Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, April 10, 2016

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 33

                                
அச்சுப்பிச்சு அப்புமணி !
"அப்பு, நான் சீரியஸா கேட்கிறேன். நீ எப்படி இங்கு வந்து சேர்ந்தே ?" என்று நிவேதிதா கேட்க, "நான் தான் சொன்னேனே, நான் உலகத்தை சுத்திப்  பார்க்க வந்தேன்" என்றான் அப்புமணி. 
"நான்சென்ஸ் " என்றாள் நிவேதிதா கோபமாக 
"நீ என்னைத் திட்டறியா ?"
"ஆமாம் "
"என்னன்னு ?"
"மூளையில்லாதவன்னு "
"இதை எத்தனையோ பேர் ஏற்கனவே நிறைய தடவை சொல்லியாச்சு" என்றான் அப்புமணி ரொம்பவும் சர்வ சாதாரண மாக. 
"அப்புமணி, உலகத்தைப் பத்தி தெரிஞ்சு நீ என்ன செய்யப்போறே ?"
"உலகம் தெரிஞ்சவனா இருந்தாதான் எல்லாரும் என்னை மதிப்பாங்க. அப்பத்தான் எங்க அம்மா சந்தோசமா இருப்பாங்க.... சரி ... நீ ஏரோப் பிளேன்னில் ஏறிப் போகப் போறேன்னு சொல்லிட்டு போனியே. உங்க வீட்டுக்கு நீ போகவே இல்லையா   " 
"போகணும். எனக்கு எங்க டாடிமம்மியைப் பார்க்கணும் போல இருக்கு ."
"உங்க தாத்தா உன்னைத் தேடவே இல்லையா ? "
"தேடலைங்கிறது உனக்குத் தெரியுமா .. அவர் ஒரு விதமா யோசிச்சு ஒரு ஆங்கிளில் தேடிட்டுருப்பார்.போலீசும் என்னை கார்,பஸ்னு ஒவ்வொரு இடமா செக் பண்ணிட்டு இருப்பாங்க. ஆனால் இவங்க என்னை ஆடு மேய்க்கிற பொண்ணுமாதிரி நடத்தியே கூட்டிட்டு வந்தாங்க."
"அடேயப்பா... அங்கேருந்து இங்கே வரையா !உனக்கு கால் வலிக்கலே ?"
"காரில்தான் கொண்டாந்தாங்க . எங்கெங்கே செக் போஸ்ட் இருக்குமோ அங்கேயெல்லாம் அந்தந்த இடத்துக்குத் தகுந்தமாதிரி,நாடோடிக் கும்பல், ஆடு மேய்க்கிறவங்க மாதிரி நடத்தியே கூட்டிட்டு வந்தாங்க. செக் போஸ்ட் தாண்டினதும், அந்த கார் நான் இருந்த இடத்துக்குப் பக்கத்தில் வந்ததும் திரும்பவும் காரில் ஏத்திக்குவாங்க. அது எந்த இடம் என்கிற தெல்லாம் எனக்குத்தெரியாது. ஒவ்வொரு இடத்திலும் என்னைக் கூட்டி வர்றவங்க  அடுத்த இடத்தில் வேறொரு ஆள் கிட்டே என்னை ஹான்ட் ஓவர் பண்ணிட்டுப் போவாங்க. ஆனா ஒண்ணு .. அவங்க எல்லாருமே டீசெண்ட் பீப்பிள் ..."
"உன்னை ஏன் கடத்தினாங்கன்னு நீ கேட்கவே இல்லையா ?"
"சிச்சுவேஷனைப் புரிஞ்சுகிட்டு நான் மெண்டல் மாதிரி ஆக்ட் பண்ணினேனே. அதனால் ரொம்பவும் விவரமா பேசினா அவங்களுக்கு சந்தேகம் வந்துடுமே.  நான் புரிஞ்சுகிட்ட ஒரு விஷயம் என்னன்னா, இவங்க டார்கெட் வேறே யாரோ ஒரு பொண்ணு. தவறுதலா என்னைத் தூக்கிட்டாங்க. இதுக்குள் எங்க தாத்தா ஏதோ ப்ளான் பண்ணி வேறொரு கேம் ஆடிட்டார். இவங்க குழம்பிப் போயிட்டாங்க. இந்த கும்பலுக்கு இந்த விஷயமே நான் ஆந்திரா பார்டர் வரை வந்தபிறகுதான் தெரிஞ்சிருக்குது . என்னாலே அவங்களுக்கு ஒரு யூஷும் இல்லேன்னு தெரிஞ்சு இவங்க தலையிலே கட்டிட்டுப் போயிட்டாங்க. என்னை இவங்க கஸ்டடியில் வச்சிருந்தால் இவங்களுக்குக் காசுவரும்னு நெனச்சு இந்த லூசுங்க என்னை   இங்கே வச்சிருக்குங்க " என்று விளக்கினாள் நிவேதிதா.
"உனக்கு ஒரு பயமும் இல்லையா ?"
"பயம் இல்லேனு சொல்லமுடியாது...பயந்து.....அதனாலே...ஆகப் போறது என்ன?... இங்கிருந்து வெளியில் போயிட்டா போதும். அப்பு உனக்கு இங்கிருந்து வெளியில் போக ரூட் தெரியுமா  ?" 
"ரூட் ன்னா என்ன ?"
"வழி .... பாதை....."
"எங்கே போறதுக்கு?"
"ஏதாவதொரு போலீஸ்ஸ்டேஷன் போயிட்டாபோதும்"என்று நிவேதிதா சொல்லிக் கொண்டிருக்கும்போதே வாசலில் காலடி சத்தம் கேட்டது. நிவேதிதா ஒரு மூலையில் போய் முடங்கிக் கொள்ள அப்புமணி வாசலுக்கு வந்தான். சேகர் வருவது தெரிந்து, "ஹாய் ... அண்ணா " என்று சொல்லியபடி ஓடி சென்று அவன் கழுத்தைக் கட்டிக் கொள்ள, சேகர் அவனை வாரியணைத்துக் கொண்டான். சேகரின் பின்னாலேயே தனமும் வந்தாள்.
"என்ன தனம் .... பொண்ணு என்ன சொல்லுது ?" என்று கேட்டான் சேகர் 
"அது எதுவும் சொல்லலே. பேசாமே குந்திகிட்டு இருக்குது. இன்னும் எத்தனை நாள் இது இங்கே இருக்கும் ?' அக்கம்பக்கம் உள்ளவங்க எல்லாரும் இந்தப் பொண்ணு யாருன்னு விசாரிக்க ஆரம்பிச்சிட்டாங்க. எனக்கு சொந்தக்காரப் பொண்ணுனு சொன்னால் யாரும் நம்ப மாட்டாங்க . அதான் உனக்குத் தெரிஞ்ச சிநேகிதனோட தங்கச்சி. அவங்க எல்லாரும் எதோ கோவில் குளம்னு போயிருக்காங்ககளாம். இது மூளை சரியில்லா பொண்ணுன்னு கூடக்கூட்டிட்டுப் போகலே. இங்கே விட்டுட்டு போயிருக் காங்க. ஊர் திரும்பினதும் இதை அழைச்சிட்டுப் போயிருவாங்கனு சொல்லி வச்சிருக்கிறேன். நான் தெரியாமத் தான் கேட்கிறேன். யாருப்பா இது ?" என்று கேட்டாள் தனம்.
"அதெல்லாம் உனக்குத் தேவையில்லாத விஷயம் ?ஆளைப் பார்த்துக் கிறியா? துட்டு வாங்கிக்கிறியா, அதோடு நிறுத்திக்கோ " என்றவன், "ஏய் பொண்ணு, எப்படி இருக்கிறே?" என்று இந்தியில் கேட்க, அவன் சொல்வதைப் புரிந்து கொள்ளாத மாதிரி தலையை சொரிந்து கொண்டு  "ஹிஹி" என்று சிரித்தாள்  நிவேதிதா.
"இதுக்கு நான் கேட்காமலே இருந்திருக்கலாம்" என்று தனக்குள் சொல்லி  கொண்டான் சேகர்.
"அப்பு வெளியில்  எங்காவது போயிட்டு வரலாம் வர்றியா ?" என்று சேகர் கேட்க, "நான் ரெடி.... அண்ணா ... அந்தப் பொண்ணு ....?" என்று கேட்டான் அப்புமணி.
"அதை வெளியில் கூட்டிட்டுப் போக முடியாது. பிரச்சினை ஆயிடும் " என்று சேகர் சொல்ல,"அப்படின்னா....நானும் வரலே" என்றான் அப்புமணி "அடேயப்பா.... அதற்குள் அவ்வளவு ப்ரெண்ட் ஆயாச்சா ? அவ இல்லாமே சார் வெளியில் வரமாட்டாரா ?" என்று கேட்டு சிரித்த சேகர், "ஒரு முக்கிய வேலை இருக்குது. நான்தான் மறந்துட்டேன். இப்பத்தான் ஞாபகம் வருது. அப்பு.....இப்போ நான் கிளம்பறேன். இன்னொரு நாள் உங்க ரெண்டு பேரையும் நான் வெளியில் அழைச்சிட்டுப் போறேன் " என்று சேகர் உறுதி மொழி சொல்ல, "அப்ப ... டாட்டா " என்று சொல்லி கை அசைத்து விடை கொடுத்தான் அப்புமணி.      
-------------------------------------------------------------தொடரும்------------------------------------------------------- 

No comments:

Post a Comment