேகர் அண்ணாவை எனக்குத் தெரியும். உலகத்தை சுத்திப் பார்க்கிறவரை அண்ணா கூட இருக்கலாமேனு இருக்கிறேன். அவ்ளோதான் " என்றான் அப்புமணி 
"உனக்கு அம்மாவைத் தேடவே இல்லையா ?"
"அம்மாவைப் பத்தி பேசினா எனக்கு அழுகை வருது. அம்மா மடிலே போய்த் தொப்புன்னு விழனும் போலிருக்குது. அதுக்காக உலகத்தை சுத்தி பார்க்காம இருக்க முடியுமா ? சரி... நீ எப்படி இங்கே வந்தே ?"
"யாரோ ஒரு மினிஸ்டர் பொண்ணைக் கடத்தறதா நினைச்சு என்னைக் கூட்டிட்டு  வந்துட்டாங்க."
"நீ சொல்றதுதானே "
"என்னை வாயைத் திறக்கவே விடலையே "
"உன்கூட துப்பாக்கி வச்சுகிட்டு ரெண்டு தடியனுக இருப்பானுகளே" என்று அப்புமணி சொல்ல அதைக் கேட்டு சிரித்தாள் நிவேதிதா 
"ஏன் சிரிக்கிறே ?"
"அவங்களை ஒரு ரூமில் அடைச்சு வச்சுட்டாங்க. உண்மையில் அவங்க செக்யூரிட்டி கார்ட்ஸ் கிடையாது. அவங்க என் அப்பாவோட பிரெண்ட்ஸ். நான் இங்கே வர்றேன்னு ப்ளான் முடிவானதும், எங்க அப்பா அவங்க பிரெண்ட்ஸ்க்கு போன் பண்ணி, "என் பொண்ணு அங்கே வர்றா. அவளைப் பத்திரமா பார்த்துக்கோங்க"னு சொல்லியிருந்தார். "எப்படிக் கவனிக்கிறோம்னு உங்கபொண்ணு அங்கே வந்தபிறகு கேட்டுத் தெரிஞ்சு க்கோங்க"னு சொல்லியிருந்தாங்க. இப்படி தமாஷ் பண்ணு வாங்கனு நான்கூட எதிர்பார்க்கலே. அவங்க சந்தோஷத்தைக் கெடுக்க வேண்டாம் னு அவங்க சொல்றபடி கேட்டேன். உண்மையிலே அவங்க ஒரு ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கிறாங்க"
"வேஷம் போடறது தப்புதானே ?"
"அவங்க யாரையும் ஏமாத்த வேஷம் போடலியே ..சும்மா தமாஷ்தானே . அப்படியே ஏதாவது பிரச்சினை வந்தாக்கூட சினிமா ஷூட்டிங் அது இது ன்னு சொல்லி சமாளிச்சுக்குவாங்க"
"எனக்கு ஒண்ணுமே புரியலே..இவங்க எல்லாரும் தீவிரவாதிங்களா?" என்று பயத்துடன்  கேட்டான் அப்புமணி.
"இதுங்களா ?!" என்று கேட்டு கலகலன்னு சிரித்தாள் நிவேதிதா 
"ஏன் சிரிக்கிறே ?"
"இதுங்க லோக்கல் பிக் பாக்கெட் கேஸுங்க .. கண்ட கண்ட சினிமாவைப்   பார்த்துட்டு இதுங்களை இதுகளே ஒரு பெரிய தாதா மாதிரி பில்ட் அப் குடுக்குதுங்க. யாராவது காசை வீசினால் அவங்க சொல்ற வேலையை செய்ற எடுபிடிங்க இதுங்க "
"உனக்கு எப்படித் தெரியும் ?"
"நான் காஷ்மீருக்குப் போனப்ப மினிஸ்டர் பொண்ணைக் கடத்தறதா நினைச்சு என்னைத்  தூக்குச்சுங்க. விஷயம் தெரிஞ்சதும் ..."
"என்ன விஷயம் ?"
"நான் அமெரிக்காவிலிருந்து என்னோட தாத்தாவோட வந்திருக்கிற விஷயம் தெரிஞ்சு பணம் பறிக்க பிளான் பண்ணுச்சுங்க .. இடையிலே எங்க தாத்தா ஒரு கேம் ஆடிட்டார்னு நினைக்கிறேன்  "
"என்ன கேமா ?"
"எங்க தாத்தா பெரிய ராஜதந்திரினு எல்லாரும் சொல்லுவாங்க... அவர் புத்திசாலித்தனமா என்னோட பேத்தி அமெரிக்காவில் ரொம்ப ஷேப் ஆக இருக்கிறா.  இங்கே  கடத்தப்பட்டது யாருன்னு எனக்குத் தெரியாதுன்னு சொல்லியிருக்கிறார்"   
"அது எப்படி உனக்குத் தெரியும் ?"
"எல்லாம் இந்த லூசுங்க பேசினதை வச்சுதான் சொல்றேன்."
"நீ யாருன்னு உன்னைக் கேட்கலியா ?"
"கேட்டாங்க.. நான் மனநிலை சரியில்லாத மாதிரி ஆக்ட் குடுத்தேன். ஆனால் அவங்களுக்கு நம்பிக்கை வரலே. என்னைப் பார்த்து நான் நல்ல வசதியான வீட்டுப்பொண்ணுன்னு தெரிஞ்சுக்கிட்டாங்க. ஏதாவது விவரம் கிடைச்சா அதை வச்சு எங்க வீட்டில் பணம் வாங்கிறதுதான் இவங்க ப்ளான். எனக்கு இன்னொரு டவுட்டும் உண்டு. இவங்க நான் மகாபலிபுரம் வந்திருக்கிறப்பவே காசுக்காக என்னை கிட்நாப் பண்ண ப்ளான் போட்டா ங்களோனு. ஏன்னா என்னை சென்னையில் பார்த்ததுமே, என்னைக் கூட்டிட்டு வந்து இங்கே விட்டுட்டு போனானே அவன்  "இது ஏற்கனவே நாம மிஸ் பண்ணின சாக்லெட்னு சொன்னான்.ஓகே. லீவ் இட்."
"உங்க தாத்தா உன்னைத் தேடலியா ?"
"தேடாமே இருப்பாரா? சீக்ரெட்டா ஏதாவது ப்ளான் பண்ணி இருப்பார். கடத்தின இடத்தில்தான் போலீஸ் தேடும்னு தெரிஞ்சு இந்த கிரிமினல்ஸ் என்னை சென்னைக்குக் கொண்டுவந்துட்டாங்க. மினிஸ்டரும் தாத்தா வும் அந்தப்பொண்ணு எங்க வீட்டுப் பொண்ணு இல்லேன்னு சொல்லிட்ட தாலே மீடியாகாரங்க பரபரப்பு செய்தியை பரப்புறதை விட்டுட்டு அவங்க வேறே வேலையைப் பார்க்கப் போயிட்டாங்கன்னு நினைக்கிறேன்.  ஒரு போன் கிடைச்சா போதும், எங்க தாத்தாவுக்கு நான் இன்பர்மேஷன் கொடுத்துடுவேன்". 
"தனம் அக்கா கையில் போன் இருக்குது"
"நானும் கவனிச்சேன் ..."
"போன் பண்ணி உங்க தாத்தாவுக்கு சொன்னா, போலீஸ் வந்து அண்ணா வைப் பிடிக்கும்தானே?" என்று கேட்டான் அப்புமணி கவலையுடன்.
"ஆமாம்... தப்பு பண்ணினா பிடிக்கத் தானே செய்யும் "
"அண்ணா ரொம்ப நல்லவர்...அவரை நீ போலீசில் மாட்டிவிட்டா நான் உன்னை இவங்க கிட்டே மாட்டி விட்டுடுவேன் " என்றான் அப்புமணி 
இதைக் கேட்டதும் திகைத்துப் போனாள் நிவேதிதா. 'இவனை ரொம்பவும் கேர்-புல்லா ஹேண்டில் பண்ணனும்'னு தனக்குள்சொல்லிக் கொண்டாள்.
"உனக்கு பயமே இல்லையா ?" என்று திடீரென்று கேட்டான் அப்புமணி 
"எதைப் பத்தி ?"
"உங்க வீட்டுக்குப் போக முடியாததை நினைச்சு !"
"பயந்து ஆகப்போறது ஒன்னும் இல்லேடா. ஒரு பிரச்சினையில் மாட்டி யாச்சு. அதை விட்டு வெளியில் வர்றது எப்படின்னு யோசிக்கணும். அதை விட்டுட்டு பயந்தாலோ அழுதாலோ எந்த பிரயோசனமும் இல்லை. எந்த சூழ்நிலையையும் சமாளிக்கிற மாதிரிதான் எங்க வீட்டிலேயும், நான் படிக்கிற ஸ்கூலிலேயும் என்னை ரெடி பண்ணி இருக்கிறாங்க. பிறந்த அத்தனை பேரும் ஒருநாள் செத்துத்தானே போகணும். பிரச்னைன்னு வரும் போது அதில் போராடிப் பார்த்துட்டு உயிரை விடலாம். தட்ஸ் ஆல் " என்று சொன்னாள் நிவேதிதா 
அவளை ஆச்சரியமாகப் பார்த்தான் அப்புமணி 'என்ன அப்படிப் பார்க்கிறே ?" என்று கேட்டாள் நிவேதிதா 
"நீ எப்படிப் பேசறே ? உன்னை மாதிரி எனக்கு எதுவும் செய்யத் தெரியாது "
"அட .. இதுக்கா இவ்வளவு கவலை ? நீந்தும் நேரம் வந்தால் நீச்சல் தானே வரும்னு சொல்வாங்க.. உன்னையே எடுத்துக்கோ அப்பு. மகாபலிபுரத்தில் உன்னைப் பார்த்தப்போ நீ ரொம்பவும் இன்னொசென்ட் பையனா இருந்தே. இப்போ உனக்குள்ளே ஒரு மெச்சூரிட்டி வந்திருக்குது. என்னைப் பார்த்த தும் என்னைத் தெரியும்கிற மாதிரி கத்த இருந்த நீ, என்னோட கண் ஜாடையைப் புரிஞ்சுகிட்டு சந்தர்ப்பத்துக்கு ஏத்தமாதிரி நடந்துகிட்டே. ரியலி ஐ அப்ரிசியேட் யூ. ஆனால் ஒன்னு அப்பு.. நாம் ரெண்டு பேரும் இவங்க யாருமே இல்லாத நேரத்தில்தான் பேசணும் ?"
"இருக்கும்போது பேசினால்....?"
"பேசினால் என்ன ஆகும்.... என்னை வேறொரு இடத்தில் அடைச்சு வைப்பாங்க.. அவ்வளவுதான் " என்றாள் நிவேதிதா அமைதியாக.
"ஐயோ ... மாட்டேன்... நீயா வந்து என்னோட பேசினா மட்டுந்தான் நான் பேசுவேன்" என்று அப்புமணி சொல்ல, "குட் " என்று அவன் தோளில் தட்டிக் கொடுத்தாள்  நிவேதிதா.  
----------------------------------------------------    தொடரும் --------------------------------------------- 
  

No comments:

Post a Comment