Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, April 24, 2016

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 35

                                
அச்சுப்பிச்சு  அப்புமணி !
நிவேதிதா அருகில் வந்த அப்புமணி, "ராஜகுமாரி  .... நீ அழறியா ?" என்று கேட்டான்.
"ச்சே.... ச்சே... இல்லை...." என்று சிரித்துக் கொண்டே சொன்ன நிவேதிதா, "அப்பு நீ இங்கே வந்து எத்தனை நாளாகுது?" என்று கேட்டாள் 
"நான் வீட்டை விட்டு வர்றப்ப காலண்டரில் 28ந் தேதி இருந்துச்சு. இப்போ 10னு இருக்குது ... அப்படின்னா ....." என்று சொல்லிக் கொண்டே கைவிரல்களை எண்ண ஆரம்பித்தான் அப்புமணி.
"கையில் பத்து விரல்தான் இருக்குது .... மீதியை எண்ண என்ன செய்வே ?" என்று கேட்டாள் நிவேதிதா 
"கால் விரலை எண்ணுவேன் "
"அதுவும் பத்தலைன்னா ?"
"பக்கத்தில் கடன் வாங்குவேன் "
"என்னது! பக்கத்தில் கடன் வாங்குவியா? எதை? எப்படி வாங்குவே?" என்று நிவேதிதா கேட்க "வேறே எதை ! கைவிரலை" என்று கேஷுவலாக பதில் சொன்னான் அப்புமணி 
"நீ அந்த அளவுக்கு சிரமப்பட வேண்டாம். நீ வந்து 13நாளாகுது .. உனக்கு அம்மாவைத் தேடலியா" என்று நிவேதிதா கேட்கும்போதே அப்புமணி யின் முகம் வாடிப் போனது.
"ஏய் ... என்ன இது ! நீதானே வீட்டை விட்டு வந்தே ! உன்னை யாரும் கடத்திட்டு வரலே... நாடு கடத்தலே... பிறகு ஏன் இத்தனை சோகம் ?"
"எனக்கு அம்மாவைத் தேடுது "
"அப்படின்னா வீட்டுக்குப் போ "
"உலகத்தைச் சுத்திப் பார்க்காமே எப்படி வீட்டுக்குப் போறது ?"
"மண்டு...மண்டு... உலகத்தை சுத்தி வர்றது அவ்வளவு ஒண்ணும் ஈசியான விஷயம் இல்லே.. உன் நாட்டை விட்டு நீ வெளியே போகணும்னா உன் கையில் பாஸ்போர்ட் இருக்கணும் .. விசா இருக்கணும்  "
"அப்படின்னா ...."
"அதுகூடத் தெரியாமே உலகத்தை சுத்திப் பார்க்கக் கிளம்பி வந்துட்டே .. பாஸ்போர்ட் இந்த நாட்டை விட்டு நீ வெளியே போறதுக்கான அனுமதி .. விசா என்கிறது வேறொரு நாட்டுகுள்ளே நீ போறதுக்கான பெர்மிஷன் .. இது ரெண்டும் இல்லாமே நீ எங்கேயும் போக முடியாது "
"இதெல்லாம் இல்லாமலே ஞானப்பழத்தை அப்பாகிட்டே இருந்து வாங்கிறதுக்காக முருகக்கடவுள் மயில் மேலே ஏறி உலகத்தை சுத்தி வந்தாரே "
"நீயும் அதுமாதிரி மயில் மேலே ஏறிப் போகமுடியுமா ?" என்று வியந்து போய்க் கேட்டாள் நிவேதிதா.
"அப்ப மயிலா இருந்ததுதான் இப்ப ஏரோப்ளேனா மாறிடுச்சா ?" என்று அப்பாவித்தனமாக அப்புமணி கேட்க,அதைக்கேட்டு வாய் விட்டுக் கலகல வென்று சிரித்தாள் நிவேதிதா.
"என்னைப் பார்த்தா உனக்கு சிரிப்பா இருக்குதா ?" என்று கோபமாகக் கேட்டான் அப்புமணி 
"இல்லே அப்பு .. இவ்வளவு அப்பாவியா இருக்கிறியேனு நினைச்சு வேதனையா இருக்குது... அப்பு .... கதை வேறு.. நடைமுறை வாழ்க்கை வேறு. ரெண்டையுமே  நீ ஒண்ணா  நினைக்கிறதாலேதான் பிரச்சினையே வருது  "
"என்ன பிரச்சினை ? யாருக்கு ?"
"உனக்குத்தான் .... அதிலே சந்தேகமா என்ன ? எந்த ஒண்ணைப் பத்தியும் சரியா தெரிஞ்சுக்காமே யோசிக்காமே நீ பேசப் போய்த்தானே உன்னை உன்னோட பிரெண்ட்ஸ் கிண்டல் பண்ணினாங்க ... உங்க அம்மா அதைப் பார்த்து அழறாங்க.. இதை நீயே எங்கிட்டே சொல்லியிருக்கிறேதானே ? ஆனா ஒண்ணு அப்பு..உன்னை நான் முதலில் மகாபலிபுரத்தில் பார்த்தது க்கும் இப்போ பார்க்கிறதுக்கும் ஒரு வித்தியாசம் இருக்குது. சில விஷயங்களில் நான் சொல்றதக் கேட்டு நீ நடந்துக்கிறே .. அதுவே பெரிய மாற்றம் தான்  "  என்று நிவேதிதா சொல்லும்போது வெளியில் காலடி சத்தம் கேட்க, உதட்டின் மீது விரலை வைத்து  "உஷ் " என்று எச்சரிக்கை செய்த நிவேதிதா ஓடிப்போய் மூலையில் முடங்கிக் கொண்டாள். அப்புமணி வாசலுக்கு வந்தான் 
"என்ன அப்பு ... எப்படி இருக்கிறே ? சாப்பிட்டியா ?" என்று அக்கறையுடன் கேட்ட சேகர் , "அந்தப் பொண்ணு என்ன பண்ணுது ?" என்று கேட்டான்.
"அது எப்பவும் தூங்குது " என்று அப்புமணி சொல்வது நிவேதிதா காதிலும் விழுந்தது. "சபாஷ்...அப்புமணி தேறிடுவான்" என்று மனதுக்குள் சொல்லி க் கொண்டாள்.
சேகர் வீட்டுக்குள் நுழையும்போது அப்போதுதான் எழும்புவது போல சோம்பல் முறித்தாள் நிவேதிதா 
"என்ன பொண்ணு ? எப்படி இருக்கிறே ?" என்று சேகர் ஹிந்தியில் கேட்க 
அதைப் புரிந்து கொள்ளாததுபோல அசட்டுச் சிரிப்பு சிரித்தாள் நிவேதிதா 
"சேகர் அண்ணா ... எனக்கு போரடிக்குது .... வெளியில் கூட்டிட்டுப் போங்க " என்று கேட்டான் அப்புமணி
"இந்த வெயிலிலா ! வேண்டாம் .... கதை புக் ஏதாது படிக்கிறியா ?"
"எனக்கு அதெல்லாம் புரியாது "
"குழந்தைங்களுக்கான புக் அப்புமணி.. முன்னே ஒருக்க நான் ரயிலில் போறப்ப ஒரு சின்னப்பையன் கை நிறைய குழந்தைகளுங்கான கதை புக்கை வச்சுகிட்டு வாங்கச் சொல்லி ஒவ்வொருத்தரையும் கெஞ்சிக் கிட்டிருந்தான். அதைப் பார்க்கிறப்ப மனசுக்குள்ளே ஒரு பீலிங்க். அவன் கிட்டே இருந்த எல்லா புக்கையும் நானே வாங்கிட்டேன். தனம் கிட்டே கொடுத்தேன். அதை அவ பரண் மேலே தூக்கிப் போட்டுட்டா. அது மட்டுமில்லே.. குப்பை இடத்தைஅடைக்குது. அதை பேப்பர்காரங்கிட்டே போட்டுடுவேன்னு சொல்லிட்டு இருந்தா. வா .. உள் ரூமில்  பரண் மேலே இருக்குது" என்று சொல்லி அவனை அழைத்துக் கொண்டு உள் ரூமுக்குச் சென்ற சேகர், "அடடா....அண்ணன் இன்னும் எழும்பலையா? சாப்பிட லையா ?" என்று கவலையுடன் கேட்டான்.
"அண்ணா..அவர் சாப்பிடுவார்...தூங்குவார்.....தூங்குவார்.. சாப்பிடுவார் .. ஏதாது கேட்டா 'கங்கு..கங்கு'னு சொல்வார்" என்று ஆக்சனில் சொன்ன அப்புமணி, "எங்க அம்மா பேரு கங்காதேவி. எங்கபாட்டி எங்கம்மாவை கங்குனுதான் கூப்பிடுவாங்க " என்றான். 
"என் அண்ணனை கிண்டலா பண்றே? படவா ராஸ்கல். அவரை அப்படி யெல்லாம்  சொல்லாதேடா" என்ற சேகர், "நான் உன்னைத் தூக்கிப் பிடிக்கிறேன். நீ அந்தப் பெட்டியைத் திற " என்று சொல்லி அப்புமணியைத் தலைக்கு மேலாகத் தூக்கிப் பிடிக்க, சேகர் பேலன்ஸ் பண்ணி நிற்கும் முன்பாகவே அப்புமணி பெட்டியைப் பிடித்து இழுக்க .. இழுத்த வேகத்தில் பெட்டியின் கைப்பிடி உடைந்து பெட்டி கீழே படுத்திருந்தவரின் தலைமீது விழுந்தது.  அதைத் தொடர்ந்து "ஐயோ .... அம்மா " என்ற அலறலும் கேட்க அங்கிருந்த மூவரும் திகைத்துப் போனார்கள்.
-------------------------------------------------------- தொடரும் --------------------------------------------- 


No comments:

Post a Comment