Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, September 06, 2013

Scanning of inner - heart ( Scan Report Number - 85 )

                         தேடி வந்தவொரு துணை !

" என்ன,ஒரு சத்தத்தையும் காணோம் " என்ற நினைப்பில் ராஜாராம் இருந்த அறைக்குள் எட்டிப் பார்த்த லட்சுமி, அவரருகில் வைத்த இட்லியும் தண்ணீரும் அப்படியே இருப்பதைப் பார்த்துவிட்டு, " ஏனுங்க உங்களுக்கு வேண்டாம்னா கொண்டு வந்து  வைக்கும்போதே, ' இப்போ வேண்டாம். அப்புறமா சாப்பிடுறேன்'னு சொல்றதுக்கென்ன ? சுடச்சுட கொண்டு வந்து வைத்த இட்லி, இப்போ ஈ மொய்சுட்டு இருக்கு. இனிமே இதை யார் சாப்பிடறது ? வரவர உங்க போக்கு எதுவும் சரியில்லே. என்ன வேணும்?என்னநினைக்கிறீங்கன்னு வெளியே சொல்லித் தொலைந்தால் தானே மத்தவங்களுக்குப் புரியும். எந்த நேரமும் மோட்டு வளையைப் பார்த்து கிட்டு அப்படி என்னதான் சிந்தனையோ தெரியலை. சூடா வேறே இட்லி கொண்டு வரட்டுமா ? " என்று கேட்டாள். 
' வேண்டாம் ' என்பதுபோல் கையசைத்தார் ராஜாராம்.
" ஆமா... இதை வாயைத் திறந்து சொன்னால், வாயில் இருக்கிற முத்து கொட்டி விடுமாக்கும்? " 
லட்சுமி அங்கிருந்து போனதும், நிறைய பேர், "வாயைத் திறந்து சொன்னால், வாயில் இருக்கிற முத்து கொட்டி விடுமாக்கும்"  என்று சொல்லக் கேட்டிருக்கிறேனே. இதற்கு என்ன அர்த்தம்? இதைக் கண்டு பிடித்த புண்ணியவாளன் யாராக இருக்கும்? எப்பவுமே பல்லை முத்துக்கு ஒப்பிட்டுத்தானே பேசுவாங்க! இவங்க முத்து உதிர்ந்துடுமான்னு கேட்பது பல்லை நினைத்துதானா என்ற ஆராய்ச்சியில் இறங்கினார். கொஞ்ச நேரந்தான் இந்த ஆராய்ச்சி.
திரும்பவும் விட்ட இடத்தைத் தொடர நினைத்து  மோட்டு வளையைப் பார்க்க  ஆரம்பித்தார். வீதிவரை மனைவின்னு சொல்வாங்க. வீட்டுக்குள் இந்தப் போடு போடறாளே என்று நினைத்துக் கொண்டார் . சரவணனை நம்பமுடியாது. 'குடிக்க கொஞ்சம் தண்ணீ கொண்டு வாடா'ன்னு கேட்டாக் கூட "ஏம்ப்பா, தண்ணீ இருக்கிற இடம்   உங்களுக்குத் தெரியாதா என்ன ? எழும்பிப் போய்க் குடிக்கிறதுக்கு என்ன ? " என்று கேட்டுவிட்டுப் போவானே. இவனை நம்பவே  முடியாது. பெரியவன் கொஞ்சம் தயவு தாட்சண்யம் பார்ப்பான். ஆனால் 'வேலை . வேலை'ன்னு  ஓடுவானே. தனக்கு உடம்புக்கு ஏதாவதுன்னாக் கூட அதை கொஞ்சமும் லட்சியம் பண்ணாமே ஓடுவானே. இவனை நம்ப முடியுமா ?
போகிறப்போ ஏதாவது வலி தெரியுமா? அதை நம்மால் வெளியில் சொல்ல முடியுமா ? மூச்சுத் திணறுமோ ? ஐ.சி. அது இதுன்னு போயிட்டா மத்தவங்க வந்து நினைச்ச நேரம் பார்க்க முடியாது. கூடவே இருக்க முடியாது. அந்த  நேரத்தில், 'முடிகிற ' நேரம் வந்துட்டா,  கடைசியா நினைப்பதை யார்கிட்டேயும் சொல்லவும் முடியாதே.அதை  சொல்கிற அளவுக்கு  சுயநினைவு இருக்குமா ? சுயநினைவு இருந்தால் சொல்ல நினைப்பதை சொல்லாமலே போகிறோமே என்கிற பீலிங்கில் தானே போக முடியும் ? அதுக்குப் பிறகு என்ன நடக்கும் ? இதை யாரிடம் கேட்பது . இருக்கிறவங்களுக்கு என்ன நடக்கும்னு தெரியாது. போனவங்க வந்து அவங்க அனுபவத்தைச் சொல்ல முடியாது . என்னவொரு கிரிடிகல் பொசிசன்டா சாமி.
" துணையோடல்லது நெடுவழி போகேல் "ன்னு ஒரு தமிழ்ப் பாடல் சொல்லுதே. ஆனால் இந்த " வழிப் பயணத்திற்கு " துணையாக யாரையும் கூப்பிடவும் முடியாதே. கூப்பிட்டால் கூட துணிந்து  யாரும் வரக் கூட மாட்டார்களே. தொட்டுத் தாலி கட்டின பெண்டாட்டி கூட " ஐயோ, என்னை விட்டுட்டுப் போயிட்டீங்களே. உங்களைப் பிரிஞ்சு எப்படி வாழப் போறேன்னு சொல்லித்தான் அழுவாளே தவிர நானும்  உங்களோடு  கூட இப்பவே  வந்துடுதேன்னு சொல்ல மாட்டாளே. துணைக்கு யாராவது வந்தால் பயமில்லாமல் இருக்குமே.
அவரது எண்ண ஓட்டத்தைக் கலைத்தது, லட்சுமியின் " இந்தாங்க, உங்க ப்ரெண்ட்  சாரங்க நாதன் லைனில் இருக்கிறார் " என்ற குரல்.
" சாரங்கனா ? " என்று கேட்டபடி ஆவலுடன்  அவள் கையிலிருந்த போனை வேகமாகப்  பறித்தார் ராஜாராம்.
" என்னடா எப்போ வந்தே ? எப்படி இருக்கிறே ? உன்னைப் பார்த்தே ஆறு மாசம் ஆச்சேடா ! "
"இன்னைக்குதான் வந்தேன். நான் நல்லாத்தான் இருக்கிறேன் . உனக்கு என்னடா ஆச்சு ? உன் வொய்ப் என்னென்னவோ சொல்றாங்க, நீ சரியா சாப்பிட்டு, தூங்கி நாலு மாசம் ஆச்சுன்னு . உனக்கு என்னடா பிரச்சினை ? நீ எதையும் மனசு விட்டுப் பேச மாட்டேங்கிறேனு சொல்லி அவங்க பீல் பண்ணி சொன்னாங்க. என்னடா .... என்ன ? "
" வெளியில் யார்கிட்டேயும் சொல்ல முடியாது "
" என்ன சொல்றே  ? "
" சொன்னா சிரிப்பாங்கனு, இன்னும் சொல்லவே ஆரம்பிக்கலே ! "
" புரியும்படி சொல்லுடா "
" நாம் சாகப் போகிறது நமக்குத் தெரியுமா ? "
" மனுஷன் எல்லாத்தையும் கண்டு பிடிச்சிட்டான். இதைக் கண்டுபிடிக்க முடியலே. இந்த ஒண்ணை வச்சுதானே, கடவுள் மனுஷங்க கிட்டே செப்படி வித்தை காட்டிகிட்டு இருக்கிறார். எத்தனை பேர் தற்கொலை முயற்சியில் கூட தோல்வி அடைஞ்சிருக்காங்க. இந்த ஒரு விஷயத்தை வச்சுதானே கடவுள், "நான், நான்தான் ! நீங்க நீங்கதான்டா "ன்னு  சொல்லி  மார் தட்டி மனுஷங்க கிட்டே  சவால் விட்டுட்டு இருக்கிறார். ஆமா. எப்போ எப்படி  சாகப் போகிறோம்கிறது  நமக்குத் தெரியாமல் இருக்கிறோமேங்கிறதுதான் உன்னோட பிரச்சினையா ? "
" பிரச்சினை இல்லே. அது பயம் ? அந்த கடைசி நொடி எப்படி இருக்கும் ? நமக்கு சுயநினைவு இருக்குமா ? வலியில் அவஸ்தைப் பட்டால், பணம் செலவு பண்ணி ப்ராப்பர்  ட்ரீட்மென்ட் நமக்குக் குடுப்பாங்களா ? செலவை நினைச்சு எதையும் கண்டுக்காமே இருந்துடுவாங்களா ? செத்த பிறகு நடப்பது நம்ம ஆத்மாவுக்குத் தெரியுமா ? நாம செத்த பிறகும் வலி அவஸ்தைகளை உணரவேண்டிய நிர்பந்தம் இருக்குமா ? யாரும் நம்ம பக்கத்தில் இல்லாதப்போ உயிர் போகிற நிலைமை வந்தால் அந்தக் கடைசி நொடியில் நாம சொல்ல நினைப்பதை சொல்லாமல் போயிடு வோமோ ? கதைகளில் சொல்றமாதிரி நம்மளை   போகிற வழி நெடுக சித்ரவதை  பண்ணுவாங்களா ? நம்ம கூட யாராவது துணைக்கு வந்தால் நல்லா இருக்குமே .. இந்த மாதிரி எண்ணங்கள் வந்து என்னை எந்த நேரமும் சித்ரவதை பண்ணுது ..என்னைத் தூங்க விடாமே, சாப்பிட விடாமே, யாரோடயும் மனம்விட்டுப் பேசிப் பழகி, சிரிக்க விடாமே பண்ணுதுடா ? " என்றார் ராஜாராம் பரிதாபமாக.
" இடியட் . ஏண்டா நீ படிச்சவன்தானே ? மிகப் பெரிய நிறுவனத்தில் நூறு பேருக்கு மேல் வைத்து வேலை வாங்கினவன்தானே ? நீ எப்படிடா இப்படி சில்லியா யோசிக்கிறே ? "
" போடா, புரியாமே பேசாதே. படிப்பு , பணம் , திறமைக்கும், இதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாதுடா "
" உனக்கு என்னடா வயசு ? "
" போன மாசந்தான் அறுபத்து நாலு கம்ப்ளீட் ஆச்சு "
" உனக்கு ஏதாவது நோய் இருக்கா ? "
" இல்லேடா. ரொம்ப ஹெல்தியா இருக்கிறேன் "
" ராஜா, நீ எதையோ பார்த்து பயந்து , நீயே தேவை யில்லாமே   எதையோ கற்பனை பண்ணிட்டு இருக்கிறே . உனக்கு உடனடி தேவை ஒரு நல்ல ஆலோசனைதான். எனக்குத் தெரிந்த சைக்கியாட்ரிஸ்ட் ஒருத்தர் இங்கே இருக்கிறார். நீ உடனே கிளம்பி இங்கே வா. மத்தியானம் நாம சேர்ந்து சாப்பிடலாம். ஈவினிங் அவரை மீட் பண்ணுவோம். அவரைப் பார்த்தப்பறம்  நானே உன்னைக் கொண்டு போய் உங்க வீட்டில் விடறேன் "  
" சரி " என்ற ராஜாராம், " லட்சுமி, சாப்பாடு எடுத்து வை. நான் போய் நம்ம சாரங்கனைப் பார்த்துட்டு வந்திடறேன்" என்று  குளிக்கக் கிளம்பினார்.
"கடவுளே, காப்பாத்தினே " என்று நன்றி சொன்னாள் லட்சுமி.  
அவர் வீட்டை விட்டுக்   கிளம்பிப் போகும் போது "என்னங்க, செலவைக் கணக்குப் பார்க்காமே பேசாமே ஆட்டோவில் போங்க. அவர் இருக்கிற ஏரியாவில்  ட்ராபிக் நெருக்கடி அதிகம்னு நீங்க அடிக்கடி சொல்வீங்களே " என்ற லட்சுமியிடம் "அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்" என்று சொல்லி  விட்டு கிளம்பினார் ராஜாராம்.
ராயபுரம் பஸ் ஸ்டாப்பில் இறங்கியதுமே , " சாரங்கன் மட்டும் அப்படி என்னத்தைப் பெரிசா சொல்லிடப் போறான் ? " துணைக்கு நானும் வரட்டுமா " என்று கிண்டல் பண்ணுவான் என்ற ரீதியிலான எண்ணங்கள் மனதில் தோன்ற நடக்க ஆரம்பித்தார் ராஜாராம்  
சற்று நேரத்தில் "க்றீச் " என்று வண்டி நிற்கும் சப்தமும் அதைத் தொடர்ந்து " ஐயோ " என்ற அலறலும் கேட்டது . மொத்த ட்ராபிக்கும் ஸ்தம்பித்து நின்று போனது. லாரியைக் கூட்டம் சூழ்ந்து கொண்டு லாரி டிரைவரைப் பிடித்து இழுத்தது.
" யோவ். விடுங்கையா .. லாரிக்காரன் மேலே எந்தத் தப்பும் இல்லே. அதோ லாரி சக்கரத்துக்கு கீழே மாட்டிட்டு இருக்கானே, அவன்தான் ஏதோ யோசனையில் வந்தான். லாரிக்காரன் ஹார்ன் அடிச்சதையும் சட்டை பண்ணாமே குறுக்காலே வந்தான். அவனை அவாய்ட் பண்ணத்தான் லாரி டிரைவர், சடன் பிரேக் போட, பின்னால் வந்த டூ வீலர் லாரியில் மோதி கீழே விழுந்தான் " என்று விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார், விபத்தை நேரில் பார்த்த ஒருவர்.
" பெரிசு காலி " என்று ராஜாராமின் உயிரற்ற  உடலை சுட்டிக் காட்டி ஒருவர் சொல்ல,  " டூ வீலர் என்ன ஆனான் ? " என்று கேட்டபடி சுற்றி நின்ற கூட்டம் லாரியின் பின் பக்கம் ஓடியது.
வண்டி அப்பளமாக நொறுங்கிக் கிடந்தது. பையிலிருந்த காய்கறிகள் நாலாபுறமும் சிதறிக் கிடந்தது. வண்டியில் வந்தவன் கட்டையாய் விரைத்துப் போய்க் கிடந்தான் 
" யார் பெத்த பிள்ளையோ, என்னவோ. சமையலுக்குக் காய் வாங்க வந்தவனை வீடு போய்ச்சேர விடாமே, விதி விளையாடிட்டுதே " என்று தத்துவம் பேசினார் ஒருவர்.
"விதியா? இது விதி இல்லே ஸார் , மனுஷனோட முட்டாள்தனம் .  அதோ லாரிக்கு அடியிலே மாட்டிகிட்டு   செத்துக் கிடக்கிறானே அவன் பண்ணின வேலை. முட்டாப் பயலுக. சாக நினைக்கிறவனுக   எங்காவது ஆறு குளம் கடல்னு தேடி போய் விழுந்து சாகிறதுதானே ! இப்படி ஓடுற வண்டி முன்னாலே விழுந்து சாகிறானுக . சாகிறவன் சும்மா போகாமே, துணைக்கு ஒரு வாலிபப் பையனையும் , வாழ வேண்டிய வயசில் வாழ விடாமே கூட்டிட்டுப் போயிட்டானே " என்று திட்டித் தீர்த்தார் ஒரு " திருவாளர்    பொது ஜனம்  ".
அந்த நேரத்தில், அந்த இடத்தில் யாருக்கும் தெரியாத ஒரே ஒரு விஷயம்  "டூ வீலரில் வந்து அடிபட்டு செத்தது, ராஜா ராமின் நண்பர் சாரங்கனின் இரண்டாவது மகன் என்பதும், ராஜாராமுக்கு விருந்து தயார் பண்ணத் தான்  அவன் காய்கறி வாங்கிக் கொண்டு வந்தான் என்பதும் !!

No comments:

Post a Comment