Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, September 13, 2013

Scanning of inner - heart ( Scan Report Number - 86 )

             " வேண்டாங்க... ! விட்டுடுங்க... !! " 

" என்னடி, போன் ஏதாச்சும் வந்துச்சா ? " 
"மொதல்லே காலில் கிடக்கிற செருப்பை வாசலில் விட்டுட்டு    வீட்டுக்குள்ளே வாங்க. அப்புறமா என்னென்ன கேட்கணுமோ கேளுங்க ".
" என்ன மீனாட்சி,  என்ன கேட்டுட்டேன்னு இப்படி எரிஞ்சு விழறே ? 
" நீங்க மொதல்லே உள்ளே வாங்கோ "
" வந்துட்டேன். இப்போ சொல்லு , ஏதாச்சும் போன் வந்துச்சா ? "
" யாருட்டேருந்து வரும்னு எதிர் பார்க்கிறீங்க ? "
" அதான், பத்து நாளைக்கு முன்னே நம்ம ரமேஷுக்கு பெண் பார்த்துட்டு வந்தோமே, அவங்க வீட்டில்  பெண் பார்த்துட்டு வர்றப்போ இன்னும் ஒரு வாரத்தில் பதில் சொல்றோம்னு சொல்லிட்டு வந்தோம். பத்து நாளாகியும் போன் வரலையேன்னு நினைச்சு அவங்க போன் பண்ணிப் பேசுனாங்களானு கேட்டேன். நீயோ, உன் பிடிவாதத்தை விட்டு இறங்கி வர மாட்டேங்கிறே "
"எப்படிங்க இறங்கி வர முடியும் ? கொஞ்சம் கூட ராசியே யில்லாத பொண்ணு. பொண்ணு பார்த்துட்டு வர்றச்சேயே என் பிள்ளை காலை ஓடிச்சு வச்சுட்டா. இந்த வீட்டுக்குள் வந்துட்டா இன்னும் என்னென்ன செய்வாளோ ? "
"அட.. ச்சீ.. வாயை மூடு. நம்ம கூட சேர்ந்து காரில் வந்திருந்தா இந்தப் பிரச்சினையே வந்திருக்காது. நானும் என் ப்ரெண்ட்ம் டூ வீலரில் தான் வருவோமுன்னு அடம் பிடிச்சு வந்தான். முன்பின் பழக்கமில்லாத ஏரியா. மழை பெய்ஞ்சு பள்ளத்தைத் தண்ணி மூடியிருந்ததாலே பேலன்ஸ் தவறி கீழே விழுந்துட்டான். இதெல்லாம் ஒரு பெரிய குற்றமா ? "
" ஏன் சொல்ல மாட்டீங்க ? காலில் கட்டுப் போட்டுட்டு அங்கே இங்கே நகர முடியாதபடி படுத்த படுக்கையா இருக்கிறதைப் பார்த்துட்டு பெத்த வயிறு பத்தி எரியுது. நீங்க வியாக்கியானம் பேசறீங்க "
" என்னமோ நம்ம நேரம். அதுக்கு அந்தப் பொண்ணு என்னடி செய்வா ? "
"நம்மளோட  நேரமில்லீங்க இது. நாம  போய்ப்  பார்த்துட்டு வந்தோமே ஒரு விளங்காத  மகராசியை, அவளோட ராசி என் பிள்ளைக்கு இப்படி ஆகிப் போச்சு .  வெளங்காத குடும்பம் போலிருக்கு.  நமக்கு அந்த வரன் வேண்டவே வேண்டாம் " 
"எதுக்கும் இன்னும் ஒரு பத்து நாள் ஆறப் போட்டுட்டு அப்புறம் முடிவு எடுக்கலாம் " என்றார் சுந்தரம்.
" பத்து நாள் இல்லே , பத்து வருஷம் ஆறப் போட்டாக் கூட என் மனசு ஆறாதுங்க. உடம்புக்கு முடியாமே என்னிக்குமே படுக்காத பிள்ளை அவன். இன்னிக்கு கட்டிலே கதின்னு கிடக்கிறான். ஒரு வருஷம் ரெண்டு வருஷம் இல்லே. பன்னிரண்டு வருஷம் ஸ்கூலில் அவார்ட் வாங்கி இருக்கிறான். எதுக்காக ? ஒரு நாள் கூட ஸ்கூலுக்கு லீவு போடாமே வந்ததுக்காக. ஸ்கூல் லீவ் நாளில் கூட ஏதாவது ஒரு கோர்ஸ் படிக்கிறேன்னு ஓடிகிட்டே இருப்பான்... மத்த வீட்டுப் பிள்ளைங்க மாதிரி நம்ம பிள்ளை சினிமா, டீவீ ன்னு பார்த்துட்டு இருந்தது கிடையாது. அதைப் பார்க்கிற டைம்மில் வேறு எதையாவது கத்துக்கலாமேனு தான் சொல்வான். இன்னிக்குப் பாருங்க, என் பிள்ளைக்கு டீவீயை விட்டால் வேறு கதி கிடையாது. அப்போ கூட, " அம்மா, டீவீயில்  எனக்கு இதுதான் பார்க்கணும்ன்னு கட்டாயம் கிடையாது. எனக்காக நீ உன்னோட சீரியல் எதையும் மிஸ் பண்ண வேண்டாம்"னு சொல்லிட்டு அவன்   படுத்துக் கிடக்கிறான். அவனோட நல்ல மனசுக்கு ஏத்தபடி வேறவொரு நல்ல பெண்ணாப் பார்க்கலாம் " என்றாள் மீனாட்சி 
" நீ என்றைக்கு, எந்த விசயத்தில் ,  உன் உடும்புப் பிடியை விட்டு  இறங்கி வந்திருக்கிறே, இதில் இறங்கி வர ? " கொடிறும் பேதையும் கொண்டது விடாது"ன்னு தெரியாமலா சொல்லியிருப்பாங்க . உன் மனசு போலவே ஆகட்டும். பொண்ணு மாப்பிளைக்கு ஜாதகம் பார்க்கிறதை விட்டுட்டு இனிமே மாமியார் மருமகளுக்கு ஒத்துப் போகுமான்னு ஜாதகம் பார்க்க ஆரம்பிக்கலாம். எப்படியோ போ " என்று சொல்லிவிட்டு பேப்பரில் கண்களை ஓடவிட்டார் சுந்தரம்.
ஒரு மாதத்திற்குப் பிறகு ......
வேலைக்குக் கிளம்பி கொண்டிருந்தான் ரமேஷ்.
"ரமேஷ், ஒரு வாரமா நாங்களும்  திரும்பத் திரும்பக் கேட்டுட்டேதான்  இருக்கிறோம் . நீ எந்த பதிலும் சொல்லலியே. தரகர் இப்போ சொல்ற இடம் நல்ல இடமாத் தெரியுது. நீ வந்து பார்க்கிறதுக்கு எப்போ வசதிப் படும்னு தரகர் கிட்டே  சொல்லணுமே. உனக்குத் தோதுவான ஒரு நாளா சொல்லேன் " என்று கேட்டார் சுந்தரம்.
" அப்பா, 45 நாள் லீவுக்குப் பிறகு நான் இப்போதான் ஆபீசுக்குக் கிளம்பிப் போறேன். இந்த நிமிஷத்தில் " அதை " பேசித்தான் ஆகணுமா ? " என்று எரிச்சலுடன் கேட்டான் ரமேஷ்.
" கோபப் படாதே ரமேஷ். நாங்களும் ஒரு வாரமா உன் கிட்டே பேசித் தானே பார்க்கிறோம். நீ பிடிகொடுத்து பேசலியே . இன்றைக்கு தரகர் எப்படியும் போன் பண்ணுவார். அவருக்கு பதில் சொல்லி யாகணுமே. அதனால்தான் கேட்டேன் "
" இன்னிக்குன்னு இல்லே, இனிமே என்றைக்குமே எனக்கு கல்யாணமே வேண்டாம். எனக்குக் கல்யாணம் பண்ணிப் பார்க்கணும்கிற ஆசையை இந்த நிமிஷமே நீங்க  மறந்துடுங்க " என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிப் போனான் ரமேஷ்.
ரமேஷ் கிளம்பிப் போய் வெகு நேரம் ஆகியிருந்தாலும், மீனாட்சியும் சுந்தரமும் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீண்டு வரவில்லை.
"என்னங்க. இதை இப்படியே விடக்கூடாது. உடனடியா ஒரு முடிவு கட்டியே ஆகணும். உங்க அண்ணனுக்கு உடனே போன் பண்ணி வர சொல்லுங்க. ரமேஷ் வீட்டுக்கு வரும்போது அவர் இங்கே இருந்தே யாகணும், நாம கேட்டா அவன் ஒழுங்கா பதில் சொல்ல மாட்டான். அவன் மனசை மாத்த உங்க அண்ணனால் மட்டுமே முடியுமே. " பெரியப்பா. .. பெரியப்பா " ன்னு அவர்கிட்டே பிரியமா இருப்பான். அவரை வச்சே பேசி இவன் மனசிலென்ன இருக்குனு தெரிஞ்சுக்குவோம்" என்றாள் மீனாட்சி .
அன்று இரவு ரமேஷ் வீடு திரும்பும்போது கிருஷ்ணகுமார் வீட்டில் இருந்தார்.
" வாட் எ சர்ப்ரைஸ் ! என்ன பெரியப்பா இந்த நேரத்தில் ? வழக்கமா நீங்க ராத்திரி ஏழு மணிக்குப் பிறகு வெளியில் எங்கும் கிளம்பி வரவோ போகவோ  மாட்டீங்க  "
" முகம் அலம்பிட்டு காபி சாப்பிடு. உன்கிட்டே கொஞ்சம் பேசணும் "
" அம்மா காபி குடு ... பெரியப்பா நீங்க சொல்லுங்க ... காபி குடிச்சுகிட்டே  கேட்கிறேன் "
" காலையில் நீ சொன்ன விஷயம் பத்தி அப்பா அம்மா ரெண்டுபேரும் ரொம்ப வருத்தப் படறா. ஏன் ரமேஷ் இந்த திடீர் முடிவு ? ஒருவேளை உனக்கு, நீ அன்னிக்குப் பார்த்துட்டு வந்த பெண்தான் பிடிச்சிருக்கா ? "
" அதெல்லாம் ஒண்ணுமில்லே பெரியப்பா "
" அப்படின்னா ஏன் கல்யாணமே வேண்டாம்கிறே ? "
"பெரியப்பா, இந்த வீட்டில் அம்மாவைத் தவிர வேறு எந்தப் பெண்ணிடமும் பேசிப் பழக  சந்தர்ப்பம் இல்லாதபடி எனக்கு அக்கா தங்கை என்று யாருமே இல்லாமே போயிட்டாங்க. படிக்கிற காலத்திலும் சரி இப்போ வேலையில் சேர்ந்த பிறகும் சரி. பெண்களிடம் அதிகம் பேசிப் பழகும் சந்தர்ப்பம் எனக்கு கிடைச்சதே இல்லை. பெண்களைப் பத்தி நான் தெரிஞ்சு வச்சிருக்கிற தெல்லாம் ரொம்பவுமே குறைவுதான். காலில் அடி பட்டு படுத்த படுக்கையா வீட்டில் இருக்கிறப்போ தான் எனக்கு  சீரியல் பார்க்கிற சந்தர்ப்பமே கிடைச்சுது.  ஏதாவது ஒரு கதை ரெண்டு கதைனா பரவாயில்லே, வருகிற அத்தனை கதையிலுமே  பொம்பளைங்கள்லாம் , தீவிரவாதி  நக்சலைட்களைவிட மோசமானவங்களா இருக்கிறாங்க. இது பத்தி அம்மா கிட்டே கேட்டேன், " என்னம்மா, இப்படியெல்லாம் கூட பொம்பளைங்க நிஜ வாழ்க்கையில் இருப்பாங்களான்னு ". அதுக்கு அம்மா "ஊர் உலகத்தில், ஒவ்வொரு குடும்பத்தில் இருக்கிறதைத்தானே கதையா காட்டறான்"ன்னு சொன்னாங்க. ஆனானப்பட்ட அல் -கொய்தா தீவிரவாதிங்க கூட இவங்க கிட்டே ட்ரைனிங் எடுக்கணும் போலிருக்கு . அந்த அளவுக்கு   மாமியாருக்குத் தெரியாமே அந்தக் குடும்பத்தைப் பழிவாங்கத் துடிக்கிற  மருமகளும், மருமகளை விரட்ட மாமியாரும் சதி பண்றாங்க. இவங்க ரெண்டு பேருக்கு நடுவில் மாட்டிகிட்டு ஒரு ஆம்பிளை கண்ணுமுழி பிதுங்கிப் போய் நிற்கிறான். பெரியப்பா, " பொம்பளைங்க " என்ற பேச்சை எடுத்தாலே எனக்குப் பயமா இருக்கு பெரியப்பா. நான் கீழே விழுந்ததும், காலில் அடிபட்டு படுக்கையில் கிடந்ததும் ஒரு தற்செயலான சம்பவம். ஆனா இதுக்கெல்லாம்   நாங்க பார்த்துட்டு வந்த "அந்தப் பெண் "தான் காரணம்னு அம்மா சொல்றாங்க. ஒரு சாதாரண விஷயத்துக்கே  இப்படின்னா வேறொரு மோசமான விஷயம் நடந்தா இவங்க எப்படி எப்படி ரியாக்ட் பண்ணுவாங்களோ.  வருகிற பெண் கண்டிப்பா படிச்சவளா இருப்பா. ஏதாவது  வேலை பார்க்கிறவளாத்தான்  இருப்பா. வீட்டுக்குள் இருக்கிற அம்மாவுக்கே இந்த அளவு ஈகோ என்றால் , வெளிஉலகம் தெரிஞ்ச பெண்களைப் பத்தி சொல்லவே  வேண்டாம். ரெண்டு பெண்கள் இருக்கிற இடத்தில் கண்டிப்பா வாக்குவாதம் வரத்தான் செய்யும். நியாயம் கேட்டு ரெண்டு பேருமே என்னிடம்தான் வருவாங்க. இதில் யார் சொல்றது பொய். யார் சொல்றது நிஜம்னு நான் எப்படித் தெரிஞ்சுக்க முடியும். சந்தோசத்துக்காகத்தானே  எல்லோருமே   கல்யாணம் பண்ணிக்கிறோம். ஆனா அது சங்கடத்தைக் கொண்டு வரும்னா அப்படியொரு கல்யாணம் வேண்டவே வேண்டாம் பெரியப்பா  இதுக்கு மேலேநீங்க யாரும்  என்னை வற்புறுத்தாதீங்க. பெரியப்பா நீங்க உட்கார்ந்திருங்க . நான் போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வர்றேன் " என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் ரமேஷ்.
" என்னங்க .. இப்படி சொல்லிட்டுப் போறான். இப்போ என்ன செய்றது ? " என்று கேட்டு கிருஷ்ணகுமார் முகத்தைப் பார்த்தாள் மீனாட்சி. 
"செய்றதா ? மொதல்லே  அந்த டீவீயை தூக்கிப் போட்டு உடை " என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார் கிருஷ்ணகுமார்          

No comments:

Post a Comment